KKP Epi 11(1)

அத்தியாயம் 11

கலக்கி அல்லது முட்டை கலக்கி என அழைக்கப்படும் உணவு வகை சென்னை ரோட்டோரக் கடைகளில் மிகப் பிரசித்தி பெற்றதாகும். கோயம்புத்தூரின் உணவான கலக்கி இப்பொழுது தமிழ்நாடு முழுக்கக் கலக்கிக் கொண்டிருக்கிறது. மிளகு தூள், மிளகாய்த் தூள், உப்பு எல்லாம் சேர்த்து வெளியே வெந்தும், உள்ளே வேகாமலும் சமைக்கப்படும் முட்டையைதான் கலக்கி என்கிறோம்.

தூக்கம் வராமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் மல்லி. மனமெல்லாம் தன் கணவனை நினைத்து ரணமாகிப் போய் கிடந்தது. வலது கை தானாக வயிற்றை மெல்லத் தடவிக் கொடுத்தது. அழுத்தித் தடவினால் உள்ளிருக்கும் குழந்தைக்கு வலிக்குமோ என மிக மென்மையாக வருடினாள் மல்லி.

‘நீங்க வெளிய வரதுக்குள்ள நைனாவும் அம்மாவும் போடற சண்டைலாம் போட்டு முடிச்சு ஒரு நிலைக்கு வந்துடுவோம்டா! என் அம்மாவும் இன்சும் புள்ளைங்க முன்னுக்கே கத்தி சண்டைப் போடற மாதிரி உங்க முன்னுக்கு நாங்க சண்டைப் போட்டுக்க மாட்டோம்டா செல்லம்!’

மல்லாக்கப் படுத்திருந்தவள், வலது புறம் திரும்பிப் படுக்க முனைந்த நேரம் கதவருகே நிழலாடியது. பக்கெனத் தூக்கிப் போட, கண்ணைக் கசக்கிப் பார்த்தாள் மல்லி. அங்கே குழந்தைகள் போல முட்டிப் போட்டு நகர்ந்து வந்து கொண்டிருந்தான் ஜெய்சங்கர்.

வாந்தி எடுத்து கவிழ்ந்து கிடந்தவனை, கோபால்தான் சுத்தப்படுத்தி தன்னருகே படுக்க வைத்திருந்தார்.

“நான் பூ………….தமா நைனா? பூதம் இன்னா பண்ணும் தெரியுமா? அப்படியே கட்டிப் புடிச்சு அமுக்கும்” என்றவன் அருகில் படுத்திருந்த கோபாலை நெருக்குவது போலக் கட்டிப் பிடித்தான்.

“அடேய், அடேய்! விட்றா! பூதமுன்னு உன் தேவாதானே சொன்னா! அவளப் புடுச்சு அமுக்காம என்னை ஏன்டா பேஜார் பண்ணுற?”

“அவோ வய்த்துல பாப்பா இருக்கு! அமுக்கக் கூடாது! உன் வய்த்துல பீப்பாதானே இருக்கு! அமுக்கலாம், தப்பில்ல நைனா தப்பில்ல”

“தண்ணி அடிச்சாலும் வெவரமாத்தான்டா மவனே இருக்க! மல்லி மேல உள்ள கோவத்துல இப்படி மில்லி போட்டுட்டு வந்து அலும்பு பண்ணுறியே, இதெல்லாம் நாயமாடா?”

“நாயமோ, நாய் ……………. காயமோ, எனக்கு இன்னா வந்துச்சு! அல்லா பேரும் என்ட்ட நாயமாத்தான் நடந்துகிட்டாங்களா? நான் மட்டும் இன்னா செருப்புக்கு நாயம் பாக்கனும்!” என எழுந்து அமர்ந்து கையை ஆட்டி ஆட்டிக் கேட்டான் ஜெய்சங்கர்.

