KKP–Epi 1(1)

அத்தியாயம் 1

சென்னையில் உள்ள ஸ்ட்ரீட் ஃபூட் அதாவது கையேந்தி பவன் என அழைக்கப்படும் உணவு கடைகளில் பிரபலமாக இருக்கும் ஐட்டங்களில் ஒன்று கொத்து பரோட்டா. முட்டை, கோழி அல்லது இறைச்சி சேர்த்து கொத்தித் தரப்படும் இந்த பரோட்டா 100 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.

“சட்டு புட்டுன்னு வேலையைப் பார்க்காம மசமசன்னு நின்னதால இந்த ஈடு பரோட்டா தீஞ்சிப் போச்சு கோபால், தீஞ்சுப் போச்சு” என வசனம் பேசிய மகனை முறைத்துப் பார்த்தார் கோபால்.

“சங்கரு டேய், என்னா லந்தா? எனக்கு என்ன நாலு கையாடா இருக்கு? பரோட்டா தட்டனும், வேக வைக்கனும், சால்னாவ பார்க்கனும், வெங்காயம் வெட்டனும், ஆம்லேட்டு போடனும்! இம்மாம் வேலையையும் ஒத்தை மனுஷனா எப்டிடா செய்வேன்!”

“இப்போ நீ ஒத்தை மனுஷனா இருக்கறதுதான் பிரச்சனையா கோபால்! இந்தப் பல்லு போன கோபாலுக்கு இதுக்கு மேலயா ஒரு லதா பொறந்து வரப் போகுது! சீக்கிரமா கண்டுப்புடிச்சு ஜோடி சேர்த்திடறேன்! டோண்டு வோரி பீ ஹேப்பி!”

“திமிர் புடிச்சவனே! என்னடா நெனைச்சிட்டு இருக்க ஒன் மனசுல?”

“உங்களைத்தான் கோபால்! இப்பவும் சொல்றேன் கோபால், என் உள்ளத்துல உங்கள தவிர வேற யாருக்குமே இடம் கிடையாது!” என சரோஜாதேவி போலப் பேசியவன் பரோட்டாவைக் கொத்தும் ஜல்லி கரண்டியால் தன் நெஞ்சைத் தட்டிக் காட்டினான்.

“மவனே, என்னைக் காண்டாக்குனே எல்லாம் ராங்கா பூடும் பாத்துக்கோ!” என வெங்காயம் வெட்டும் கத்தியை காட்டி மகனை மிரட்டினார் கோபால்.

“நைனா, இந்த தள்ளாத வயசுல உன்னைப் போட்டு இப்படி வேலை வாங்கனும்னு எனக்கு மட்டும் ஆசையா என்ன! சீக்கிரம் எனக்கு ஒரு பொண்ண பார்த்து கட்டி வைன்னு எத்தனை வருஷமா கேக்கறேன், கண்டுக்கறியா நீ? நான் கேட்ட டைமுலயே பாமாவ எனக்குக் கல்யாணம் கட்டி வச்சிருந்தா இந்நேரம் உன் பேரன் வந்து வெங்காயம் வெட்ட ஹெல்ப்பு பண்ணிருப்பான்” என இவன் அங்கலாய்த்துக் கொண்டான்.

கோபாலுக்கு குப்பென வியர்த்துப் போனது.

“பரதேசி நாயே! பதினஞ்சு வயசுல பக்கத்து வீட்டு பாமாவ கட்டி வைன்னு ஒத்தக்காலுல நின்னத இன்னும் மறக்கலியாடா நீ! அவ கையை நீ புடிச்சு இழுத்த இழுப்புல, புள்ளய வளத்துருக்கான் பாருன்னு அவ புருஷன் என் முதுகுல டின்னு கட்டனது செத்தாலும் மறக்காதுடா எனக்கு!” எனச் சொல்லி இன்னும் வலிப்பது போல முகத்தைச் சுளித்தார் கோபால்.

“அது அறியாத வயசு நைனா! அதான் ராவோட ராவா பொட்டிப் படுக்கையைக் கட்டிக் கிட்டு என்னை வேற வீட்டுக்கு ஷிப்டு பண்ணிட்டியே! காதல் தோல்வியில பாமா பாமான்னு எத்தனை நாளு நான் கோமாவுல கிடந்தேன்!” எனப் பெருமூச்சு விட்டவன், தன் கடுப்பையெல்லாம் பரோட்டாவைக் கொத்துவதில் காட்டினான்.

ஜெய்சங்கர், இருபத்தெட்டு வயது கட்டிளம் காளை. திருவான்மியூர் ஹவுசிங் போர்ட் வீட்டில் தன் தந்தையுடன் வசிக்கிறான். அவன் தந்தையைப் போலவே இவனும் ஒரு பரோட்டா மாஸ்டர். கோபால் சொற்ப சம்பளத்துக்காக நாயாய் உழைத்து ஓடாய் தேய்ந்தவர். இவனோ பதினாறு வயது வந்தவுடன் மற்றவருக்காக உழைப்பதை நிறுத்தி சொந்தமாகத் தொழில் தொடங்கி தங்களுக்காக உழைத்தான். அவனது முயற்சியில் உதித்ததுதான் ‘கோபால் கையேந்தி பவன்’.

