இவர்களுக்குப் பின்னால் சற்றுத் தள்ளி நடந்து வந்த விஷ்ணு இதையெல்லாம் கேட்டிருந்தான். புற முதுகிட்டு ஓடிப் போனவனைப் பார்த்துச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது இவனுக்கு. எங்கே சிரித்தால் திரும்பிப் பார்த்து, இவனை முறைப்பால் பஷ்பமாக்கி விடுவாளோ எனும் எண்ணத்தில் அடக்கிக் கொண்டான் விஷ்ணு.
“யம்மா! வார்த்தை ஒவ்வொன்னும் மிசின் கன்ல இருந்து வெளி வந்த தோட்டாத்தான். எப்படித் தாக்கறா பாரேன்! டேய் விஷ்ணு, உன்னோட நல்ல வேளை, டார்ச்சர் பண்ண உன்னை சும்மா விட்டு வச்சிருக்கா! இனி அவ பக்கம் தலை வச்சிப் படுக்காதே! அதான் உனக்கு நல்லது!” எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் இவன்.
மனமோ,
‘யாரும் சொந்தம்னு இல்லாம தனிச்சு வளந்திருக்கா! அவள அவளே பாதுகாத்துக்க வேண்டியக் கட்டாயம்! அதான் நான் நம்பர் கேக்கவும் நாசூக்கா வேறாள் நம்பர் குடுத்துத் தப்பிச்சு ஓடிருக்கா! சாரி நாட் இண்ட்ரெஸ்ட்டேட்னு சொன்னா, வேற வழில நான் எதாச்சும் செஞ்சு அவள மடக்கி நாசம் பண்ணிருவேனோன்னு பயந்திருக்கலாம். அவளோட பாயிண்ட் ஆஃப் வியூல அவ செஞ்சது சரிதான். இப்ப அவள பத்தித் தெரிஞ்சதும், எனக்கும் அவ செஞ்சது சரியாத்தான் தோணுது!’ என அவள் மீது பரிவு கொண்டது.
அங்கங்கே நின்று, தூரத்தில் பசேலெனத் தெரிந்த இயற்கை காட்சிகளையும், நெல் பயிரிடப்பட்டிருந்த நிலங்களையும் போட்டோ எடுத்துக் கொண்டே நடந்தவளை, நட்புடன் நோக்கின இவன் விழிகள். படிகள் இறங்கிக் கீழே போக வேண்டியப் பாதையின் இரு மருங்கிலும் உடைகள், நினைவுப் பொருட்கள், ஸ்நேக்ஸ் விற்கும் கடைகள் என வரிசையாய் இருந்தன. அதில் ஒன்றில் நின்று ‘சாப்பா ஹைலண்ட்’ என எழுதி இருந்த டீ ஷர்ட் ஒன்றையும் கீசெயினையும் வாங்கிக் கொண்டிருந்தவளைப் பக்கத்துக் கடையில் பொருட்கள் வாங்கும் பாவனையில் நின்றபடி நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் இவன். அவள் சட்டெனத் திரும்பிப் பார்க்க, வேலைப்பாடு செய்திருந்த குடை ஒன்றைக் காட்டி என்ன விலை எனக் கேட்பதைப் போல நடித்தான் விஷ்ணு. அவள் நடக்க ஆரம்பிக்க, விலை கேட்டதற்காக அவசரமாய் குட்டிக் காற்றாடி ஒன்றை வாங்கிக் கொண்டு அவள் பின்னே நடந்தான் இவன்.
ஒரு கடையின் முன்னே மக்கள் கூட்டமாய் நிற்க, ஊர்மிளாவும் அங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைக்காரர் பெரிய கண்ணாடிக் குடுவையில் இறந்து போன கோப்ரா பாம்பு ஒன்றை போட்டு வைத்து அதை வைனில் ஊற வைத்திருந்தார். அதோடு சேர்த்து சில மூலிகைகளும் அதில் ஊறிக் கொண்டிருந்தன. சைனாவுக்குப் போன போது அதை குடித்துப் பார்த்திருக்கிறான் இவன். பல மாதங்களாக அதில் ஊற வைப்பதால் பாம்பின் விஷத்தன்மை முறிந்து மருத்துவ குணங்கள் வந்து விடுவதாக சொல்லப்படுகிறது.
