தரகர் பார்த்துக் கொடுத்த இடங்களில் அப்படி இப்படி ஒன்றிரண்டு பெண்கள் இவன் கேட்ட மாதிரி அழகாய் இருந்து சம்பந்தமும் தகைந்து வந்தது. ஆனால் இவன் போடும் கண்டிஷன்களில் பேச்சு வார்த்தைப் பாதியிலேயே புட்டுக் கொண்டு போனது.
வாரம் ஒரு சினிமா, அடிக்கடி ஹோட்டல் சாப்பாடு, மாதம் ஒரு புது சேலை, வருடம் ஒரு நகைநட்டு, இப்படியெல்லாம் எதிர்ப்பார்க்கக் கூடாது. கொடுக்கும் பணத்துக்குள் மொத்த குடும்ப செலவையும் அடக்க வேண்டும். இவனோடு சேர்ந்து உழைக்கத் தயங்கக் கூடாது. இப்படி திருமணத்துக்கு முன்னமே தெளிவாகச் சொல்லி வைத்தால் எந்தப் பெண் தான் ஒத்து வருவாள். இனிப்பாய் பேசி திருமணம் முடித்து அதன் பின் சுயரூபத்தை காட்டும் மற்ற ஆண்களைப் போலத் தந்திரமாகப் பிழைக்கத் தெரியாதவனுக்குக் கல்யாணம் இழுத்து கொண்டேப் போனது.
“இந்த மாதிரி கண்டிசனு கர்மம்லாம் போட்டா, ஒனக்கு என்னை மாதிரியே இந்த சென்மத்துல கண்ணாலம் நடக்காதுடா டோய்!”
“சீச்சி! அந்த பெனாயில போட்டு உன் ஊத்த வாயக் கழுவு நைனா! எனக்கு அம்சமா, அழகா ஒரு பொண்டாட்டி கிடைக்கத்தான் போறா! அவ கூட நான் குஜாலா வாழ்ந்து புள்ளக்குட்டி பெக்கத்தான் போறேன். நீ வாயப் பொளந்துட்டு தூங்கறப்ப, என் புள்ள உன் வாயில பன்னீர உடத்தான் போறான். இப்படிலாம் நடக்கல, என் பேர மாத்தி வச்சிக்கறேன் நைனா!”
“என் தலைவன் நாட்டு நாட்டு செவன் ஞாபகமா உனக்கு ஜெய்சங்கருன்னு பேரு வச்சேன்டா! நான் வச்சப் பேரு நிலைக்கனுங்கறதுக்காகவாச்சும் உனக்குச் சீக்கிரம் பொண்ணு அமையட்டும்டா மவனே!” எனச் சொல்லி பெருமூச்சு விட்டார் கோபால்.
“ண்ணா முட்டைப் பரோட்டா ஒன்னு” எனும் குரலில் அப்பன் மகன் இருவரும் வேலையில் கவனமாகினர்.
“தம்பி, வெங்காயம் போட்டா போடாமலா?”
“போடுங்கண்ணே”
சில்வர் குவளையில் முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி, அதில் வெட்டி வைத்த வெங்காயத்தைக் கொஞ்சமாய் அள்ளிப் போட்டு, தட்தட்டெனக் கரண்டியால் அடித்து தனியாக வைத்தவன், பரோட்டா உருண்டையை எடுத்து நன்றாக கையால் தேய்த்து, பின் தூக்கி ஒரு சுழற்று சுழற்றி, தோசைக் கல்லில் போட்டு அதைக் கரண்டியால் சதுரமாக்கினான். அதில் முட்டைக் கலவையை ஊற்றி கையாலேயே மெழுகி, பின் ஜல்லி கரண்டியால் சதுரத்தை முக்கோணமாக்கி வேகவிட்டான். வெந்ததும் கரண்டியால் அதை எடுத்தவன்,
“நைனா!” எனக் குரல் கொடுத்தான்.
அவர் தட்டுடன் தயாராக, இவன் ஸ்டைலாக தூக்கிப் போட்டான் பரோட்டாவை. அவர் அதைக் கேட்ச் பிடித்து, அதில் சால்னாவை ஊற்றி வந்திருந்த கஸ்டமரிடம் கொடுத்தார்.
