UU Epi 2(2)

“அது வேற ஒண்ணும் இல்லை சுமி. சார் தனியா ஏகாந்தமா சைட் அடிக்கலாம்னு வந்திருப்பார். நம்மளை பக்கத்திலே வச்சுக்கிட்டு அதெல்லாம் பண்ண முடியாதில்லையா? அதான் இந்தக் கடுப்பு.” என்று நிவேதாவும்,

“வெறும் சைட் தானா? இல்லை யாரையாச்சும் லவ் பண்ணுறீங்களா? அவளை இங்கே வரச் சொல்லி இருக்கீங்களா?” என்று பவித்ராவும் கேட்க,

“ஆரம்பிச்சிட்டீங்களா? இனி அடங்கமாட்டீங்களே!” என்று வாய்விட்டுப் புலம்பியவன்,

“அம்மாடி பரதேவைதைகளா! நான் எந்தப் பொண்ணுக்காகவும் வெயிட் பண்ணலை. என் பிரண்ட்ஸுக்காக தான் வெயிட் பண்ணுறேன்.” என்றான்.

அவர்கள் மூவரும் அவனை நம்பாத பார்வை பார்க்க…

“இங்கேயே இருங்க. அவனுங்க வந்ததும் பார்த்த பிறகே உங்க வழியாப் போங்க. சரியா?” என்றதும்,

“இது பேச்சு!” என்றனர்.

“நான் உங்களுக்கெல்லாம் அண்ணனா? இல்லை நீங்களான்னு புரியலை. பொண்ணுங்க உங்க மேல நம்பிக்கை வச்சு நான் தனியா அனுப்புறேன். ஆம்பிளைப் பிள்ளை என்னை நம்ப மறுக்குறீங்க. காலம் கலிகாலங்கிறது சரியாத் தான் இருக்கு.”

“சரி வெயிட்டிங் டைமிலே சாப்பிட என்ன வாங்கித் தருவீங்க?”

“வாங்கித் தருவதா? நானா? எதுக்கு?” என்று சுமோத் எகத்தாளமாக் கேட்கவும்,

“ஹலோ பிரதர்! வெயிட்டிங் சார்ஜ் வாங்காமல் வெறும் ஸ்னாக்ஸ் தானே கேட்கிறோம். அதுக்கே இப்படி அலுத்துக்கிறீங்க!” என்று நிவேதா நக்கல் பண்ண,

“இதுக்கு அதுவே பரவாயில்லை. மாங்கா, தேங்கான்னு ஒவ்வொரு தள்ளு வண்டி கடையா இல்ல நிக்கச் சொல்லுவீங்க. உங்களை எனக்கு தெரியாதா? என் பிரண்ட்ஸ் முன்னாடி என் மானம் போகும். யூ நோ வீ ஆர் டீசென்ட் ஃபெல்லோஸ். அதனால சமத்துப் பிள்ளைங்களா நீங்களே போய் வாங்கிக்கோங்க. போங்க. போங்க.”  என்றான்.

சுமித்ரா சிரித்துக் கொண்டே, “டேய் அண்ணா! அங்க பாரேன் உன் டீசன்ட் பிரண்ட்ஸை. அவங்க உன் பிரண்ட்ஸ் தானே! நான் போட்டோவிலே பார்த்திருக்கேன்.”  என்றாள்.

அவள் சுட்டிக் காட்டிய பக்கம் அனைவரும் பார்வையை திருப்ப… அங்கே மூன்று இளைஞர்கள் மாங்காய் சாப்பிட்டுக் கொண்டே வந்தார்கள். அத்தோடு மட்டும் இல்லாமல் அந்த மாங்காய் துண்டுக்கு அவர்களிடையே சண்டை வேறு நடந்து கொண்டு இருந்தது.

இவர்கள் பக்கம் பார்க்காமல் அவர்கள் சுவாரஸ்சியமாய் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்க…

‘என் மானத்தை வாங்குறானுங்களே!’ என்று சுமோத் தன் நண்பர்களை மனதில் திட்டிக் கொண்டே, “நான் இவனுங்களை பத்தி சொல்லலை. நான் ராஜீவ் பத்தி தான் சொன்னேன்.” என்றான்.

