IMTP epi 3(1)

அத்தியாயம் 3

 

“தொரை சொல்லறத கேட்டு நடக்கனும்! அங்க போயி உன் வாலை சுருட்டி வச்சிட்டு சொல்லற வேலைய ஒழுங்கா பார்க்கனும். பாக்கியம் பாட்டி ஏதாவது குறை சொன்னாங்க உன்னைப் பத்தி, முதுகு தோல உரிச்சிருவேன்” என மிரட்டிக் கொண்டிருந்தார் தங்கம்.

பக்கத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றார் அன்னம்.

“என் ஆத்தா சுப்பு! பாத்து பத்திரமா நடந்துக்க தாயி! எங்க மனசெல்லாம் உன் மேல தான் அடிச்சிக்கும். தொரை கிட்ட நல்ல பேரு எடுக்கனும் நீ!” எனச் சொல்லிக் கண்ணைத் துடைத்துக் கொண்டார் அன்னம்.

ஆற்று ஓரத்தில் அவர்கள் குடும்பமும், அலமுவும் நின்றிருந்தார்கள். இங்கிருந்து சுப்பு செல்லப் போகும் எஸ்டேட்டுக்குப் பரிசல் பயணம்தான். ஒரு மணி நேரம் பரிசலில் பயணித்து அக்கரை இறங்கி, அங்கிருந்து நடந்தோ அல்லது ட்ராக்டர் ஏறியோ பயணித்து இவள் வேலை செய்யப் போகும் பங்களாவை அடைய வேண்டும். அக்கரையில் போய் துரை வீட்டுக்குப் போக வேண்டும் என்றால் யாராவது அழைத்துப் போவார்கள் என ஏற்கனவே சொல்லி இருந்தார் பாக்கியம். அவருக்கு, அலமுவுக்குப் பதில் சுப்பு வருவது தெரியாது. இப்பொழுது மாதிரி தகவல் பரிமாற்றங்கள் சுலபமில்லையே அப்பொழுது.

“சுப்பு! என் கல்யாணத்துக்குக் கூட உன்னால வர முடியாதே! இனிமே நாம எப்ப பார்ப்போம்னு தெரியலையேடி!” எனக் கண் கலங்கினாள் அலமு.

இவளுக்கும் அழுகை முட்டியது. தான் அழுதால் மற்றவர்கள் இன்னும் கவலைப்படுவார்கள் என அறிந்தவள் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டுப் புன்னகை முகமாகவே,

“நா வராம உன் கடா மீசை தாலிய கட்டிருமா? விட்டுருவனா? நீ கவலைப்படாதடி. கண்டிப்பா வருவேன். டீ அலமு! என் தங்கச்சிங்கள கொஞ்சம் பார்த்துக்கடி. நான் இல்லாம வாடி போயிருவாளுக!” என அவள் காதருகே முணுமுணுத்தாள்.

“அவளுக எனக்கும் தங்கச்சிங்க மாதிரிதான். நான் கல்யாணம் ஆகி போற வரைக்கும் பத்திரமா பாத்துக்கறேன். நீ பத்திரமா இரு புள்ள!”

அழுதபடி நின்ற தங்கைகளை அணைத்துக் கொண்டவள், பாசமாக முத்தமிட்டாள்.

“ஏத்தா! பரிசல் கெளம்ப வேணாமா? எம்புட்டு நேரம்தான் கண்ணைக் கசக்கிட்டு நிப்பீங்க எல்லாரும்? சட்டுபுட்டுன்னு புள்ளய ஏத்தி விடுங்க” எனச் சத்தம் போட்டார் பரிசல் ஓட்டுபவர்.

“பரிசல்தானே ஓட்டுறீரு! என்னமோ ஆகாச கப்பல் ஓட்டற மாதிரி என்னத்துக்கு இந்த மிதப்பு?” என நொடித்துக் கொண்டார் தங்கம்.

பின் கண்ணைத் துடைத்துக் கொண்டவர்கள், சுப்பு பரிசலில் ஏற உதவினர். தன் சொத்தாக கிழிந்த ஒரு கோணிப் பையைக் கையில் சுமந்தபடி உறவுகளுக்குக் கையாட்டினாள் சுப்பு. புள்ளியாய் அவர்கள் உருவம் மறையும் வரையில் கை ஆட்டிக் கொண்டே இருந்தாள். அதன் பிறகே கண்கள் உடைப்பெடுத்துக் கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்தது.

அங்கே எஸ்டேட்டில்,

“இப்ப என்ன ப்ராப்ளம்?” எனக் கேட்டான் அவன்.

குரலில் அதிகாரம், கோபம், ஆற்றாமை எல்லாம் சரிவிகிதத்தில் எட்டிப் பார்த்தது.

