SC Epi 5(1)

அத்தியாயம் 5

“எல்லாருக்கும் பிடிச்ச வாசனைகள் பல இருக்கும். அம்மாவ கட்டிப் பிடிக்கறப்ப வர பவுடர் கலந்த வியர்வை வாசம், புது புத்தகத்த வாங்கிப் பிரிச்சு மூக்குக் கிட்ட வைக்கறப்ப வர உன்னத வாசம், மனைவி முந்தானைலயோ, துப்பட்டாவுலயோ வர அவளுக்கே உரித்தான வாசம், பெட்ரோல் நிரப்பறப்ப மூக்க நிரடிப் போற ஸ்ட்ராங்கான எண்ணெய் வாசம், நாலு மணியானதும் டீ கலக்கற முன்னாடியே மூக்கு முன்னாடி வந்து மணியடிச்சிட்டு எப்படா தேத்தண்ணிக் குடிக்கப் போறன்னு கேட்டுட்டுப் போற தேத்தூள் வாசம்னு பல வகை இருக்கு. இதுல சிலது சிலருக்குப் புடிக்கலாம்! சிலது சிலருக்குப் பிடிக்காம போகலாம். ஆனா எல்லாருக்கும் புடிக்கற வாசனை ஒன்னு இருக்கு தெரியுமா உங்களுக்கு? அது என்னான்னா, ஏ.டி.எம்ல இருந்து எடுக்கற புது நோட்டோட வாசம்! அவ்வ்வ்வ்! சொர்க்க வாசம்டா அது! டேய்! ஜீபே காலத்துல நீ இன்னும் நோட்ல இருக்கியான்னு கேக்கப்படாது! அப்படி கேக்கறவங்க மூக்க சாமிக் குத்திடும்!!

(பாட்காஸ்ட் பை பரதேசி!!!)

 

அவர்களது ரிசார்ட்டின் பேருந்தில் இருந்து இறங்கி நின்றவர்களிடம்,

“கைய்ஸ்! இது கேட் கேட் வில்லேஜ்(Cat Cat Village)கு போகிற நுழைவாசல். உங்களுக்காக டிக்கேட் ஏற்கனவே நான் எடுத்துட்டேன். அந்த வில்லேஜ்கு போக கொஞ்சம் இறங்கி பள்ளத்தாக்கான பகுதில நடக்கனும்! நடந்து இயற்கைய ரசிச்சிட்டேயும் போகலாம். இல்லைனா பகீ(buggy)ல ஏறியும் போகலாம்! எல்லாமே உங்க இஷ்டம்தான். கரேக்டா 6 மணிக்கு இங்க வந்திடுங்க! நம்ம பஸ் இங்க வெய்ட்டிங்ல இருக்கும். அதுக்கு மேல க்ளோஸ் பண்ணிடுவான் இந்த இடத்த” என ஆங்கிலத்தில் சொன்னான் விஷ்ணு.

“ஓகே ட்ரைனர்!” எனச் சந்தோஷமாக கோரஸ் கொடுத்தார்கள் எல்லோரும்.

சிறு குழந்தைகளை வழி நடத்துவது போல எங்கே இவன் கைடாக பின்னாடியே வருவானோ என நினைத்தவர்களுக்கு இந்தச் செய்தி சந்தோஷத்தைக் கொடுத்தது.

“ட்ரைனர்! ஏன் இந்த வில்லேஜ்கு கேட் கேட்னு பேரு வச்சிருக்காங்க! இங்க நிறையப் பூனை இருக்குமோ?” எனப் பூனைக்குப் பயந்த பெண்ணொருத்தி சந்தேகம் கேட்டாள்.

புன்னகையுடன்,

“இருபதாம் நூற்றாண்டுல ப்ரென்ச்காரங்க இந்த இடத்த அவங்களோட ஹோலிடே இடமா வச்சிருந்தாங்க! இங்க அருவி இருக்கறதுனால, அவங்க மொழில காட்ஸ்கேட்(CatScat)னு, அதாவது தண்ணீ மேல இருந்து கீழ ஊத்துறதுன்னு பேரு வச்சாங்களாம்! அது அப்படியே மருவி கேட் கேட்னு ஆகிடுச்சு!” என்றான் விஷ்ணு.

