SC Epi 2(1)

அத்தியாயம் 2

“ஸ்ட்ரெஸா இருந்தா ஓடிப் போய் முடி வெட்டிக்கறாங்களே, அது எதனாலயா இருக்கும்? நான் நினைக்கறேன் விரலையோ, கையையோ வெட்டனா மறுபடி முளைக்காதுல, அதனால முடிய வெட்டிக்கறாங்க போல!! இது மொக்கையாத்தான் இருக்கு! எனக்கே தெரியுது! ஆனாலும் சிரிங்க! சிரிச்சா முடி வெட்டாமலே ஸ்ட்ரெஸ் குறையும்!!”

பாட்காஸ்ட் பை பரதேசி!!

 

“ஆவ்ம் ஐம் ப்ரீம் ஹனுமதே

ஸ்ரீ ராமா தூதாய நமஹ்” என முணுமுணுத்தபடியே கண்ணைத் திறந்தாள் ஊர்மிளா.

ஹனுமன் என்பவன் குழந்தைகளைக் காக்கும் கடவுள். அவர்களுக்குப் பாதுகாப்பாய் என்றும் துணை நிற்பான் என இவளுடையச் சிறுப் பிராயத்தில் ஆசிரமத்துக்கு வந்த குருக்கள் ஒருவர் போதித்திருந்தார். அதுவும் அந்த மந்திரத்தில் வருவது போல ராம தூதா என அழைத்தால் எந்த வழியிலாவது, யார் மூலமாவது உதவிச் செய்வான் ஆஞ்சனேயன் என அடித்துச் சொல்லி இருந்தார் அவர்.

சொந்தபந்தம் அற்றவர்களுக்குக் கடவுள்தானே துணை! இவளும் ஹனுமனைப் பாதுகாவலனாய் தனது ஆறு வயதிலேயே ஏற்றுக் கொண்டாள். அந்தக் குருக்கள் கிளம்பும் முன் ஓடிப் போய் அவர் முன் நின்று,

“சாமி! எனக்கு இன்னொருக்க அந்த மந்திரம் சொல்லித் தரீங்களா?” எனக் கேட்டு மனனம் செய்து கொண்டாள்.

அவள் தலையை வாஞ்சையாய் தடவிக் கொடுத்து, லட்டு ஒன்றைப் பையில் இருந்து எடுத்து அவள் கையில் திணித்து விட்டுப் போனார் அவர். அதைப் பொக்கிஷம் போல எடுத்துப் போய், அவளுக்குத் தோழியாய் இருந்த இன்னொரு சிறுமிக்கும் கொடுத்து இவளும் சாப்பிட்டாள். அந்த லட்டு இனிப்பாய் தொண்டையை நனைக்க, அடிக்கடி ருசித்திராத சிறுமிகள் இருவருக்கும் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அதன் பிறகு ஒவ்வொரு முறை ஹனுமனைத் துதிக்கும் போதும் இனிப்பு லட்டுத் தந்த சந்தோஷ உணர்வு மனம் முழுக்க நிரம்பி வழிவது போலவே தோன்றும் இவளுக்கு.   

துயில் கலைந்து, மந்திரம் சொல்லிக் கண்களைத் திறந்ததும் அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் மனதில் வரிசையாய் ஓட ஆரம்பித்தன ஊர்மிளாவுக்கு. அவளுடைய அழகானக் குட்டி அறைக்குள் இருந்த அட்டாச் பாத்ரூம் போய் விட்டு வந்தவள், யோகாவுக்கென வாங்கி வைத்திருக்கும் விரிப்பை விரித்து மூச்சுப் பயிற்சியுடன் ஆரம்பித்து வரிசையாய் சில பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தாள். அதை முடித்துச் சற்று நேரம் அமர்ந்திருந்தவள், குளித்துக் கிளம்பினாள்.

