காலை ஆறு மணி கடந்திருந்தது. ஏதோ யோசனையில் அடுப்பில் இருந்த பதார்த்தத்தை சுவை பார்க்க வாயில் வைக்கிறேன் என்று ஷர்ட்டில் கொட்டிக்கொண்டவனுக்கு நன்றாகச் சுட்டு விட்டது.
“ச்சை…” கையையும் நெஞ்சையும் தேய்த்துக்கொண்டே அவன் மீண்டும் சுவை பார்க்க கொஞ்சம் கூட நன்றாகவே இல்லை. கண்களை மூடித்திறந்து ஆயாசமாய் சமையல்கட்டில் சாய்ந்து விட்டான் சாஹி. அவன் பார்த்துச் சமைத்துக்கொண்டிருந்த யூடியூப் வீடியோவில் இருந்த பெண்மணி, “செம்ம டேஸ்ட்.. நிமிஷத்துல காலியாயிரும், மறக்காம நிறைய பண்ணி வச்சுக்கோங்க…” என்று கொஞ்சிக்கொண்டிருக்க, கடுப்பாய் அதை மூடிப்போட்டவன் அதை ஒரு பெரிய ஹாட்பாக்சில் நிரப்ப,
“சாஹி…” என்றபடி வெளியே வந்தார் அம்மா.
பார்த்தவனின் கண்ணில் சட்டென்று சேலைக்குச் சம்பந்தமே இல்லாமல் அவர் அணிந்திருந்த ஜாக்கெட் பட்டு விட்டது. ஒரு பெருமூச்சோடு அவசரமாய் உள்ளே போனவன் அவனது அறிவுக்குட்பட்ட விதத்தில் ஒரு நிறத்தைப் பொருத்தி அவர் கையில் கொடுத்து மாற்றச் சொல்லிவிட்டு வெளியே வர மனதில் லேசாய் கனம் கூடியது. கூடவே ஐந்து வருஷங்கள் முன்பு வரை அம்மாவின் அலுமாரி மடிப்புக்கலையாத சேலைகளோடு வண்ணங்களுக்கு ஏற்றபடி முறையாய் அடுக்கி வைத்திருப்பது நினைவுக்கு வந்து போனது. இத்தனை வருடங்களில் இது தான் நிகழ்காலம் என்று அறிவுக்கு புரிந்தாலும் பழைய அம்மாவோடு ஒப்பிட்டு பார்ப்பது மட்டும் நிற்கவே இல்லை.
அதற்கு மேல் தேங்கி நிற்க நேரமில்லாமல் நடந்தவன் அவருடைய அன்றைய நாளுக்குரிய மருந்துகள், தண்ணீர் உணவுப்பெட்டிகள் எல்லாவற்றையும் பையில் அடுக்கி ஒரு டவலோடு வைத்து மூடிவிட்டு ஹாலில் வைத்து விட்டு வந்தான்.
“போலாமாம்மா?” அதற்குள் அவரும் உடை மாற்றிக்கொண்டு வந்திருக்க, மென்மையாய் அவரை வழி நடத்திக்கொண்டு காருக்கு வர,
“சாஹி…” என்று அழைத்தபடி எதிரில் வந்தார் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி.
“ஏன்பா இப்போல்லாம் தினமும் லக்கியை வேலைக்கே கொண்டு போயிடுறியா? என் பொண்ணு சொல்றா.. போகப் போக நிலைமை மோசமாகுமாமே.. ஆம்பளைப் பையன் அம்மாவை எப்படிப் பார்த்துக்கப்போற? நான் சொல்றதைக் கேளு.. ஹாஸ்பிட்டல்ல சேர்த்து விடு.. தினமுமே போய் பார்த்துட்டு வாயேன்.”
