அத்தியாயம் 3
ஆம்பளை ஒருத்தன் எனக்கு கயாடு மேல க்ரஷ்! மமிதா பைஜூ மேல மஜா லவ்வு! ப்ரீத்தி முகுந்தன் மேல ப்ரியம்னு சொல்லிட்டா அவன உடனே காஜீ பையன்னு முத்திரைக் குத்திடறீங்க! அதே ஒரு பொண்ணு எனக்கு கவின் மேல க்ரஷ்! ஹரிஷ் மேல அஸ்க்கு அஸ்க்கு! அர்ஜூன் தாஸ் மேல அவ்வா அவ்வான்னா, ஹவ் ஸ்வீட், சோ கியூட்னு கமேண்ட் போடறீங்க! பொண்ணுக்கு ஒரு நியாயம், ஆணுக்கு அநியாயமா? இதுல பாருங்க, அங்க போய் பொண்ணு போஸ்ட்ல வாவ், ஸ்வீட்னு கமேண்ட் பண்ணி வைக்கற பயபுள்ள யாருன்னு பார்த்தா, பாதி பேரு ஆம்பள பையனாத்தான் இருப்பான்!
பாட்காஸ்ட் பை பரதேசி!!!!
தனக்குக் கீழே பொறுப்பில் இருக்கும் பெண்ணிடம்,
“நான் திரும்பி வர அஞ்சு நாளாகும்! அடுத்து வரப் போகிற ஈவண்ட், செய்ய வேண்டிய எக்ஸ்ட்ரா வேலைகள் எல்லாத்தையும் ஷேர் ஃபோல்டர்ல நோட் பண்ணி வச்சிருக்கேன்! எமெர்ஜென்சினா மட்டும் என்னை காண்டேக்ட் பண்ணிக்கோ! நான் இல்லாம தனியா ஹேண்டில் பண்ணறது உனக்கொரு நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். சரியா செஞ்சின்னா, உனக்கு கிரேட் ஏற நானே ரெக்கமேண்ட் செய்வேன்” என்ற ஊர்மிளாவைக் கண்களில் நன்றியுடன் பார்த்தாள் அந்தப் பெண்.
“நான் பார்த்துக்கறேன் தீதீ! நீங்க எந்தக் கவலையும் இல்லாம ஹேப்பியா போய்ட்டு வாங்க”
சிறு புன்னகையுடன் தலையசைத்தவள், தனது அறைக்கு நடையை எட்டிப் போட்டாள். ஏற்கனவே கொஞ்சம் பேக் செய்து வைத்திருந்தாள். இப்பொழுது டாய்லட்டரிஸ் மற்றும் சார்ஜர் வகைகளைத் தனித் தனி பவுச்சில் எடுத்து வைக்க ஆரம்பித்தாள் ஊர்மிளா. அவளிடம் துணிமணிகளோ, வேறு பொருட்களோ தேவைக்கானது மட்டுமே இருக்கும். சின்ன அறையில் எவ்வளவு பொருட்களைப் போட்டு அடைக்க முடியும். திடீரென வேலை மாற்றல் வந்தால், ஒரு பெரிய லக்கேஜ் பேக்கில் அடக்கி விடக் கூடிய அளவில்தான் இருந்தன ஊர்மிளாவின் சொத்துக்கள்.
இப்படி வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ போக வேண்டி இருந்தால், அங்கேயே சில துணிமணிகள் வாங்கிக் கொள்வாள். திரும்பி வரும் போது அதையெல்லாம் டொனேட் செய்து விட்டு வந்து விடுவாள். அப்படித்தான் பொருட்கள் சேராமல் பார்த்துக் கொள்கிறாள். சில சமயம் மனம் மிகவுமே ஆசைப்படும் சில பொருட்களைப் பார்த்து! ஆனாலும் மனதை அடக்கிக் கொள்வாள். கையில் பணம் இருந்தாலும், அதையும் அனுபவிக்கக் கொடுப்பினை வேண்டும் அல்லவா! பாசி மணிகள், அழகான தோடுகள், குட்டிக் குட்டிக் கைவினைப் பொருட்கள் போன்றவைகளை மட்டும் சிலதை வாங்கி சிறு பெட்டியில் அடுக்கி வைத்திருக்கிறாள். பொருட்களில் ஆசையை அடக்கிக் கொள்பவள், போகும் இடங்களில் கிடைக்கும் பாரம்பரிய உணவுகளை ரசித்து, ருசித்துப் பார்ப்பதை அடக்கிக் கொள்வதில்லை. வேலை நேரத்தில்தான் சாப்பிடக் கூட பொழுதிருப்பதில்லையே! ஆகையால் இது போல விடுமுறைகளில் நன்றாகவே ஒரு வெட்டு வெட்டி விடுவாள்.
