LV 5(1)

அன்றைக்கு காலை சாஹிக்கு என்னமோ நடக்கப்போகிறது என்று மனதில் அலாரம் அடித்துக்கொண்டே இருந்தது . அதை காது கொடுத்து கேட்டிருந்தால் இன்றைக்கு அம்மாவை வீட்டிலேயே வந்திருப்பான் என்ன செய்வது விதி வலியது

நேற்று மதியத்தில் இருந்து வர்ணி அன்ட் கோ எதையோ திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் ,  நவீனை என்ன தான் உருட்டி மிரட்டி கேட்டாலும் அவன் வாயில் இருந்து எதையும் பெயர்க்க முடியாதததில் நொந்து போயிருந்தவனுக்கு டெயிலர் அக்காவில் இருந்து ஆரம்பித்து கிட்டத்தட்ட எல்லாருமே அவனை கண்டதும் பட்டென்று பேச்சை நிறுத்தி விழிக்க சர்வநிச்சயமாய் புரிந்து போனது . 

 அதனாலேயே வழக்கமாய் பதினொன்று நாற்பத்தைந்து அலாரத்துக்கே சாப்பாடு எடுத்துக்கொண்டு கிளம்புபவன் இன்றைக்கு பதினொன்று முப்பதுக்கெல்லாம் கிளம்பி விட்டான்.  நவீன் எங்கேயோ போவதாக சொல்லிக்கொண்டு வெளியே போயிருந்ததால் ஜிம்மை பூட்டிக்கொண்டான். அங்கே போய் விரைவாகவே அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்து அழைத்து கொண்டு வந்து உள்ளே  பாதுகாப்பாய் தூங்க வைத்து விட்டால் இந்த வானர கும்பல் என்ன செய்தாலும் கவலையில்லை என்ற திட்டத்தோடு தான் சாஹி பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பி போயிருந்தான். அங்கேயும் எல்லாரும் கண்களால் பேசிக்கொண்டு சுற்றியதை கவனிக்காதவன் போலவே சாப்பாட்டை எடுத்து திறந்து பரப்பி வைத்தான் .

“சாஹி டார்லிங் கேக் கொடுத்தா” என்றபடி ஒரு பெரிய ரெட் வெல்வெட் கேக் துண்டோடு அம்மாவும் வர அவன் திரும்பி ஒரு தடவை கவுன்டரில் பார்வையை பதிக்க அவ்வளவு நேரமும் இந்தப்பக்கம் பார்த்திருந்து விட்டு பட்டென்று மறுபுறம் திரும்பிவிட்டாள் வர்ணி. இமைகள் நெரிய “ அந்த கேக்கை எடுத்து ஓரமாய் வைத்து விட்டு “சாப்பிட்டுட்டு சாப்பிடுவோம்மா” என்று அவன் சொன்னதும் அம்மாவும் தலையசைத்தபடி சாப்பாட்டுக்கு முன்னே உட்கார்ந்ததும் தான் ஞாபகம் இருந்தது அவனுக்கு . 

திமு திமுவென முரட்டு தோற்றத்தில் இருந்த நடுத்தர வயது ஆட்கள் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு கோபமாய் உள்ளே வர மால் முகப்பின் சூழலே மாறிப்போனது .  வந்தவர்கள் நேராய் டார்லிங் காபேக்குத்தான் வந்தார்கள். “இங்கே பூஜா யாரு . “. என்று கர்ஜித்த நடுவில் நின்ற  பெரியமனிதர் “உனக்கு மனசுல அவ்வளவு துணிச்சலா ?  பேர் சொல்ல யாரும் இல்லாத அநாதை உனக்கு என் பையன் கேட்குதா?” என்று காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் அந்த பெண்ணை அர்ச்சனை செய்ய வர்ணியும் பூஜாவும்  காபேயின் முகப்பு பலகையை  ஒருகையால் இறுக பிடித்துக்கொண்டு மறுகையால் துணைக்கு  ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி உறைந்து நின்றதும் அவன் கண்ணில் விழ மறக்கவில்லை.

“அப்பா அப்பா வேணாம்பா போய்டலாம் நான் தானே பிரச்சனை, என்னை அடிங்க, இங்கே வந்து சத்தம் போட வேண்டாம்”  என்று கெஞ்சிக்கொண்டே நின்ற இளைஞனை அந்த தந்தையார் கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளவில்லை . . அவர் பாட்டுக்கு வசைச்சொற்களை அந்த பெண்ணை நோக்கி வீசிக்கொண்டே இருந்தார் . .கூடவே வர்ணிக்கும் சேர்த்து தான் திட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்தன. 

அந்த இளைஞனை அவன் இங்கே அடிக்கடி  பார்த்திருக்கின்றான் அந்த பூஜா கடைக்கு உள்ளேயும் இவன் வெளியேயுமாய் சாய்ந்து நின்று கொண்டு மணிக்கணக்கில் பேசும் இந்த பரமேஸ்வரி மாலில் ரொம்ப பரிட்சயமான ஜோடி அவர்கள் . . சாஹி நடப்பதை அசுசையாய் பார்த்துக்கொண்டே இருக்க அந்த நபரின் ஆக்ரோஷம் ஏறிக்கொண்டே போனதே தவிர குறையவில்லை.  

