அவன் முகத்தைப் பார்த்தவள்,
“நானே வாங்கிக்கறேன் மாமா! காந்திக்கா சொன்னாங்க, இந்த நேரத்துல ஆசைப்பட்டத சாப்பிடலன்னா, நம்ம புள்ள பொறந்ததும் காதுல சீல் வடியுமாம்! பாவம் இல்ல நம்ம கொழந்தை! இதனாலலாம் அது கஸ்டப்படலாமா?” எனச் சொல்லியபடியே தனது குட்டி பர்சை எடுத்தவளை, தடுத்து விட்டுத் தானே வாங்கிக் கொடுத்தான் இவன்.
அந்தக் குட்டி பர்சில் பணம் வைத்திருக்கிறாளா, அல்லது இவனை உசுப்பேற்றி செலவு செய்ய வைக்க காலியான பர்சை வைத்திருக்கிறாளா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
“உனக்கு மாமா?”
“எனக்கு இதெல்லாம் துன்னா ஜலிப்பு புடிக்கும்! நீ சாப்புடு”
“ஆ காட்டு மாமா!” எனச் சொல்லி அவனுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டுத்தான் இவள் சாப்பிட்டாள்.
கொள்ளைப் பணம் பரிதாபமாக பனிக்கூழாய் போன சம்பவத்துக்குப் பிறகு மாலுக்கு இவளை அழைத்துப் போகப் பைத்தியமா சங்கருக்கு!
இவன் இப்படி மாறி இருக்க, மனைவியோ அவனை கோபால் சொன்னது போலவே அரவணைத்துக் கொண்டாள். ஆரம்பத்தில் உடலளவு ஒட்டி இருந்தவர்கள், இப்பொழுது உள்ளத்தளவிலும் ஒட்டி உறவாட ஆரம்பித்திருந்தனர். அவன் கோபத்தில் எகிறினால், இவள் அடங்கிப் போனாள். இவள் ஆத்திரத்தில் கத்தினால், அவன் அமைதியாகிப் போனான். கோபதாபங்கள் மறைந்ததும் இருவரும் பேசி தங்கள் உறவைச் சீர்படுத்திக் கொண்டனர். கட்டிப் பிடித்துக் காமம் செய்வது மட்டும்தான் காதலா! காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல, கண்டேனே உன்னைத் தாயாக என அவள் காலை வேளைகளில் துவண்டு போகும் போது தாயாய் தாங்கிப் பிடித்தான் ஜெய்சங்கர்.
இவளும் தன்னுள்ளே அணைப் போட்டு வைத்திருந்த அன்பையெல்லாம் கணவன் மீது வாரி இறைத்தாள். உணவை அள்ளிக் கொடுத்தாள், அவன் உடையில் கவனம் செலுத்தினாள். உணவு தொழிலில் இருக்கும் போது சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என அவன் தாடியை மழிக்க வைத்தாள். வடைக்காரியாக மாறி இருந்தாலும் உள்ளுக்குள் இருந்த சுத்தக்காரி அவ்வப்பொழுது தலையை நீட்டத்தான் செய்வாள்.
“மாவு கொட்டிருச்சு, துடைங்க! கையை நல்லா கழுவுங்க! கரண்டிய சால்னாவுலயும், சட்னியிலும் மாத்தி மாத்திப் போடாதீங்க” என ஆட்டி வைப்பாள் சங்கரை.
“தோ நைனா! உன் மவ வாயை அடிச்சுப் பேக்கப் போறேன் பாரு! கம்முன்னு கிடக்க சொல்லு!” என கோபாலை இவன் அரட்டி வைப்பான்.
“அப்பா, நான் சொன்னத கேக்கலனா உங்க மவன எண்ணெய் சட்டில போட்டு வாட்டி எடுத்துடுவேன். சொல்லி வைங்க” என இவள் சத்தம் போடுவாள்.
“கோவாலு, உன்னை இப்படி வௌவாலு மாதிரி தொங்க விட்டு அடிக்குதுங்களே இதுங்க ரெண்டும்! நீ ரெம்பப் பாவம்யா” என தனக்குத் தானே சத்தமாய் புலம்பிக் கொள்வார் அந்த அப்பாவி மனிதர்.
“தோ பாரு நைனா! கோபாலுன்னு பேரு இருந்தாலும் கண்ணீர் வுட்டா தண்ணிதான் வருமே தவுர பாலு வராது”
“அடேய், நாலு அடி வேணும்னா அட்ச்சிருடா! இப்படி பழமொழி சொல்லி என்னை பேஜாராக்காதே!” என நொந்துப் போவார் கோபால்.
சற்று முன் கோயிலுக்கு அழைத்த போதும் இவர்களுக்கான தனிமையைக் கொடுப்பதற்காக ஓய்வெடுக்க வேண்டுமென வீட்டில் இருந்துக் கொண்டார் கோபால்.
“எங்க போறோம் மாமா?” என இவள் கேட்க,
“நீதானே சொன்ன ரயில்ல போனது இல்ல, ப்ளைட்டுல போனது இல்லன்னு! இன்னிக்குப் போலாம்”
“அய்!!!! நெஜமாவா மாமா?”
“நெசமாத்தான்டி” எனக் கைப்பிடித்து சற்று நடக்க வைத்து வடபழனி மெட்ரோ ஸ்டேசனுக்கு அழைத்துப் போனான் ஜெய்சங்கர்.