வியாட்நாம் நாட்டில் இருக்கும் சாப்பா(Sapa) எனும் மலைப் பிரதேசத்துக்குத்தான் செமினாருக்கு போகிறாள் ஊர்மிளா. இவள் மட்டும் அல்ல, உலகத்தின் பல மூலைகளில் இருக்கும் இவர்களின் ஹோட்டல்களில் இருந்து இன்னும் பலரும் அந்த செமினாருக்கு வருகிறார்கள். ஏற்கனவே ஒரு முறை சிங்கப்பூருக்கு இது போன்ற செமினாருக்குப் போயிருந்தாள் ஊர்மி. ரம்பம் போட்டு அறுத்துத் தள்ளாமல் விளையாட்டு, சுற்றிப் பார்ப்பது, நல்ல உணவு என மிக மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் நடத்தினார்கள் அந்த செமினாரை.
நிறுவனத்துக்காக நன்றாக வேலைப் பார்ப்பவர்களை இது போல அழைத்துப் போய் உற்சாகப்படுத்துவது, தங்களை விட்டு வேறு இடம் போகாமல் இருக்க மேனேஜ்மெண்ட் கடைப்பிடிக்கும் உத்தி எனப் புரிந்துதான் இருந்தது இவளுக்கு. ஆனாலும் எத்தனை நிறுவனங்கள் இதையெல்லாம் செய்கின்றன? போனஸ் கொடுப்பதே பெரிது என நினைக்கும் பல நிறுவனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுத்தானே இருக்கிறாள் இவள். அதோடு தினமும் ரூட்டினாக மாறி வரும் வேலைகளில் இருந்தும் சில நாட்கள் விடுதலை. இது போல போய் வரும் போது உடலும் மனமும் உற்சாகமாகி விடுவது இயல்பல்லவா! ஊர்மியும் சந்தோசமாகவே ஆயத்தமானாள்.
காலையில் சீக்கிரம் எழ அலாரம் செட் செய்தவள், பரதேசியின் போட்காஸ்டைக் கேட்டபடியே தூங்கிப் போனாள்.
மறுநாள் பரபரவென்றுதான் பொழுது ஓடியது ஊர்மிளாவுக்கு. உதய்பூரில் இருந்து விமானம் ஏறி டெல்லி வந்து, அங்கே காத்திருந்து இன்னொரு விமானம் ஏறி வியாட்நாமின் ஹனோய் நகரில் இருந்து ‘நொய் பாய்(Noi Bai)’ விமானம் நிலையம் வந்து சேர்வதற்குள் போதும் போதுமென ஆகி விட்டிருந்தது. ஆடை நலுங்கி, உடல் சோர்ந்து, முடி கலைந்து வந்திறங்கினாலும், மனம் மட்டும் உற்சாகமாய் இருந்தது பெண்ணுக்கு.
அங்கே செமினார் நடக்கப் போவதும் இவர்களது ரிசார்ட்டில்தான். அங்கிருந்து ஸ்லீப்பர் பஸ் வந்து காத்திருந்தது. அதை நோக்கிப் போகும் போதுதான் இந்தியாவின் மற்றப் பகுதியில் இருந்தும், வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்த இதரப் பங்கேற்பாளர்களைப் பார்த்தாள் இவள். அதில் பங்களூரில் இவளுடன் வேலைப் பார்த்த தேஜாவைக் கண்டவளுக்கு உற்சாகம் சட்டென வடிந்து போனது. அவன் இவளைப் பார்த்துப் பெரிதாய் புன்னகைக்க, சிரமப்பட்டு முக மாற்றத்தைக் காட்டாமல் புன்னகைத்து வைத்தாள் ஊர்மி.
“நீ லிஸ்ட்ல இருக்கன்னு தெரிஞ்சதும், நம்ம பெரிய பாஸ் கிட்ட கெஞ்சிக் கூத்தாடி இன்னொருத்தனுக்கு அலட் ஆன இடத்தை எனக்காக கேட்டு வாங்கிட்டு வந்திருக்கேன் ஊர்மி! ஐ ரியலி மிஸ்ட் யூ சோ மச்” எனக் கன்னடமும் ஆங்கிலமும் கலந்து பேசினான் அவன்.
“ஓ ஐ சீ!” என மட்டும் சொன்னவள், லக்கேஜை பஸ் ஓட்டுனரிடம் ஒப்படைக்கும் வேலையைப் பார்க்கப் போனாள்.