“நீங்க ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டு போகலை இந்த கடையே இங்கே இருக்காது” என்று அவர் கொந்தளிக்க . . “பதில் சொல்லு ஏய் பதில் சொல்லு” என்று கூட வந்தவர்கள் வேறு இசைப்பாட்டு படிக்க இந்த பக்கம் பூஜாவுக்கு ஆதரவான மால் வாசிகள், சக வேடிக்கை பார்ப்பவர்கள் என்று  அங்கே பெரும் கூட்டமே கூடி விட்டது . 

ஆரம்பத்தில் இது காதல் விவகாரம் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு நம் வேலையை பார்த்துக்கொண்டு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தவன் இப்போது அந்த கும்பலின் வார்த்தைப்பிரயோகங்கள் வரம்பு மீறிய வார்த்தைகள் எல்லாவற்றையும் கேட்டிருக்க அவனுக்குள் மெலிதாய் கோபம் குடிகொள்ள ஆரம்பித்தது.

‘நாம் தலையிட வேண்டுமா இல்லையா? என்று இருமனதாக அவன்  யோசித்துக்கொண்டிருந்த கணம் எங்கிருந்தோ பதறியடித்து ஓடி வந்த குமார் “அண்ணா அண்ணா பாவம்ண்ணா . . நாலு வருஷ லவ் . .அந்தாள் அந்த பையனுக்கு வற்புறுத்தி கல்யாணம் பண்ண பார்க்கிறார் ..போங்கண்ணா பேசுங்கண்ணா” என்று கெஞ்சியபடி எப்படியோ அவனை கையைப்பிடித்து எழுப்பி கொஞ்சமாய் முன் புறமாய்  அழைத்து வந்திருந்த கணம்

மொத்தமாய் பொறுமையை இழந்து விட்டிருந்த வர்ணி “யார் சார் நீங்க? , ,.உங்க பையன் காதல் பண்ணினா உங்க பையனை அடிச்சு உதைக்க வேண்டியது தானே.. . .அதுக்கு வக்கில்லாம பொது இடத்துல வந்து எங்களை டார்ச்சர் பண்றீங்க? இந்த அடிக்கறது மிரட்டறதெல்லாம் உங்க வீட்டோட வச்சுக்கோங்க”  என்று ஆக்ரோஷமாய் அந்த மனிதரை பார்த்து கத்தவும்  அவளது சிவந்த மூக்கும் செவ்வரியோடி இருந்த  விழிகளையும் கிரகித்து அவளை நோக்கி அனிச்சையாய் சாஹி  ஒரு எட்டு  எடுத்து வைத்திருக்க, 

அவளது பேச்சில் வெறிகொண்ட அந்த நபரும் “ஏய் யாரை பார்த்து என்ன பேசற? உன்னை அடிச்சே கொல்றேன்” என்று கத்தியபடி கையை ஓங்கிக்கொண்டு அவளை நோக்கி போக ஆரம்பித்தார். இதைக்கண்ட லக்கி பயந்து போய் “டார்லிங்” என்றபடி அவர்களை நோக்கி திடும்மென ஓட கண்ணிமைக்கும் நேரத்தில் தலை கீழாகி  விட்ட நிலைமை கண்டு பதறி பாய்ந்து நடுவில்  போனவன் முதலில் அந்த மனிதரின் கையை முழு பலம் கொடுத்து பிடித்து நிறுத்தி அதே வேகத்தில் மறுகையால் அம்மாவையும் பிடித்து தடுத்து சுழற்றி தனக்கு பின்னே விட்டுவிட்டு இதற்கெல்லாம் மூல காரணமாய் இன்னும் தந்தையிடம்  கெஞ்சிக்கொண்டு நின்ற அந்தக்காதலனை ஒரே இழுப்பில் முன் புறம்இழுத்து பொளேரென்று மொத்த பலத்தையும் திரட்டி அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்து விட்டான். அவ்வளவு தான் மொத்தமும் ஒருகணம் நிசப்தமாய் போனது. 

இதற்குள் சதாசிவம் சார் எங்கிருந்தோ ஓடி வந்து சாஹிக்கும் அந்த மனிதருக்கும் இடையில் நின்று கொண்டார்.

“ஏய் ஏய் யார்ரா நீ என் பையனையே அடிக்கிற” என்று அந்த மனிதரும் ஏய் ஏய் ஏய் என்று அவரது பரிவாரங்களும் இப்போது சாஹியை பார்த்து கூவ ஆரம்பித்திருக்க அவன் இப்போதும் யாரையும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. விழிகள் கலங்க அவனையே பரிதாபமாய் பார்த்திருந்த பூஜாவின் காதலன் மேலேயே சாஹியின் மொத்த கவனமும் இருந்தது.

