தோழியர் கூட்டம் இவளைப் பார்த்துக் கேவலமாய் ஒரு லுக் விட்டது!
“யாருக்கு அவங்க மேலலாம் கை வைக்கத் தில்லு இருக்கு! பெரிய பசையுள்ள பார்ட்டிமா அவங்களாம்!” என்றாள் இவள் தோழி.
அங்கே ஏற்கனவே நடந்திருந்த விஷ்வா என்பவனின் இருபதாவது வயது பார்ட்டியைப் பற்றி எல்லோரும் வாய் ஓயாமல் பேச, இவளுக்குள் ஓர் ஆசை மெல்ல முளைத்துக் கிளை விட்டு வேர் பரப்பியது.
“என் பாய்ப்ரேண்டுக்கு இன்விடேஷன் கிடைசிச்ருக்கு! சோ நான் போறேன்” என்றாள் இவளுடைய நெருங்கிய தோழி.
“செம்ம லக்கிடி நீ!”
“வாவ்”
“ஆவ்சம் ப்ரோ” என ஒரே சத்தம் தோழிகள் மத்தியில்.
இவள் மெல்ல தன் தோழியின் தொடையைச் சுரண்டினாள்.
“என்னடி?”
“தனியா பேசனும்” எனக் கிசுகிசுத்தாள் இவள்.
இவளை ஏற இறங்கப் பார்த்தத் தோழி,
“நாங்க டாய்லட் போய்ட்டு க்ளாஸ்கு வரோம்டி” எனச் சொல்லி இவளுடன் நடந்தாள்.
“நானும் பார்ட்டிக்கு வரேன்டி”
“வாட்!!!!”
“ப்ளீஸ்டி! இது போலலாம் நான் பார்த்ததே இல்ல! வந்து பார்த்துட்டு, சத்தமில்லாம கிளம்பிடறேன்! ப்ளிஸ்டி”
“நோ!”
“ப்ளிஸ்டி! என் செல்லம்ல! கண்ணுல! பொன்னுல” என இவள் கெஞ்ச,
“அங்க சிலர் ஜோடியா வருவாங்கடி! கட்டிப் புடிச்சுப்பாங்க! கிஸ் கூட அடிச்சுப்பாங்க! தொட்டுத் தடவிக்கறதுலாம் வேற நடக்கும்! உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்றாள் தோழி.
“ஹாஸ்டல், காலேஜ், ஹாஸ்டல், காலேஜ்னு செக்கு மாடு மாதிரி என் வாழ்க்கை இப்படியே போய்ட்டு இருக்குடி! வெளி உலகத்துல என்னத்தான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க எனக்கும் ஆசை இருக்காதா? ப்ளீஸ்டி! ப்ளீஸ்”
சற்று நேரம் யோசித்தவள்,
“சரி கூட்டிட்டுப் போறேன்! எனக்கு அசைண்ட்மெண்ட் எழுதறதுல இருந்து, பாடம் சொல்லிக் குடுக்கற வரை ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்க! நான் காசா குடுத்தாலும், பொருளா குடுத்தாலும் வாங்கிக்க மாட்டற! சோ உனக்கான நன்றிக் கடனா இதை நான் செய்யறேன்! ஆனா என்னால உன்னை பேபிசிட் பண்ண முடியாது! நான் என் ஆள் கூட பிசியா இருப்பேன்! சோ உன்னை நீதான் பார்த்துக்கனும்” என ஒத்துக் கொண்டவள் அதை நிறைவேற்றி விட்டாள்.