சுமோத்தின் நண்பர்கள் வந்துவிட்டதால் அவ்விடத்தில் இருந்து நகரப் போன தனது இரு தோழிகளையும் தடுத்து நிறுத்திய சுமித்ரா, “ஓ! அந்த சார் வேற வருகிறாரா? அப்போ இருந்து பார்த்துட்டே போறோம்.” என்றாள்.

அந்த மூன்று நண்பர்களும் சுமோத்தை பார்த்துவிட்டு அவனை பார்த்து கை அசைத்தவாறே வந்தார்கள். அவனருகில் இருந்த மூன்று பெண்களை பார்த்ததும் குழம்பினார்கள்.

சுமோத் தன் தங்கைகளிடம், “இவங்க என் பிரண்ட்ஸ். பிளஸ் டூ வரை ஒண்ணா படிச்சோம். அப்புறமா எல்லோரும் பிரிஞ்சுட்டோம். இன்னைக்கு இவங்க சென்னைக்கு வந்ததால பீச்சிலே மீட் பண்ணலாம்னு இங்க வந்தோம்.” என்று கூறி அவர்களின் பேர்களை எல்லாம் சொல்லி அறிமுகப்படுத்தினான்.

தனது நண்பர்கள் புறம் திரும்பியவன், “என் தங்கச்சிங்கடா.” என்று கூறி அறிமுகப்படுத்தினான்.

அவர்கள் அனைவரும் ‘ஹாய்!’ அல்லது ‘ஹலோ!’ என்று சொல்லிக் கொண்டார்கள்.

அவர்கள் மூவரும் சுமோத்திடம், “ஏன்டா தங்கச்சிங்களை கூட்டி வந்திருக்கே?” என்று கடுப்புடன் கிசுகிசுத்தனர்.

“ஏன்டா வேலியிலே போற ஓணானை… இல்லையில்லை காரிலே போற சைத்தான்களை மடியிலே கட்டிக்கிட்டு வர எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? நம்மளை மாதிரியே அவங்களும் பிரண்ட்ஸ் மீட்னு வந்து நிக்கிறாங்க. இப்ப ராஜீவ் வந்ததும் கழட்டி விட்டுடலாம்.” என்று கிசுகிசுத்தான்.

நிவேதா சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது அவளது பார்வை ஒரு இளைஞனின் மீது விழுந்தது.

அவன் நல்ல உயரமாய் கம்பீரமாய் இருந்தான். மாநிறமாய் இருந்தாலும் பார்ப்பதற்கு வெகு அழகாய் இருந்தான். அடர்த்தியான மீசை அவனுக்கு மேலும் அழகு சேர்த்தது.

அவன் யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். அவனது முக பாவனைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் ஒரு தனிக் கவர்ச்சி இருப்பதாகவே அவளுக்குப்பட்டது. அவளால் அவளது பார்வையை வேறு புறம் திருப்ப முடியவில்லை. அந்தளவிற்கு அவனது வசீகரம் தன்னைக் கவர்வதை ஒரு ஆச்சரியத்துடன் கவனித்தாள்.

அவன் நேரே இவர்களை நோக்கி வர நிவேதா விழித்துக் கொண்டாள். சட்டென்று ஒரு அலட்சிய பாவனையை முகத்தில் தக்க வைத்துக் கொண்டாள். ஆனால் வந்தவன் நேரே சுமோத்திடம் வந்து நிற்கவும் இவன் தான் அந்த இன்னொரு பிரண்ட் ராஜீவ் என்று யாரும் சொல்லாமலே அவளுக்கு புரிந்து போனது. அவளது முகம் மிருதுவானது.

கைப்பேசியை அணைத்தவன், “ஹாய்!” என்று பொதுவாகச் சொன்னான்.