ஜெய்சங்கர் ஸ்டைலாக பரோட்டா போடும் அழகுக்கே நிறையப் பேர் இவனது கையேந்தி பவனுக்கு வருவார்கள். பரோட்டாவும், சால்னாவும் ருசியாக இருப்பது இன்னொரு ப்ளஸ்! இவர்கள் வைத்திருக்கும் குட்டி கையேந்தி பவனில் பரோட்டா வகைகள் மட்டுமே மெனு! அதோடு குடிக்க டீயும் விற்றார்கள். தேநீரைக் கலக்கி டீ ட்ரம்மில் ஊற்றி வைத்து விடுவார்கள். கஸ்டமர் டீ கேட்கும் போது, அந்த ட்ரம்மில் இருந்த குழாய் வழி டீயை பிடித்து ஒரு ஆற்று ஆற்றிக் கொடுத்து விடுவார்கள். இந்த இரண்டு ஐட்டத்துக்கே வியாபாரம் பிய்த்துக் கொண்டு போனது. மாலையில் நான்கு மணிக்கு ஆரம்பித்து இரவு பதினொன்றுக்கு வியாபாரத்தை முடித்து கடையை எடுத்து வைப்பார்கள் இருவரும்.
வந்தவர்கள் உட்கார ஐந்தே நாற்காலிகள்தான். மற்றவர்கள் எல்லாம் நின்றபடியே உண்டு விட்டுப் போவார்கள். பலர் பார்சல் வாங்கிப் போவதும் உண்டு. அப்பாவுக்கும் மகனுக்கும் கஸ்டமர்களை மாறி மாறி கவனிப்பதில் பெண்டு நிமிர்ந்துவிடும். அதோடு இவர்கள் கடை போட்டிருக்கும் இடம் ஒரு எம்.என்.சி வளாகத்துக்கு அருகாமையில் இருந்தது. அங்கே வேலை செய்யும் இளசுகள் சம்பளம் எடுத்து இரு வாரத்துக்கு பிட்சா, பர்கர் எனப் பந்தா காட்டினாலும், மீதி இரண்டு வாரத்துக்கு கோபால் கையேந்தி பவனில்தான் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள்.
இவனும் அவர்களைக் கலாய்த்து சிரிக்கச் சிரிக்கப் பேசுவான்.
“டேய் தம்பிகளா! நீங்க அழகா சட்டைப் போட்டுருக்கீங்க, நான் அழுக்கா சட்டைப் போட்டுருக்கேன்! இருந்தாலும் நம்ம ரெண்டு பேர் தொழிலுக்கும் ஒத்துமை இருக்குடா!” எனப் பரோட்டாவை கொத்தியபடியே பேச்சுக்கு இழுப்பான் அவர்களை.
“எதே!!! நம்ம தொழிலுல ஒத்துமையா?”
“ஆமான்டா! நீங்க அந்த கம்ப்யூட்டரை லொட்டு லொட்டுன்னு தட்டறீங்க! நான் இந்த பரோட்டாவ லொட்டு லொட்டுன்னு கொத்தறேன்! எங்கயும் லொட்டு இங்கயும் லொட்டுடா!” எனச் சொல்லி சிரிப்பான்.
“போண்ணா, காமேடி பண்ணிக்கிட்டு! லொட்டு சேமா இருந்தா போதுமா? துட்டு(சம்பளம்) வித்தியாசப்படுதுல” எனக் கிண்டலடித்து விட்டுப் போவார்கள் இளசுகள்.
இவன் தனக்குள்ளேயே சிரித்து கொள்வான். அவர்களைப் போல இவனுக்கு கிரேடிட் கார்ட் உண்டா, ஈ.எம்.ஐ உண்டா, நன்றாய் பாட்டு விட்டு அடிக்கும் டீம் லீடர்தான் உண்டா! அடுத்த நாள் வியாபாரத்துக்கு சரக்கு வாங்கும் பணத்தை எடுத்து தனியாக வைத்தால், மீதி பணம் அப்படியே அவனது கைக்கு வந்து விடும் சொந்தத் தொழில் அல்லவா!