அவர் பேச பேச கடுப்பின் உச்சத்துக்கு போய் விட்டவன் “இப்போ உங்களை நான் அட்வைஸ் கேட்டேனா?” என்று முறைத்தான்
“என்னப்பா தம்பி, ஒரு இப்படிச் சிரமப்படறன்னு ஒரு அக்கறையில சொன்னா இப்படிப் பேசுற?” என்று அந்த பெண்மணி முகம் சிவக்க
“அடுத்த தடவை நான் கேட்டால் மட்டும் பதில் சொல்லுங்க. தள்ளுங்க…” என்று அவரிடம் எரிந்து விழுந்து விட்டு காருக்குள் ஏறிக்கொண்டான் சாஹி.
தினம் தினம் இந்த மனிதர்களைக் கடந்து வர மனதே மரத்துப் போய் விடுகிறது அவனுக்கு. இப்போதெல்லாம் அவன் யாரிடமுமே பேசுவதே கிடையாது.
அம்மாவுக்கு இந்த வியாதி ஆரம்பித்த நேரமே உறவினர்கள் அவருக்கு மனப்பிறழ்வு, அவரைக்கொண்டு போய் மனநல மருத்துவமனையில் விட்டு விடு என்று அறிவுரை சொன்னார்களே தவிர ஒருவருமே அவனுக்கு உதவ முன்வரவில்லை. உதவியாளரை வைத்துப் பார்த்தால், அவன் கண் முன்னேயே அந்தப் பெண்மணி அம்மாவை அதட்ட, வளர்ந்த குழந்தையாய் கண்ணில் நீர் கட்ட நின்றவரைக்காண அவனுக்குத் தவித்துப்போனது. அவரை விரட்டி விட்டு விட்டான். அம்மாவை வீட்டில் விட்டு விட்டு ஒவ்வொரு மணி நேரமும் ஓடி வந்து வந்து பார்த்துக்கொண்டிருந்தவன், அம்மாவின் நிலைமை இனிமேல் அப்படித் தனியாய் விட முடியாது என்று போன வாரம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாய் எப்போது குளிக்கப்போனேன் என்று தெரியாமல் குளித்துக்கொண்டே இருந்தவரைக் கண்டபோது புரிந்து போனது. அதற்குப் பிறகுதான் வேறு வழியின்றி அவன் மாலுக்கே அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.
அது இப்படி ஒரு புதுப் பிரச்சனையை கிளப்பும் என்று அவன் கனவா கண்டான்?
அதுவும் அந்த காபிக்கடைக்காரியிடம் போய்!
அது இன்னும் வளர்ந்தே முடிக்கவில்லை! அதற்குள் பிசினஸ் செய்கிறேன் என்று உள்ளே வந்து, மாலின் முன்பக்கம் இவளும் இன்னும் சில வானரக் கூட்டங்களும் சேர்ந்து கொண்டு பண்ணும் அட்டகாசத்தில், சாஹிக்கு இப்போதெல்லாம் அந்த நுழைவாயிலைத் தாண்டுவதே பெரும் பாடாய் மாறி விட்டிருக்கிறது. இவர்களோடு அம்மாவுமா?
முதலாவது அம்மாவின் நிலை அடுத்த நிமிஷம் என்ன என்பதை எதிர்வு கூற முடியாது. இரண்டாவது இன்றைக்கு அம்மாவின் நிலை அவர்களுக்குப் பாவமாய்த் தெரியலாம், சேர்த்து வைத்திருப்பார்கள். நான்கு நாள் ஆனதும் சலிப்பு வந்து விடும்.. சுடு சொற்களும் ஏச்சுக்களும் ஆரம்பமாகிவிடும். கடைசியில் ஏமாந்து நொந்து நிற்பது அவனும் அம்மாவும் தான். அனுபவப்பட்டவன் இல்லையா?
