அத்தியாயம் 6
“ஏ புள்ள! எழுந்திரிடி! இன்னும் என்னத்த தூங்கறவ!”
“கொஞ்ச நேரம் ஆத்தா. தூக்கமா தள்ளுது”
“அது சரி! இன்னும் வீட்டு நினப்புல இருக்கறா போல இருக்கு”
வேகமான உலுக்கலில் பதறி எழுந்தமர்ந்தாள் சுப்பு.
தன் முன்னே மண்டியிட்டு அமர்ந்திருந்த புஷ்டியான உருவத்தைப் பார்த்தவள் கண்ணைக் கசக்கிக் கொண்டே,
“யாரு நீங்க?” என கேட்டாள்.
“நேத்து வந்தாளே பட்டு, அவள என்னன்னு கூப்பிட்ட?”
“அக்கான்னு”
“அப்போ நான் உனக்கு சின்னக்கா”
“ஓ, நீங்கதான் அந்தப் பீடையா?”
“என்னது பீடையா? யாருடி அப்படி சொன்னா? அந்தப் பட்டு, நசுங்கி போன தட்டு சொன்னாளா? என்னைப் பிடிச்ச ஜென்ம சனி அவ. என்ன தைரியம் இருந்தா என்னை பீடைன்னு சொல்லிருப்பா?” எனக் கேட்டவளின் குரலில் செம்ம கடுப்பு.
“சின்னக்கா, வாய் தவறி சொல்லிட்டேன். அக்காட்ட சொல்லிருவீங்களா? என்னைக் கொட்டிருவாங்களே!” என்ற சுப்புவுக்கு முகம் பயத்தில் வெளிறியது.
“அவ பெரிய இவளா உன்னை கொட்டறதுக்கு? என்ன நினைச்சுட்டு இருக்கா மனசுல? அவளுக்கு மட்டும்தான் எல்லாத்துலயும் மொத உரிமையா? எனக்கு இல்லையா? இப்ப பாரு நானும் கொட்டுறேன்!”
சுப்புவின் மண்டையில் நங்கென கொட்டியவள்,
“எழுந்திரிடி தூங்கு மூஞ்சு கழுதை. துரைக்குக் குளிக்க தண்ணி கொண்டு போய் விளாவிட்டு வா. மணி அஞ்சு ஆச்சு! இன்னும் ஒய்யாரம். பல் பொடி எடுத்து வச்சிருக்கேன், போய் தேய்ச்சுக்கிட்டு, முகத்தையும் கழுவிட்டு வா!” என விரட்டினாள்.
அவள் பரசுவின் இரண்டாவது சம்சாரம் பவுனம்மாள். பரசுவுக்கு மட்டும் பவுனு. (பட்டு, பவுனோட வளமா வாழுறான்யா மனுஷன்)
அரக்கப் பறக்க எழுந்த சுப்புவை மேலிருந்து கீழ் வரைப் பார்த்த பவுனு,
“ஏ புள்ள, உன் பேரு என்ன?” எனக் கேட்டாள்.
“என் பேரு சுப்புலெட்சுமி சின்னக்கா”
“உன்ன மாதிரியே உன் பேரும் அழகாதான் புள்ள இருக்கு. சரி, சுருக்கா ஓடு, வேலை தலைக்கு மேல கிடக்கு!”
வீட்டில் வேலை செய்பவர்களுக்காக வீட்டு வெளியே கொஞ்சம் இடம் விட்டுச் சின்னதாக தகர தடுப்பு போல் குளியல் அறையும், கழிப்பறையும் அமைத்திருந்தார்கள். பட்டு ஏற்கனவே அதை இவளுக்குக் காட்டிக் கொடுத்திருந்தார். இரவில் தனியாகப் போக பயந்து கொண்டு அப்படியே படுத்துக் கொண்டாள் சுப்பு.
பல் பொடியையும் மாற்று உடையையும் எடுத்துக் கொண்டு அங்கே சென்று காலைக் கடன்களை முடித்து, வேகமாக இரண்டு குவளை நீரை ஊற்றி குளியல் என பெயர் பண்ணிக் கொண்டாள் சுப்பு. முடி வேறு கலைந்து கிடந்தது. சிக்கெடுத்து சீவ நேரமும் இல்லை. அவசரமாகக் கோணல் மாணலாய் இரட்டை சடைகளைப் போட்டுக் கொண்டவள், வெளியே வந்து சூரியனைக் கை எடுத்து கும்பிட்டுக் கொண்டாள்.
விறகடுப்பில் தீ மூட்டி, தண்ணீரை கொதிக்க வைத்தவள், முன் தினம் போலவே தம் கட்டி வாளியை எட்வர்ட்டின் அறைக்குத் தூக்கிச் சென்றாள். கதவை இரு முறை தட்டிய பின், பூனைப் போல உள்ளே நுழைந்தாள் இவள். அறை இன்னும் இருட்டாகத்தான் இருந்தது. இருட்டுக்கு கண்கள் பழகும் வரை பொறுத்தவள், மீண்டும் வாளியைத் தூக்கினாள்.
“அங்கயே வச்சிட்டுப் போ”
அமைதியான அறையில் திடீரெனக் கேட்டக் குரலில் பயந்து போய் வாளியைப் பட்டெனக் கீழே வைத்தாள் சுப்பு. சுற்றிலும் பார்த்தவள் கண்களுக்கு யாரும் தெரியவில்லை.
“இங்க, கட்டில்ல இருக்கேன்” என்றான் எட்வர்ட்.
