KKP Epi 13(2)

வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும் போதே பனிக்குடம் உடைந்து தரையை நனைத்திருந்தது. இருவருக்கும் முகம் வெளிறிப் போனாலும், தைரியமாகப் பிரசவத்தைக் கையாள முயன்றார்கள்.

“மாமா! பயப்படாதே மாமா! டாக்டர் கிட்ட கேட்டு, என்ன செய்யனும், எப்படி செய்யனும்னு நாம ரெடியாகித்தானே இருக்கோம். பயப்படாதே! எனக்கு நீ, உனக்கு நான்! நம்ம ரெண்டு பேருக்கும் அப்பா! எல்லாலே நாமத்தான் பார்த்துக்கனும். ஹாஸ்பிட்டல் நம்பருக்கு கூப்டு சொல்லு, இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவோம்னு” என சொன்னவள், மெல்ல நடந்து குளிக்க துண்டெடுத்துக் கொண்டு குளியலறைக்குப் போனாள்.

ஜெய்சங்கர் இவர்கள் பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லி விட்டு, அப்படியே டாக்சிக்கும் அழைத்து ஏற்பாடு செய்தான். அதன் பிறகு அவசரமாக குளியலறைக்கு ஓடினான். மனைவியைக் குளிக்க வைத்தவன், உடலைத் துடைத்து மாற்று உடை அணிவித்து விட்டான். இவனும் ஓடிப் போய் காக்காய் குளியல் போட்டு விட்டு வந்தான். டாக்டர் என்ன கொண்டு வர வேண்டும் என லிஸ்ட் கொடுத்திருக்க, அதையெல்லாம் இருவரும் வாங்கி ஒரு பேக்கில் போட்டு வைத்திருந்தனர். டாக்சி வந்து ஹான் அடிக்க, கடவுள் படத்துக்கு முன் நின்று வணங்கி விட்டு, மனைவிக்கு திருநீர் இட்டான் ஜெய்சங்கர். பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு, மனைவியை அலேக்காக தூக்கிக் கொண்டான்.

“என்னால நடக்க முடியும் மாமா!” என இவள் வலியை மறைத்து மெல்லப் புன்னகைக்க,

“என் பொண்டாட்டியையும் புள்ளயையும் சொமக்க எனக்கு தெம்பிருக்குடி! கம்முன்னு வா” என மிரட்டியபடியே கீழே இறங்கினான்.

வெளியே வந்த காந்திமதியிடம்,

“அக்கா, நான் பெத்தெடுத்துட்டு வரேன்” என விடை பெற்றுக் கொண்டாள் பவளமல்லி.

காந்திமதிக்கு இவர்களை பார்த்து அவ்வளவு ஆச்சரியம். இவரெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் தாய் வீடு போய் அவரின் கவனிப்பில் சீராடிவிட்டு வந்தார். இங்கேயோ இவர்களே வளையடுக்கி சீமந்தம் செய்து கொண்டனர். இப்பொழுது தைரியமாக யார் உதவியையும் எதிர்பார்க்காமல் இவர்களே பிரசவத்துக்கும் கிளம்பி விட்டார்கள்.

“மல்லிப்புள்ள நல்ல படி பெத்து பொழைச்சு வரனும் ஆண்டவா!” என வேண்டிக் கொண்டார்.

இவரும் பிள்ளைகள் அத்தனைப் பேரை வைத்துக் கொண்டு எப்படி அவர்களுக்கு உதவியாகச் செல்ல முடியும்! வீட்டுக்கு வந்து விட்டால், உதவியாய் இருக்கலாம் என எண்ணிக் கொண்டே தன் வீட்டினுள் நுழைந்து கொண்டார்.

டாக்சியில் கணவனின் தோள் சாய்ந்துக் கொண்டாள் பவளமல்லி. இருவரும் பிள்ளைப் பிறப்பைப் பற்றி அத்தனை வீடியோ பார்த்திருந்தார்கள். முதன்முறை ஒரு வீடியோவைப் பார்த்து இவனுக்குக் காய்ச்சலே வந்து விட்டிருந்தது. இவளுக்கும் பயந்து வந்ததுதான். முத்தெடுக்க வேண்டுமென்றால் முத்துக் குளிக்கப் பயந்தால் ஆகுமா என மனதைத் திடப்படுத்திக் கொண்டாள் பவளமல்லி.