‘யாரையும் நம்பி நாங்கள் இல்லை, யாரும் என்று என் பொறுப்பை எடுத்துக்கொள்ளவும் வேண்டாம்’ என்று எண்ணியபடி உர்ர் முகத்தோடேயே அம்மாவைத் பத்திரமாய் இறக்கி முன்னே போகவிட்டு, கொண்டு வந்த பைகளை கையில் பிடித்தபடி உள்ளே வந்தவன், அவனுடைய ‘வெல்நெஸ்’ ஜிம்முக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த நவீனைப் பார்த்து இமை சுருக்கினான்.
“காலேஜ் இல்லையாடா உனக்கு?”
வனோ சாஹியிடம் சிரித்து விட்டுச் சிரித்துக்கொண்டே வந்த அம்மாவிடம் ஓடிப்போனான்.
“ஹாய்ம்மா.”
“ஹாய் ஹாய்…” இருவரும் ஹை-பை கொடுத்துக்கொள்வதை எங்கோ பார்ப்பது போல கவனித்துக்கொண்டிருந்தான் சாஹி
“ரெண்டு நாள் லீவுண்ணா. இன்டர் காலேஜ் மேட்ச் நடக்குது.”
“நீ போகலையா?”
“அங்கே வெயில்ல என்னால காய முடியாது.. போங்க…” என்று விட்டுத் திறப்பைக் கைப்பற்றி ஜிம்மை திறந்து கொண்டு நவீன் உள்ளே போக, ‘சாஹி இதெல்லாம் காலேஜ் படிக்கும் போது மட்டும் தான் அனுபவிக்கலாம்’ என்று முணுமுணுத்தது அவனது வாய்க்குள்ளேயே அமுங்கிப்போனது.
சாப்பாட்டுப் பையை வைத்துவிட்டு அம்மாவுக்குக் காலைக்கான மருந்தைக் கொடுத்து விட்டு, அவரை அழைத்துக்கொண்டு எதிரில் இருக்கும் டெய்லர் கடைக்குள் நுழைந்தான் சாஹி.
“லக்கிம்மா வாங்க வாங்க…” அவர் பெரிய புன்னகையுடன் வரவேற்க, சாஹியின் முகமோ கடுகடுவென்று இருந்தது.
“நான் உங்ககிட்ட படிச்சுப் படிச்சு சொன்னேன்ல அம்மாவை வெளியே போக விடாதீங்கன்னு.. இப்படிப் பண்ணிருக்கீங்க? இதுக்கா உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறேன்?” அவன் காய
“என்னப்பா நீ? நான் அப்படிப் பண்ணுவேனா? இவங்க பின்னாடியே போய் பார்த்தேன், டார்லிங் கஃபேல செட்டில் ஆயிட்டாங்க அம்மா. நம்ம வர்ணி தானே.. அதுதான் நம்பிக்கையா விட்டுட்டு வந்தேன்.. அவங்க இருக்கப்போறது நூறு வருஷமா? இருக்கப்போற கொஞ்ச நாள் அவங்க இஷ்டத்துக்கு இருக்கட்டுமே.” என்று அவர் கெஞ்சலாய் ஆரம்பிக்க
தலையசைத்தவன் “இங்க பாருங்க.. நீங்க அம்மாவைப் பார்த்துக்கிறேன்னு சொன்னதாலதான் நான் வேற ஒழுங்கு பண்ணலை. உங்களால முடியுமா முடியாதா? இனிமே அம்மா அங்கே… அந்த கஃபேக்கு மட்டுமில்லை.. வேற எங்கேயும் தனியா போக வேண்டாம், புரியுதா? அப்படியே இவங்க சொல் கேட்காம போனாங்கன்னா அடுத்த செகண்ட் எனக்குத் தகவல் வரணும்.” என்று வெட்டொன்று துண்டு இரண்டாய் சொல்லி விட்டான்.
“சரிப்பா சரிப்பா..” என்றவர்
‘லக்கிம்மா இன்னிக்கு என் கூட ஒரு குட்டிப்பாப்பாக்கு டிரஸ் தைக்கலாமா?” என்று கேட்க அவரும் ஆவலாய் தலையசைப்பதை ஒரு கணம் நின்று பார்த்தவன் ஜிம்மை நோக்கி விரைந்தான்.
