அத்தியாயம் 12
விதவிதமான சாண்ட்வீச் சாப்பிட்டிருக்கும் நீங்கள், முறுக்கு சாண்ட்வீச் சாப்பிட்டிருக்கிறீர்களா? சென்னையின் கையேந்தி பவன்களில் இப்பொழுது இதுவும் ஒரு முக்கிய உணவாக விற்கப்படுகிறது. சாண்ட்வீச்சில் மேலும் கீழும் ரொட்டி வைத்தால், முறுக்கு சாண்ட்வீச்சில் குட்டி முறுக்கை மேலும் கீழும் வைத்து, அதன் நடுவே சட்னி, வெள்ளரி, வெங்காயம் வைத்து, மேலே சீஸ் தூவி கொடுக்கிறார்கள்.
“மல்லி, மல்லி!” எனும் குரலில் திரும்பிப் பார்த்தாள் பவளமல்லி.
“தோடா! உன்ன இல்லடி என் பொண்டாட்டி! மல்லிப்பூ விக்கிது அந்தம்மா” எனப் புன்னகையுடன் சொன்னான் ஜெய்சங்கர்.
அன்று பரோட்டா கடைக்கு விடுமுறை தினமாதலால், காலையில் சரக்கெடுக்கும் வேலையெல்லாம் முடித்து விட்டு அந்தி சாயும் வேளையில் தன் ஆசை மனைவியை வடபழனி கோயிலுக்கு அழைத்து வந்திருந்தான் ஜெய்சங்கர். பேருந்தில் அலைக்கழிக்காமல், ஆட்டோவிலேயே கூட்டி வந்திருந்தான் தன் துணையை.
பின்னால் இருந்து பார்த்தால் கர்ப்பிணிப் பெண் போலத் தெரியாவிட்டாலும், முன்னேயிருந்து பார்த்தால் ஐந்து மாத வயிறு குட்டி தொப்பை போலத் தெரியும் மல்லிக்கு.
“உள்ளாற பாப்பா இர்க்கா இல்லையாடி? வயித்தயே காணோம்!” எனப் புலம்புபவன், தாங்கள் பார்க்கும் தனியார் மருத்துவமனை டாக்டரையும் கேள்வியால் குடைவான்.
இவர்கள் மாதாந்திர சோதனைக்கு வந்தாலே நொந்துப் போவார் அந்த டாக்டர்.
“கடவுளே ஏன்பா இந்த மாதிரி கழிசடைங்க கிட்டலாம் என்னைக் கோர்த்து விடற” எனச் சத்தமில்லாமல் முனங்கிக் கொண்டே சோதனைகளை செய்வார்.
ஆட்கள் அழுக்காய் இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் நோட்டில் இருக்கும் காந்தி அம்சமாய் இருப்பதுதானே முக்கியம் அவர்களுக்கு! படிப்பறிவில்லாத பரோட்டா நுணுக்கி நுணுக்கிக் கேட்கும்,
“இன்னா டாக்டரே படத்துலலாம் புள்ள வந்தா வாந்தி எடுப்பாங்க! என் பொண்டாட்டி எடுக்கக் காணோமே?”,
“டாக்டரம்மா, நான் பார்த்த கர்ப்பிணி பொண்ணுங்கலாம் முழுசா உப்பிப் போய் கிடப்பாங்க! இவளுக்கு வயிறு மட்டும் தள்ளிட்டு இருக்கு, உடம்பு ஒட்டிப் போய் கிடக்கே?”,
“அந்தாண்ட போடின்னாலும் கேக்காம, ஒட்டி ஒட்டிப் படுத்து உசுப்பேத்தறா டாக்டர்! இதனால பாப்பாக்கு ஒன்னும் ஆயிடாதுல?” எனக் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் கொடுக்கும் காசுக்கு மேலேயே டாக்டரை கேள்வியாய் கேட்டு டார்ச்சர் செய்து விடுவான் ஜெய்சங்கர்.
