UU Epi 3(1)

அத்தியாயம்  3

 

வழியில் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுவிட்டு சுமித்ராவும், பவித்ராவும் கூட  வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டனர். ஆனால் நிவேதா இன்னும் வரவில்லை.

“சுமி! அவ வேற எங்கேயாச்சும் போறேன்னு சொன்னாளா? ஒரு மணி நேரம் ஆச்சு. இன்னும் இந்தப் பொண்ணை காணலியே! போனில் வேற சார்ஜ் இல்லைன்னு அப்பவே சொல்லிக்கிட்டு இருந்தாள். அதனால போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு போல. எங்க தான் போனாள் இந்த நிவி.” என்று பவித்ரா பரிதவித்துக் கொண்டிருக்க நிவேதா உள்ளே வந்தாள்.

“ஹேய் நிவி! எங்கே போனே?”

அவள் கையில் இருந்த பையே அவள் கடைக்கு சென்றுவிட்டு வருகிறாள் என அவர்களுக்கு உணர்த்தியது.

“ஷாப்பிங்கா நிவி? சரி மதுரைக்கு எப்போ கிளம்புறே? நைட் ஃபிளைட்டிலா இல்லை மார்னிங் ஃபிளைட்டிலா?” என்று சுமித்ரா கேட்கவும்,

“ஆமா ஷாப்பிங் தான் போனேன். செப்பல் வாங்கிட்டு வந்தேன். ஊருக்கு எப்ப போறேன்னு தெரியலை. உங்க கூடவே இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு தான் போறேனே! இப்போ என்ன அவசரம்?” என்றாள்.

“இதப் பாருடா! சென்னையில் பவித்ரா முடிக்க வேண்டிய வேலை முடியுற வரைக்கும்… அதாவது சன்டே வரைக்கும் நீயும் எங்க கூடவே இருன்னு தானே ரொம்ப நாளா உன்னை நச்சு பண்ணினோம். அப்பெல்லாம் முடியாதுன்னு சொன்ன. இப்போ திடீர்னு எப்படிங்க மேடம் மனசை மாத்திக்கிட்டீங்க?” என்று சுமித்ரா கேட்டுக் கொண்டிருக்கும் போதே,

அவள் வாங்கி வந்த செருப்பை பிரித்துப் பார்த்த பவித்ரா, “யாருக்கு செருப்பு வாங்கிட்டு வந்து இருக்கே நிவி?” என்று கேட்டாள்.

“செப்பல் எனக்கு தான்.” என்று பவித்ராவின் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னவள்,

“நான் போய் காபி குடிச்சிட்டு வரேன். நீங்க காபி குடிச்சாச்சா? ஹாஸ்பிட்டல் போய் ஊசி போட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அவர்களது பதிலுக்கு கூடக் காத்திருக்காமல் கீழே இறங்கிச் சென்றாள்.

அவள் அகன்றதும் பவித்ரா சுமித்ராவிடம், “கவனிச்சியா சுமி?” என்றாள்.

“அவகிட்டே இருக்கிற மாறுதலை தானே? அவ பாட்டுக்கு கேள்வி கேட்டுக்கிட்டு பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போய்கிட்டே இருக்காள். சாதாரணமா இருந்திருந்தாள்னா உள்ளே நுழைஞ்சதும் என்னைப் பார்த்து என் கால் வலி பத்தி தான் பேச்சையே தொடங்கி இருப்பாள். இப்ப என்னடான்னா அந்தக் கேள்வி கடைசியா வருது. அது கூடப் பரவாயில்லை. பதிலை நின்னு கேட்கிற பொறுமை கூட இல்லை. என்ன விஷயமா இருக்கும்?  என்று சுமித்ரா யோசிக்கவும்…

“அது கூட இதையும் சேர்த்துக்கோ.” என்று கூறிய பவித்ரா நிவேதா வாங்கி வந்த செருப்பை தூக்கிக் காண்பித்தாள்.