அங்கே வார நாட்களில் பகலில் வருபவர்கள் பெரும்பாலும் இன்னும் வேலைக்குப்போகாத இளைஞர்கள், கூடவே பாடி பில்டிங்கை தொழில் முறையாய் செய்யும் இளைஞர்களும் தான். என்னதான் ஊரின் மூலையில் இருக்கும் பழைய மாலில் இருந்தாலும், சாஹிக்குக் கொஞ்சம் நல்ல பெயரும் குறைவான விலையில் பயிற்றுவிப்பவன் என்ற நிதர்சனமும் இருப்பதால், தொழில்துறை இளைஞர்கள் பலர் அவனிடம் தங்கள் ஆரம்பப்புள்ளியை வைப்பதுண்டு. நவீன் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதி நேரமாய் பொதுவாய் மாலையிலும் வார இறுதிகளிலும் தான் இங்கே வருவான். மாலையில்தான் மிகவும் கூட்டமாய் இருக்கும், ஆக இப்போதைக்குத் தனியாகச் சமாளிக்க முடிந்தது அவனுக்கு.
காலை பத்து மணி வரை எல்லாம் நன்றாகத்தான் போனது. இன்றைக்கு இரண்டு புது இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு இதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்க, டெய்லர் அக்காவிடமிருந்து வாட்ஸ்அப், “சாஹி, லக்கிம்மா ஓடிட்டாங்க!” என்றபடி வர, உஃப் என்று மூச்சை ஒரு தடவை இழுத்து விட்டவன், “நவீன் பார்த்துக்கடா…” என்று விட்டு, அந்த காபிக்கடையை நோக்கிக் கடுகடு முகத்தோடு நடைபோட்டான்.
அவன் போகும் போது வர்ணி எதையோ போர்டில் எழுதிக்கொண்டிருக்க, பக்கத்துக்கடை வானரங்கள் அவர்களும் தங்களுடைய போர்டில் வந்து நின்று கொண்டு எட்டி எட்டி இங்கே பார்த்தபடி அவர்களும் எதையோ செய்து கொண்டிருக்க, இவள் அவர்களை நோக்கித் தூக்கிப்போட்ட கசக்கிய பேப்பர் சரியாய் வந்து சாஹியின் தலையில் விழுந்தது. ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் இது வேறு எண்ணெய் ஊற்றியது போல ஆகவும் அவன் முகமே சிவந்து விட்டது. அந்தப்பக்கம் திரும்பிப்பார்த்தால் ஐஸ்கிரீம் கடை இப்போது வெளியில் வெறிச்சோடி இருந்தது.
“சாரி.. தப்பா உங்க மேல பட்டுருச்சு…” என்று விட்டு அவசரமாய் வந்து அந்தப் பேப்பரைப் பொறுக்கிக் குப்பைத்தொட்டியில் போடப்போனவளைச் சுற்றி வந்து வழி மறித்தான் சாஹி.
“சொன்னா சொன்ன சொல் கேட்கவே மாட்டியா? எங்கே அம்மா?” அவன் பல்லைக் கடிக்க,
“எக்ஸ்கியூஸ் மீ சார். உங்கம்மாவை நான் அங்கே வந்து கையைப் பிடிச்சு இழுத்துட்டு வந்தேனா? இல்லை இங்கே வெளியே போகக்கூடாதுன்னு அடைச்சு வச்சோமா? நாங்க பாட்டுக்குக் கடை நடத்துறோம். பேரைப் பாருங்க.. டார்லிங் காஃபே. நாங்க அன்பானவங்க பண்பானவங்க. உங்க அம்மா அவங்களாத்தான் வந்தாங்க. அவங்க எதையும் யாரையும் தொல்லை பண்ணலை.. ஆக அவங்களா போகும் வரை என்னால துரத்தி விட முடியாது. நீங்க தாராளமா அவங்களைக் கூட்டிட்டுப் போகலாம்…” என்று கையைக் கட்டிக்கொண்டு அவள் சொல்ல, கடுப்பாகிப்போனவன்,
“நக்கலா?” என்று பல்லைக் கடித்தான்.
