பேச வந்த விஷயத்தை விட்டுவிட்டு இருவரும் சக்களத்திச் சண்டையை ஆரம்பித்திருந்தனர். கைக்கலப்பு ஆவதற்குள், சுப்பு வேகமாக இருமவும் கப்சிப் என ஆகினர் இருவரும்.
மகள் இருமி மீண்டும் ஆழ்ந்து தூங்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தார்கள் அக்காவும் தங்கையும்.
“அடீ தங்கம்! பேச வந்தத விட்டுப்புட்டு இப்ப ஏன்டி ஏழரைய கூட்டுற? ஒழுங்கா விஷயத்தைச் சட்டுபுட்டுன்னு சொல்லுடி. எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுது”
“நீ எங்க பேச விட்ட!” என நொடித்த தங்கம் மீண்டும் கதையை ஆரம்பித்தார்.
“அங்க வேலை செய்ய சின்ன புள்ளைதான் வேணுமாம். கூடமாட மேல் வேலைக்கு ஒத்தாசைக்கு இருந்தா போதுமாம். அதான் நம்ம சுப்புவ அனுப்பறீங்களான்னு கேட்டா. அலமுவதான் கூப்புட்டுச்சாம் அவங்க சின்னத்தை, அதான்கா நம்ம பாக்கியம். அலமுக்கு கல்யாணம் வச்சிட்டாங்கல்ல, அதான் அனுப்ப இவளுக்குப் பிடிக்கல. அலமுவுக்குப் பதிலா நம்ம சுப்புவ அனுப்பறதுக்கு கேட்டா. உன் கிட்ட கேட்டுட்டு சொல்லுறேன்னு சொல்லி இருக்கேன்”
“அந்த எஸ்டேட் இருக்கற இடம் ரொம்ப தூரமாச்சே புள்ள. ஆத்த தாண்டில போகனும். நினைச்ச நேரத்துக்கு எப்படி போய் பார்க்கறது? அதோட இன்னிக்கு நாளைக்குன்னு நிக்கறா! பயமா இருக்குடி தங்கம்”
“யக்கா! நல்ல சம்பளம் தராங்கலாம். அதோட போட்டுக்கத் துணி, அரிசி சாப்பாடு எல்லாம் குடுப்பாங்கலாம். பாக்கியம் அத்தை அங்க இருக்கறப்ப என்ன பயம்? அது நல்லா பாத்துக்கும்”
“இருந்தாலும்!” என இழுத்தார் அன்னம்.
“இங்கப்பாருக்கா! என்னதான் முத்து ஆசைப்பட்டுக் கேட்டாலும், அவன் ஆத்தா நகை நட்டு சீர் செனத்தி இல்லாம நம்ம பொண்ண கட்ட யோசிக்கும். இவ வேலைக்குப் போனா காசு சேர்த்துக் கரை ஏத்திடலாம். அப்புறம் இதுங்க மூனும் சின்னதுங்கதானே! வளரதுக்குள்ள நாம சேர்த்துரலாம்கா. கடவுளா பார்த்து இந்த வேலைய காட்டியிருக்காரு. தயங்காதக்கா”
“நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் புள்ள. அனுப்பி வைக்கலாம்”
“இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்கா. இப்போதைக்கு முத்துவுக்குத் தெரிய வேணாம். அப்புறம் அவன் வேற வந்து ஏன் எதுக்குன்னு வம்பு பண்ணுவான். உங்க கல்யாணத்துக்குன்னா சொல்ல முடியும்? அவளே சம்பாரிச்சு அவளே கல்யாணம் பண்ணனுமான்னு கேட்டுட்டான்னா, நாம மூஞ்சிய எங்க கொண்டு போய் வைக்கிறது?”
“ஆமா புள்ள. நீ சொல்லறதும் நியாயம்தான். நம்மள இப்படி தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரே உங்க மாமா. பொட்ட புள்ளைங்கள வச்சிக்கிட்டு நம்ம பொழப்பு நாய் பொழப்பா இருக்குதே” எனக் கண்ணைக் கசக்கினார் அன்னம்.
“இப்ப எதுக்கு கண்ண கசக்கற? உழைக்க உடம்புல தெம்பு இருக்கு, அப்புறம் ஏன் கண்ணீர்? அழாதக்கா” என அக்காவைத் தேற்றினார் தங்கம்.
கண்ணை மூடி படுத்திருந்தாலும், இவர்கள் பேசுவதை கேட்டிருந்தாள் சுப்பு. அவளுக்கும் அழுகை முட்டியது.
‘என்னைத் தனியா எங்கயோ அனுப்ப போறாங்க போல இருக்கே! ஆத்தாவையும், தங்கச்சிகளையும் விட்டுட்டு எப்படி இருப்பேன்? எனக்குச் சரியா வீட்டு வேலை செய்யத் தெரியாதே! என் முடிய கூட சிக்கெடுத்து சீவ தெரியாதே! தனியாவும் படுக்க பயமா இருக்குமே!’
கண்ணீர் வழிவதை யாரும் பார்க்காமல் இருக்கக் குப்புறப் படுத்துக் கொண்டாள் சுப்பு. தங்கம் மகள் அருகே நெருங்கி தூங்குபவளின் தலையை கோதிக் கொடுத்தார். குப்புறப் படுத்திருந்ததால் மகள் அழுவது தெரியவில்லை அவருக்கு.
“ஆத்தா மகமாயி! என் மகள தனியா அனுப்பப் போறேன். நீதான்மா துணையா இருந்து அவள கண் கலங்காம பாத்துக்கனும்”
இவர் கண் கலங்கியவாறே மகளை அணைத்துப் படுத்துக் கொண்டார்.
‘அழாதீங்க ஆத்தா! நான் பத்திரமா இருந்துக்குவேன். நிறைய சம்பாரிச்சு உங்களுக்கு எல்லாம் குடுப்பேன். அங்க அரிசி சோறு குடுப்பாங்களாமே! இதோட கேப்பங்களியில இருந்து எனக்கு விடுதலை’ என மனதிற்குள்ளேயே சமாதானம் ஆகிக் கொண்டாள் சுப்பு.
அரிசி சோற்றுக்குத் தாம் என்னவெல்லாம் இழக்கப் போகிறோம் என அந்தப் குழந்தை குமரிக்குத் தெரியவில்லை.
(தூண்டுவான்…)