அவள் அருகே போய் நின்றவன்,
“அதை குடிச்சா எனெர்ஜீ பூஸ்ட்டாகுமாம். அதோட ரத்த ஓட்டம் சீராகி முட்டி வலிய எல்லாம் நல்லாக்கிடுமாம். ஐ டேர் யூ டு ட்ரை திஸ்! அப்படி ஒரு கப் குடிச்சிட்டினா, நம்மளோட சின்னப்புள்ளைத்தனமான சண்டைய முடிச்சிக்கிட்டு ப்ரெண்ட்ஸ் ஆகிடலாம்” எனக் கண் சிமிட்டிக் கேட்டான் இவன்.
“அப்படி நான் குடிச்சிட்டா, என்னை வேணும்னே ஓட விட்டு டார்ச்சர் செய்யறத விட்டுருவீங்களா ட்ரேய்னர்?”
“யெஸ்!”
“அப்போ சரி!” எனக் கடைக்காரரின் முன்னால் போனவளை,
“ஹேய்! நான் சும்மா உன்னை டீஸ் பண்ணேன்! அதெல்லாம் வேணாம் வா!” என்றான் விஷ்ணு.
“டீல் இஸ் அ டீல்!” என்றபடி இரண்டுக் கப்புக்கான பணத்தைச் செலுத்தினாள் ஊர்மி.
ஒன்றை அவள் எடுத்துக் கொண்டு, மற்றொன்றை இவனிடம் நீட்டினாள் பெண்.
“யாரையும் பார்க்க வச்சு சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது ட்ரெய்னர்” என்றவளின் கண்கள் சிரித்தன.
இவனுமே சிரிப்புடன் அந்த கப்பைப் பெற்றுக் கொண்டான்.
“விஷமா இருக்கும்னு பயம் இல்லையா உனக்கு?”
“எந்த விஷமும் என்னை ஒன்னும் பண்ணாது ட்ரெய்னர்” எனச் சொல்லி,
“சியர்ஸ்” என்றாள் ஊர்மி.
இவனும் அவளது கப்பை இடித்து சியர்ஸ் எனச் சொன்னபடி ஒரே கல்ப்பில் அதைக் குடித்து முடித்தான். அவனைப் பின் பற்றி ஒரே மூச்சில் குடித்தவள், தொண்டையைத் தடவிக் கொண்டாள்.
“எரிஞ்சு தொலையுது” என்றபடியே இருமியவள், தொண்டையைச் செறுமிச் சரி செய்து கொண்டாள்.
அவனது ஓர விழிப் பார்வை அவளது சங்கு கழுத்தில் நிலைப் பெற்று நகர முடியாமல் சண்டித்தனம் செய்தது. சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்டவன்,
“இது மூலிகைத் தண்ணி மாதிரித்தான்! ஒன்னும் செய்யாது வா!” எனச் சொல்லி வேகமாய் முன்னே நடக்க ஆரம்பித்து விட்டான்.
அவன் பின்னால் நடந்து வந்தவள்,
‘இப்பத்தான் சிரிச்சுப் பேசனாங்க! அதுக்குள்ள முகத்த இஞ்சித் தின்ன குரங்கு மாதிரி வச்சிட்டுப் போறாங்க! பொண்ணுங்களுக்குத்தான் பி.எம்.எஸ், மெனொபொஸ்னு மூட் சட்டு சட்டுன்னு மாறும்னு யார் சொன்னது! இந்த ஆம்பளத் தடிப்பசங்களுக்கும் இது போல மாறும் போல! நமக்கு ஆராய்ச்சி செஞ்சது போல, பாவம் இந்தப் பயபுள்ளைங்களுக்கு யாரும் ஆராய்ச்சி செஞ்சு பேரு வைக்கலன்னு நெனைக்கறேன்! ஆம்பளன்னா தக்காளி தொக்குத்தான் போலிருக்கு’ என எண்ணியவளுக்குச் சிரிப்பு வந்தது.