“என்னது ப்ளாட்ஸா? நம்ம நிவியா? ஹீல்ஸ் இல்லாமல் ஒரு செருப்பு வாங்கி இருக்காளா?! என்னாச்சு மேடம்க்கு?!”

“சுமி! ஒண்ணு இல்லை மூணு செருப்பு வாங்கி இருக்காள். இதை அப்படியே ராஜீவ் உனக்கு சொன்ன ஹீல்ஸ் போடாதேங்கிற அட்வைஸோட லிங்க் பண்ணிப் பாரு.” என்று பவித்ரா சொன்னதும்,

“ஹேய்! அப்படியும் இருக்குமோ? டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம்.” என்றாள்.

காபி குடிக்கச் சென்ற நிவேதா திரும்பி வந்து அறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள். பவித்ராவும், சுமித்ராவும் கண்களாலேயே பேசிக் கொண்டார்கள்.

“அவர் யாரு சுமி?” என்று திடீரென நிவேதா கேட்கவும்,

“எவர்? யாரை பத்திக் கேட்கிறே?”

“அதான் ராஜீவ்?”

“அதான் அண்ணன் அறிமுகப்படுத்தினானே! நீயும் தானே அங்கே இருந்தே!”

“ம்ம்ம் அவரை உனக்கு எவ்வளவு நாளா தெரியும்?”

“சின்ன வயசில் இருந்தே தெரியும்.”

“இவ்வளவு நாளா நான் அவரை உங்க வீட்டிலே பார்த்ததே இல்லையே.”

“அவருக்கும் நமக்கும் அஞ்சு வருஷம் வித்தியாசம். அப்படின்னா  அவர் ப்ளஸ் டூ படிச்ச போது நாமெல்லாம் சின்ன பொண்ணுங்களா இருந்தோம். அப்புறமா அவர் சென்னைக்கு படிக்கப் போயிட்டார். அதனால எப்பாவாச்சும் தான் வீட்டுக்கு வருவார்.”

“ஓ! நீ அவரை எப்படிக் கூப்பிடுவே? ராஜீவ் அப்படின்னா கூப்பிடுவே?”

“இல்லை. ராஜீவ் அண்ணான்னு கூப்பிடுவேன்.” என்று சுமித்ரா சொன்னவுடனே நிவேதாவின் முகம் ஒளிர்ந்தது.

‘கவனித்தாயா சுமி? புரிஞ்சதா?’ என்று பவித்ரா கண் ஜாடை காட்டினாள்.

‘பின்னாளில் எங்க அண்ணன் பிள்ளைக்காக மாங்காய் சாப்பிட ஆசைப்பட்டுத் தான் அவ இன்னைக்கு பீச்சிலே மாங்காய் கடிச்சாள் என்கிற கதையும் எனக்கு புரிஞ்சது’ என்று சுமித்ரா தலையாட்டிக் கொண்டாள்.

இவர்களின் கண் ஜாடைகளை கவனிக்காதவளாய் நிவேதா கனவு உலகத்தில் சஞ்சரித்தாள்.

மீண்டும் குறுக்கும் நெடுக்குமாய் நடை பயின்றவள் சடாரென சுமித்ராவின் புறம் திரும்பி, “அந்த மது யாரு?” என்றாள்.

“எந்த மது?” என்று வேண்டுமென்றே அவளை சீண்டுவதற்காக தெரியாததை போல சுமித்ரா கேட்கவும்,

“இல்லை ஒண்ணுமில்லை.” என்று சொல்லிய நிவேதா அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.

தோழிகள் இருவரும் சிரித்துக் கொண்டனர். நிவேதா தன் தந்தைக்கு அழைத்துத் தன் தோழிகளுடன் இரு நாட்களை செலவிடப் போவதால்  திங்கட்கிழமை காலையில் தான் வீட்டிற்கு வரப் போவதாகத் தெரிவித்தாள்.

ரவீந்திரனும், ‘சின்னப் பெண் தானே! தன் தோழிகளை பார்த்ததும் பிரிய மனமில்லை போல!’ என்று எண்ணிக் கொண்டார்.