“வாடா ராஜீவ்!” என்று வரவேற்ற சுமோத் அவனிடம், “என் தங்கை பிரண்ட்ஸ். இவ நிவேதா. இவ பவித்ரா.” என்று சொல்லிவிட்டு,

பவித்ராவையும், நிவேதாவையும் பார்த்து, “இவன் டாக்டர் ராஜீவ். MS படிச்சுக்கிட்டு இருக்கான். படிச்சு முடிக்க இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு.” என்று அறிமுகப்படுத்தினான்.

நிவேதா, “ஓ! சார் டாக்டரா?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ராஜீவ் பவித்ராவையும், நிவேதாவையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு சுமித்ராவின் புறம் திரும்பி,  “என்ன சுமி எப்படி இருக்கே?” என்று கேட்டான்.

அவள் அதைக் காதில் கூட வாங்காதவள் போல் நிற்க…

“ஹேய் சுமி! உனக்கு இப்போ என் மேல என்ன கோபம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்க, அப்பொழுதும் அவள் அமைதியாக இருந்தாள்.

நிவேதாவோ எங்கே அவனது சிரிப்பில் தன்னைத் தொலைத்து விடுவோமோ என்று பயந்து போய் நின்றிருந்தாள்.

‘அம்மாகிட்டே நான் சொன்ன ஸ்பார்க் இது தானோ?! மனசெல்லாம் மத்தாப்பூ பூக்கணும் என்றெல்லாம் டயலாக் அடிச்சேன். இப்போ மத்தாப்பூ பூத்ததா தாமரைப் பூ பூத்ததான்னு சொல்லத் தெரியலை. ஆனா உள்ளுக்குள்ள ஏதோ பிசையுதே! அப்போ இது அது தானா?’ என்று குழம்பிப் போய் நின்றாள்.

“டேய் சுமோத்! இவளுக்கு என்னடா கோபம்?” என்று ராஜீவ் தன் நண்பனை பார்த்துக் கேட்க, அவன் உதடு பிதுக்கினான்.

“சுமி…” என்று ராஜீவ் தொடங்கவும்,

“யாரும் என்கிட்ட பேச வேண்டாம். ஒரு போன் பண்ணி பர்த் டே விஷ் பண்ணத் தெரியாதவங்கெல்லாம் எதுக்கு என் கூடப் பேசணும்?” என்று கேட்டதும்,

“ஓ காட்! இது தான் மேட்டரா? மறந்துட்டேன் சுமி. சாரி.” என்றான்.

“ஆமா எங்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? போன மாசம் மது பர்த் டேக்கு வாழ்த்துச் சொல்ல மறந்தீங்களா?” என்று கேட்கவும்,

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டு நிற்க…

“அப்போ கரெக்ட்டா விஷ் பண்ணி இருக்கீங்க. நீங்க ஒண்ணும் பேசத் தேவையில்லை. ஹேய் வாங்க. நாம போகலாம்” என்று தோழிகளை பார்த்துச் சொல்லிக் கொண்டே அவள் தண்ணீரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

பவித்ரா சுமித்ராவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க நிவேதாவோ பொறுமையாகவே நடந்தாள். அவளுக்கு ராஜீவ் தன்னிடம் பேசாதது ஏமாற்றத்தை தந்தது என்றால் சுமித்ராவிடம் உரிமையுடன் பேசியது எரிச்சலைத் தந்தது.

அவனும் சிரித்துக் கொண்டே அவர்களை தொடர்ந்தான். அவர்கள் ஒரு கூட்டமாகவும் இவர்கள் தனிக் கூட்டமாகவும் இருந்தார்கள். ஆனால் அருகிலேயே இருந்தார்கள். நிவேதாவின் பார்வை அடிக்கடி அவன் பக்கமே பாய்ந்தது.

ஓரப் பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை

மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை

எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

என்று மனதுக்குள் ஹரிணி உட்கார்ந்து பாட நிவேதா தன் வசத்தில் இல்லை. என்னவன் இவன் தான் என்ற தெளிவு அவளுக்கு பிறந்தது. மீதி வரிகளை அவளது மனம் இட்டுக் கட்டிப் பாட ஆரம்பித்தது.

