SC Epi 3(2)

அங்கே இவர்களுக்காக காத்திருந்த ஆட்கள், வந்தவர்களின் பெயர் பட்டியலை செக் செய்து, அறைக்கான கீ கார்ட்டைக் கொடுத்தார்கள்.

“இன்னிக்கு ரொம்ப லேட்டாகிட்டதுனால சப்பர் ரூமுக்கே வந்திடும்! வெல்கம் அண்ட் எஞ்சாய் யுவர் ஸ்டே” எனச் சொல்லி அறைக்கு அனுப்பி விட்டார்கள் இவர்களை.

இருவர் ஓர் அறையைப் பகிர்ந்து கொள்வதாகத்தான் ஏற்பாடு. இவளோடு தங்க வேண்டியவள் ட்ரிப்பை லாஸ்ட் மினிட்டில் கான்சல் செய்திருக்க, ஊர்மிக்குத் தனியறை கிடைத்தது. இவள் அருகில் வந்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான் தேஜா.

“ரொம்பத் தூக்கமா இருக்கு! எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம்” எனக் கழண்டுக் கொண்டாள் இவள்.

தனக்குக் கொடுக்கப்பட்ட அறை வெளியே நின்று கதவை மெல்லத் தட்டினாள் ஊர்மி. பின் மெல்லியக் குரலில்,

“நான் உள்ள வரப் போறேன்! யாராச்சும் காசு கட்டாம இங்க ஸ்டே பண்ணிருந்திங்கனா, ப்ளீஸ், ப்ளீஸ் வெளிய போய்டுங்க” என முணுமுணுத்து ஆஞ்சனேயர் ஸ்லோகமும் சொல்லி உள்ளே அடி எடுத்து வைத்தாள்.(ஏன் இப்படி சொல்றானு தெரியுதா உங்களுக்கு? கமேண்ட்ல சொல்லுங்க கேப்போம்)

கீ கார்டை அதற்கான இடத்தில் சொருக, உள்ளே லைட்ஸ் மற்றும் ஏசி ஆன் ஆனது. இவள் இப்பொழுது தங்கி இருப்பதை விட கொஞ்சம் பெரிய சைஸ் ரூம். இரண்டு ஒற்றைக் கட்டில்கள் இருந்தன. இரண்டுக்கும் நடுவே ஒரு டேபிள். அதன் மேல் அழகிய டிசைனில் நைட் லாம்ப் இருந்தது. சுவரில் வியட்னாமில்ஸ் ஆயில் பெயிண்டிங் ஒன்று மாட்டி வைக்கப்பட்டிருந்தது. கீழே கிரே வர்ணத்தில் கார்பேட். சாய்ந்து அமர்ந்து கொள்ள நாற்காலி ஒன்றும் அதன் முன்னே ஸ்டடி டேபிள் சின்னதாய் ஒன்றும் இருந்தது. ஜன்னல் ஒன்று இருக்க, இவள் அதை போய் திறந்து பார்த்தாள். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அதை சாற்றியவள், பாத்ரூம் போய் விட்டு வந்தாள். வெள்ளையும் பிங்கும் கலந்த மார்பிளில் பாத்ரூம் பளபளத்தது.

“’சேனா’ க்ரூப்னா சும்மாவா! அவங்க ஹோட்டல்ஸ அப்படியே அழகா இழைச்சுத்தான் படைச்சிருப்பாங்க!” என முணுமுணுத்தபடியே முகம் கழுவி விட்டு வந்தாள்.

பெல் சத்தம் கேட்க, கதவில் இருக்கும் பீப் ஹோல் வழி வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கே ரூம் சர்விஸ் ஆள் நின்றிருந்தார். கதவைத் திறந்தவள், அவர் கொடுத்த உணவு ட்ரேயை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிக் கதவைப் பூட்டினாள். ட்ரேயில் ஒரு கவர் இருந்தது. மேசை மேல் ட்ரேயை வைத்து விட்டு கவரைப் பிரித்துப் பார்த்தாள் ஊர்மி. அதில் செமினாரின் ஸ்கேடியூல் இருந்தது.

“வாட்??? காலைல எட்டுக்கே எழுந்து எக்ஸர்சைஸ் வரனுமா? அடேய்ஸ்! செமினார்ல எதுக்குடா எக்ஸர்சைஸ்!” என முனகியவள், ட்ரேயில் இருந்த உணவு வகைகளைப் பார்த்தாள்.

மஸ்ரூம் சூப் சுடச் சுட இருந்தது. அதோடு சேர்த்து கார்லிக் ப்ரேட் கொடுத்திருந்தார்கள். இன்னொரு பவுலில் மேக் அண்ட் சீஸ் இருந்தது. சூடாய் இருந்த உணவு அமிர்தமாய் தொண்டைக்குள் இறங்கியது! சாப்பிட்டதும் சற்று நேரம் அறைக்குள்ளேயே நடந்தவள், எப்பொழுதும் போல அலாரம் வைத்து விட்டு, பாட்காஸ்ட் கேட்டபடியே உறங்கிப் போனாள்.

