SC–Epi 1(1)

அத்தியாயம் 1

நான் ரீசண்டா ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன்! பொண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டி முடிச்சதும், டி.ஜே போட்டான் பாரு பாட்டு, ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுன்னு! டாய்!!! கியாரே!! நக்கலா????

பாட்காஸ்ட்(podcast) பை பரதேசி!

 

வெளியே இருந்து பார்க்கும் போதே அந்த மாளிகை கண்களைக் கூசும் அளவுக்குப் பளீரிட்டது. வானம் நிலவோ, நட்சத்திரமோ இன்றி இருண்டுக் கிடக்க, மாளிகையின் சுற்றுச் சுவர்களில் ஒளிர்ந்த வண்ண விளக்குகள் வானத்தின் இருட்டுப் பின்னணியில் பளிச்சென மின்னின.

“அம்மாடியோவ்! என்ன ஓர் அழகு!” என வாயைப் பிளந்து அந்த மாளிகையை நோக்கினாள் இவள்.

“என்ன சொல்லிக் கூட்டிட்டு வந்தேன் உன்னை?” எனப் படபடத்தாள் அவளோடு காரில் இருந்து இறங்கிய தோழி.

தோழியைப் பார்த்துப் புன்னகைத்தவள் மெல்லியக் குரலில்,

“பட்டிக்காடு மாதிரி எதையும் வாய பொளந்துட்டுப் பார்க்கக் கூடாது! யாராவது பேச ட்ரை பண்ணா, வாய இறுக்க மூடிட்டு புன்னகைய மட்டும் குடுக்கனும்! எவன பார்த்தும் வழியக் கூடாது! பெரிய இடத்துப் பொண்ணு மாதிரி பந்தாவா ஆக்ட் குடுக்கனும்” என வரிசையாகச் சொல்லி மூச்சு வாங்கினாள் இவள்.

“அவ்வளவு படிச்சு படிச்சு சொல்லியும் ஏன் பேன்னு பார்க்கற! ஏதாச்சும் சொதப்பி வச்ச, மூனு வருஷ ப்ரெண்ட்ஷிப்ப முழுசா அத்து விட்டுருவேன் பார்த்துக்கோ”

“சரிடி! சரி! கெத்தாவே நடந்துக்கறேன்! கோச்சிக்காதே” எனப் புன்னகைத்தவளை வாஞ்சையாக நோக்கினாள் தோழி.

மெல்ல நடந்து அம்மாளிகையின் பிரமாண்டமான கேட் வரை வந்திருக்க, அங்கே நின்றிருந்த இரு பாதுகாவலர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினார்கள். கையில் வைத்திருந்த அழைப்பிதழை அவர்களிடம் காட்டினாள் இவள் தோழி. அதைப் பார்த்ததும்தான் இவர்கள் இருவருக்கும் உட்செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

“உள்ள வந்துட்டோம்! இனி நீ யாரோ நான் யாரோ! பத்து மணிக்கெல்லாம், ட்ரைவர் வந்து நின்னுடுவாரு! நீ இதே வழியா வெளியாகி ஹாஸ்டலுக்குப் போயிடு! நான் என் பாய்ப்ரேண்ட் கூட கொஞ்சம் டைம் ஸ்பேண்ட் பண்ணிட்டு மிட்நைட்குள்ள போய்டுவேன்! டேக் கேர்டி” என்றவள் இவள் கையில் அந்தப் பிறந்தநாள் விழாவுக்கான அழைப்பிதழைக் கொடுத்து விட்டு முன்னே நடந்து விட்டாள்.  

மாளிகை வெளியே பலர் சிரித்துப் பேசியபடி, அங்கிங்கு நடந்து திரிந்தார்கள். எல்லோருமே இவளைப் போல இள வயதினர். பார்ட்டி கவுன், கோட், சூட், டக்‌ஷீடோ என அணிந்திருந்த உயர்தட்டு மக்கள். தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டாள் இவள். தோழி இவளுக்குப் போட்டுக் கொள்ளக் கொடுத்திருந்த இள நீல வர்ண நீள கவுன் பாந்தமாய் உடலைத் தழுவி இருந்தது. கையில்லாத இந்த கவுனைப் போடவே ஒரு மாதிரி கூச்சமாய் இருந்தது பெண்ணுக்கு.

