UU Epi 3(2)

வீட்டிற்கு செல்லும் முன் தனது கைப்பேசியை  இயக்கியவன் ஒரே எண்ணில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்ததை பார்த்து, ‘யாருடா இந்த விடாது கருப்பு? இத்தனை முறை நம்மைக் கூப்பிட்டு இருப்பது?!’ என்று ஆச்சரியம் அடைந்தான்.

அவர்களை அழைத்து, ‘யார் நீங்கள்? என்ன விஷயமாய் அழைத்தீர்கள்?’ என்று கேட்க எண்ணியவனாய் அந்த எண்ணிற்கு அழைத்தான்.

ராஜீவின் கைப்பேசியில் இருந்து தனக்கு அழைப்பு வரவும் நிவேதா ஆர்வத்துடனே தன் கைப்பேசியை எடுத்து இயக்கிக் காதில் வைத்தாள்.

“ஹலோ நான் ராஜீவ் பேசுறேன். யார் நீங்க? எதுக்கு இத்தனை தடவை என்னை கூப்பிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

தன்னை மறந்தவளாய் அவனது குரலை ரசித்துக் கொண்டிருந்த நிவேதாவை அவனது சில ஹலோக்கள் நனவுலகத்திற்கு இழுத்து வந்தது.

“ராஜீவ்! நான் தான் நிவேதா. சுமித்ரா பிரண்டு நிவேதா பேசுறேன்.”

“நீங்க தானா அந்த விடாது கருப்பு? சாரி  சாரி விடாது வெள்ளை.”

‘என்ன சொல்ல வருகிறான்?’ என்று விழித்த நிவேதா, “என்ன சொல்லுறீங்க? புரியலை.” என்று கேட்டதும்,

“இல்லை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாருடா விடாது நம்மளை கூப்பிட்ட விடாத கருப்புன்னு யோசிச்சேன். அது நீங்கன்னு தெரிஞ்சதால விடாது வெள்ளைன்னு மாத்திட்டேன்.” என்றான்.

அவனது விமர்சனத்தில் சன்னமாக வெட்கப்பட்டவள், “இப்போ நான் உங்களை பார்க்கணுமே? நீங்க ஃப்ரீயா?” என்று கேட்டாள்.

“பார்க்கலாமே. வேலை முடிஞ்சிடுச்சு. சாப்பிடத் தான் போறேன்.”

“அப்போ நீங்களே ஒரு ரெஸ்டாரண்ட் சொல்லுங்க. நான் அங்க வந்துடுறேன். நான் உங்க ஹாஸ்பிட்டல் இருக்கும் ஏரியால தான் இருக்கேன்.”

சரி என்று சொன்னவன் அவளை ஒரு குறிப்பிட்ட உணவகத்திற்கு வரச் சொல்லிவிட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு அந்த உணவகத்தை நோக்கிச் சென்றான். அவன் அங்கு சென்றடையும் முன்பே நிவேதா அங்கு வந்து சேர்ந்திருந்தாள்.

அவர்கள் ஒரு மேஜையை தேர்ந்தெடுத்து எதிர் எதிரே அமர்ந்தனர். தங்களுக்கான உணவை கொண்டு வரச் சொல்லிவிட்டுக் காத்திருந்தனர்.

அப்பொழுது ஒரு பெண் ராஜீவிடம் வந்து, “உன்னை நான் லஞ்சுக்கு எத்தனை வருஷமா கூப்பிடுறேன். நான் கூப்பிட்டா மட்டும் வரமாட்டே. ஆனால் இன்னைக்கு…” என்று இழுத்தவள்  நிவேதாவை மேலிருந்து கீழாகப் பார்க்க,

ராஜீவோ, “நான் வரமுடியாதுன்னு நேரா சொன்ன பிறகும் நீ கூப்பிட்டால்…. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று தோளைக் குலுக்கிவிட்டு தனது கைப்பேசியை நோண்ட ஆரம்பித்தான்.