ஒரு மூலையில் அமர்ந்திருந்த மல்லி,

“படுங்க மாமா, நாளைக்குப் பேசிக்கலாம்” எனக் கண்ணீர் குரலில் சொன்னாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“மாமா மாமானு கூப்டே எனக்கு விபூதி அடிக்கப் பார்க்கறல! போதும்டி போதும்! தேன்மொழின்னு பேரு இர்ந்தாலும், மூக்குல ஓங்கிக் குத்துனா தேன் வராதுடி! ரத்தம்தான் வரும்!” என உளறினான்.

“இப்போ இன்னாத்துக்கு மவனே இந்த பழமொழி?”

“என் இஸ்டம் நைனா, நான் சொல்லுவேன்! கேக்க கஸ்டமா இருந்தா அவள போ சொல்லு!”

“இந்த ராத்திரி நேரத்துல எங்கடா போவா என் மவ?”

“எதே!! எங்க போவான்னு ஏன் கேக்கற? ஓஹோ!! என் மல்லிய வூட்ட வுட்டு வெளிய அனுப்ப ஐடியாரு பண்றியா நைனா? கொன்னுடுவேன் பார்த்துக்கோ!  மூனு முடிச்சு ஸ்ஸ்ஸ்ஸ்ட்ராங்கா போட்டு தாலி கட்டிருக்கேன்! நான் சாவற வரைக்கும் என்னை விட்டுப் போக விடமாட்டேன் ஒன் மவள! அப்படி செத்துட்டாலும் பூதமா வந்து என் தேவாவ தூக்கினு போய்ருவேன்!” எனப் புலம்பியவன்,

“என்னை ஏன் நைனா பூதம்னு சொன்னா! நான் பூதமா நைனா?” என மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க நொந்துப் போனார் கோபால்.

“யம்மா, கண்ணு! நீ போய் ரூம்ல படுமா! இவன் பொலம்பிட்டே தூங்கிடுவான்” என அழுதபடி அமர்ந்திருந்த மல்லியைப் பார்த்து சொன்னார் கோபால்.

“ஆமா, போம்மா! போய் பட்துக்கோ! நம்ம பாப்பா இருக்குல்ல வயித்துல, நான் வேணா தாலாட்டுப் பாடவா அதுக்கு?”

“இப்போ பாடனாலும் பாப்பாக்கு ஒன்னும் கேக்காதுடா”

“ஏன் கேக்காது? எல்லாம் கேக்கும்! நைனா பேசறது கேக்குதுதான பாப்பா? இல்ல கிட்ட வரவா?” என கேட்டபடியே நகர்ந்து போய் அமர்ந்திருந்த மனைவியின் வயிற்றில் கையை வைத்தான் ஜெய்சங்கர்.

“பாப்பா, பாப்பா! அம்மா வயித்துல நீ வந்ததுல எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? நீ வயித்துல இருக்கன்னு சொல்லாம, உங்கம்மா வேலைக்கு வந்ததுனாலத்தான்டா நைனாக்கு கோபம் வந்துடுச்சு! கையில பட்ட எண்ணெய் வயித்துல பட்ருந்தா என்னாயிருக்கும்? கொஞ்சமா பட்டதனால தோலோட போச்சு! அப்படியே சட்டி கவுந்துருந்துச்சுனா உங்கம்மா நெலமை! கோபத்துல நாலு வார்த்தைத் திட்டிப்புட்டேன்! அதுக்கு என்னை பூதம்னு சொல்வாளா உங்கம்மா! செத்துப் போனா குழில பணத்தப் போடுன்னு சொல்றா! யாருக்காக இப்படிலாம் உழைக்கறேன், உங்களுக்காகத்தான! நீ சொல்லு பாப்பா அம்மாட்ட, இனிமே இப்படிலாம் பேசக் கூடாதுன்னு! உங்கம்மா இல்லாத ஒலகத்துல நான் மட்டும் இருந்துருவனா! சொல்லு பாப்பா” என கண்ணீர் வழியப் புலம்பியவனைக் கட்டிக் கொண்டாள் மல்லி.

“வுடுடி! நீ வேணா எனக்கு! கட்டிப் புடிப்ப, அப்பாலே எட்டி உதைப்ப! எனக்கு என் பாப்பா மட்டும் போதும்” என அவள் மடியில் சரிந்து அப்படியே கண்ணை மூடினான் ஜெய்சங்கர்.

