“அப்போ மகாராணிக்கு துரை சாப்புடற சாப்பாடு வேணுமா? அப்படியே குமட்டுலயே குத்திப் புடுவேன். வாழைப்பழம் வச்சிருக்கேன், மசிச்சு புட்டுல வச்சி சாப்புடு. உடம்புக்கும் நல்லது. இன்னும் நீ வயசுக்கு வரலன்னு பட்டு சொல்லுச்சு. இந்த சாப்பாடுலாம் இடுப்புக்கு பலம் புள்ள”
பட்டு மாதிரியே படபடவென பேசினாலும், பாசமாகவும் நடந்துக் கொண்டாள் பவுனு.
துணியை ஊர வைத்த சுப்பு, பாவாடையை முட்டி வரை தூக்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்தாள். துணி துவைப்பதற்கு என்றே கல் மேடை போல் வீட்டின் பின்னால் செய்து வைத்திருந்தனர். பக்கத்திலேயே மரக்கம்பங்கள் வைத்து துணி உலர்த்த கொடி கட்டி இருந்தனர்.
“அழகான பொண்ணு நான்
அதுக்கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம்
தன்மானம் ஒன்னு தான்”
பாடியபடியே எட்வர்டின் சட்டையை சொப்பு போட்டு கும்மினாள். ப்ளேக்கி என அவன் அழைக்கும் சத்தம் கேட்டதும் சோப்புக் கையோடும், காலோடும் அப்படியே உள்ளே ஓடினாள் சுப்பு. காலில் பட்டிருந்த சோப்பு நீர் வழுக்க, ப்ரேக் போட முடியாமல் அவனை இடித்தப் படி வந்து நின்றாள்.
“மன்னிச்சிருங்க துரை” எனச் சொல்லியவள் சமாளித்து தள்ளி நின்றுக் கொண்டாள்.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
“பாவாடையை இழுத்து விட்டுட்டுப் போய் கை, கால் கழுவிட்டு வா”
நாக்கைக் கடித்துக் கொண்டவள், பட்டென பாவாடையை இறக்கி விட்டாள். ஓடிப் போய் கை, கால் கழுவி வந்தவள், மூச்சு வாங்க அவன் அருகில் வந்து நின்றாள்.
“உன் காலுல சக்கரம் கட்டி விட்டுருக்காங்களா? நடக்கவே மாட்டீயா ப்ளேக்கி?”
“எங்க ஆத்தாவும் அப்படிதான் சொல்லும். நான் நடக்கறத பார்த்தா எல்லாருக்கும் ஓடுற மாதிரி இருக்கு. நான் என்ன செய்யட்டும் துரை?”
“ஒன்னும் செய்ய வேணாம். இப்ப டீ ஊத்து”
கைகளைப் பாவாடையில் துடைத்துக் கொண்டவள், கப்பில் டீயை ஊற்றி அவன் அருகே நகர்த்தி வைத்தாள்.
அவன் சாப்பிடுவதை வேடிக்கைப் பார்த்தவாறே நின்றிருந்தவள்,
“துரை” என அழைத்தாள்.
“ஹ்ம்ம்”
“தக்காளி சாப்புடவும்தான் நீங்க தக்காளி மாதிரியே பளபளன்னு அழகா இருக்கீங்களா?” என அதி முக்கியமான சந்தேகத்தை அந்நேரத்தில் கேட்டாள் சுப்பு.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்குப் புரை ஏறிவிட்டது.
“பார்த்து துரை!”
இரும்பிக் கொண்டிருந்தவன் தலையை இரண்டு கையாலும் மாறி மாறி தட்டினாள்.
கிளாசில் இருந்த தண்ணீரைப் பருகி தன்னை சமன் படுத்த முயன்றான் எட்வர்ட்.
“இப்படியா சின்ன புள்ளை மாதிரி சாப்புடுவாங்க?” எனக் கேட்டவளை முறைத்தவன்,
“இனிமே நான் சாப்பிடறப்ப, வாய மூடிக்கிட்டு பேசாம நிக்கனும். புரியுதா ப்ளேக்கி?” என மிரட்டினான்.