அவள் ஏமாற்றத்துடன் அவ்விடம் விட்டு அகலவும் நிவேதா அவனிடம், “உங்களுக்கு அந்தப் பொண்ணை பிடிக்காதா?” என்று கேட்டாள்.

“அப்படியில்லை. எனக்கு பொண்ணுங்க கூட வெட்டியா ஊர் சுத்துறது பிடிக்காது. அதைவிட அவளோட நோக்கம் சுத்தமாப் பிடிக்காது.” என்றான்.

‘அவர்களுக்கிடையே ஏதோ வேண்டாத விஷயம் நடந்திருக்கும் போல! நாம் அதைக் கிளற வேண்டாம்’ என்று எண்ணிக் கொண்டாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த  நிவேதா சுற்றி வளைக்காமல் ராஜீவிடம் நேரடியாக, “உங்களுக்கு என் பிரண்டு பவித்ராவை பிடிச்சிருக்கா?” என்றாள்.

அவன் தன் முகத்தை அஷ்டகோணலாக மாற்றிக் கொண்டு, “ஏன் கேட்கிறீங்க?” என்றதுமே,

“அப்பாடா!” என்று பெருமூச்சுவிட்டாள்.

அவளது செய்கை அவனுக்கு எதையோ விளக்கியது.

“இல்லை நேத்து உங்க பிரண்டுஸுன்னு சொல்லிக்கிட்டு வந்த மூணு தடித் தாண்டவராயன்களில் யாரோ என் பிரண்டு பவித்ராக்கு லெட்டர் குடுத்து அனுப்பி இருக்காங்க.” என்று அதை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அதை கை நீட்டி வாங்கிக் கொண்டே, “நானும் சுமோத்தும் த.த இல்லையா? அதான்மா தடித் தாண்டவராயன்?” என்று சந்தேகம் எழுப்பினான்.

“சுமோத் அண்ணாவுக்கு பவியும் ஒரு தங்கை தான். நீங்க இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.”

“அப்போ உங்க பாஷையிலே லவ் பண்ணுறவங்களுக்கு பேரு தடித் தாண்டவராயனா?”

‘இதுக்கு எப்படி ஆமாம்னு சொல்ல முடியும்? நான் இவரை லவ் பண்ணுற விஷயம் சொல்லி இவரும் என்னை லவ் பண்ணனுமே!’ என்று நினைத்தவள் ஒரு வேகத்துடனே, “அதை அழிச்சிடுங்க.” என்றாள்.

“எதை அழிக்கணும்?”

“நான் சொன்ன வார்த்தையை அழிச்சுடுங்கன்னு சொல்லுறேன். அதை நானே வாபஸ் வாங்கிக்குறேன்.” என்று சொன்னவள் அதன் பின்பு பவித்ரா பற்றியும் பேசவில்லை அந்த கடிதத்தைப் பற்றியும் பேசவில்லை.

சாப்பாடு வந்து இருவரும் சாப்பிட ஆரம்பித்ததும், “உங்க அம்மாவும், அப்பாவும் இந்த ஊரிலா இருக்காங்க? அவங்க என்ன பண்ணுறாங்க?” என்று கேட்டாள்.

“அம்மா, அப்பா ரெண்டு பேருமே டீச்சர்ஸ். மதுரையிலே ஒரு ஸ்கூலில் வேலை பார்த்தாங்க. இப்போ ரிட்டயர் ஆன பின்னாலே எங்க சொந்த ஊரான சோழவந்தானுக்கே போய் செட்டில் ஆகிட்டாங்க.”

“நீங்க அவங்களுக்கு ஒரே பையனா?”

‘இப்ப என்ன… உனக்கு என் பயோ-டேட்டா வேண்டுமா?’ என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “நான் எங்க அம்மா அப்பாக்கு ஒரே பையன் தான். ஆனால் எனக்கு ஒரு அக்கா இருக்காள். பேரு காயத்ரி. அவளும் எங்க மாமா மகேஷும் சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ். இங்க சென்னையில தான் இருக்காங்க.” என்றான்.

