‘எல்லாருக்கும் என்னைப் பார்த்தா எப்படி இருக்கு? சொல்லி வச்சப்போல ஒரே கேள்வியைக் கேட்கிறாங்க’ என்று முணுமுணுத்தவளுக்கு நேரம் பத்து மணியைத் தொட, மனதுக்குள் வண்டு புகுந்துகொண்டது. அவளால் எதையும் கவனிக்கவே முடியவில்லை.
அதெப்படி வராமல் இருக்க முடியும்? ஆன்ட்டி வராமல் இருக்கவே மாட்டாங்க…
ஏனெனில் அவரது வருகை மூளை முடிவெடுத்து நடப்பதல்ல; உணர்வுகள் வழிநடத்துவது. அது நடக்காமல் இருப்பதென்றால்…? அவளுக்கு அதற்கு மேலே யோசிக்க முடியவில்லை.
“கும்ஸ்… காபேயை ஒரு கண் வச்சுக்கோ, நான்… டெய்லர் அக்காட்ட போயிட்டு வரேன்.” என்று பக்கத்து கடையை நோக்கி அவள் குரல் கொடுக்க
“சீஸ்கேக் கொடுப்பியா?” என்று வாசம் பிடித்து பேரம் பேசினான் அவன்
“இன்னும் சூடு ஆறலை. கேக்ல கையை வச்ச கொன்னுருவேன்!” என்று அவனை மிரட்டியவள், வேகமாய் ஜிம் இருந்த பக்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்லையோ? அந்த வளர்ந்து கெட்டவன் பூஜா கல்யாணத்துக்குப் பிறகு எல்லாரும் ‘தல’ என்று அவனை வம்பு செய்வதால் முன்பக்க வாசலை உபயோகிப்பதையே மொத்தமாய் நிறுத்திவிட்டிருந்தான். மதிய உணவுக்குத்தான் காபேக்கு வருவான். அதுவும் ஒரு பத்தே நிமிஷம் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பி விடுவான். மற்றபடி அவனது புழக்கமெல்லாம் இப்போது மாலின் பின்பக்கம்தான்… லேசான சிரிப்பு இழையோட, ‘ப்ச், ஆன்ட்டிக்கு என்ன ஆச்சோ தெரியலை, நீ அவனைப் பத்தி நினைச்சு சிரிக்கிற’ என்று தன்னையே தட்டிக்கொண்டு எல்லை வரை நடக்க ஆரம்பித்தவளின் கண்கள் ஜிம்மை ஆராய்ந்தன.
லக்கி ஆன்ட்டி கண்ணிலேயே படவில்லை. நவீனைக் காணோம், காலேஜில் இருப்பானாக இருக்கும்…அவனையும் காணோம். தலையை குலுக்குவதாய் பாவனை செய்து நன்றாய் திரும்பிப் பார்க்க, சாஹி பின்புறமிருந்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த பாடி பில்டர் ஒருவனோடு மும்முரமாய் இருந்தான்.
அதே வழக்கமான உர் முகம்… ஜிம்மும் வழக்கம்போல அங்கேயே படுத்துக்கொள்ளலாம் போல வெகு சுத்தமாய் இருந்தது.
அப்போ ஆன்ட்டிக்கு ஏதும் இல்லை… மனம் கொஞ்சம் இலேசாக, உதட்டைக் கடித்துக்கொண்டு திரும்பி நடந்தவள் டெய்லர் அக்கா அவளைக் காணும் முன்னர் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
திரும்பிப் போய் ஆறியிருந்த சீஸ்கேக்கை பாதியாய் பிரித்து, ஒரு பாதிக்கு ப்ளூபெர்ரி, ஒரு பாதிக்கு ஸ்ட்ராபெர்ரி என்று டாப்பிங் போட்டு பிரிட்ஜில் வைத்தவள், பிறகு ஆட்கள் வர அவர்களுக்குத் தேவையானதைச் செய்துகொண்டு பம்பரமாய் சுற்றினாலும், மனதின் ஓரம் அரித்துக்கொண்டே இருந்தது.
எதுவும் இல்லை என்றால் ஏன் அவங்களை அழைச்சிட்டு வரல?
ஒருவேளை அவங்களைப் பார்த்துக்க ஆள் போட்டுட்டானோ?
இங்கே வர்றது அவனுக்குத்தான் பிடிக்காதே… அதனால் வீட்டில் ஏதேனும் ஒழுங்கு பண்ணிட்டானோ?
அப்போ ஆன்ட்டி இனிமே வரமாட்டாங்களா?
பட்டென்று ஒரு மாதிரி ஆகிப்போனது அவளுக்கு. என்னமோ அலைப்புறுதல் மனதுக்குள்… தன் போக்கில் காபேயில் இருந்து வெளியேறி அவள் மாலின் உட்புறம் நடக்க,
“ஏய் வர்ணி! எங்கேடி போற கடையை விட்டுட்டு?” என்று குமாரின் குரல்தான் அவளைச் சுயஉணர்வுக்குக் கொண்டுவந்தது. கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லக்கூட அவளுக்கு நினைவில்லை.