பால் வர்ணத்தில் அழகான சேலை! அதற்கான ப்ளவுஸின் வர்ணம் மட்டும் தினமும் மாறுபடும். அதுதான் அவளின் சீருடை. முகத்துக்கு அழகாய் மேக்கப் போட்டு, முடியையும் ஸ்டைல் செய்து முடித்தாள் ஊர்மிளா. இவள் பெயரும் பதவியும் எழுதப்பட்டிருந்த பேட்ஜ் அணிந்து கொண்டவள், கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்து,

“கன்பாத்தே(ganbatte)” என ஜப்பான் மொழியில் தனக்குத்தானே குட் லக் சொல்லிக் கொண்டாள்.

அறையைப் பூட்டி விட்டு வெளியேறியவள், உணவுக் கூடம் நோக்கி விடுவிடுவென நடந்தாள்.

ஊர்மிளா ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படித்து, பங்களூரில் வேலைப் பார்த்து விட்டு, இப்பொழுது ஒரு வருடமாய் உதய்பூரில் வேலையில் இருக்கிறாள். அவளது படிப்புக்கு ஸ்பான்சர் செய்தவர்களின் ஹோட்டல்கள் இந்தியா மட்டுமில்லாது வெளி நாடுகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. படிப்பு முடிந்ததும் அவர்களிடம் நான்கு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். இன்னும் சில மாதங்களில் அந்த அக்ரிமெண்ட் முற்றுப் பெற்று விடும். பெங்களூரில் இருந்த பதவியை விட இங்கே உதய்பூரில் இவளுக்கு க்ரேட் ஏறி இருந்தது. சம்பளமும் மிக நன்றாகவே வந்தது. ஹோட்டல் ஓப்பரேஷன் மேனேஜர் பதவிக்கான சலுகைகள், அதாவது தங்குவதற்கு தனி அறை, கட்டணமில்லா உணவு, இன்சுரன்ஸ், ஓவர்டைம் அலவன்ஸ் என நல்ல பேக்கேஜ். கொடுக்கும் சம்பளத்திற்கேற்ப வேலையும் பெண்டை நிமிர்த்தி விடும். அங்கேயே தங்குவதால், எந்நேரம் கடமை அழைத்தாலும் உள்ளேன் ஐயா என்பது போல வந்து நிற்க வேண்டும். இந்த நிறுவனத்தைப் பிடித்திருந்ததால், இங்கேயே அக்ரிமெண்ட் முடிந்தும் வேலையைத் தொடரலாம் என மனதளவில் முடிவெடுத்திருந்தாள் ஊர்மிளா.  

வேலை என வந்து விட்டால் கண்ணும் கருத்துமாய் இருப்பாள் இவள். சட்டென யோசித்து, சமயோசிதமாய் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பாள். இவளது புத்திசாலித்தனம், வேலைப் பார்க்கும் பாங்குக்காகவே இரண்டு முறை எம்ப்ளாயி ஆஃப் தி இயர் அவார்ட் வாங்கி இருக்கிறாள் பெண்.

வேலைப் பார்ப்பவர்களுக்கான சாப்பிடும் இடத்துக்குப் போனவள், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து லேசாய் புன்னகைத்தாள். கோரஸாக இந்தியில் குட் மார்னிங் சொன்னவர்களுக்கு இவளும் அந்த மொழியிலேயே பதில் கொடுத்தாள். இங்குள்ளவர்கள் லோக்கல் பாஷையான மேவாரி மொழி பேசினாலும், ஹோட்டலில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்பது மேனேஜ்மெண்ட் ஆர்டர். ஊர்மிளாவுக்கு வயது குறைவாக இருந்தாலும், அவளுக்குக் கீழே வேலைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அவள் தீதீதான்(அக்கா). வேலையில் கண்டிப்பும் கறாருமாய் இருந்தாலும், தேவை என வந்தால் அவர்களுக்கு உதவிகளும் செய்து சில பல சலுகைகள் கொடுக்கும் இந்த தீதீயை அவர்களுக்கு நிரம்பவே பிடிக்கும்.

எப்பொழுதும் போல கருப்பு காபி எடுத்துக் கொண்டவள், இவர்களுக்காகச் செய்து நிரப்பி வைக்கப்பட்டிருந்த காலை உணவுகளில் இருந்து சப்பாத்தி ஒன்றும், இட்லி ஒன்றும் எடுத்துத் தட்டில் வைத்தாள். அமைதியாய் அதை சாப்பிட்டு முடித்தவள், ரவுண்ட்ஸ் போகும் வேலைக்குக் கிளம்பினாள்.