சட்டென்று முகம் கெஞ்சலாய் மாற “அவங்க பாவம்.. இங்கே கொஞ்ச நேரம் இருக்கறது உங்களை அப்படி என்ன சார் பண்ணுது?” அவள் கேட்க,
‘அதானே’ என்று அவனுக்குள்ளும் இருந்து ஒரு குரல் கேட்க, நோ நோ நோ நோ பட்டென்று தலையசைத்தவன், “உன்னையெல்லாம் நம்பி அவங்களை விட முடியாது. முதல்ல நீ யாரு? இன்னொரு தடவை இது நடந்தது நான் மனுஷனா இருக்க மாட்டேன்…” என்று சொல்லவும்
அவளது முகமும் இறுகி விட்டது. “உங்க அம்மா இங்கே வரக்கூடாதுன்னா நீங்கதான் அதுக்கு என்ன வேணுமோ செய்யணும், இங்கே வந்து கத்தக்கூடாது.” என்று முறைத்தாள் அவள்
அது அவனுடைய பலவீன புள்ளியில் தைத்து விட்டது. “அப்போ எனக்குத்தான் அம்மாவைச் சரியா பார்த்துக்க முடியலை, அப்படித்தானே?” அவன் கோபமாய் கேட்க
“நான் அப்படிச் சொல்லல.. உங்க ஜிம்மைப் பாருங்க.. ஆண்கள் மட்டும்னு போர்ட் போட்டு வச்சிருக்கீங்க. ஒருவேளை அவங்களுக்கு இது நம்ம இடம் இல்லைன்னு தோணிருக்கலாம்…” அவள் விழிகளைச் சுழற்றித் தோள்களைக் குலுக்க, அவனுக்குப் புரிந்து போனது.
“நக்கல் பண்ற நீ ?” என்றபடி ஷர்ட் கையை மடித்துக்கொண்டு கிட்டப்போய் விட்டான் அவன். அவனது உயரத்திற்கும், ஜிம்மிலேயே வாழும் அவன் உடலமைப்பிற்கும் சட்டென்று எல்லாரும் பயந்து பின்வாங்குவார்கள்.
ஆனால் இவளோ மிதப்பாய் பார்த்தபடி ஒரு எட்டு அவன் பக்கம் எடுத்து வைத்து அவனை நிமிர்ந்து பார்த்து, “ஆமாம்னா என்ன பண்ணுவீங்க? என் கடை, என் ரூல்ஸ், நான் எப்படி வேணாலும் பேசுவேன்..” என்றாள் தெளிவாய்
சாஹிக்கு உடலெல்லாம் கோபம் பற்றி எரிந்தது. அவன் இவளிடம் சொன்ன வார்த்தையை அச்சுப்பிசகாமல் திருப்பிச் சொல்கிறாள். “உனக்கு மத்தவங்க என்ன சொல்ல வராங்கன்னே புரியறது இல்லை. எத்தனை தடவை ஜிம்முக்கு வரவேணாம்னு சொன்னேன்? அடம்பிடிச்சுச் சேர்ந்துட்டுப் பிரச்சனையை வாங்கிட்டு, இப்போ அதை வச்சுப் பழி வாங்கறேல்ல?”
அவனை முறைத்தவள், “நீங்க லக்கி ஆன்ட்டி பத்தித்தான் பேச வந்த ஞாபகம்..” என்றாள் , என்னமோ அவனேதான் பேச்சை மாற்றியது போல. பதிலுக்கு என்ன சொல்லப் போனானோ,