கண்களைச் சுழற்றித் தோழியைத் தேட, அவளோ, ஹாலில் இருந்து இரண்டு பக்கமாய் ஆங்கில எழுத்து ஓ வடிவில் அமைக்கப்பட்டிருந்த மாடிக்குப் போகும் படிக்கட்டில் அமர்ந்து காதலனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். கையைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்தாள் இவள். மணி எட்டு முப்பது எனக் காட்டியது. இந்நேரம் ஹாஸ்டலில் கலவைச் சாதம் எதையாவது சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்திருப்பாள். வயிறு லேசாய் சத்தம் போட, உணவு அடுக்கி இருக்கும் மேசைக்குப் போனாள் இவள். பஃபே முறையில் உணவு விநியோகம் எனத் தனக்கு முன்னே வரிசையில் நின்றிருந்தவர்களைப் பார்த்துப் புரிந்து கொண்டவள், இவளும் ஒரு தட்டு எடுத்துக் கொண்டு வரிசையில் நின்றாள்.
“சிக்கன் கெபாப், சட்டைல சாஸ் கொட்டிரும்! வேணாம்! மட்டன் சாப், பொறுமையா மெல்ல நேரம் இருக்காது! வேணாம்! சீசார் சாலட், மயோனிஸ் ஒழுகிடும்! வேணாம்” என முணுமுணுத்தபடியே நடக்க,
“இது மேஷ்ட் பொட்டேட்டோ, குட்டி பவுல்ல வரதுனால சட்டைல கொட்டாது! இது ரோஸ்ட்டேட் சால்மன், மென்னு சாப்பிட மென்மையா இருக்கும். சீக்கிரம் சாப்பிட்டலாம்! இது சீஸ் மக்கரோனி, கண்டிப்பா ஒழுகாது” எனப் பின்னால் இருந்து அழுத்தமான ஆண் குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் இவள்.
இவளைப் பார்த்துக் கண்களால் சிரித்தான் அந்த நெடுமரம். ஒல்லியாய் இருப்பதால் வளர்த்தியாய் தெரிந்தானோ, அல்லது வளர்த்தியாய் இருப்பதால் ஒல்லியாய் தெரிந்தானோ என இவளால் வரையறுக்க முடியவில்லை. இவளுக்குக் கூச்சமாய் போய் விட்டது.
“தேங்க் யூ” என மொழிந்தவள், அவன் சொல்லிய ஐட்டங்களையும், கொஞ்சம் புட்டிங், மினி கேக் போன்றவற்றையும் எடுத்துக் கொண்டு பக்கவாட்டில் தெரிந்த கதவை நோக்கிப் போனாள்.
அங்கு வெளியே ஸ்விம்மிங் ஃபூல் அருகே நாற்காலிகள் இருக்க, அங்குதான் சிலர் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்ததை கவனித்திருந்தாள் இவள்.
இவளும் போய் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். அவள் அருகே கொஞ்சம் இடைவெளி விட்டு, ஆள் அமரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் இவள். அந்த நெடியவன்தான் அமர்ந்திருந்தான். இருவருக்கும் நடுவே பழச்சாறு கிளாசை வைத்தவன்,
“உங்களுக்குத்தான்! டேக் இட்” என்றான்.
வேகமாய் வேண்டாமெனத் தலையசைத்தாள் இவள்.
சில நொடிகள் இவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“ஓ!!! ட்ரக்ஸ் ஏதாச்சும் கலந்திருப்பேன்னு பயந்துட்டீங்களா?” எனக் கேட்டான்.
இவள் பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த வழியாய் போன வெய்ட்டரை அழைத்து,
“டின் கோக் ஒன்னு ஓப்பன் பண்ணாதது எடுத்துட்டு வா” என உத்தரவிட்டான் அவன்.
“இதுக்கு முன்னாடி எங்க செட்ல உன்னை ஐ மீன் உங்கள பார்த்ததே இல்லையே! பேர் என்ன?” எனக் கேட்டான்.
“ஊர்வசி!”
“ஊர்வசி! அழகான நேம்!” எனப் புன்னகைத்தான் அவன்.
“தேங்க்ஸ்”
“பாய்ப்ரேண்ட் கூட வந்தீங்களா?”