“ஒவ்வொரு தடவையும் உனக்கு சொல்லணுமா? நான் வெளியே போனாலே உனக்கு அது தெரிஞ்சிருக்கணும்…” என்று அவள் கேலியாய் சொல்லி சமாளிக்க
“ஓஹோ! உங்க கடையைப் பார்த்துட்டே இருக்கறதுதான் எங்களுக்கு வேலையோ…” என்று முறைத்தவன் பார்வை உன்னை நான் நம்பவில்லை என்று தெளிவாய் சொன்னது
“ப்ளீஸ்டா” என்று அவனைக்கண்ணாலேயே தாஜா செய்துவிட்டு அவசரமாய் ஜிம்மை நோக்கி ஓடினாள் வர்ணி. ‘இனிமே அவங்க வரலைன்னா…?’ என்ற ஒரு கேள்வி மட்டும்தான் அவளை முழுதாய் ஆக்கிரமித்திருந்தது.
ஜிம்முக்குப் பக்கத்தில் போய்விட்டாள், ஆனால் சாஹியை எப்படிக் கூப்பிடுவது, பேசுவது? என்னவென்று கேட்பது? முன்பை விட கொஞ்சம் இளகி எல்லாருக்கும் தலையசைக்க ஆரம்பித்திருக்கிறானே தவிர அவன் அதே சாஹிதான். நாம் வேறு ஜிம்முக்கு சாபம் ஏகப்பட்டது அள்ளி விட்டிருக்கோம்… இப்போ எப்படி உள்ளே போறது? உதட்டைக் கடித்துக்கொண்டு மாலின் எல்லை வரை நடந்தவள், இடப்பக்கம் இருந்த ஜிம்மை ஓரக்கண்ணால் பார்த்தபடியேதான் போனாள்.
ப்ச்… என்ன கேட்பது? எப்படி கேட்பது ? அவளுக்குத் தெரியவில்லை. உனக்கேன் அது? என்று அவன் திட்டிவிட்டால்?
அவனுடைய அம்மா, அவன் கேர்டேக்கர் ஏற்பாடு செய்வது அவருக்கு நல்லதுதான். அதைக் கேள்வி கேட்கும் உரிமை அவளுக்கு கிஞ்சித்தும் இல்லைதான்… ஆனால்… ஏனோ கண் பனிக்க வேகமாய் திரும்பி நடக்கப் போனவள்,
“வர்ணி” என்ற சாஹியின் குரலில் அப்படியே நின்றுவிட்டாள்.
நம் பெயரைச் சொல்லியா கூப்பிட்டான்? வழக்கமாய் ‘ஏய்’, ‘வா’, ‘போ’ என்று மூன்றாம் நபராகத்தானே அவளோடு பேசுவான்… அவனது ‘வர்ணி’ என்னமோ காதுக்குள் பல அலைவரிசைகளில் ஒலித்து ஓய்ந்தது.
“ஹ்ம்ம்?” திரும்பி விழிகளை விரித்தாள் கேள்வியாய். ஏனோ வாய் பூட்டு போட்டுக்கொண்டது
“என்ன பண்ற இந்தப்பக்கம்?”
எச்சில் விழுங்கியவள், “அ… அது… வாக்கிங் போறேன். உள்ளுக்குள்ளேயே இருந்தேனா கால் விறைச்ச போல இருந்தது, வாக்கிங் போறேன்” என்று சமாளிக்க முயல,
இப்போது கைகளைக் கட்டிக்கொண்டு அவளை மேலிருந்து கீழ் வரை ஏற இறங்கப் பார்த்தவன் ஒன்றும் சொல்லவில்லை. வெறுமனே தலையசைத்தான்.
‘அத்தோடு போதும்டா சாமி’ என்று ஓடப்பார்த்தவளை, “அம்மா நல்லாருக்காங்க. மருந்து டோஸ் கூடியிருக்கு… எழும்பும்போதே டல்லா இருந்தாங்க, அதுதான் தூங்கட்டும்னு விட்டுட்டு வந்தேன்” என்றவன், அவனையே பார்த்த அவளது விழிகளில் என்ன கண்டானோ, “கேமரா இருக்கு, பார்த்துக்கொள்வேன்” என்று போனைத் தொட்டுக் காட்டினான்.
அப்போ நாளைக்கு வந்துருவாங்க! ஒரு ஆசுவாச உணர்வு அவளை வருடிப் போக, லேசான கன்ன சிவப்புடன் அவள் தலையசைத்துவிட்டு திரும்பி நடக்கப் போக,
“நில்லு. என்ன பிரச்சனை உனக்கு?” என்ற அவன் குரலில் அவளது கால்கள் அங்கேயே வேரோடிக்கொண்டன.
அவனது கண்கள் இடுங்கியிருக்க, முகம் அதே முறைப்பு முகபாவத்தோடு அவளின் விழிகளுக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தன…
சட்டென மானசீகமாய் தலையை உலுக்கிக்கொண்டவள் அவனைப் பார்த்து குறும்பாய் சிரித்தாள். “ஏன், புதுசா பொண்ணுங்களை ஜிம்ல சேர்க்க போறீங்களா? நீங்க என்ன பண்ணினாலும் வர்ணியின் பாதம் இங்கே படாது. செல்ஃப் ரெஸ்பெக்ட் எனக்கு ரொம்ப முக்கியம்!”
அவன் முகம் இன்னும் அதிகமாய் கடுப்பு மோடுக்கு போக, “எனக்குத் தேவைதான் இது” என்று அவள் காதுபடவே முணுமுணுத்துக்கொண்டு விடுவிடுவென அவன் திரும்பி ஜிம்முக்குள் நுழைய, முடியைச் சிலுப்பிக்கொண்டு காபேயை நோக்கி நடந்தாள் வர்ணியும்.