மகனை மல்லியின் மடியில் இருந்து இழுத்துப் படுக்க வைத்தார் கோபால்.

“வுடு நைனா! பாப்பாக்கு தாலாட்டுப் பாடனும். கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாயவா! ஆராரிராரோ ராரோ ராரோ!” என ராரோ பாட்டுக்கு ரயில் பெட்டி போல் போய்க் கொண்டே இருந்தது.

பாடி அட்டகாசம் செய்தவன், ஒரு வழியாகத் தூங்கவும்தான் இவள் வந்து உள்ளே படுத்தாள். நடு இரவில் பூனை மாதிரி தன்னை தேடி வருபவனைப் பார்த்து மெல்லிய புன்னகை வந்தது இவளுக்கு.

மல்லியை நெருங்கி வந்தவன், உடலைக் குறுக்கி அவளது நெஞ்சில் தலை வைத்து விட்ட உறக்கத்தைத் தொடர்ந்தான். தன்னை தாயாக்கியவன் மீதும் தாய்மை உணர்வு ஊற, காயம் இல்லாத கையால் மெல்ல அவனது சிகையைக் கோதி கொடுத்தாள் பவளமல்லி.

“ஹ்ம்ம்! தேவா!” எனச் சுகமாக முனகியவன், இன்னும் அவள் நெஞ்சில் வாகாக ஒண்டிக் கொண்டான்.

சண்டை முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேறிய நொடி, மல்லியின் தலையை வருடிக் கொடுத்து கோபால் சொன்ன கதை மனத்திரையில் ஓடியது இவளுக்கு. கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள்,

“நான் வேணாமாம், எனக்குள்ள இருக்கற பாப்பா மட்டும் வேணுமாம்! கொழுப்புடா பரோட்டா உனக்கு! இனிமே உனக்கு அம்மா, ஆத்துக்காரி, ஆசான், தோழி, எல்லாமே நான்தான் மாமா! என்னை விட்டுடுடின்னு கெஞ்சற அளவுக்கு அன்பையும் அள்ளிக் குடுப்பேன், வம்பையும் வளத்து வைப்பேன்!” என முனகினாள் பவளமல்லி.

கோபாலின் குரல் இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்க, தூக்கமில்லாமல் தவித்தாள் பேதை.

“பாவப்பட்ட ஜீவன்மா நம்ம சங்கரு! பணம்தான் எல்லாம்னு அடிச்சு சொல்லிக் குடுத்திருக்கு அவன் கடந்து வந்த வாழ்க்கைப் பயணம்” எனப் பெருமூச்சுடன் ஜெய்சங்கரின் கடந்த காலத்தைப் பகிர்ந்து கொண்டார் கோபால்.

“மனுஷ பெறவி ஒரு கலீஜான பெறவிம்மா! பொம்பளன்னு வந்துட்டா அவ பிச்சைக்காரியா இருந்தாக் கூட விட்டு வைக்க மாட்டானுங்க! இவன் அம்மாவும் ரோட்டுல பிச்சை எடுத்துட்டு இருந்தவதான். கூட்டமா போய் பிச்சை எடுத்து, வர பணத்துல துன்னுட்டு, நைட்டுல ப்ளாட்பாரத்துல சுருண்டு படுத்துக்கற கூட்டத்துல ஒருத்தி. இவன் வயித்துல வந்தப்ப அவளுக்கு நாப்பது வயசு இருக்கும்மா! பிரியாணி வாங்கிக் குடுத்து கூட்டிட்டுப் போவானுங்க! சில சமயம் ஒன்னும் குடுக்காம தரதரன்னு இழுத்துட்டுப் போவானுங்க! ஏன் போலிசுங்க கூட இவளுங்க மாதிரி ஆளுங்கள வுட்டு வைக்கறது இல்ல! இவன் அம்மாவுக்கே, யாருக்கு இவன் பொறந்தான்னு தெரியுமோ என்னமோ!” எனப் பெருமூச்சு ஒன்றை விட்டார் கோபால்.

Scroll to Top