அடிக்கடி தமிழில் பேசுபவன் இல்லை போல! அவனது உச்சரிப்பில் தமிழ் கூட ஆங்கிலம் போலவே இவள் காதில் ஒலித்தது.
“இல்லல்ல!” என்றவள், பேச்சில் இருந்து தப்பிக்க உணவை உண்ண ஆரம்பித்தாள்.
அவன் இவளையே பார்த்திருக்க, மெல்ல உணவை விழுங்கியவள், தட்டை அவன் புறம் நீட்டினாள்.
“இன்னொருத்தர பார்க்க வச்சி சாப்பிடக் கூடாது! எடுத்துக்கோங்க”
“ஓ!!” என்றபடி அவள் தட்டில் இருந்து கேக் துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டான் இவன்.
நீச்சல் குளத்தில் சில ஆண்களும் பெண்களும் நீந்திக் கொண்டிருக்க, அதை நோட்டமிட்டப்படியே சாப்பிட்டாள் இவள். அருகே அமர்ந்திருப்பவனிடம் தானாய் எதையும் பேச முயலவில்லை.
கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னவளை, ஒரு முறுவலுடன் பார்த்தான் இவன். அதற்குள் வெய்ட்டர் கோக் கொண்டு வந்து கொடுக்க,
“நான் ஓப்பன் செஞ்சு குடுக்கவா? இல்ல நீங்களே செஞ்சுக்கறீங்களா?” எனக் கேட்டான் இவன்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை பெஞ்சில் வைத்தவள், அவன் கையில் இருந்த கோக்கை வாங்கிக் கொண்டாள். இவள் கை கொஞ்சம் கூட அவன் கையை உரசவில்லை. கவனமாய் வாங்கி அதை ஓப்பன் செய்து குடித்தவள்,
“தேங்க்ஸ்” என்றாள்.
‘எழுந்து போயேன்டா! எனக்கே இப்பத்தான் இப்படி செம்மையா சாப்பிட சான்ஸ் கிடைச்சிருக்கு! பக்கத்துலயே இடிச்சப்புளி மாதிரி உக்காந்திருந்தா நான் எப்படி மென்னு முழுங்கி வைக்க!’ என மனதில் அவனைத் தாளித்தாள் இவள். ஆனால் முகம் மட்டும் நிர்மலமாய் இருந்தது.
“பேர்த்டே பாய் விஷ்வாவ தெரியுமா உங்களுக்கு?”
“தெரியாது! விஷ்வாவோட ப்ரெண்டோட, ப்ரெண்டோட ப்ரேண்ட் நானு”
“ஐ சீ!”
அவள் பார்வை இப்பொழுது ஸ்விம்மிங் ஃபூல் பக்கத்தில் இருந்த லானில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த ஜோடிகள் மேல் இருக்க,
“டான்ஸ் பிடிக்குமா?” எனக் கேட்டான் இவன்.
“யாருக்குத்தான் பிடிக்காது! ஆனா இந்தப் பாட்டுக்குலாம் ஆடப் பிடிக்காது” என டி.ஜே சிஸ்டத்தில் ஒலித்துக் கொண்டிருந்த தற்போதைய வைரல் பாடலைச் சாடினாள் இவள்.
“அப்புறம் எந்த மாதிரி பாட்டுக்கு ஆடப் பிடிக்கும்?” என விடாமல் கேள்விகளால் துளைத்தான் இவன்.
‘விட மாட்டறானே!’ என மனதிலேயே முனகியவள்,
“இதெல்லாம் என்ன பாட்டு! கொஞ்ச நாளுல வைப் பண்ணிட்டு, மறந்து போய்டுவாங்க! பழைய ரஹ்மான் பாட்டு கேட்டுருக்கீங்களா? அதைலாம் கேட்டாலே, டான்ஸ் ஆடனும் போல கால்லாம் பரபரக்கும்” என்றாள் பெண்.
“பூமர் பியூட்டி போல இவ” என முணுமுணுத்தான் இவன்.