தேஜா அப்செட்டாக்கி வைத்திருந்த இவள் மூடை, ட்ரெய்னர் பம்புசெட்டாக்கி வைத்திருந்தான். அதாவது பம்புசெட்டில் தண்ணீர் பாய்ந்து வருவது போல, உற்சாகத்தைக் கரை புரண்டு ஓட வைத்திருந்தான். அதன் பின் யாரையும் பொருட்படுத்தாமல் இவளே தனியாகச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள். கேட் கேட் விலேஜில் நுழைந்தவளுக்கு, அப்படியே டைம் மிசின் ஏறி பழைய காலத்துக்குப் போய் விட்டது போல இருந்தது.
அருவியில் இருந்து நீர் கொட்ட, ஓடை அழகாய் ஓடியது. அதைக் கடக்க, பலகைப் பாலம் போட்டு வைத்திருந்தார்கள். பாரம்பரிய உடை அணிந்த வியட்நாமியர்கள் அங்கிங்கு நடக்க, லேசாய் தூரல் போட்ட வானம் ஏகாந்தத்தைப் பரப்பியது. கைகளைத் தேய்த்துக் குளிரை விரட்டியவள், பாரம்பரிய நடனம் நடக்கும் இடத்தை நோக்கிப் போனாள். அங்கே அந்தப் பெண்கள் கருப்பு உடை அணிந்து கையில் குச்சிப் போன்ற ஒன்றை வைத்தபடி அதை ஆட்டி ஆட்டி ஆடுவதைப் பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அதன் பிறகு துணியை எப்படி நெய்வார்கள் என டெமோ நடக்க, அதையும் போய் பார்த்தாள். அங்கே இருந்த கபேயில் குளிருக்கு இதமாய் தேநீர் வாங்கி அருந்தியவள், தூண் ஒன்றில் சாய்ந்து நின்று தன்னைச் சுற்றிக் கொட்டிக் கிடந்த இயற்கை அழகை அணு அணுவாய் ரசித்து, மனம் எனும் பெட்டகத்துக்குள் சேமித்து வைத்துக் கொண்டாள்.
அவளது நடமாட்டத்தையே கவனித்தபடி இருந்த விஷ்ணுவுக்குத் தூணில் சாய்ந்து, கையில் தேநீர் கோப்பையுடன் நின்றவளின் போஸ் மனதை அப்படியே அள்ளிக் கொண்டுப் போனது! அலைப்பேசியை எடுத்து, அந்தக் காட்சியை அப்படியே க்ளிக்கிக் கொண்டான் விஷ்ணு.
‘அப்போ எனக்குக் குடுத்த அதே தாக்கத்த இத்தனை வருஷம் கழிச்சும் குடுக்கறா இந்தப் பொண்ணு! வேணாம்னு எவ்ளோ தடுத்தாலும் என் கண்கள் இரண்டும் சொன்னப் பேச்ச கேட்காம அவ பின்னாடியே போகுதே! டேய் விஷ்ணு! அடங்குடா! இது சரியில்ல!’ என எச்சரித்தது இவன் அறிவு.
பெருமூச்சுடன் பாறைகள் இருக்கும் இடம் போனவன், அருவியில் இருந்து ஊற்றும் நீரையும், அது எழுப்பும் ஓசையையும் கேட்டபடி நின்று விட்டான். அவன் மனமோ அந்த அருவியைப் போலத்தான் பேரோசையாய் ஆர்ப்பரித்தது.
ஊர்மிளா அருகே வந்த வியாட்நாமிய பெண்ணொருத்தி, அவர்களது பாரம்பரிய உடையணிந்து போட்டோ எடுத்துக் கொள்ள விருப்பமா எனக் கேட்ட, இவள் உடனே சரியெனத் தலையசைத்து விட்டாள். கழுத்துப் பகுதி இல்லாமல், மார்பை கௌவிப் பிடித்து, இடுப்போடு இழைந்து கீழே பாவாடைப் பகுதி பரந்து குடை போல விரிந்து நின்றது. சிகப்பும் நீலமும் கலந்த வர்ணத்தில், அங்கிங்கு மணிக்கற்கள் கோர்க்கப்பட்டு பளபளத்தது அந்த உடை. கழுத்திற்கு வெள்ளைக் கல் வைத்த ஆரம், தொங்கும் தோடு என அழகாய் அலங்கரித்து விட்டார்கள் இவளை. அருவி முன்னே ஒரு போட்டோ, வெள்ளைக் குதிரைப் பக்கத்தில் ஒரு போட்டோ, பாலத்தின் நடுவே ஒரு போட்டோ, அழகான மர வீட்டின் முன்னே ஒரு போட்டோ என நிறைய போட்டோக்கள் எடுத்தார்கள். இவளுமே சந்தோஷமாகப் போஸ் கொடுத்தாள்.