‘நேற்று சுமித்ரா சொன்ன அந்த மது யாருன்னு தெரிஞ்சுக்கலை என்றால் எனக்கு மண்டை வெடிச்சிடுமே! இவரிடம் எப்படிக் கேட்பது? அவள் எனக்கும் இவருக்கும் குறுக்கே நிற்கிறாளான்னு தெரிஞ்சே ஆகணுமே! நேரடியாக் கேட்டுட வேண்டியது தான்’ என நினைத்தவளாய்,

“உங்களுக்கு மதுன்னு யாரும் க்ளோஸ் ஃபிரண்ட் இருக்காங்களா?” என்று அந்தக் ‘க்ளோஸ்’ என்ற சொல்லை அழுத்திக் கேட்டாள்.

‘இவள் க்ளோஸை அழுத்துவதை பார்த்தால் அந்த வார்த்தையையே க்ளோஸ் பண்ணிடுவாள் போலவே! இவளுக்கு எப்படி மதுவை பற்றி தெரிய வந்தது? ராஜீவ் யோசி!’ என்று தன் மூளையைத் தட்டி யோசித்தவனுக்கு,

நேற்று சுமி சொன்ன ‘மது பர்த் டேக்கு மட்டும் சரியா வாழ்த்துச் சொன்னீங்க தானே?’ என்ற கேள்வி ஞாபகம் வந்தது.

‘ஓ! விஷயம் அப்படிப் போகுதா? மேடம்க்கு பொறாமையா இருக்கா? வர வேண்டிய உணர்வு தான்’ என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவள் இரு முறை அவனை அழைத்துவிட்டாள்.

“என்ன ராஜீவ் இவ்வளவு யோசிக்கிறீங்க?”

“மது… அதாவது மதுமிதா எனக்கு ரொம்பவே க்ளோஸ் தான்.” என்றான்.

அவளது மனமும் முகமும் வாடலாயிற்று. அவளது வாட்டத்தைப் பார்த்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

“அவங்க படிக்கிறாங்களா இல்லை வேலை பார்க்கிறாங்களா?”

“படிச்சிக்கிட்டு தான் இருக்கிறாள். சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட். அவ என் அக்கா பொண்ணு.” என்றதும் அவள் முகத்தில் சந்தோஷம் வெளிப்படையாகத் தெரிந்தது.

“இன்னமும் ஏதாச்சும் கேள்வி இருக்கா?” என்று அவன் கிண்டலாகக் கேட்க,

“உங்க அம்மா அப்பா பேரு சொல்லலையே?”

“அம்மா பேரு யசோதா. அப்பா பேரு சுந்தரம். என்னை பத்தின கேள்வி முடிஞ்சிடுச்சுன்னா உங்க பயோ டேட்டாவை சொல்லுங்க.” என்றதும்,

“நான் என்னை பற்றி விவரம் சொல்லுறேன். ஆனா அதுக்கு முன்னாடி நான் உங்களை விட அஞ்சு வயசு சின்னவ தானே! அதனால இனிமேல் நீங்க என்னை நீ, வா, போன்னு சொல்லுங்க.” என்றாள்.

‘நீ எப்போ இப்படி சொல்லுவேன்னு தானே நான் காத்திருக்கேன்’ என்று நினைத்துக் கொண்டே, “அப்படியே சொல்லிட்டால் போச்சு. உன்னை பத்தி சொல்லு.” என்றான்.

அவள் தன்னைப் பற்றியும், தனது பெற்றோர் பற்றியும் சொன்னாள். அவள் தனது அந்தஸ்து பற்றி ஒரு வார்த்தை கூட பெருமையாக சொல்லாதது ராஜீவிற்கு அவள் பால் ஏற்பட்ட ஈர்ப்பை இன்னமும் அதிகப்படுத்தியது.

அவளுக்கு அவனிடம் இருந்து பிரிய மனமே இல்லை. அவன் பைக்கில் சென்று மறைந்த பின்பே அந்த இடத்தில் இருந்து கிளம்பினாள்.

தொடரும்..

Scroll to Top