அப்பொழுதுதான் கட்டிலில் படுத்திருக்கும் அவனைப் பார்த்தாள் சுப்பு.
நெஞ்சை நீவிக் கொண்டே,
“திடீர்னு குரலு கேக்கவும் நான் பயந்துட்டேன் துரை” என்றாள்.
“ஹ்ம்ம்ம். தெரியுது!” குரலில் சிரிப்பிருந்ததோ!
இன்னும் கதவின் அருகில்தான் நின்றிருந்தாள் அவள்.
“இன்னிக்கு சொதப்பிடாம கணக்கா விளாவிருவேன் துரை”
“அங்கயே வச்சிட்டுப் போன்னு சொல்லுறேன்ல!”
“சரிங்க துரை”
திரும்பி வெளியே போகப் போனவளை,
“ப்ளேக்கி, இனிமே எப்பவுமே தண்ணி கொண்டு வந்து கதவு பக்கம் வச்சா போதும்” எனக் கட்டளையிட்டான்.
“சின்னக்கா தண்ணி வெளாவிட்டியான்னு கேட்டா என்ன சொல்லட்டும் துரை?”
“செஞ்சிட்டேன்னு சொல்லு”
கண்களை மூடி சோம்பலாக படுத்த வாக்கிலேயே பேசிக் கொண்டிருந்தான் அவன்.
“ஐயோ, பொய்யி! நான் சொல்ல மாட்டேன்! சாமி கண்ண குத்திரும்”
“பொய் சொன்னா வாயதானே குத்தனும், உங்க சாமி ஏன் கண்ண குத்துது?”
“அட, ஆமால!”
“ஆமாவா, இல்லையா?”
“அது, தெரியலையே” எனக் குழம்பிப் போய் நின்றாள் சுப்பு.
“உங்க அம்மா, இங்க வரப்போ என்ன சொல்லி அனுப்புனாங்க ப்ளேக்கி?”
“அம்மா இல்ல, ஆத்தா!”
“சரி, ஆத்தா என்ன சொன்னாங்க?”
“துரை சொன்னப் பேச்ச கேட்டு நடக்கனும்னு”
“அப்போ நான் பொய் சொல்ல சொன்னா சொல்லனுமா, கூடாதா?”
“சொல்லனும் துரை”
“அப்போ, போய் நான் சொன்னத சொல்லு”
கதவைத் சாத்தி விட்டு ஓடிப் போனாள் சுப்பு.
சிரித்த முகத்துடன் எழுந்த எட்வர்ட், தானாகவே வாளியைக் குளியல் அறைக்குத் தூக்கிச் சென்று குளித்து விட்டு வந்தான்.
பவுனு இரண்டு முட்டைகளை நன்றாக அடித்து, அதில் வெங்காயம், மிளகு, உப்பு கலந்து ஆம்லேட் தயாரித்தாள். மூன்று ரொட்டி துண்டுகளை வெண்ணெய் தடவி வாட்டியவள் ஒரு தக்காளியைப் பொடிசாக நறுக்கி ஆம்லேட் அருகே வைத்தாள். அதன் பின் அழகாக அனைத்தையும் பீங்கான் தட்டில் அடுக்கி டேபிளில் செட் செய்தாள்.
அவள் செய்வதை எல்லாம் முட்டைக் கண்ணை திறந்து அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்பு.
“சின்னக்கா, இப்படிலாம் சாப்புடுவாங்களா?”
“துரைமாருலாம் இப்படிதான் சாப்புடுவாங்க. மதியத்துக்கு ஒரு நாளைக்கு கோழிய வாட்டி, உருளைக்கிழங்கு அவிச்சு வைச்சா, மறுநாளைக்கு மீன் செய்யனும். நம்ம மாதிரி சோறுலாம் ரொம்ப சாப்புட மாட்டாங்க. நம்ம துரை வாரத்துக்கு ஒரு நாளு மட்டும் கோழி கறி, சோறுன்னு சாப்புடுவாரு. அதுக்கே முகமெல்லாம் சிவந்து உப்பிப் போயிரும்”
எட்வர்டின் சிவந்து உப்பிய முகத்தைக் கற்பனை செய்து பார்த்தவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அவளை முறைத்த பவுனு,
“என்னடி கெக்கபிக்கன்னு சிரிப்பு? உனக்கு டீ ஆத்த சொல்லிக் குடுத்தாங்கதானே உங்கொக்கா. போய் டீ போடு போ” என விரட்டினாள்.
எட்வர்ட் சொல்லிக் கொடுத்த மாதிரியே, விரல்களை நீட்டி எண்ணியவள் இந்த முறை சரியாக டீ கலக்கியிருந்தாள்.
“நல்லாதான்டி போட்டுருக்க. நான் கூட உன்ன என்னமோன்னு நினைச்சேன். வேலை சுத்தம்தான். சரி வா. துரை சாப்பட வர நேரமாச்சு. பக்கத்துல யாரும் இருந்தா அவருக்குப் பிடிக்காது. எடுத்துப் போட்டு வச்சிருக்கற துணிய எல்லாம் சோப்பு போட்டு துவைச்சுப் போடு. நான் எங்க வீட்டுக்குப் போய் கோழிய புடிச்சுட்டு வரேன். மதிய சமையலுக்கு கழுத்தறுக்கனும். அதுக்கப்புறம் பசியாறலாம்”
“என்ன பசியாற இன்னிக்கி சின்னக்கா?”
“கேள்வரகு புட்டு”
“இங்கயும் கேள்வரகா? ஐயே, எனக்குப் புடிக்காது!”