தலையாட்டியபடியே அவரவர் தங்கள் இஷ்டமாக நடந்தோ, பகீ ஏறியே அங்கிருந்து கிளம்பினார்கள்.

இதுதான் சமயம் என தேஜா, ஊர்மியின் அருகே வந்து நின்றான்.

“ஊர்மி! நாம ஒன்னா சுத்தலாமா? பகீ வந்திடுச்சு பாரு! கம்! கம்!” என அவசரப்படுத்தினான்.

முதலில் பகீ எடுக்க நினைத்தப் பெண், தன் முடிவை மாற்றிக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவளது நேர் கொண்டப் பார்வையில் சற்றுத் தடுமாறிய தேஜா,

“என்ன ஊர்மி?” எனக் கேட்டான்.

“நான் நடக்கப் போறேன்! நீங்களும் என் கூட நடந்து வாங்க! உங்க கிட்டப் பேசனும்” என்றாள் பெண்.

“என்னப் பேசனும்?”

“என்னைப் பத்திப் பேசனும்” என்றவள் நடக்க ஆரம்பிக்க, இவனும் அவள் பக்கமாய் நடந்தான்.

“தேஜா!”

“சொல்லு ஊர்மி! உன்னோட டோன பார்த்தா, நீ மறுபடி என்னை ரிஜேக்ட் பண்ணப் போறன்னு தெரியுது! பட் ப்ளீஸ்! என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறதுல உனக்குக் கிடைக்கப் போகும் அட்வாண்டேஜஸ கொஞ்சம் யோசிச்சுப் பாரு ஊர்மி! யாரும் இல்லாத உனக்கு நான் சொந்தமா கிடைப்பேன். என் குடும்பம் கிடைக்கும். வேலை, வேலைன்னு லைஃப் அப்படியே போய்டாம, குடும்பம் புள்ளக் குட்டின்னு சேஞ்சஸ் வரும். அனாதைங்கற பேரு மாறிடும்” என அடுக்கினான் தேஜா.

நடந்தபடியே அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள், அனாதை எனும் வார்த்தையில் சட்டென நின்று விட்டாள். பின் பெரிய மூச்செடுத்துத் தன்னைச் சமன் செய்தவள்,

“இந்த உலகத்துல யாருமே அனாதை இல்ல தேஜா! நான் இருக்கேன் உனக்குன்னு முகம் மோதி போகிற காத்து இருக்கற வரை யாரும் அனாதை இல்ல! உடலை நனைச்சிட்டு போகிற மழை இருக்கற வரை, யாரும் அனாதை இல்ல! சுள்ளுன்னு சுட்டெறிக்கற சூரியன் இருக்கற வரை யாரும் அனாதை இல்ல! என் ஆஞ்சனேயர் என் கூடவே இருக்கறப்ப நான் எப்படி அனாதையாவேன்?” எனக் கேட்டாள்.

ஊர்மியின் குரலில் கோபம் இல்லை, ஆற்றாமை இல்லை, வருத்தம் கூட இல்லை. சாதாரணமாகத்தான் கேட்டாள் அவள்.

“அதெல்லாம் இருந்தாலும் தோள் சாய்ச்சுக்க ஓர் ஆண் வேண்டாமா?”

“அப்படிப் பார்த்தா கூட, கல்யாணம் செஞ்சுக் குடும்பமா இருக்கற எத்தனை ஆம்பளைங்க அவங்க பொண்டாட்டிய தோள் சாய்ச்சுக்கறாங்க? அந்தப் பொண்ணுங்களாம் நமக்கு விதிச்சது இதுதான்னு வாழலியா?”

“மத்தவங்கள விடு ஊர்மி! உன்னை நான் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துப்பேன்” என்றான் தேஜா.

“தேஜா! போன தடவை உன்னை நான் வேணாம்னு சொன்னதுக்கான உண்மையானக் காரணத்த சொல்லாம வேலை மாறி வந்துட்டேன். இப்படி மறுபடி நீ வந்து என் முன்னாடி நிப்பன்னு நெனைக்கல! அதனால எதுக்கு வீணா வார்த்தைய விடனும்னு வந்துட்டேன்!” என்றவள் கொஞ்சம் நின்று அவனது கண்களை நேராய் நோக்கினாள்.