“வர்ணி, நாங்க ரெடி டேய் குமார் இந்த டிக்கட்டுங்களை உன் கடைல மறைச்சு வச்சுக்கோ அண்ணா பார்த்தா செத்தோம்” என்று உரக்க சொல்லிக்கொண்டே உள்ளே வந்த நவீன் காஸ்ட்லி அடியாள் போல கறுப்பு உடையில் இருக்க அவன் கூடவே மூன்று அவனது ஜிம்மில் பயிற்சி பெறும் இளைஞர்கள் வேறு அதே கெட்டப்பில் பின்னே வந்தவர்கள் நடந்து கொண்டிருப்பதை பார்த்தும் நடுவில் நின்ற இவனை பார்த்தும்  பம்மி அப்படியே ஐஸ்க்ரீம் கடைக்கு பின்னால் ஒளிய வர்ணி இவ்வளவு நேரமும் கண்கள் வீங்கி இருந்தவள் சிரிப்பை அடக்குவதையும் கண்டவன் இருவரையும் முறைத்தவனுக்கு இப்போது அதை விசாரிக்க நேரமில்லையே.. 

காதலன் அடிவாங்கியதும் பூஜாவும் வெளியே ஓடி வந்திருக்க அவளை ஒரு கையால் சுட்டி காண்பித்தவன்

“நீ இந்த பொண்ணை லவ் பண்றியா?” என்று அழுத்தமாய் கேட்டான். சுற்றிலும் எழுந்த “ஏய் ஏய்: களை அவன் இப்போதும் கண்டுகொள்ளவில்லை.

படபடவென்று தலையாட்டினான் அவன்

“வாய் திறந்து சொல்லு” என்று சாஹி பல்லை கடிக்க

“ஆமாம் லவ் பண்றேன்..” என்றான் அவன் அவசரமாய்

எவனோ ஓரு வானரம் பட்டென்று கைத்தட்டியது. சாஹி திரும்பி முறைக்க நிசப்தம் மீண்டும்.

“அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறியா?” நிதானமாய் அடுத்த கேள்வியை கேட்டான் சாஹி. இப்போது ஏய்களின் சப்தம் இன்னும் கூட ஆரம்பித்தது.சாஹி காதில் வாங்கவில்லை

ஆமாம் என்றான் அந்தப்பையன்.  இப்போது கொஞ்சம் குரலில் தைரியம் வந்திருந்தது.

மீண்டும் இரண்டு மூன்று கைத்தட்டல் சத்தங்கள். உப்ப் என்று மானசீகமாய் ஊதிக்கொண்டான் அவன்

“உங்க அப்பா அம்மா எதிர்த்தாலும் உங்க ஆளுங்க எதிர்த்தாலும் அவளை கல்யாணம் பண்ணிப்பியா?” என்று  சாஹியின் கடைசி கேள்விக்கு

“ஆமாம் ஆமாம் ஆமாம். அவ தான் என் உயிர்ணா”, கண்கள் கலங்க அவன் பதில் சொல்ல பூஜா ஓடி வந்து அவனின் அருகில் நின்று கொள்ள ஆசுவாசமாய் பெருமூச்சு விட்டான் சாஹி

இப்போது இன்னும் கைத்தட்டல் சத்தங்கள் பலமாய் ஒலிக்க அவனது எதிர்விளைவு தான் வானரங்களை  ஆடவைக்கிறது என்று ஒரு வழியாய் புரிந்து போனதில் அவன் அந்தப்பக்கம் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. .

பொதுவில் வைத்து அந்த பையனை பூஜாவை தான் திருமணம் செய்வேன் என்று   வாக்குமூலம் கொடுக்க வைத்தாயிற்று. இனிமேல் அவன் அப்பா மட்டும் பரிவாரங்களிடம் உங்கள் பையனின் வாக்கு மூலத்தை கேட்டாயிற்றல்லவா? இனிமே உங்களுக்கு இங்கே வேலையில்லை மரியாதையா வெளியே போங்க என்று முறைத்துக்கொண்டே விரட்டி விட்டால் பிரச்சனை முடிந்து விடும், என்று எண்ணிக்கொண்டு நிமிர்ந்தவன் தன்னை யாரோ சுரண்டுவதை உணர்ந்து திரும்பி பார்த்தான்.

அங்கே குமார் இரண்டு மாலைகளோடு நின்று அவற்றை அவனை நோக்கி வேறே நீட்டிக்கொண்டிருந்தான். இரண்டு தடவை கண்களை மூடிதிறந்தான் சாஹி. எங்கே இருந்தவனை இழுத்து வந்து என்ன வேலை பார்க்க சொல்கிறீர்கள் என்று களைத்துப்போன கண்களை முறைப்பாய் குமார் மேல் பதிக்க அதற்குள் அவன் கையில் இருந்த மாலைகளை காணோம்..

Scroll to Top