அத்தியாயம் 10
பிட்டு அல்லது புட்டு எனச் சொல்லப்படும் இந்த உணவு தமிழ்நாடு, கேரளா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் மிகவும் பிரபலமான உணவு வகையாகும். மலேசியா, இந்தோனேசியாவில் மூங்கிலில் வைத்து அவித்து ‘புட்டு பேம்பூ’ என விற்கிறார்கள். சென்னை ரோட்டோரக் கடைகளில் கோதுமை, அரிசி, ராகி எனப் பல புட்டு வகைகள் கிடைக்கின்றன.
எப்பொழுதும் இவன் எழுவதற்கு முன்னே எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து முடித்து, கடை சமையலுக்கும் ஆயத்த வேலையைத் தொடங்கியிருப்பவள், இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருப்பதை அதிசயமாகப் பார்த்தான் ஜெய்சங்கர். தூங்கும் போது இவன் கைவளைவுக்குள் இருப்பவள், எப்படியும் புரண்டு நகர்ந்து பாயின் ஒரு மூலைக்குப் போய்விடுவாள். நடு இரவில் எழுந்து, அவளை இழுத்து மீண்டும் தன் கை அணைப்பில் வைத்து கொள்வான் இவன்.
அந்த அதிகாலையில், சுவரை ஒட்டிக் கொண்டு கருவறை குழந்தை போலச் சுருண்டு கிடந்தவளை எழுப்பாமல் தனது பாயைச் சுருட்டி வைத்து விட்டு வேலையைப் பார்க்கப் போனான் ஜெய்சங்கர். வெளியே கோபாலும் எழுந்து அமர்ந்திருந்தார். முகம் கழுவி விட்டு வந்தவன், மூவருக்கும் சூடாக டீ போட ஆரம்பித்தான். சில்வர் டம்ளரை தகப்பனிடம் கொடுக்க,
“எங்கடா புள்ள? இன்னும் எழுந்துக்கலையா?” எனக் கேட்டார் கோபால்.
“ஐயே! நாங்கள்லாம் டீ போட்டா கோவாலு குடிக்க மாட்டாரோ? புள்ள வந்து போட்டுக் குடுத்தாதான் குடிப்பாரோ? இத்தினி வர்ஷமா நான் போட்ட டீல தான் இந்தாந்தண்டி தொந்தி வளந்திருக்கு நைனா உனக்கு! உன் கண்ணு, பொண்ணு, அம்மாடி, ஆத்தாடி வந்ததும் நானும் என் டீயூம் ஒனக்கு எளப்பமா போய்ட்டோம்ல!” என அங்கலாய்த்தான் இவன்.
“ஏன்டா நீ வேற! இன்னும் எழுந்திரிக்கலையான்னு கேட்டது ஒரு குத்தமா? இன்னா சொல்லு, குளிச்சு சுத்தப்பத்தமா நெத்தில குங்குமம் துன்னூருன்னு வச்சிக்கிட்டு, சிரிச்ச மொகமா ‘அப்பா டீ’ன்னு மங்களகரமா வந்து நிப்பாடா என் பொண்ணு! அந்த மாரியாத்தாவே நேருல வந்தா மாதிரி இர்க்கும்! நீயும் தான் இர்க்கியே, கப்புப் புடிச்ச கய்தை!”
“தோடா! அவ வந்ததும் என்னை தள்ளி வச்சிட்டல்ல நைனா!” எனக் கேட்டவன், கோபாலின் மடியில் அமர்ந்து கொண்டான்.
“டேய், டேய்! அந்தாண்ட போடா! அஞ்சு வயசுல வந்து ஒக்காந்த மாதிரியே அஞ்சு கழுதை வயசாயும் வந்து ஒக்காருற! ஐயோ, யம்மா” என வலியில் கத்தினார் கோபால்.
பட்டென அவர் வாயைப் பொத்தியவன், எழுந்து நின்று கொண்டான்.
“கத்தாதே நைனா! என்னமோ ரொம்ப களைப்பா தூங்குறா! மொல்ல எழுந்து வரட்டும்” என்றபடியே அவர் வாயில் இருந்துக் கையை எடுத்தான்.
“மாமா!” என மெல்லிய முனங்கலாக சத்தம் கேட்க, அடித்துப் பிடித்து ரூமுக்கு ஓடினான் ஜெய்சங்கர்.
கோபாலும் அவன் பின்னே வந்தவர், உள்ளே அவள் எந்த நிலையில் இருக்கிறாளோ எனத் தயங்கி அறையின் வெளியேயே நின்றுவிட்டார்.
சுவரில் சாய்ந்து, தலையைப் பிடித்தப்படி அமர்ந்திருந்தாள் பவளமல்லி.
“என்னடி? என்ன செய்யுது?” எனப் பதட்டமாக அவள் முன்னே அமர்ந்தான் இவன்.
“தலை பாரமா இருக்கு மாமா! எழுந்தா பூமியே சுத்துது” எனவும், இவனும் வெளியே கேட்டபடி நின்றிருந்த கோபாலும் பயந்து போனார்கள்.
“மவனே! ஆசுபுத்திரிக்குக் கூட்டிட்டுப் போவலாம்டா” என அவர் குரல் தர,
“ஆமாமா! வா, மொகம் கழுவி, துணி மாத்திக்கலாம்! அப்புறமா ஆசுபுத்திரிக்குப் போகலாம்” என கைதாங்கலாக அவளைத் தூக்கி நிறுத்தினான் ஜெய்சங்கர்.