காலையில் இவள் எழுந்த போது, மணி எட்டாகி இருந்தது. உடல் அலுப்பும், நிறைந்திருந்த வயிறும் அலாரத்தை ஸ்னூஸ் செய்ய வைத்து தூங்க விட்டிருந்தது இவளை. அடித்துப் பிடித்து எழுந்தவள், அவசரமாய் பல்லைத் தேய்த்தாள்.

“குளிக்காட்டி போகுது! எக்சர்சைஸ்தானே, எப்படியும் வேர்க்கத்தானே போகுது! முடிஞ்சதும் குளிச்சிக்கலாம்” என வாய் விட்டே சொல்லிக் கொண்டவள், டீ சர்ட் ஒன்றையும் ட்ராக் பாண்ட் ஒன்றையும் அணிந்து கொண்டு, முகத்தில் லேசாய் பவுடரை ஒற்றிக் கொண்டு ஓட்டமாய் ஓடினாள். போகும் வழியில் ரிசார்ட்டின் ஜாகிங் இடம் எங்கே என வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களைக் கேட்டபடியே அவ்விடத்துக்கு ஓடினாள் ஊர்மிளா. இவள் போவதற்குள் ஸ்ட்ரெச்சிங் முடித்திருந்தார்கள் மற்றவர்கள்.

அவர்களை கைட் செய்து கொண்டிருந்த தொப்பி அணிந்திருந்த ஒருத்தன், இவளைத் தூரத்தில் இருந்து பார்த்து விட்டு,

“யூ ஆர் லேட்! பனிஷ்மெண்டா ஜாகிங் ட்ரேக் சுத்தி அஞ்சு தடவை ஓடிட்டு வந்து இங்க ஜாய்ன் ஆகிக்கோ” என ஸ்ட்ரிக்டாக சொல்ல, முகமே விழுந்து விட்டது இவளுக்கு.

யோகாவைத் தவிர, வேறு வகை உடற்பயிற்சிகளை இவள் செய்வது மிகக் குறைவு. திடீரென ஓடச் சொல்ல, உடல் ஒத்துழைக்க மறுத்தது ஊர்மிக்கு. மூன்று ரவுண்ட் ஓடி, நான்காவதில் மெது ஓட்டமாகி, ஐந்தாவதில் வேக நடையாக்கி பனிஷ்மெண்டை நிறைவு செய்தாள் இவள்.

குனிந்து முட்டியைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கியவளின் அருகில் வந்து நின்ற அந்தத் தொப்பி மனிதன்,

“எக்ஸ்கியூஸ் மீ மிஸ் ஊர்மிளா! எனக்கு பங்க்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்! இனிமே இப்படி லேட் பண்ணாதீங்க!” என்றான்.

குனிந்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவள், மெல்ல நிமிர்ந்து நேராய் அவன் முகம் பார்த்தாள். அருகே அவள் முகத்தைப் பார்த்தவனின் கண்கள் மெல்ல விரிந்து திகைப்பைக் காட்டின. திகைப்பு மெதுவாய் மறைந்து அங்கே திமிர் குடிக் கொண்டது.

இவளுமே பேர்த்டே பார்ட்டியில் பார்த்தவனை இங்கே கண்டு அதிர்ந்துதான் போனாள்.

“ஊர்மிளா!! நாட் ஊர்வசி! இண்ட்ரெஸ்ட்டிங்! ஊர்மிளானு ஒரு கேரெக்டர் இராமயணத்துல வரும்னு படிச்சிருக்கேன்! புருஷன் லட்சுமணன் தூங்காம இருக்க, இவங்க தூங்கிட்டே இருப்பாங்க! ஆனா இங்க இருக்கற வரைக்கும் நான் பண்ணற டார்ச்சர்ல இந்த கலியுக ஊர்மிளா தூக்கம்னா என்ன விலைன்னு கேக்கனும்!” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன்,

“ஃபைவ் மோர் ரவுண்ட்ஸ்!! நவ்!!!!!” எனக் கத்தி விட்டு மற்றவர்களிடம் போய் விட்டான்.

“வியாட்னாம்ல கொண்டோலா(கேபிள் கார்) இருக்குன்னு சொன்னாங்களே! இப்படி ஒரு சண்டாளா(ன்) இருப்பான்னு யாரும் சொல்லலியே!!!” என முனகியபடியே ஓட ஆரம்பித்தாள் ஊர்மிளா.

 

(சேர்ந்தாடுவாளா???)

Scroll to Top