வேலைகளை செய்துக் கொண்டிருந்தவனை, போனில் வைத்திருந்த அலார சத்தம் கலைத்துப் போட்டது. அந்த அலாரத்தை நிறுத்தியவன், கேனில் வைத்திருந்த நீரை எடுத்து முகத்தைக் கழுவி துண்டால் துடைத்துக் கொண்டான். தங்களது உடமைகளைப் போட்டு வைத்திருக்கும் பையில் இருந்து பவுடர் டப்பாவை எடுத்தவன், கொஞ்சமாய் கையில் கொட்டி முகத்தில் பூசிக் கொண்டான். சீப்பை எடுத்து முடியையும், மீசைத் தாடியையும் சீவி சரி செய்தவன், பையில் இருந்த சின்னக் கண்ணாடியை எடுத்து முகத்தைத் திருப்பி அப்படியும் இப்படியும் பார்த்தான்.
“கோவாலு!”
மகனின் அலப்பறைகளைப் பார்த்தபடியே அவன் விட்டுப் போன வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர்,
“இன்னா மேட்டரு?” எனக் குரல் கொடுத்தார்.
“நல்லா இருக்கனா?”
“உனக்கென்னடா! அழகன்டா நீ”
தகப்பனின் புகழ்ச்சியில் அகமகிழ்ந்தவன், அடுப்புடன் போராடிக் கொண்டிருந்தவரின் கன்னம் பிடித்துக் கிள்ளி முத்தமிட்டான்.
“நைனான்னா நைனாத்தான்” என்றவன் பாண்டி பஜாரில் வாங்கி பத்திரமாகப் பாதுகாக்கும் கறுப்புக் கண்ணாடியை எடுத்து ஸ்டைலாக அணிந்துக் கொண்டான்.
கண்ணாடியைப் பார்த்து மறுபடியும் தலையைக் கோதிக் கொண்டவன், தூரத்தே தெரிந்த எம்.என்.சி நுழைவாயிலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி இருந்தான். இரண்டு மாதங்களாய் அவன் ஜொள்ளு ஊற்றி சைட்டடித்துக் கொண்டிருக்கும் தேவதை பெண் ஒருத்தி அங்கிருந்து வெளியேறி இவனது கடைக்கு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“நைனா, வரா நைனா வரா!”
“தெனமும்தான் பரோட்டா வாங்க வரா!”
“இவள மாதிரி உனக்கு ஒரு மருமக வந்தா எம்மாம் ஷோக்கா இருக்கும்!”
“கனவு காணலாம்டா மவனே! அதுக்குன்னு ஆகாச கனவு கூடாது! அந்தப் பொண்ணு எம்மாம் அழகா இருக்கு, பெரிய வேலை வேற பாக்குது! நல்லா படிச்சிருக்கும் போல! இந்த எட்டாத பழம் தேவையாடா உனக்கு?”
“எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடறவன் இல்ல இந்த சங்கரு! லைட்டா பார்க்கறதுல என்ன தப்பு? பாமா விஷயத்துல நீ சாத்துன சாத்து இன்னும் மறக்கல எனக்கு! அப்போ என்ன சொன்ன நீ?”
“அத்தையும் நீயே சொல்லித் தொலை”
“பொண்ணுங்க பூவு மாதிரி! தூரத்துல இருந்து பார்த்து ரசிக்கலாம்! பறிச்சு மோந்து பார்த்துக் கசக்கிப் போட்டுறக் கூடாதுன்னு சொல்லி சொல்லி அடிச்சில்ல! அது அப்படியே இந்த மனசுல பதிஞ்சுக் கிடக்கு நைனா! நீ சொன்னததான் நான் கரீக்டா ஃபோலோ பண்ணறேன்! கண்ணுக்குக் குளிர்ச்சியா தெரியற புள்ளைங்கள ஜாலியா சைட்டடிக்கறேனே தவிர பறிக்க நினைக்கல! சீக்கிரம் எனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வை, இதக் கூட விட்டுடறேன்! அப்புறம் பாரு இந்த ஜெய்சங்கர் ஸ்ரீராமசங்கர்னு பேர் வாங்குவான்!”
“நெசமாலுமாடா?”