எனக்கென ஏற்கனவே பிறந்தவன்  இவனோ

இதயத்தைக் கயிறு கட்டி இழுத்தவன்  இவனோ

ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் இரு இதழ்கள்

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

அது என்னென்று அறியேனடி

தண்ணீரில் கால் நனைத்தவர்கள் கரைக்கு ஒதுங்க சில்லென்று காற்று அவர்களை உரசிச் சென்றது. கால் பகுதிகளில் ஈரமான அவர்களது உடைகளை உலர்த்த ஆரம்பித்தது.

“சுமி! மாங்கா வாங்கித் தரட்டுமா?” என்று கேட்ட ராஜீவ், அவள் பதிலொன்றும் சொல்லாத போதும் அந்த தள்ளு வண்டிக்காரரிடம் சென்று வாங்கி வந்து தந்தான்.

ராஜீவ் நீட்டியதை வாங்காமல் சுமித்ரா நின்று கொண்டிருக்க நிவேதாவிற்கோ அதை வாங்க கைகள் பரபரத்தன.

‘சீ அல்பமே! அவன் என்ன உன்னிடமா நீட்டினான்?’ என்று சொல்லி அவளது மனசாட்சி அவளது கைகளுக்கு தடை விதித்தது.

சுமித்ரா வாங்க மறுத்ததும் அந்த மாங்காயை அவன் நிவேதாவிடம் நீட்ட… அவள் அதற்கென்றே காத்திருந்ததால் உடனே கை நீட்டி வாங்கிக் கொண்டாள். சுமித்ரா தோழியை முறைத்துப் பார்ப்பதை கண்ட ராஜீவ்,

“இப்போ எதுக்கு உன் பிரண்டை முறைக்கிறே? நீ தான் வாங்கிக்கலைன்னால் யாருமே வாங்கக் கூடாதா என்ன?” என்றான்.

“அவள் என் பிரண்ட். என் பேச்சைத் தான் கேட்கணும்.” என்று சுமித்ரா சொல்லிக் கொண்டு இருக்க… நிவேதாவோ மாங்காயை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து ராஜீவ் புன்னகைக்க… சுமித்ரா கடுப்பாக… சுமோத் ஆச்சரியமடைந்தான்.

அவனறிந்த நிவேதா எதற்காகவும் தன் தோழியை… அதுவும் முக்கியமாக சுமித்ராவை விட்டுக் கொடுக்கவே மாட்டாள். அதனால் சுமோத் அவளது நடவடிக்கையில் தெரிந்த வித்தியாசத்தை ஆர்வத்துடனே பார்வையிட்டான்.

சுமித்ரா அந்த இடம் விட்டு நகர நிவேதா அவளை பின் தொடர்ந்தாள். அப்பொழுதும் அந்த மாங்காயை அவள் விடவில்லை.

நடந்து கொண்டிருந்த சுமித்ரா ஆ என்று கத்திவிட்டு நடை தடுமாறினாள். அவளை தாவிச் சென்று நிவேதா அணைத்துப் பிடித்ததில் அந்த மாங்காய் கீழே விழுந்தது. தோழியின் அலறலும், கசங்கிய முகமும் அவளுக்கு அந்த மாங்காய் பற்றிய நினைவை மறக்கடித்தது.

“என்னாச்சு?” என்று அனைவரும் பதறி அவளது பாதத்தை பார்க்க மண்ணில் இருந்த கண்ணாடித் துண்டு ஒன்று அவளது பாதத்தை பதம் பார்த்திருந்தது.

அதிலிருந்து ரத்தம் வெளியேறுவதை பார்த்த சுமோத் தன் காரில் இருந்து முதலுதவிப் பெட்டியை எடுத்துவர ஓடினான்.

“கண்ணாடி எப்படிக் குத்துச்சு? காலில் செருப்பு போடலையா?” என்று ராஜீவ் கேட்க…

அவள் தனது கையில் அதை இவ்வளவு நேரமும் சுமந்து கொண்டு நடந்ததை நினைவு கூர்ந்தவனாக, “ஏன் செருப்பை போடாமல் கையிலே பிடிச்சிக்கிட்டு வந்தே?” என்று கேட்டான்.  

