இரவு மூன்று மணி வரை ஒரு க்ரைம் சீரீஸில் மூழ்கி இருந்துவிட்டு நான்காவது தடவையாய் அலாரம் அடிக்க, கண்ணை மூடிக்கொண்டு அதைத் தூக்கக்கலக்கத்தில் நிறுத்த முயன்ற வர்ணி திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். ஏழு நாற்பது! இன்னும் இருபதே நிமிடத்தில் பேக்கரி வண்டி வந்துவிடும்.
அவசரமாய் கட்டிலில் இருந்து குதித்து போகும் வழியிலேயே ஒரு டவலை உருவி எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தவள் அவசரமாய் குளித்து உடைமாற்றிக்கொண்டு கதவைப் பூட்ட பத்து நிமிடம் ஆகியிருந்தது. ராக்கியை டிராபிக்கில் விரட்டி ஒரு வழியாய் அவள் மாலுக்கு வர, பேக்கரி வண்டி வாசலில் நின்றுகொண்டிருந்தது.
அவசர அவசரமாய் பணத்தைக் கொடுத்து அன்றைக்கான உணவுகளை அவள் வாங்கிக்கொள்ள, “இந்தாம்மா நாளைக்கும் லேட் பண்ணினேன்னா இந்த மால்ல வண்டியை நிறுத்த மாட்டோம் சொல்லிட்டேன். உனக்கு மட்டும் நாங்க டெலிவரி பண்ணறது இல்லை. உனக்குப் பிறகும் இரண்டு கடை இருக்கு. உன்னால அவங்ககிட்ட திட்டு வாங்க முடியாது” என்று அன்று வண்டிக்காரர் கோபமாய் சொல்லிவிட்டுப் போக, உதட்டைக் கடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் வர்ணி.
காலையிலேயே நல்ல ஆரம்பம்!
ஏற்கனவே புதிதாய் அறிமுகப்படுத்தியிருந்த மெனு வரிசையில் இருந்தே ஒன்றை அன்றைய நாளுக்காய் தெரிவு செய்தவள் அதை போர்டில் எழுத, குமார் மறுபக்கம் இருந்து எட்டிப்பார்த்துவிட்டு, “மறுபடியுமா? சலிப்பா இருக்கு, புதுசா ஏதாவது எழுதும்மா… காப்பி அடிக்கவே போரடிக்குது” என்று குரல் கொடுக்க, “போடா” என்று அவனைத் திட்டியவள் அவசர அவசரமாய் காபி மெஷின்களைத் தயார் நிலையில் வைத்துவிட்டு உணவுகளை அடுக்க ஆரம்பித்தாள்.
அப்படியே வாடிக்கையாளர்களும் காபிப் பிரியர்களும் வந்துவிட, அவளுக்கு அதன் பிறகு மூச்சு விடவே நேரமில்லை.
எதிரே பூக்கடையிலிருந்து நேராய் வந்த பார்வதி ஆன்ட்டி “வர்ணிம்மா, சீஸ்கேக் இருக்குல்ல? வினோத் வாங்கி வைக்க சொல்லிட்டு போனான்.” என்று கேட்கவும் வர்ணி குழம்பி விட்டாள்
“சீஸ்கேக்கா? புதன்கிழமைதான் ஆன்ட்டி வரும்.” சொல்லியபடியே அவளது கண்கள் காலண்டருக்கு போயின
“இன்னிக்கு புதன்கிழமைதான் வர்ணி” என்று ஆன்ட்டி சொல்லவும்
தலையில் அடித்துக்கொண்டவள், “சாரி, இந்த முறை மறந்து போய்ட்டேன்” என்று சொல்ல அவளுக்கே என்னவோ போலாகிவிட்டது.
புதன்கிழமைகளில் டார்லிங் காபேயில் சீஸ்கேக் எப்படியும் இருக்கும். இந்த ஒரு வருடத்தில் அது ஒரு நாள் கூட தவறியது இல்லை. செவ்வாய்க்கிழமை வீட்டில் அதைச் செய்துகொண்டு வருவதும் வர்ணிதான். இப்போது என்ன நாள், என்ன கிழமை என்றே அவளுக்கு மறந்துவிட்டதே!
“ஆ…” யோசனையில் நின்றவள் கவனிக்க மறந்திருக்க கப் நிரம்பி வெந்நீர் வழிந்து காலில் கொட்டி விட்டது, நொண்டிப்படி விலகியவளின் குரலில் வலி தெரிந்திருக்க வேண்டும். வெளியே நின்ற பார்வதி ஆன்ட்டி, “என்னாச்சு வர்ணி?” என்றார் பதற்றக் குரலில்.
“ஒண்ணுமில்லை ஆன்ட்டி” என்று சொன்னவளுக்குக் காலில் அப்படி ஒரு எரிச்சல். ஐஸ்கட்டியை அள்ளி காலில் போட்டு கொஞ்சம் காலைச் சமாதானம் செய்துவிட்டு அவள் வெளியே வர, பார்வதி ஆன்ட்டியின் பார்வை அவளை ஆராய்வதை அவளாலே உணர முடிந்தது.