“இங்க பாருடி! இந்த கவுன்தான் கொஞ்சமாச்சும் டீசண்டா இருக்கு என் கிட்ட! மத்ததுலாம் முன்னுக்குக் கௌவிப் பிடிச்ச மாதிரி, தொடை வரைக்கும் நீள வெட்டு உள்ளது போலத்தான் இருக்கு! பெரிய இடத்துப் பார்ட்டி எப்படி இருக்கும்னு பார்க்க ஆசை மட்டும் இருந்தா பத்தாது! அதுக்கு ஏத்தது போல வேஷம் கட்டவும் தெரியனும்! ஆர் யூ இன் ஆர் அவுட்?”

“இன்! இன்! இன்” என ஆர்ப்பரித்தவள் கூச்சத்தைப் புறம் தள்ளி வைத்து அந்த கவுனை அணிந்து கொண்டாள்.

“ஹ்ம்ம்! நானெல்லாம் மாசத்துக்கு ஒரு தடவை வேக்‌ஷிங் போறேன்! ஃபேசியல் போறேன்! த்ரெடிங் போறேன்! நீ அது போலெல்லாம் எதுக்கும் போனது இல்ல! ஆனா உன் ஸ்கின்ன பாரேன்! என்ன ஸ்மூத்தா பூனை முடிக் கூட இல்லாம அழகா இருக்குன்னு” எனச் சொல்லியபடியே துணி மறைக்காத அவளது கையைத் தடவினாள் தோழி.

“கூசுதுடி! கைய வைக்காதே!” எனச் சொல்லி சட்டென நகர்ந்து நின்றுக் கொண்டாள் இவள்.

“ரொம்பத்தான் பண்றடி நீ” என்றவள்,

“கழுத்துல ஒன்னும் போட வேணாம்! காதுக்கு மட்டும் தொங்கற மாதிரி நீலக் கல்லு வச்ச இந்த தோட்டைப் போட்டுக்க! கொஞ்சமா ரோஸ் கலர் லிப்ஸ்டிக், கண்ணுல ஐ லைனர், அவ்ளோதான்! முடிஞ்சது” எனச் சொல்லியபடியே இவளைத் தயார் படுத்தி இருந்தாள்.

அவளைப் போல ஒரு தோழி கிடைத்தது இவள் பூர்வ ஜென்மத்தில் செய்த பெரும் புண்ணியம் என எண்ணியபடியே நடந்தாள் இவள். மாளிகையின் முன்னே செயற்கை குளம் ஒன்று இருந்தது! அதில் கொய்(koi) ஃபிஸ் பல நீந்தி விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கவே அவ்வளவு அழகாய் இருந்தது! அந்தக் குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பல வண்ண ஆர்க்கிட் செடிகளுக்கு மத்தியில் கூட வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுத் தகதகத்தன.

அந்தக் குளத்தைத் தாண்டி கால்கள் நகர மறுத்தன இவளுக்கு!

“லவ்லி!” என முணுமுணுத்தவள், இங்கேயே பட்டிக்காட்டான் மாதிரி நின்றிருப்பதைத் தோழிப் பார்க்க நேர்ந்தால், நாளைக் கண்டிப்பாக வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும் என உணர்ந்து மெல்ல நகர்ந்து மாளிகை நோக்கி நடையிட்டாள்.

பல படிகள் ஏறி மேலே போனால், இரண்டு பெரும் தூண்கள் தாழ்வாரத்தைத் தாங்கி நிற்க, இரண்டு தங்க நிறத்திலான கதவுகள் பின்னே இருந்தது மாளிகையின் வரவேற்பறை. அங்கே நின்றிருந்த இரு சேவகர்கள் உள்ளே வந்து கொண்டிருந்த ஆட்களுக்கு அழகான கோப்பையில் வைன் கொடுத்து வரவேற்றார்கள். இவளுக்கும் ஒன்றுக் கொடுக்கப்பட்டது. மறுக்காமல் வாங்கிக் கொண்டே உள்ளே நுழைந்தாள். யாரும் தன்னைப் பார்க்கிறார்களா எனச் சுற்றிலும் கவனித்தாள். எல்லோரும் அரட்டை அடிப்பதிலும், முழங்கிக் கொண்டிருந்த இசைக்கு ஏற்ப ஆடுவதிலும் பிசியாக இருந்தார்கள்.