“அது வந்து துரை…” என மென்று விழுங்கினார் பரசு.

அவர்தான் அவனின் வலது கை, அல்லக்கை, மேனேஜர், விசுவாசி எல்லாமே.

“பேசு பர்சு!”

வயதுக்கோ அனுபவத்துக்கோ இங்கே மரியாதை இல்லை. அவன் உயரம் அப்படி.

“எப்பொழுதும் மாதிரி ஜாதி சண்டைதான் துரை. போன தடவை கோயிலுக்குள்ள கீழ் ஜாதிக்காரன் நுழைஞ்சிட்டான்னு வெட்டிப்புட்டானுங்கல்ல, அதோட தொடர்ச்சிதான் இது. வெட்டு வாங்கனவன் வீட்டுல இருந்து ஒரு பையன், மேல் ஜாதி வீட்டுப் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டானாம். இப்ப ஊரே கலவரமா கிடக்கு”

“புல்ஷிட்! என்ன பர்சு இது? இப்படி அடிச்சுகிட்டு இவனுங்க வேலைக்கு வரலன்னா எங்களுக்கு எவ்வளவு நஷ்டம்னு புரியுதா? எங்களுக்கு வேலை நடக்கனும்னுதானே உங்க எல்லாரையும் இங்க கொண்டு வந்து சேர்த்துருக்கோம். சீனன், மலாய்காரன், இந்தியன்னு மூனு இனமும் இந்த நாட்டுல இருக்கீங்க. நீங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து சுதந்திரம் கேட்டுட கூடாதுனுதானே பிரிச்சி வேற வேற இடத்துல குடி வச்சிருக்கோம். ஆனா பாரு வேடிக்கைய, ஒரே இனமான நீங்களே இப்படி அடிச்சிக்கிறீங்க! உங்கள எல்லாம் ஒன்னா ஒரு எஸ்டேட்டுல வாழ வச்சா உங்களுக்குள்ளயே ஜாதி பேர சொல்லி வெட்டிக்கிறீங்க” என்றவனின் குரலில் சுதி ஏறி இருந்தது.

“ஜாதி எங்க ரத்தத்தோட ஊறுனது துரை. எங்க போனாலும் எங்கள விட்டுப் போகாது”

இதெல்லாம் உனக்குப் பெருமையா என்பது போல முறைத்துப் பார்த்தான் அவன்.

ஆறடி உயரத்துக்கும் மேல், ஆஜானுபாகுவாக இருந்த அவனின் முறைப்பில் தானாகவே இடுப்பில் கையைக் கட்டிக் குனிந்துக் கொண்டான் பரசு. தீட்சண்யமான அவன் விழிகளில் அனல் பறந்தது. நாசி கோபத்தில் சிவந்து நின்றது. சிரிப்பென்பதையே அறியாத அழுத்தமான உதடுகள் ஆத்திரத்தில் துடித்தன. அவன், ஊரில் எல்லோராலும் துரை என அழைக்கப்படும் பிரிட்டிஷ்காரன் எட்வர்ட் ஸ்மித் டியூக். இந்த புருக்லேன்ட்ஸ் மற்றும் இன்னும் பல எஸ்டேட்டுக்களின் உரிமையாளன். தமிழ் அவனுக்கு ஓரளவு சரளமாக வந்தது. இலக்கணம், இலக்கியம் தெரியாவிட்டாலும், தனக்குக் கீழ் உள்ளவர்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பேசத் தெரியும்.

“பர்சு! நம்ம ஆளுங்கள வச்சு கலவரம் பண்ணறவங்கள அடிச்சு ஆத்துல தூக்கிப் போட சொல்லு. எந்த ஜாதிக்காரனா இருந்தாலும் பரவாயில்ல. ஐ டோண்ட் கேர்! ஆத்துல மிதக்கற பொணத்தைப் பார்த்தாவது இவனுங்களுக்குத் திரும்பவும் கலவரம் பண்ண கூடாதுன்னு பயம் வரனும். புரியுதா?”

“நல்லா புரியுது துரை”

“இப்போ நம்ம எஸ்டேட்டுல எத்தனை கள்ளுக் கடை இருக்கு?”

“ரெண்டு துரை”

“சரி! அத மூனா மாத்த சொல்லு. நக்கறதுக்கு பிக்கல் ஃப்ரீயா குடுக்க சொல்லு”

“துரை சொன்னா சரிதான்! செஞ்சிடலாம்”

“அதோட கோயிலுக்குக் காசு குடுத்து இந்த மாசம் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரிசி சோறு போட சொல்லு. வர ஞாயிற்றுக் கிழமை திடல்ல திரை போட்டு சினிமா ஒன்னு போட ஏற்பாடு பண்ணு”

“ஆகட்டும் துரை!”

Scroll to Top