அது கேட்டு விட்டிருந்தது இவளுக்கு.
“இருந்துட்டுப் போறேன்! ஹெய் ஜலபுலஜங்கு ஹெய் டமடும டங்குவ விட சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலு பிடிச்சிருக்கறது பூமர்த்தனமா இருந்தா நான் பூமராவே இருந்துட்டுப் போறேன்” எனப் படபடத்தவளைச் சுவாரசியமாகப் பார்த்தான் இவன்.
“ஊர்வசி! ஊர்வசி! டேக் இட் ஈசி ஊர்வசி” எனக் கையை சமாதானம் என்பது போல ஆட்டி இவன் பாடலாய் பாட, சிரிப்பு வந்து விட்டது இவளுக்கு.
அதை ரசித்துப் பார்த்தபடி இருந்தவனை, இளைஞன் ஒருவன் அருகே வந்து அழைத்தான்.
“ட்யூட்! யூ ஆர் நீடட்” என அவன் சொல்ல, எழுந்து கொண்டான் இவன்.
“வில் கம்” என அவனிடம் சொல்லி அனுப்பியவன், இவளைப் பார்த்து,
“கிவ் மீ யுவர் நம்பர்” எனக் கேட்டான்.
“மிஸ்ட் கால்லாம் குடுக்க முடியாது! போன் கொண்டுட்டு வர முடியாதுன்னு பார்ட்டி ரூல்ஸ்ல இருக்குல்ல! நம்பர் சொல்லவா? ஞாபகம் வச்சிக்கிவீங்களா?” எனப் புன்னகையுடன் கேட்டாள்.
“அப்ஃகோர்ஸ்” என அவன் சொல்ல, மடமடவென போன் நம்பரை ஒப்பித்தாள் இவள்.
அதை அவன் மறுபடி சொல்லி சரியா எனக் கேட்க, மென்னகையுடன் ஆமெனத் தலையாட்டினாள்.
“கிளம்பிடாதே ப்ளீஸ்! கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்! வி ஷுட் டான்ஸ்!” என்றவன்,
“உன்னோட பழைய ரஹ்மான் சாங்குக்கு” எனச் சேர்த்துச் சொல்லிக் கண் சிமிட்டி விட்டுப் போனான்.
அவன் எழுந்து போனதும் தட்டில் வைத்திருந்த பதார்த்தங்களை மடமடவெனச் சாப்பிட்டு முடித்தவள், அடுத்தப் பத்து நிமிடங்களில் அந்த மாளிகையை விட்டு அந்தர்த்தனமாகி இருந்தாள்.
போன வேலையை முடித்து விட்டு அந்த மாளிகை முழுக்க அவளைத் தேடிக் காணாமல், கைப்பேசியை எடுத்து அவள் சொன்ன எண்ணுக்கு அழைப்பெடுத்தான். ரிங் போய் அழைப்பு ஏற்கப்பட்டதும்,
“ஹலோ ஊர்வசி” என மிக மென்மையாக அழைத்தான் இவன்.
“எந்த ஊர்வசி வேணும்? நடிகை ஊர்வசியா? இல்ல தேவலோகத்து ஊர்வசியா? சாவுகிராக்கி! தூங்கினு இருக்கறவன எழுப்பி ஊர்வசி, ரம்பா, மேனகான்னு! சரியான நம்பரான்னு பார்த்துப் போடுடா வெண்ணெய்” என மிகக் கர்ணக் கொடூரமானக் குரல் இவனைத் திட்டித் தீர்த்தது.
ஆங்கிலக் கெட்ட வார்த்தையில் திருப்பித் திட்டி விட்டு அழைப்பை நிறுத்தியவன் கோபமாய்,
“யூ ப்ளடி சீட்(cheat)!!!” என வானத்தைப் பார்த்துக் கத்தினான்.
(சேர்ந்தாடுவாளா???)