அந்தப் பார்வையில் தடுமாறி நின்றான் தேஜா.

“நீ என்னைச் சுத்தி வரதுக்கான காரணம் என்னன்னு எனக்குத் தெரியும் தேஜா”

“நம்பாதே ஊர்மி! நாம ஒன்னு சேராம இருக்க, யாரோ உன் கிட்ட இல்லாததும் பொல்லாததும் போட்டுக் குடுத்திருக்காங்க!” எனப் படபடத்தான் இவன்.

வாய் விட்டுச் சிரித்தாள் ஊர்மிளா.

“அந்த அனாதை நாய்க்கு அன்புங்கற எலும்புத் துண்டப் போடற மாதிரி நடிச்சா, காலம் முழுக்க காலடிய நக்கிட்டு நன்றியா கிடக்கும்” எனச் சொல்லியவளைப் பேயறந்ததைப் போல பார்த்தான் தேஜா.

“கிச்சன் ஹெல்பர் கூட நீ பேசிட்டு இருந்தத என் ரெண்டுக் காதால கேட்டேன் தேஜா. வேற என்ன சொன்ன நீ?” என நெற்றியைத் தட்டி யோசித்தவள்,

“ஹ்ம்ம்! ஞாபகம் வந்திடுச்சு! ‘அழகா இருக்கா, ஸ்ட்ரக்சர் டக்கரா இருக்கு! நல்ல சம்பளம்! இன்னும் கூட க்ரேட் ஏறுற சான்ஸ் இருக்கு! வளைச்சுப் போட்டுட்டா, நல்லா செட்டில் ஆகிடலாம்! ப்ளெஷர்கு ப்ளெஷரும் ஆச்சு, பணத்துக்குப் பணமுமாச்சு! நாலு தட்டுத் தட்டி வச்சா கூட, அப்பா, அம்மா, மாமன், மச்சான்னு எவனும் இல்ல நம்மள கேள்விக் கேட்க! இப்படி ஒரு பேக்கேஜ் எங்க கிடைக்கும் சொல்லு!’னு சொன்னல்ல! ஒன்னு ரெண்டு வார்த்தை மாறி இருக்கலாம். ஆனா நீ சொன்ன சாராம்சம் இதுதானே! யூ சீ தேஜா, உனக்குப் பயந்து நான் அந்த இடத்த விட்டு ஓடி வரல. அருவருத்துப் போய்த்தான் கிளம்பி வந்தேன்! உன்னை மாதிரி சாக்கடை கூட, இறங்கிச் சண்டைப் போடப் புடிக்கல! சேறு என் மேலயும் இல்ல தெறிச்சிடும்! யாரும் இல்லாதவனா கிள்ளுக் கீரையா போச்சா? எனக்கு நான் இருக்கேன்! அது போதும்! இப்போ தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ தேஜா! உன்னோட உள் நோக்கம் என்னன்னு தெரியாம இருந்திருந்தா கூட நான் உன்னை ரிஜேக்ட்தான் பண்ணிருப்பேன்! ஏன்னா எனக்கு இந்தக் கல்யாணம், குடும்பம், குழந்தைக் குட்டி கான்சாப்ட் மேல பிடிப்போ, பிடித்தமோ இல்லை! சோ ப்ளீஸ்! இனி என்னைத் தொந்தரவு செய்யாதே! மீறி டார்ச்சர் பண்ணீனா, ஹையர் மேனேஜ்மெண்ட் கிட்ட ஹராஸ்மெண்ட் கம்ப்ளேண்ட் ரேய்ஸ் பண்ணிடுவேன்!” எனக் குரலை உயர்த்தாமல், வார்த்தைகளை அம்பாய் எய்தாள் பெண்.

அது எதிரில் இருப்பவனைச் சுருக்கெனக் குத்தி விட, முகம் சிவந்து போனது தேஜாவுக்கு. அருகே போய் கொண்டிருந்த பகீயைக் கை காட்டி நிறுத்தியவன், இவளுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் அதில் ஏறிப் போய் விட்டான்.

Scroll to Top