மறுநாள் தூங்கி எழுந்து வந்த நிவேதாவிடம் பவித்ரா ஒரு காகிதத்தை நீட்ட அதை வாங்கிப் படித்த நிவேதா குழம்பினாள்.

“பாரு நிவி. நேத்து பீச்சுக்கு வந்த யாரோ என்னை வர்ணிச்சு இப்படிக் கடிதம் எழுதி இருக்காங்க.”

“பீச்சுக்கு வந்தவங்க தான் என்று அது எப்படி அவ்வளவு கரெக்ட்டா சொல்ல முடியும்?”

“நான் நேத்து போட்ட டிரஸ் மட்டுமில்லாமல் நாம நேத்துப் பேசின பேச்சு கூட அதிலே குறிப்பிட்டு சொல்லி இருக்காங்கன்னா என்ன அர்த்தம்? எனக்கு உறுதியாத் தெரியும். நேத்து வந்தவங்களில் யாரோ ஒருத்தர் தான் இதை டைப் பண்ணி அனுப்பி இருக்கணும். நேத்து மொத்தம் அஞ்சு பேர் இருந்தாங்க. அதிலே நம்ம அண்ணனை நீக்கிட்டுப் பார்த்தால் மீதி உள்ள நாலு பேரிலே யாரோ ஒருத்தர் தான் இதை செஞ்சிருக்கணும். யாரா இருக்கும்? இதை எப்படியாவது கண்டுபிடிச்சே தீரணும்.” என்று பவித்ரா சொன்னதும் நிவேதா கலக்கமுற்றாள்.

‘இந்தக் கடிதத்தை ராஜீவ் எழுதி இருக்க மாட்டார் தானே? முருகா! அவர் எழுதி இருக்கக் கூடாது. அவர் எனக்கு தான். எனக்கே எனக்கு தான்!’ என்று அவளது மனம் கூவியது.

“இப்போ என்ன செய்யலாம் பவி?” என்ற நிவேதாவின் கேள்விக்கு,

“அவர்களில் ஒருத்தரிடம் உதவி கேட்டு இதை அனுப்பியது யாருன்னு கண்டுபிடிக்கணும். உங்க ரெண்டு பேரில் யார் இதை எனக்காக செய்யப் போறீங்க?” என்று பவித்ரா எதிர் கேள்வி கேட்டாள்.

“எனக்கு தான் காலில் அடிபட்டிருக்கே பவித்ரா. அதனால நம்ம நிவி ராஜீவ்கிட்டே உதவி கேட்டு இதைக் கண்டுபிடிச்சு தருவாள்.” என்று சுமித்ரா சொன்னதும் நிவேதாவின் முகம் மலர்ந்தது.

தோழிகளிடம் இருந்து தனது முக பாவனையை மறைக்க எண்ணியவளாய் நொடியில் தன் முகத்தை சீராக்கியவள், “நானே போய் விசாரிச்சுச் சொல்லுறேன்.” என்று கூறினாள்.

“சுமி! ராஜீவ் போன் நம்பரைத் தா.” என்று தோழியிடம் கேட்டு வாங்கி தனது கைப்பேசியில் பதிந்து வைத்துக் கொண்டாள்.

நிவேதா அந்த இடம் விட்டு அகன்றதும் தோழிகள் இருவரும் தங்களது கட்டை விரலை தூக்கிக் காண்பித்து சிரித்துக் கொண்டனர்.

நிவேதா விடாமல் தொடர்ந்து ராஜீவின் கைப்பேசிக்கு முயன்று பார்த்துத் தோல்வியுற்றாள். அவன் மருத்துவமனையில் இருந்ததால் தனது கைப்பேசியை சைலண்ட் மோடில் போட்டிருந்தான். அன்று சனிக்கிழமை என்பதால் ராஜீவிற்கு பாதி நாள் மட்டுமே வேலை.

Scroll to Top