இதையெல்லாம் ரசனையாக ஒரு ஜோடிக் கண்களும், துவேஷத்துடன் ஒரு ஜோடிக் கண்களும் பார்த்தபடி இருந்தன.
அவர்களின் சேவைக்குப் பணம் கொடுத்து விட்டுப் போட்டோக்களை வாங்கிக் கொண்டு வந்தாள் ஊர்மி. வேலை, வேலையென அதிலேயே மூழ்கிக் கிடந்தவளின் இறுகிய மனதை இயற்கை வளங்கள் நிறைந்த இவ்விடம் மென்மையாக்கி, சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. அருவி ஓரம் நடந்து வந்தவள், தேஜா அவள் முன்னே வர ஒதுங்கி வழி விட்டாள். அடுத்த நொடி தண்ணீரில் விழுந்து கிடந்தாள் ஊர்மிளா. அங்கிருந்த பாறைக் கற்கள், கையையும் காலையும் பதம் பார்த்திருக்க, எழுந்து கொள்ள முடியவில்லை இவளால்.
“ஊர்வசி!!” எனச் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள் ஊர்மிளா.
இவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான் விஷ்ணு. சட்டெனத் தண்ணீருக்குள் இறங்கி இவளை அள்ளிக் கொண்டான் அவன்.
“ஆ!!! கைய அழுத்தாதீங்க ட்ரைய்னர்! வலிக்குது” என்றவளின் கண்கள் கலங்கி இருந்தாலும், ஒரு சொட்டுக் கண்ணீர் கீழே சிந்தவில்லை.
“என்னன்னு இப்ப பார்த்திடலாம் ஊர்மி!” என்றவன் அவளைக் கரையில் அமர வைத்துக் கையை ஆராய்ந்தான்.
ஊர்மியால் இடது பக்கக் கையை அசைக்கவே முடியவில்லை. வலி உயிர் போனது. இடப் பக்கக் காலும் நன்றாய் சிராய்த்திருந்தது. அவசரமாய் அலைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்துப் பேசியவன், அவனது சட்டையைக் கழட்டி அதை வைத்து இடக் கையைத் தொட்டில் போல் கட்டி விட்டான்.
“கைல கொஞ்சம் வலுவா அடிப்பட்டிருக்கு! கால்ல சிராய்ப்புக் காயம்தான்! மேல வரைக்கும் போய்டலாம்! அங்க ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிப் போக ஏற்பாடு செஞ்சிட்டேன்! கைய மட்டும் அசைக்காதே ஊர்மி! நான் உன்னைத் தூக்கிக்கறேன்” எனப் படபடத்தான் விஷ்ணு.
“இல்லல்ல ட்ரைய்னர்! என்னால உங்கள பிடிச்சுட்டு நடக்க முடியும்! படி வேற ஏறனும்! உங்களுக்குக் கஷ்டமாகிடும்” என இவள் சொல்ல, வலியிலும் இவன் தூக்குவதை அவள் விரும்பவில்லை எனப் புரிந்து கொண்டான் விஷ்ணு.
ஒரு கையை அவள் தோள் மேல் போட்டு இவன் இறுக்கிக் கொள்ள, இவன் மேல் லேசாய் சாய்ந்தபடி வலியைப் பொறுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் ஊர்மிளா.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இவள் ஊர் கிளம்ப முனைந்த போது, ஊர்மியின் டிக்கேட் கான்சலாகி இருந்தது. புசுபுசுவெனக் கோபம் ஏற, விஷ்ணுவின் முன்னே போய் நின்றாள் ஊர்மிளா. அவள் கண்களில் தெரிந்த கோபத்தைப் பார்த்து,
“ஊர்மிளா! ஊர்மிளா!! நீ கண்ணடிக்கும் மின்னலா ஊர்மிளா???” எனப் பாடினான் விஷ்ணு!
(சேர்ந்தாடுவாளா???)