“உன் மேல சத்தியமா நைனா! அதான் பார்க்க, ரசிக்க எனக்கே எனக்குன்னு ஒருத்தி வந்துடுவாளே! அவ முந்தானையைப் புடிச்சிட்டு சுத்தோ சுத்துனு சுத்தப் போற எனக்கு மத்த பொண்ணுங்கள சைட்டடிக்க எங்கிருந்து டைமு கிடைக்கப் போகுது!” எனக் கனவில் மிதந்தவாறே பேசிக் கொண்டிருந்தவனை,
“பரோட்டா மூனு பார்சல்” எனும் தேன் குரல் பூமிக்கு இழுத்து வந்தது.
“நீ கேட்டா, பரோட்டா கடையையே குடுப்பேனே!” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவன், கறுப்புக் கண்ணாடியின் உபயத்தால் தன் முன்னே நின்றிருந்தவளை அணு அணுவாய் சைட்டடிக்க ஆரம்பித்தான்.
கைகள் அதன் போக்கில் பரோட்டாவை ரெடி செய்தாலும் ஓர விழிப்பார்வை பாவையையே சுற்றி வந்தது. மாநிறத்தில், மூக்கும் முழியுமாய் அழகாய் பொம்மை போல இருந்தாள் பெண். சுடிதார் அணிந்து, துப்பட்டாவை ஒழுங்காய் போட்டு பின் செய்து, நீளத் தலை முடியை ரப்பர் பேண்ட் போட்டுக் கட்டி, கொஞ்சமாய் அதில் மல்லியை சொருகி இருந்தாள். முகம், கழுத்து எல்லாம் வியர்வையில் லேசாய் நனைந்திருந்தது. நெற்றியில் குட்டியாய் ஒரு கருப்புப் பொட்டு. சின்னதாய் ஒரு கைப்பையைத் தோளில் மாட்டி இருந்தாள். பார்வை யாரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் அவன் போட்டுக் கொண்டிருக்கும் பரோட்டாவின் மேலேயே நிலைத்திருந்தது.
இவளுக்காகச் சற்று பெரிய உருண்டையாய் பிடித்து வைத்திருந்த மாவை எடுத்து பரோட்டா சுட்டவன், அதைப் பிய்த்து எடுக்கக் கூட இவள் கஷ்டப்படக்கூடாதே என அதைச் சின்ன சின்னதாய் வெட்டி, சால்னாவை தனியாகக் கட்டி பார்சல் செய்து கொடுத்தான். அவளைக் கவர்வதற்காகப் போன முறை மூன்று பரோட்டாவுக்குக் காசு வாங்கிக் கொண்டு நான்காய் வைத்துத் தர, மறுநாளே எக்ஸ்ட்ரா பரோட்டாவின் பணத்தையும் சேர்த்துத் தந்து விட்டிருந்தாள் அவள். அதனால்தான் இவளுக்காக ஸ்பெஷல் பெரிய பரோட்டா! அதோடு இவளுக்கு மட்டும் கையைக் கழுவி சுத்தபத்தமாக செய்து கொடுப்பான் சங்கர்.
கடை ரேடியோவில் டூயட் பட பாடல் ஓடிக் கொண்டிருக்க, பரோட்டா பார்சலை அவள் கையில் கொடுத்தவன்,
“அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாகப் பிறப்பேன்!!!” என முணுமுணுத்தான்.
மெல்ல நிமிர்ந்து கண்ணாடி அணிந்திருந்த அவன் முகத்தை முதன் முதலாக நேராய் பார்த்தவள்,
“செருப்பு பிஞ்சிடும்!” என மெல்லிய முனகலாய் வார்த்தையை உதிர்த்து விட்டு மடமடவென நடந்துவிட்டாள்.
“பேசிட்டா நைனா!!! பேசிட்டா!!!” என ஈயென இளித்த மகனைப் பார்த்து தூவெனத் துப்பினார் கோபால்.
சிக்கன சிகாமணி எனப் பெயர் வாங்கியவனிடமிருந்து சின்னதாய் என்றாலும் சில பல சலுகைகளைப் பெற்ற பெண்ணிவள், முழுதாய் அவனை முந்தானையில் முடிவாளா!!!!