டாக்டர் ஸ்கேன் செய்து குழந்தையைக் காட்டும் நாட்களில் கணவனும் மனைவியும் கண்ணில் நீருடன்தான் திரையைப் பார்த்திருப்பார்கள். அனாதையாய் வளர்ந்தவர்களுக்கு தங்களை அம்மாவெனவும் நைனாவெனவும் அழைக்க ஒரு சொந்தத்தை கொடுத்திருந்த கடவுளுக்கு இருவரும் நன்றி சொல்லாத நாளில்லை.
அந்தப் பூக்கார பெண்மணியின் அருகே போய், இரண்டு முழம் மல்லிகை வாங்கிக் கொண்ட பவளமல்லி தனது குட்டி பர்சை திறந்து பணம் எடுப்பதற்குள் இவன் பணத்தை நீட்டி இருந்தான்.
“என் மல்லிக்கு மல்லி வாங்கிக் குடுக்க சொல்ல என் சொத்து ஒன்னும் அழிஞ்சுடாதுடி! உன் துட்ட உள்ளாறயே வை”
அந்தப் பெண் கொடுத்த மல்லியை வாங்கி அழகாய் தன் மல்லியின் தலையில் சொருகி விட்டவன், அப்படியும் இப்படியும் அவள் தலையைத் திருப்பி சரியாக வைத்திருக்கிறோமா எனப் பார்த்துக் கொண்டான்.
புன்னகையுடன்,
“சாமி கும்புட போலாம் மாமா” என மெல்ல நடக்க ஆரம்பித்தாள் மாது.
“அழகுடி நீ!” என முணுமுணுத்தபடியே அவளோடு உள்ளே நுழைந்தான் சங்கர்.
கோமணம் கட்டிய ஆண்டி இவர்களை அன்புடன் உள்ளே வரவேற்றான்.
“வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழனி மலையாண்டி” எனப் பாடல் ஒலிக்க, அதோடு சத்தம் போட்டுப் பாடியபடியே வந்தான் ஜெய்சங்கர்.
“பேசாம வா மாமா! எல்லாம் ஒரு மாதிரி பார்க்கறாங்க”
“இதென்னாடி பேஜாரா இருக்கு! கோயிலுக்கு வந்தா இந்தப் பாட்டுத்தான்டி பாடனும்! பின்ன என்ன வாடி வாடி வாடி கைப்படாத சீடினா பாடுவாங்க!” என்றவனை முறைத்தவளுக்கு களுக்கென சிரிப்பு வந்துவிட்டது.
புன்னகை முகமாகவே இருவரும் கோயில் பிரகாரத்தைச் சுற்றி விட்டு, முருகனைத் தரிசித்தனர். தரிசனம் முடிந்து, சற்று நேரம் அமர்ந்தார்கள் இருவரும்.
“பாடி கண்டிஷனு எப்டி இருக்கு தேவா? வூட்டுக்குப் போலாமா இல்ல இன்னும் சுத்தலாமா?” எனக் கேட்டான் சங்கர்.
“யோவ்! எத்தனை தடவையா இதயே கேப்ப! நான் புள்ளத்தானே சுமந்திருக்கேன்! என்னமோ வயித்துல வெடிகுண்ட வச்சிருக்கற மாதிரி மொல்ல நட, குலுங்காதே, அலுங்காதேன்னு எப்போ பாரு ஒரே ரவுசு!”
“சரி சரி கோச்சுக்காதே! வா கெளம்பலாம்” என மனைவியை அழைத்துக் கொண்டு கோயில் வெளியே வந்தான் ஜெய்சங்கர்.
போன முறை நடந்த சண்டை, சமாதானத்துக்குப் பிறகு இருவரிடையேயும் பல மாற்றங்கள் வந்திருந்தன. கை குணமானதும் வடை போடுவதை இவள் மீண்டும் தொடர, கோபித்துக் கொள்ளாமல் அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்தான் சங்கர். அவள் சமைக்கும் இடம் யாரும் போகாத மாதிரி அடைப்பு வைத்தவன், தன் குழந்தையைச் சுமக்கும் மனைவியைக் கவனமாகப் பார்த்துக் கொண்டான். கோபாலும் மகளைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்.