தலையைப் சரியென சோகமாக ஆட்டினாள் சுப்பு.
“அதான் இருமல் நின்னிருச்சுல்ல, என் தலையில இருந்து கைய எடு”
அசடு வழிந்தவாறே கையை எடுத்தவள்,
“மன்னிச்சிருங்க துரை. நீங்க அம்புட்டு சொல்லியும் நான் உங்கள தொட்டுட்டேன். இனிமே ரொம்ப கவனமா இருக்கேன்” என முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னாள் சுப்பு.
அதன் பிறகு அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாகவே அவன் அருகில் நின்றிருந்தாள்.
“போய் சாக்ஸ், ஷூ எடுத்துட்டு வா”
“அப்படினா துரை?”
“ஷூ, ஷூ!” எனக் காலை காட்டினான்.
“ஏன் துரை என்னை விரட்டறீங்க?”
கண் கலங்கியது அவளுக்கு.
“ஏய் ப்ளேக்கி! இப்ப எதுக்கு டேம மறுபடியும் திறக்கற? காலுக்கு போடுவாங்களே ஷூ, அது என்ன ஹ்ம்ம்…சப்பாத்து யா அதுதான். சப்பாத்தும் அதோட உறையும் எடுத்துட்டு வா”
“ஓ சப்பாத்தா? நான் கூட என்னை விரட்டறீங்களோன்னு நினைச்சிட்டேன்”
ஓடி போய் அவனது காலணியையும், காலுறையையும் எடுத்து வந்தாள் சுப்பு. எட்வர்ட் வரவேற்பறை நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
அவன் காலருகே கொண்டு போய் வைத்தவள்,
“துரை, உங்க சூ” என்றாள்.
“போட்டு விடு ப்ளேக்கி”
“தொடக் கூடாதுன்னு சொன்னீங்களே துரை, இப்ப எப்படி போட்டு விடுவேன்?” எனச் சந்தேகம் கேட்டாள் சுப்பு.
“தொடாம போடு”
மண்டியிட்டு அவன் முன்னே அமர்ந்தவள், காலுறையால் அவன் பாதத்தைத் தூசி தட்டுவது போல அடித்தாள். கீழுதட்டை உள் மடக்கிக் கடித்துக் கொண்டே காலுறையைப் பெரிதாக இழுத்து, விரித்து போட்டு விட முயன்றாள். அப்படியும் விரல் பட்டுவிட்டது.
நிமிர்ந்து எட்வர்டை பாவமாகப் பார்த்தவள்,
“துரை! கைப்பட்டுருச்சி. வேணும்னா ரெண்டு கொட்டு மெதுவா கொட்டிக்கிங்க” என்றாள்.
அவள் செய்த முயற்சிகளை எல்லாம் கண்ணில் சிரிப்புடனே பார்த்திருந்தான் எட்வர்ட்.
“சரி, ஷூ போடறப்ப பட்டா பரவாயில்ல. போட்டு விடு”
அவள் காலணியைப் போட்டுவிடவும், பரசு உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“வாங்க சித்தப்பூ” என எழுந்து நின்று வரவேற்றாள் சுப்பு.
“சித்தப்பூவா? இது எப்ப இருந்து புள்ள?”
“அக்காதான் சித்தப்பூன்னு கூப்பிட சொல்லுச்சு.”
“உஷாருதான் உங்கக்கா! வேலைலாம் ஒழுங்கா செய்யறீயா? விளையாட்டுத்தனமா இருந்தா வீட்டுக்கு விரட்டி விட்டுருவேன்”
“அஸ்க்கு புஸ்க்கு! என்னை விரட்டிருவீங்களா நீங்க? துரை சொன்னா மட்டும்தான் இங்கிருந்து போவேன்” எனச் சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் அவள்.