காலை ஆறு மணிதான் ஆகியிருந்தது. குட்டி அரண்மனைப் போல வடிவமைக்கப்பட்டிருந்த அந்த ஹோட்டல், ஓர் ஏரியின் நடுவே எழுப்பப்பட்டிருந்தது. அதை மிதக்கும் மஹால் எனக் கூட அழைப்பார்கள் அந்த ஊர் மக்கள். பொழுது புலரும் நேரமும், அந்தி சாயும் நேரமும் மிக அழகாக இருக்கும் அங்கே. சில நிமிடங்கள் சூரிய உதயத்தைப் பார்த்து நின்றவள்,

“பகல்ல சுட்டெரிக்கற நீ, காலைல மட்டும் எப்படி இவ்ளோ சாந்தமா துயில் கலைஞ்சு எழற குட்டிக் குழந்தை போல அம்சமா ஜொலிக்கற! அழகன்டா நீ” எனக் கொஞ்சிக் கொண்டாள்.

காலையில் அந்தப் பத்து நிமிடங்கள்தான் அவளுக்காய் அவள் கொடுத்துக் கொள்ளும் நிமிடங்கள். அதன் பிறகு ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான். காரிடார்கள் எல்லாம் சுத்தமாகப் பெருக்கப்பட்டிருக்கிறதா என நோட்டமிட்டவள், அன்றைக்கு ஒரு வி.ஐ.பி ஒருத்தர் தன் மனைவியுடன் வந்து தங்கப் போகும் ஹோட்டல் சூட் ரூமின் சாவியை எடுத்துக் கொண்டு அந்த அறைக்கு விரைந்தாள். அங்கே இருக்கும் அறைகள் எல்லாமே ஆடம்பர வகையைச் சேர்ந்தவைதான். ஆடம்பரமும், ஆண்ட்டிக் ஸ்டைலும் கலந்து ஒரு ராஜப் பரம்பரை தங்கிப் போகும் உணர்வைத் தரக் கூடியவை. அந்த வி.ஐ.பி தங்கப் போகும் சூட்டின் பெயரே கிங் சூட்தான். உள்ளே நுழைந்தவள், அதது அந்தந்த இடத்தில் இருக்கின்றனவா என செக் செய்ய ஆரம்பித்தாள். இரவே அந்த அறையை சுத்தப்படுத்தச் சொல்லி விட்டிருந்தாள்.

மினி பாரில் விலை உயர்ந்த வைனுக்குப் பதில் மலிவான வைன் அடுக்கி இருந்தார்கள். உடனே ஹெட் ஆஃப் ஹவுஸ்கீப்பீங்கை அழைத்து வாங்கு வாங்கென வாங்கி விட்டாள் ஊர்மிளா.

“இதெல்லாம் சரியா பார்க்க மாட்டீங்களா? இங்க வைக்கப்பட்டிருக்கற ஒவ்வொரு பொருளும் நம்ம ஹோட்டலோட ப்ராண்ட சத்தமா பேசனும்! நீங்களே வைன் எடுத்துக்கிட்டு, ஒரு ஸ்வீப்பரையும் கூட்டிட்டு வாங்க! இதுக்கு முன்னாடி தங்கிட்டு போன கெஸ்ட், கட்டிலுக்கு அடியில பேப்பர் ரேப்பர போட்டுட்டு போயிருக்காங்க! அது என்ன ரேப்பர்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்ல. அதைக் கூட கவனிச்சு ஸ்வீப் பண்ணாம என்ன வேலைப் பார்க்கறாங்க உங்க டீம்ல?” என இவள் சத்தம் போடாமல் குரலில் மட்டும் கோபத்தைக் காட்டிக் கடிந்து கொள்ள,

“சாரி மேடம்! சாரி மேடம்!” என அத்தனை சாரி கேட்டு, அவள் சொன்னதை செய்ய ஓடினான் அவன்.

Scroll to Top