ஜிம் பக்கமெல்லாம் போனதில்லை இவன். சின்ன வயதில் இருந்து கடுமையான உழைப்பினால் உரமேறிக் கிடந்தது அவன் தேகம். மாவு பிசைந்து, பரோட்டாவை ஸ்டைலாக தட்டி, கொத்தி என இவன் பார்க்கும் வேலைக்கு புஜங்கள் கரளாக்கட்டை போல வீங்கிக் கிடந்தன. நெடு நெடு வளர்த்தியில், அடுப்பில் வேகுவதால் கருத்துப் போய் கிடந்தவனை நேரில் பார்த்திருந்தால் டைரக்டர் பாலா கண்டிப்பாக அடுத்த படத்துக்குக் கதாநாயகனாக்கி இருப்பார். அவர் படத்தில் நடிக்கத் தேவையான பத்து பொருத்தமும் பொருந்திய அழுக்கு சுப்பன்தான் இவன்.

முகம் எப்பொழுதும் முத்து முத்தாய் வியர்த்திருக்க, போட்டிருக்கும் கருப்பு டீஷெர்ட் அங்கங்கே மாவும் எண்ணெய்யும் பட்டு உடலோடு ஒட்டிக் கிடக்க, கட்டம் போட்ட லுங்கி முட்டி வரை மடித்து விடப்பட்டிருக்க, பரோட்டாவுக்கு விடும் எண்ணெய்யைத் தலை முடிக்கு விடாததால் முடி பரட்டையாய் சிலுப்பிக் கொண்டு நிற்க, மீசையும் முகம் நிறைத்த தாடியும் கரு கருவென வளர்ந்து நிற்க, ஆறாய் பொங்கும் வியர்வை வாசனை சால்னா வாசத்தைத் தோற்கடிக்க தில்லாய் கெத்தாய் ‘பிறர் வாழ்வதே எங்க வேர்வையில்தான்’ எனப் பாடக்கூடிய அத்தனைப் பொருத்தமும் உடையவன் இவன்.

“நான் மட்டும் உனக்கு பொண்ணுப் பார்க்காமயாடா இருக்கேன்! எவள காட்டனாலும் மூக்கு சரியில்ல, முகரை சரியில்லன்னு தட்டிக் கழிக்கற நீ!”

“நைனா! வாழ்க்கையில ஒரு தடவை வரது கல்யாணம். காலம் பூரா வச்சி வாழ போறவ கண்ணுக்குக் குளிர்ச்சியா ஜில்லுன்னு இருக்கனும்னு நெனைக்கறது தப்பா? தெனம் அடுப்புல வெந்து சாகறேன்! வீட்டுக்குப் போனா, அவ முகத்தப் பார்த்ததும் அப்படியே குத்தால அருவில குளிச்ச மாதிரி ஜிவ்வுனு மனசு சிறகடிக்கனும் நைனா! நீ முதல்ல அந்த தரகன மாத்து. எப்போ பாரு தீஞ்சது, கருகனது, வெந்தது, வேகாததுன்னு காட்டறான்.”

“இவரு இருக்கற கலருக்கும் பதுவுசுக்கும், அந்தப் பொண்ணு பேரு என்னடா?”

“எந்தப் பொண்ணு?”

“அதான் ரூமு கதவுல போஸ்டரு ஒட்டி வச்சிருக்கியே!”

“ஓ, என் தம்முவா! செல்லத்துப் பேரு தமன்னா! பரோட்டா மாவு மாதிரி என்ன வெள்ளைத் தெரியுமா என் செல்லம்”

“ஆமா தம்மு, தம்மு! உன் அழகுக்கு தம்மு மாதிரி பொண்ணுங்க கியூ கட்டி நிப்பாளுங்கன்னு நெனைப்பு உனக்கு! போடா, போக்கத்தவனே. எனக்கு வாயில கலிஜா வந்துடும்” எனத் திட்டியபடியே ப்ளாஸ்டிக் குவளைகளை கழுவ ஆரம்பித்தார் கோபால்.

“தோ பாரு நைனா, ஆம்பளைக்கு உழைப்புதான் அழகுன்னு சொல்லிக் குடுத்த நீயே, இப்படி ப்ளேட்ட மாத்தக் கூடாது! நெத்தி வேர்வை சிந்தி உழைச்சு, வீண் செலவு செய்யாம சேர்த்து வச்சி வீடு கட்ட நிலம் வாங்கிப் போட்டிருக்கேன்! இன்னும் ரெண்டு வருஷத்துல சின்னதா வீடும் கட்டிருவேன். என்னைக் கட்டிக்கிறவ ராணி மாதிரி சொந்த வீட்டுல சோக்கா இருக்கலாம் நைனா!”

தீய்ந்துப் போன பரோட்டாவைத் தூக்கி வீசாமல் அதில் சால்னாவை விட்டு ஒரு சுருட்டாகச் சுருட்டி வாயில் போட்டுக் கொண்ட மகனை ஏற இறங்கப் பார்த்தார் கோபால்.

“கஞ்சப் பிசுனாறி” எனச் சத்தமாகவே முணுமுணுத்தார் அவர்.

“தோடா! சிக்கன சிகாமணின்னு சொல்லு நைனா”

வீண் செலவு செய்யாமல் என அவன் சொன்னது முற்றிலும் உண்மை. தேவையான செலவைச் செய்யக் கூட ஆயிரம் முறை யோசிப்பவன் இவன். சின்ன வயதிலேயே காசேதான் கடவுளடா எனும் பெரும் மந்திரத்தை வலிக்க வலிக்க கற்றுக் கொண்டவன், எண்ணி எண்ணித்தான் செலவு செய்வான்.

கோபால் மீது உயிரை வைத்திருந்தாலும், அவருக்குக் கூட தேவையில்லாமல் நயா பைசா கொடுக்க மாட்டான். இவனிடம் பணத்தை வாங்குவதை விடக் காளை மாட்டில் பால் கறந்து விடலாம் என நொந்துபோவார் அவர்.

Scroll to Top