“லெட் மீ ஹெல்ப்” என்றபடி இவள் தடுப்பதற்குள் லக்கேஜை இழுத்துக் கொண்டுப் போய் விட்டான் தேஜா.
அங்கே நின்றிருந்த இரு சொகுசு ரகப் பேருந்துகளையும் ஆர்வமாய் பார்த்தாள் ஊர்மி. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித் தனிப் பேருந்தாய் போய் விட, தேஜா மனதே இல்லாமல் அவனது பேருந்தை நோக்கிப் போனான். நிம்மதிப் பெருமூச்சை இழுத்து விட்ட ஊர்மி, உற்சாகமாய் பேருந்தில் ஏறினாள்.
பங்க் பெட் போல மேலே, கீழே என வரிசையாய் இருந்தன இருக்கைகள். இருக்கைகள் எனச் சொல்வதை விட, குட்டிப் படுக்கை எனச் சொல்லலாம். இவள் மேலே இருந்த பெட் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டாள். குட்டியாய் தொலைக்காட்சி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது கால் நீட்டும் இடத்துக்கு மேலாக. அருகே இருந்த ரிமோட்டை இவள் தட்டிப் பார்க்க, உட்கார்ந்த இடத்துக்குக் கீழே வைப்ரேட் ஆனது!
“ஓ! மசாஜ் சீட்டா!” என முணுமுணுத்தாள் ஊர்மி.
ஏர்ப்போர்ட்டில் இருந்து சாப்பா ஹைலண்டுக்குப் போக கிட்டத்தட்ட 6 மணி நேரங்களாவது ஆகும். ஆகவே இவர்கள் செட்டிலானதும் பேக்கேட் செய்யப்பட்ட உணவையும் பானத்தையும் கொண்டு வந்து கொடுத்தார் ஓட்டுனரின் அசிஸ்டெண்ட். பசி உயிர் போக, சூடாக இருந்த முட்டைப் போட்டுச் செய்யப்பட்டிருந்த ப்ரைட் ரைஸையும், பப்பாளி பழத்தையும் சாப்பிட்டவள், ஜன்னல் திரைச் சீலையை விலக்கி வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். நிறைய ஸ்கூட்டர்களும், பைக்குகளுமே வீதியை நிறைத்திருந்தன.
‘சந்தோஷமா இருக்கலாம்னு வந்தா, சைத்தானும் கூட சைக்கிள்ல வருதே! சமாளிப்போம்! வேற வழி!’ எனத் தேஜாவை நினைத்துக் கொண்டவள், காதில் இயர் போனை மாட்டிக் கொண்டாள்.
அந்தி நேர வானமும், மேகமும், இயற்கை அழகும் மனதில் இதம் பரப்ப,
“கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை
உளவுப் பார்க்கச் செல்லுதோ” எனக் காதில் ஒலித்த சாதனா சர்கத்தின் குரல் இவளைச் சொர்க்கத்துக்கு அழைத்துப் போனது.
மனம் லேசாகி விட, முழுதாய் இருட்டும் வரைக்கும் வெளியேப் பார்த்தபடி வந்தவள், பின் மெல்லக் கண்ணயர்ந்து விட்டாள். ரிசார்ட் இருக்கும் இடத்தையடைந்ததும், பேருந்தில் இருந்து பேச்சுச் சத்தமும், நடமாடும் சத்தமும் கேட்க, விழித்துக் கொண்டாள் இவள். மெல்ல சோம்பல் முறித்தவள், படி வழி கீழே இறங்கினாள். கை கடிகாரம் லோக்கல் டைம் பதினொன்று எனக் காட்டியது. மற்றப் பெண்களுடன் பேருந்தை விட்டுக் கீழே இறங்கியவள், தனது லக்கேஜை எடுத்துக் கொண்டாள்.
அந்த ரிசார்ட் பல வண்ண விளக்குகளால் தகதகவென பளீரிட்டது. பனி வேறு பொழிந்து கொண்டிருக்க, சிலிர்த்தடங்கியது இவள் உடல்.
‘என்ன குளிருடா சாமி! இதுவும் மஜாவாத்தான் இருக்கு’ என எண்ணிக் கொண்டவள், கைகளை சூடு பரக்கத் தேய்த்து விட்டுக் கன்னத்தில் அழுத்திக் கொண்டாள்.
பின் ட்ராலி பேகை நகர்த்திக் கொண்டே ரிசப்ஷன் நோக்கி நடந்தாள் ஊர்மிளா.