“மாமா”

“சொல்லுடி”

“பயமா இருக்கா?”

அவள் அப்படிக் கேட்டதும், அவன் கண்ணில் அடக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அவள் தோள் மேல் தெறித்தது.

“ரொம்ப பயமா இருக்குடி மல்லி”

“அய்யே! நம்ம சுத்திப் பாரு எத்தனை ஜனங்க நடமாடறாங்க! அவங்க அம்மாலாம் இப்படி பயந்திருந்தா இத்தனை பேரு பொறந்துருக்க முடியுமா? யோசிச்சுப் பாரேன், நைனா நைனான்னு கூப்டுக்கிட்டே உன்னை சுத்தி வர போற குட்டி வாண்டு! அம்மா எனக்குத்தான், நீ தள்ளிப் போன்னு உன் கூட சண்டைப் புடிக்கப் போற நம்ம செல்லக்குட்டி! ஜானி ஜானி யெஸ் பாப்பான்னு இங்கிலீசுல பாட போற நம்ம குழந்தை! அதையெல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டு பயப்படாம நான் வெளிய வர வரைக்கும் காத்திருக்கனும்! சரியா?”

தலை மெல்ல ஆடியது இவனுக்கு.

“வாயத் தொறந்து சொல்லு மாமா”

“பயப்படாம காத்திடுட்டு இருப்பேன்டி, என் மல்லி!” எனக் குரல் கரகரக்கச் சொன்னவன், அவள் உச்சியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

மருத்துவமனைக்கு வந்ததும் மல்லியை லேபர் வார்டுக்கு அழைத்துப் போனார்கள். காத்திருக்கும் நேரத்தில் தனது நைனாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னான் சங்கர்.

“நைனா! நீ வூட்டுக்கு போய்டு! நாளைக்கு வந்தா போதும்” எனச் சொல்லியிருக்க, அவரோ வியாபாரத்தை முடித்துக் கொண்டு கையில் காபி ப்ளாஸ்க்கோடு ஓடி வந்திருந்தார் மகனிடம்.

அன்றிரவு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி இருவரும் மல்லியைப் பற்றியும் அவள் வாழ்க்கையில் வந்ததில் இருந்து ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பற்றியும் பேசிக் கொண்டே புது வரவுக்காகக் காத்திருந்தனர்.

“நைனா! இன்னா நைனா இம்புட்டு நேரமாகுது! பயமா இருக்கு எனக்கு”

“மொட்டு விரியறதும் புள்ள வெளி வரதும் அந்த ஆண்டவன் கைலத்தான்டா இருக்கு மவனே! காத்துக்கினு இருப்போம்”

இவன் பயத்துடனே குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி,

“இந்த ஒரு புள்ள போதும் நைனா!” என அறிவிக்க,

“ஹ்க்கும்! கொழந்தைசாமின்னு பேரு வச்சா, அம்பது வயசானாலும் கொழந்தைசாமின்னுதான் கூப்புடுவாங்களே தவிர, கெழட்டுசாமின்னு கூப்ட மாட்டாங்கடா மவனே!” என எடுத்து விட்டார் கோபால்.

“இப்போ நான் சொன்னதுக்கும் இந்த பழமொழிக்கும் இன்னா கனெக்‌ஷனு?” என இவன் காண்டாக,

“என்னை எத்தினி வாட்டி இப்படி காண்டாக்கிருப்ப! இப்ப என்னோட டர்னு” எனப் புன்னகைத்தார் கோபால்.

இவனுக்கும் லேசாய் சிரிப்பு எட்டிப் பார்த்தது. அந்த நேரம் லேபர் வார்டின் கதவு திறந்தது. வெளியே வந்த தாதியிடம் விரைந்தான் ஜெய்சங்கர்.

“உங்களுக்குப் பையன் பொறந்துருக்கான் சார்!”

Scroll to Top