வடை வியாபாரத்தில் வந்த பணத்தையும், சங்கரிடம் கடனாகக் கொஞ்சம் பணத்தையும் வாங்கி, இரண்டு மாதங்களில் இட்லி தோசை மாவு அரைக்கும் பெரிய சைஸ் கிரைண்டரை வாங்கிப் போட்டாள் மல்லி. அதில் மாவு அரைத்து, அதை பேக்கேட் போட்டு அவர்கள் ஹவுசிங் போர்ட்டில் வசிக்கும் பெண்களுக்கு விற்றாள். அவர்களும் சித்தாள், துப்புரவு பணி, துணி கடைகளில் வேலை என கஷ்டப்பட்டு உழைப்பவர்கள்தானே. பணத்துக்காக உழைத்து விட்டு, வீட்டில் பந்த பாசத்துக்காகவும் ஓடாய் உழைக்கும் அவர்களுக்கு இவள் விற்கும் மாவு மிகவுமே உதவியாக இருந்தது. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்த மாவு பாக்கேட் நாள் ஒன்றுக்கு ஐம்பது அறுபது கூட விற்றுப் போகும். இவளுக்கு உதவியாகக் காந்திமதியும் இருக்க, கமிஷன் போல அவருக்கும் பணம் கொடுத்து விடுவாள். பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலை மதிய தூக்கம் என இருந்த காந்திமதிக்கும் இந்த வேலையில் வந்த வருமானம் மிகவும் உதவியாக இருந்தது.
“பார்டா பாரு! அம்பானியா மாறிக்கினு வர என் மக ஆல் இன் ஆல் அழகு ராணிய பாருடா பாரு” எனப் பெருமைப் பீற்றிக் கொள்வார் கோபால்.
அவளது திட்டமிடல்களிலும், செயலிலும் ஆரம்பத்தில் அதிர்ந்தாலும், முடியாது எனச் சொன்னால் எங்கே மறுபடியும் முட்டிக் கொள்ளுமோ எனும் பீதியில் தலையாட்டி இருந்தான் சங்கர். அதோடு கர்ப்பிணிப் பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுமே எனும் உந்துதலிலும் வெளியே பணம் புரட்டிக் கொடுத்து, கிரைண்டர் வாங்குவதிலும் அலசி ஆராய்ந்து உதவினான் இவன். காந்தி கணக்குதான் என இவன் நினைக்க, பணத்தை இரண்டே மாதத்தில் திருப்பிக் கொடுத்து வாயடைக்க வைத்திருந்தாள் மல்லி. மனைவி தொட்டதெல்லாம் துலங்குவதில் இவனுக்குமே ஏகப்பட்ட சந்தோஷம்.
அவளது வருமானத்தை என்ன செய்கிறாள் என இவன் கேட்டுக் கொண்டதில்லை. கடுமையாக உழைப்பவள், பணத்தின் அருமை தெரிந்து பத்திரமாக கையாள்வாள் எனும் நம்பிக்கை வந்திருந்தது. இன்னுமே இவன் சிக்கன சிகாமணியாக இருந்தாலும், அவளுக்காக தன் கொள்கையில் இருந்து கொஞ்சமாக இறங்கி வந்தான். பொன் வைக்கும் இடத்தில் பூவை வைப்பது போல, தன் பூமகளுக்காக நேரம் ஒதுக்க ஆரம்பித்தான் ஜெய்சங்கர்.
அதிகம் செலவு வராத இடங்களான கோயில்களுக்கு அழைத்துப் போனான். குட்டி ஹோட்டல்களில் சாப்பிட அழைத்துப் போனான். ஏசியை அனுபவிப்பதற்காக மாலுக்குக் கூட போனார்கள். அங்கே இவள் ஆசையாய் ஐஸ்க்ரீம் பார்லரைப் பார்க்க, விலையைப் பார்த்தவனுக்கு நெஞ்சு வலியே வந்தது.