உள்ளே சென்றவளையே பார்த்திருந்த பரசுவை, எட்வர்டின் கணைப்புச் சத்தம் கலைத்தது.
“போலாம் பர்சு”
அவர்கள் கிளம்பியதும், துணியைத் துவைத்துக் காயப் போட்டவள், சாப்பிட அமர்ந்தாள். சாப்பிட்டு முடித்தவுடன், காலையில் சமைக்கப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கும் போது வந்தாள் பவுனு.
“ஏ புள்ள சுப்பு. கழுவிப் போட்டுட்டு நாய்க்கு சாப்பாடு போடு போ. ரொம்ப கிட்ட போகாத புள்ள” என எச்சரித்து அனுப்பினாள்.
பிடித்து வந்திருந்த கோழி கழுத்தை அருவா முனையில் ஒரே சீவாக சீவியவள், ரத்தத்தை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு, கோழியை சுடு நீரில் முக்கினாள். கோழி ரத்தத்தைப் குழம்பில் போட்டால், பரசு ஆசையாக சாப்பிடுவான். கோழியை சுத்தம் செய்ய ஆரம்பித்த நேரத்தில்தான், சின்னக்கா எனும் அலறல் சத்தம் கேட்டது. ரத்தக் கறையை அப்படியே சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினாள் பவுனு.
அங்கே கையை உதறிக் கொண்டு அழுதபடி நின்றிருந்தாள் சுப்பு.
“என்ன புள்ள ஆச்சு?” எனப் பதறிப் போய் கேட்டாள் பவுனு.
“நாய் கடிச்சிருச்சுக்கா” என்றவளுக்கு இன்னும் அழுகை அதிகரித்தது.
அவள் கையைத் திருப்பி பார்த்தாள் பவுனு. மணிக்கட்டில் பல் பதிந்திருந்தது.
ஜோனியோ,
‘லேசாதான் பாசமா கடிச்சேன். இவ ஓவரா படம் காட்டுறா’ என்பது போல பார்த்துவிட்டு தனது உணவை சாப்பிட ஆரம்பித்திருந்தது.
“சரி அழாம வா. சின்னக் கடிதானே! கை வைத்தியம் பாக்குறேன்” என வீட்டின் முன்னே அழைத்து சென்றாள்.
அங்கிருந்த எட்வர்டின் செருப்பை எடுத்து நாய் கடித்த இடத்தில் மூன்று முறை அடித்தாள் பவுனு.
“ஏன்கா செருப்பால அடிக்கறீங்க?”
“நாய் கடிச்சா, அதோட முதலாளி செறுப்பால கடிச்ச எடத்துல அடிக்கனும் புள்ள. அப்பத்தான் விஷம் ஏறாது. இப்ப போய் ஒரு வாய் தண்ணி குடி. எல்லாம் சரியா போயிரும்”
இரவில் டீ குடிக்கும் போதுதான் சுப்புவை நன்கு கவனித்தான் எட்வர்ட். அமர்ந்தவாறே மணிக்கட்டைத் தேய்த்தபடி இருந்தாள் அவள்.
“கைல என்ன ப்ளேக்கி?”
“உங்க நாய் கடிச்சிருச்சு துரை”
அவள் கையை இழுத்துப் பார்த்தவன்,
“உன்ன யார் ஜோனி கிட்ட போக சொன்னா?” எனக் கத்தினான்.
“சோறு வைக்கப் போனேன். தூரமாதான் நின்னேன். அப்பயும் சங்கிலியோட பாஞ்சி வந்து கடிச்சிருச்சு”
அவள் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்து சென்றவன், அவன் ரூமில் கொண்டு போய்தான் நிறுத்தினான்.
“சட்டைய தூக்கு ப்ளேக்கி!”
“ஏன், எதுக்கு துரை?” என நடுக்கமாகக் கேட்டாள் சுப்பு.
“இப்ப நீ தூக்கறயா, இல்ல நான் தூக்கவா?”
(தூண்டுவான்!!!)