அவன் மேல் சாய்ந்தபடியே எட்டெடுத்து வைத்தாள் பவளமல்லி. முகம் கழுவியதும் கொஞ்சம் தெம்பாய் இருக்க,
“போங்க மாமா! நான் வரேன்” எனக் குளியல் அறையில் இருந்து வலுக்கட்டாயமாக சங்கரை வெளியேத் தள்ளினாள்.
பல் துலக்கிக் கொண்டே கணக்குப் போட்டுப் பார்த்தாள் பவளமல்லி. சரியாக இரண்டு வாரம் நாள் தள்ளிப் போயிருந்தது. கொஞ்ச நாளாய் வாட்டி எடுக்கும் களைப்பு, சோர்வு, இன்று ஆரம்பித்திருக்கும் தலைச் சுற்றல் எல்லாம் இது குழந்தையாய் இருக்குமோ எனும் சந்தேகத்தைக் கொடுத்தது இவளுக்கு.
வலது கையை எடுத்து வயிற்றில் வைத்து மெல்லத் தடவிக் கொடுத்தவள்,
“உள்ள யாரு? குட்டி வடையா, குட்டி பரோட்டாவா?” எனச் சின்னக் குரலில் கேட்டு பெரிதாய் புன்னகைத்துக் கொண்டாள்.
நீ அனாதையென முகத்தில் அறைவது போலச் சொல்லி வளர்க்கப்பட்டவளுக்கு, தனகே தனக்காய் ஒரு கணவன், ஒரு அப்பா, இப்பொழுது ஒரு குழந்தை எனும் எண்ணமே அவ்வளவு இனிமையாய் இருந்தது.
“என்னடி பண்ணற இன்னும்? வெளிய வரியா, இல்ல கதவ ஒடைக்கட்டா?”
கணவனின் தவிப்பான குரலில், மெல்ல வெளியே வந்தாள் பவளமல்லி. புன்னகையுடன் வெளியே வந்தவளை, ஒரு மார்க்கமாகப் பார்த்தான் ஜெய்சங்கர்.
“மொகம்லாம் வெளுத்துப் போயி ஆவி கணக்கா உள்ள போன! வெளிய வரப்போ ஈன்னு இளிச்சிட்டே வர! என்னடி என்னாச்சு? ஜன்னி கின்னி வந்துடுச்சா?” என கேட்டபடியே நெற்றியைப் புறங்கையால் தொட்டுப் பார்த்தான்.
குளிர்ச்சியாய்தான் இருந்ததது.
“அடேய்! மூஞ்சி கழுவிட்டு வந்தா ஜில்லுன்னுதான்டா இருக்கும். கழுத்துல கைய வச்சிப் பாருடா” என கோபால் சத்தம் போட்டார்.
அங்கும் குளிர்ச்சியாய்தான் இருந்தது.
“ஜொரம் இல்ல நைனா”
இருவரின் அலப்பறையில் சிரிப்பு வந்தது இவளுக்கு.
“நைனா, மறுபடியும் சிரிக்கறா நைனா! நீ ஓடு! ஓடிப்போய் ஆட்டோ புட்சிட்டு வா! இவள ரெடி பண்ணி வைக்கறேன்! ஸ்ட்ரேய்டா ஆசுபுத்திரி போய்டலாம்”
“ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? எனக்கு ஒன்னும் இல்ல” என்றவள், அவளுக்கென சங்கர் போட்டு வைத்திருந்த தேநீரை எடுத்துக் கொண்டு வரவேற்பறை தரையில் அமர்ந்து கொண்டாள்.
அவள் தேநீரை ரசித்துக் குடிக்கும் வரை அவள் முகத்தையேப் பார்த்திருந்தார்கள் இருவரும். விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என போராட்டம் அவள் மனதில். உறுதியாக தெரிந்துக் கொண்டவுடன், சொல்லிக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள் பவளமல்லி. ப்ளஸ் டூ வரை படித்திருக்கிறாளே, அதோடு படங்களில் சீரியல்களில் எல்லாம் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் அட்டையைப் பார்த்திருக்கிறாளே, அதை வாங்கி உறுதிப் படுத்திக் கொள்ள முடிவெடுத்தாள் பவளமல்லி. ஏமாற்றத்தை இவளால் தாங்கிக் கொள்ள முடியும். தன்னை தாங்கும் இந்த இரு ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியாது எனப் புரிந்துதான் இந்த முடிவெடுத்தாள்.
அவளுக்குச் சாப்பிடப் பரோட்டா கொண்டு வந்து கொடுத்தான் சங்கர்.
“நீங்களும் சாப்பிடுங்க!” எனத் தன்னையேப் பார்த்தபடி இருக்கும் கோபாலையும் சங்கரையும் சாப்பிட வைத்தாள் மல்லி.
“நெசமா ஒடம்புக்கு ஒன்னும் இல்லியா கண்ணு?”
“லேசா தூக்கக் கலக்கமா இருந்ததுப்பா! இப்போ டீ குடிச்சு நாஸ்தா சாப்பிட்டதும் சரியாகிடுச்சு. வாங்க வேலையைப் பார்ப்போம்”
“நீ ரெஸ்ட்டு எடு தேவா! நாங்க பார்க்றோம்” என இவன் சொல்லியும் தனது வடைக்கான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் இவள்.
“இன்னிக்கு ஒரு நாளைக்கு வேபாரத்துக்கு லீவு விடேன்டி!” எனக் கெஞ்சி, கொஞ்சி கோபமாகக் கேட்டும் கூட இவள் அசைந்து கொடுக்கவில்லை.
எழுந்த போது இருந்த மயக்கம், சோர்வு விலகிப் போயிருக்க, எப்பொழுதும் போலச் சுறுசுறுப்பாக வேலையைப் பார்த்தாள் மல்லி.