“ஹீல்ஸை போட்டுக்கிட்டு மண்ணில் நடக்க முடியலை.” என்று அவள் முணுமுணுக்கவும்,

அவளது செருப்பை பார்வையிட்டவன், “ஹீல்ஸ். அதுவும் பாயிண்டட் ஹீல்ஸ். எத்தனை தடவை உன்னை ஹீல்ஸ் போடாதேன்னு சொல்லுறேன். கேட்குறியா?” என்று மிரட்டிக் கொண்டிருந்தான்.

நிவேதா தனது கால்களை பார்வையிட்டுக் கொண்டாள். இனிமேல் ஹீல்ஸ் போடக் கூடாது என்ற தீர்மானத்தை மனதிற்குள் நிறைவேற்றினாள்.

“சரி அப்படியே உன் கார் வரைக்கும் நடந்து வா. கட்டுப் போட்ட பின்னாடி உன்னால மண்ணிலே நடக்க முடியாது.” என்று ராஜீவ் சொல்லவும் பவித்ராவும், நிவேதாவும் சுமித்ராவை அழைத்துக் கொண்டு கார் அருகே சென்றார்கள்.

தண்ணீர் ஊற்றி அவளது காலை கழுவியவன் சுமோத் கொண்டு வந்து தந்த முதலுதவி பெட்டியில் இருந்தவற்றை கொண்டு அவளது காலை சுத்தம் செய்து மருந்திட்டுக் கட்டினான்.

“மறக்காமல் போய் ஒரு டி.டி போட்டுக்கோ.”

சரி என்னும் விதமாய் அவள் தலையாட்டினாள்.

சுமோத் டிரைவரை பார்த்து, “பத்திரமா கூட்டிட்டுப் போங்க!” என்றான்.

சுமித்ராவும், பவித்ராவும் விடைபெற்றுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் சுமோத், “அப்புறம் நிவேதா… உன் கார் எங்கே இருக்கு?” என்று கேட்டான்.

அவள் சுமோத்தின் கேள்வியை கண்டு கொள்ளாது தனது கையை ராஜீவின் புறம் நீட்ட அவனும் அதைப் பற்றிக் குலுக்கவும், “நைஸ் டூ மீட் யூ.” என்று சொன்னவள் திரும்பிப் பார்த்து சைகை செய்ய…  அவளருகே ஒரு விலை உயர்ந்த கார் வந்து நின்றது.

அது அவளின் வசதியை பறைசாற்றியது. அவள் சுமோத்திடம் சொல்லிக் கொண்டு அதில் ஏறிச் சென்றுவிட்டாள்.

அவள் ராஜீவின் கைப்பற்றி குலுக்கியதையே அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த சுமோத் அவள் அகன்றதும், “ஒண்ணுமே புரியலை உலகத்திலே. என்னமோ நடக்குது. மர்மமாய் இருக்குது.” என்று பாடினான்.

“என்னடா சுமோத் பாட்டெல்லாம் பலமா இருக்கு?”

“கைக்குலுக்கல் எல்லாம் பலமா இருக்கிற போது என் பாட்டு பலமா இருக்கக் கூடாதாடா?” என்று சுமோத் கேட்க,

“ஹேய்! சும்மா இருடா.” என்று ராஜீவ் வெட்கப்பட்டான்.

“வெட்கப்படுறியாடா நீ?! அப்போ சம்திங் சம்திங்…” என்று சந்தோஷமாகவும், சந்தேகமாகவும் சுமோத் இழுக்க,

“பேசாமல் வாடா. நாம போவோம். அவனுங்க வேற காத்திருக்கானுங்க.” என்று சொல்லி சுமோத்தை கூட்டிக் கொண்டு ராஜீவ் தனது நண்பர்களை நோக்கிச் சென்றான்.

 

தொடரும்…

Scroll to Top