இருவருக்கும் டிக்கேட் எடுத்தவன், மெட்ரோ ட்ரேனில் இடம் பிடித்து மனைவியை அமர்த்தி, தானும் அமர்ந்து கொண்டான். ரயிலில் அதுவும் குளுகுளு ரயிலில் ஒரு பயணம், இனிமையாக ஆரம்பித்தது இருவருக்கும். அவன் கைப்பற்றியபடியே சந்தோசமாக வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள் இவள்.
மீனம்பாக்கம் விமான நிலையம் வரை ரயில் போக உள்ளிருந்தே,
“தோ பாரு மல்லி, அதான் ஏர்போட்டு! தூரமா தெரியுது பாரு, அதான் ஏரோப்ளேனு! பாரேன், பாரேன் மேல ஒன்னு ஏறுது!” என இவன் சுட்டிக் காட்ட, குழந்தைக் குதூகலத்துடன் பார்த்திருந்தாள் இவள்.
“எப்போ மாமா நாம ப்ளேனு ஏறுவோம்?”
“போவோம்டி! கண்டிப்பா ஒரு நாளு ஏரோப்ளேன்னுல போவோம்!”
நமக்கு சர்வ சாதாரணமாய் இருக்கும் ரயில் பயணங்கள், விமான பயணங்கள் எல்லாம் இன்னும் இவர்கள் மாதிரி சில ஆட்களுக்குப் பெருங்கனவுதான்!
அங்கிருந்து திரும்பி ரயில் ஏறி லிட்டில் மவுண்ட் ஸ்டேஷனுக்குப் பயணப்பட்டார்கள் இருவரும்.
“தோ பாரு பரங்கிமலை” எனக் காட்டினான் ஜெய்சங்கர்.
கடந்து போகும் காட்சிகள் அவ்வளவு அழகாய் இருக்க,
“பாப்பாக்குட்டி! நீ வெளிய வந்ததும் உன்னையும் இப்படி கூட்டிட்டு வரோம்டா கண்ணா!” என தன் வயிற்றை வருடியபடியே மெல்லிய குரலில் பிள்ளையிடம் பேசினாள் மல்லி.
அவள் வெளியே பார்த்திருக்க, முகம் மலர்ந்து விகசிக்க அழகாய் இருந்த தன் மனைவியையே வைத்த கண் வாங்காமல் இவன் பார்த்திருந்தான். ஒரு பெண்ணை மகிழ்விக்க வைரமும் வைடூரியமும் தேவையில்லை. அவளது சின்ன சின்ன ஆசைகளைப் பூர்த்தி செய்தாளே, அகமகிழ்ந்து போவாள் அவள் என நன்றாக உணர்ந்து கொண்டான் ஜெய்சங்கர்.
தாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி மெல்ல நடந்தார்கள் இருவரும்.
“ஹோட்டல்ல துன்னுட்டுப் போலாமா தேவா?”
“வேணா மாமா! வெளிய வர முன்ன சமைச்சிட்டுத் தானே வந்தேன். குழம்பு இருக்கும்! வீட்டுல போய் தோசை ஊத்திக்கலாம்! சும்மாவே ட்ரேயின் டிக்கட்டுக்கு காசு அள்ளி விட்டுருக்கீங்க! இதுக்கும் மேல செலவு வேணா” என சங்கரின் சங்கரியாகப் பேசிய மனைவியை ஆசைப் பொங்கப் பார்த்தான் இவன்.
வீட்டுக்கு வந்து தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு, அக்கடாவென சுவரில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள் இவள். அவள் முன்னே அமர்ந்தவன், மெல்ல அவள் கால்களை அமுத்திக் கொடுத்தான்.
“வெளியதான்டா பெத்த பேரு உனக்கு! இங்க பொண்டாட்டிக்கு காலு புடிச்சிட்டு இருக்க” எனக் கிண்டலடித்தபடியே வந்தார் காந்திமதி.
“சேச்சே காலுலாம் புடிக்கலக்கா! தூசியா இருக்குன்னு தட்டி வுட்டுட்டு இருந்தேன்” என தன் கெத்தை நிலை நாட்டியவனைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தார் கோபால்.
“நம்பிட்டோம்டா!” என்றவர்,
“இந்தா புள்ள! இன்னிக்கு மாவு வித்தக் காசு! கணக்கும் எழுதி வச்சிருக்கேன் பாரு” எனப் புத்தகத்தையும் நீட்டினார்.
பணத்தை வாங்கி அவரது கமிஷனை எண்ணி நீட்டினாள் இவள்.
“ஒன் புண்ணியத்துல, என் கையிலயும் நாலு துட்டு புலங்குது மல்லி” என்றவர்,
“புள்ள! சொந்தத்துல கண்ணாலம் ஒன்னு வருது! ஒன் சங்கிலிய குடேன்! போய்ட்டு வந்து திருப்பிக் குடுத்துடறேன்!” எனக் கேட்டார்.
சிறுக சிறுக பணம் சேர்த்து நடுத்தரமாய் ஒரு சங்கிலி வாங்கி கழுத்தில் போட்டிருந்தாள் மல்லி. சங்கிலியையும், காந்திமதியையும் மாற்றி மாற்றி யோசனையாகப் பார்த்த மனைவியைக் கிலியுடன் பார்த்தான் இவன்.
‘என்னமோ ப்ளான போட்டுட்டா போலிருக்கே!’ என மனதினுள் புலம்பினான் ஜெய்சங்கர்.