வைன் கோப்பையை மூக்கருகே கொண்டுப் போய் வாசம் பிடித்து, பின் வாயில் கொஞ்சம் சரித்தாள் பெண். அந்தத் திரவமோ, தொண்டைக் குழியிலிருந்து அடி வயிறு வரை புளிப்புடன் கூடிய கசப்புச் சுவையில் நெருப்பாய் சுட, லேசாய் இருமல் வந்தது!

“கர்மத்த!” என முணுமுணுத்தவள், செயற்கைப் பூக்கள் அடுக்கப்பட்டிருந்த ஜாடி ஒன்று இருக்க, அதை ரசிப்பது போல நகர்ந்து போய் மீத வைனை அதில் அவசரமாய் ஊற்றினாள்.

“அப்பாடா!” என ஆசுவாசப்பட்டவள், அந்தப் பக்கம் வந்த வெய்ட்டரின் தட்டில் வைன் கோப்பையைப் புன்னகையுடன் வைத்தாள்.

“ஓன் மோர் மேம்?” என அவன் கேட்க,

“நோ தேங்க்ஸ்” என்றவள் இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்தாள்.

ஹாலின் ஒரு பக்கம் வரிசையாய் மேசைப் போடப்பட்டு பல வகையான உணவுப் பதார்த்தங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டிசர்ட் வகைகள், அழகாய் வெட்டப்பட்டப் பழங்கள், சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகள், சாட் ஐட்டங்கள் என நிரம்பி வழிந்தது மேசை.

வரவேற்பறையின் நடுவே மேசைப் போடப்பட்டு மூன்றடுக்கு கேக் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னே பெரிய பேனர் ஒன்று தொங்கியது.

“ஹேப்பி பேர்த்டே விஷ்வா!” என பேனரை வாசித்தவள்,

“தேங்க்ஸ்டா விஷ்வா டேய்! நீ யார் பெத்த புள்ளையோ! நல்லா இருடா” என மனதார வாழ்த்தினாள்.

காலேஜீல் லன்ச் டைமின் போது, தோழிகள் எல்லோரும் இந்த விஷ்வாவின் பிறந்தநாள் விழாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அவன் கூட படிச்ச ஸ்கூல் ப்ரேண்ட்ஸ், காலேஜ் ப்ரேண்ட்ஸ் எல்லாரையும் இருபத்து ஒன்னாவது பேர்த்டேக்கு கூப்பிட்டிருக்கானாம்! ப்ரெண்ட்ஸ் அவங்களோட ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர கூட்டிட்டு வரலாமாம்! ஆனா இன்விடேஷன் கார்ட் இருக்கனுமாம்! இல்லைனா நாட் அலவுட்டாம்! அவனோட அம்மா, அப்பா, வேற அடால்ட்ஸ் யாரும் இருக்க மாட்டாங்களாம் வீட்டுல! ஒன்லி ப்ரெண்ட்ஸ் கூட்டம் மட்டும்தானாம்! செம்ம தீனி, ஆட்டம் பாட்டம்னு பார்ட்டி களை கட்டுமாம்! என் பாய்ப்ரேண்ட் சொன்னான்!” என்றாள் ஒருத்தி.

“அந்த மாளிகை பீச் ஓரம் இருக்கு! அவங்க மட்டும் யூஸ் பண்ணற ப்ரைவட் பீச் அது! பெரிய ஸ்விம்மிங் ஃபூல் கூட இருக்காம்! மிட் நைட்டுக்கு மேல பார்ட்டி தண்ணிப் பார்ட்டியா மாறிடுமாம் நீச்சல் குளத்துல” எனக் குடிப்பது போல சைகை காட்டினாள் ஒருத்தி.

“ஏன்டி! ஆம்பளயும் பொம்பளயும் தண்ணி, பார்ட்டின்னு இப்படி கும்மாளம் போட்டா, போலிஸ் புடிக்காதா?” எனக் கேட்டாள் இவள்.

Scroll to Top