“ஆன்ட்டி, இதோ கொஞ்ச நேரத்துல கேக் பண்ணிடுறேன். வினோத் ஸ்கூல் முடிஞ்சு வர்ரதுக்குள்ள ரெடி ஆகிடும்” என்று அவள் சொல்ல,
“அது இருக்கட்டும், நீ நல்லாத்தான் இருக்கியா? கண்ணெல்லாம் வீங்கி கிடக்கு. பூஜா போனதுக்கப்புறம் நீ ஒழுங்காவே இல்லை வர்ணி. சாப்பிடுறதும் இல்லை போல…” அவர் லேசர் கண்களால் அவளை ஸ்கான் செய்ய,
“அப்படிலாம் இல்லை ஆன்ட்டி” என்று சமாளிக்க முயன்றாள் அவள்.
“இங்க பாரு, எல்லாரும் எல்லா நேரமும் ஒரே மாதிரியா இருக்க முடியாது. ஒரு ஆளை காபேயில உதவிக்கு வச்சுக்கோ, வேலை பாதியா குறைஞ்சிடும். தனி ஆளா நீயே எல்லாம் செய்வேன்னு பிடிவாதம் பிடிக்காத” என்றவர், “மூணு மணிக்கு கேக் கிடைச்சிடும் தானே? நான் மூணு மணி வரைதான் கடையில் நிற்பேன்” என்றார்.
“நீங்க இல்லைன்னாலும் கடைல கொடுத்துருவேன்” என்று வர்ணி சொல்ல
“கடை இருக்காது வர்ணி.” என்றார் அவர்
“அங்கிள்…?” என்ற அவளது கேள்விக்கு
“ஊருக்கு போய்ட்டார்.” என்றார் ஒரு வேற்று பார்வையோடு
அவளுக்கும் ஏதோ புரிய நிமிர்ந்து பார்த்தாள்.
உதடுகள் கேட்காத கேள்வியை அவள் விழிகள் கேட்டனவோ என்னமோ “போனா போயிட்டு போகட்டும். எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. குடும்பமா இருக்கணும்கிற ஒரே காரணத்துக்காக எல்லாத்தையும் அனுசரிக்க முடியாது. என் வருமானத்தை உடைச்சு அங்கே வரவச்சு வீட்டோட வச்சுக்கலாம்னு யாரோ ஓதி இருக்காங்க. அவங்க கூடவே இருந்துக்கட்டும். வினோத் வளர்ந்துட்டான், அவனுக்கும் இப்போதெல்லாம் புரியுது” என்று வழக்கமில்லாமல் புலம்பியவர், கண்ணீரை ஆவேசமாய் துடைத்துக்கொண்டு பூக்கடையை நோக்கி நடைபோட, போகும் அவர் முதுகையே பார்த்திருந்தாள் வர்ணி. பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாதா என்ன?
பிறகு பிரிட்ஜில் இருந்த க்ரீம் சீஸ் மற்றும் சீஸ்கேக்குக்குத் தேவையான இத்யாதிகளை எடுத்து வந்து தயாரிப்பை ஆரம்பித்தாள். ப்ராசஸர் இருப்பதால் நிமிடத்தில் வேலை முடிந்துவிடும். அவனில் வைத்துவிட்டு நேரத்தைப் பார்க்க எட்டு ஐம்பது காட்டியது.
இன்னும் பத்து நிமிஷம் இருக்கு…மனதுக்குள் சின்னதொரு மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பு.
லக்கி ஆன்ட்டிக்கு ப்ளூபெர்ரி சீஸ்கேக் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆக, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி இரண்டிலுமே டாப்பிங் தயாரித்தபடி அவள் வாடிக்கையாளர்களையும் கவனித்துக்கொண்டிருக்க நேரம் ஒன்பதைத் தாண்டி இருந்தது.
சரியா ஒன்பதுக்கு வந்துருவாங்களே, ஏன் இன்னும் வரலை? மனம் குழம்ப ஆரம்பித்தது
“வர்ணிம்மா, சாக்லேட் க்ராஸான் கேட்டேனே…”
“சாரி சாரி சார்” என்றபடி அதை பைக்குள் வைத்து கொடுத்தவளின் கண்கள் வாசலையே பார்க்க ஆரம்பித்தன.
அவனில் வைத்த சீஸ்கேக்கும் தயாராகி விட அதை வெளியே எடுத்து ஆறவிட்டவள், மறுபடியும் நேரத்தைப் பார்த்தால் ஒன்பது நாற்பது…
ஏன் இன்னும் வரலை? ஒரு மாதிரி படபடப்பு அவளைச் சுற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
“வர்ணி, உனக்கு யாராவது உதவியாளரை தேடுறியாம்மா? தேடினா என்கிட்டே சொல்லு, ஒரு ஆள் இருக்கு” என்று சதாசிவம் அங்கிள் சொல்லிக்கொண்டு கடக்க,
அவசரமாய் தலையசைத்தாள் வர்ணி. “பெரிய வேலையெல்லாம் இல்லை அங்கிள், நானே சமாளிப்பேன். முடியலைன்னா கேட்கிறேன்.”
அவர் தலையசைத்துக்கொண்டு போய்விட்டார்.
அவளுக்குத்தான் மனதில் யாரையேனும் புதிதாய் உள்ளே கொண்டு வருவது என்று எண்ணும்போதே ஒவ்வாமை வந்தது. பூஜா, பிரதீப்போடு கொஞ்சம் தூரமாய் குடிபோய் சரியாய் ஒரு மாதம் ஆகிறது. டார்லிங் காபேயை வர்ணிதான் தனியாய் சமாளித்துக்கொண்டிருக்கிறாள்.
