KKP Epi 14(1)

அத்தியாயம் 14

குழிப் பணியாரம் தென்னிந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டியாகும். பட்டு எனக் கன்னடத்திலும், பொங்கனலு எனச் சுந்தர தெலுங்கிலும், உண்ணியப்பம் என மலையாளத்திலும் அழைக்கப்படுகிறது இந்தப் பணியாரம். சென்னையில் பல கையேந்தி பவன்களில் இனிப்பு பணியாரம், மசாலா பணியாரம் என வித விதமான பணியாரங்கள் விற்கப்படுகின்றன.

“எடுங்கப்பா!”

“நானாம்மா?”

“ஆமா நைனா! சீக்கிரம் எடு! எவ்ளோ நேரம் ஒன் பேரன் இப்படிக்கா வெளியே நிப்பான்!”

பேரனுக்குப் பொறுமை பறந்திருந்தது. உவ்வேஏஏஏஏஏ எனக் குரலை உயர்த்திக் கத்த ஆரம்பித்திருந்தான் அவன்.

“நான் எப்படிம்மா?” எனப் பேரனின் கன்னத்தைத் தடவியபடியே தவித்தார் கோபால்.

“எங்களுக்கு எல்லாமே நீங்கத்தான்பா! நீங்க ஆசீர்வதிச்சு உள்ள அழைச்சாத்தான் எங்களுக்கு எல்லா நல்லதும் நடக்கும்” எனச் சொல்லியபடியே காட்டுக் கத்தல் கத்தும் மகனை நெஞ்சில் அணைத்து லேசாய் ஆட்டினாள் பவளமல்லி.

மகளின் கூற்றில் கண்ணெல்லாம் கலங்கிப் போக, உள்ளே குடு குடுவென ஓடிப் போய் கரைத்து வைத்திருந்த ஆரத்தியை எடுத்து வந்து வாசலில் நின்றிருக்கும் தனது மகனின் குடும்பத்திற்குச் சுற்றினார் கோபால். அதன் பிறகே உள்ளே நுழைந்தனர் மூவரும்.   

வரவேற்பறையிலேயே பாயை விரித்து, அதில் துணியை விரித்து மகனைக் கிடத்தினாள் பவளமல்லி. மல்லியின் நிறத்தில், கை காலெல்லாம் தன்னைப் போல நீளமாக, அழகாய் இருந்த தன் மகனைப் பெருமைப் பொங்கப் பார்த்தான் ஜெய்சங்கர். செப்பு வாயைத் திறந்து குட்டி அழகாய் கொட்டாவி விட, அது கூட காவியமாக இருந்தது தகப்பனுக்கு.

“பாரு நைனா பாரு! எவ்ளோ அழகா கொட்டாவி வுடறான் பாரேன்”

“அடேய்! ஒன் ஒருத்தன் கண்ணே போதும்டா! அவன் எத செஞ்சாலும் பாரு நைனா பாரு நைனான்னு பேஜார் பண்ணுற!” எனச் சொல்லிய கோபால், பேரன் அருகில் அமர்ந்து கன்னம் தொட்டு வழித்து நெட்டி முறித்தார்.

இருவரின் அட்டகாசத்தையும் மெல்லிய புன்னகையுடன் பார்த்திருந்தாள் மல்லி. சுகப்பிரசவத்தில் குழந்தைப் பிறந்திருக்க, ஒரு நாள் மருத்துவமனையில் இருந்த தாயும் சேயும் இன்றுதான் வீடு வந்திருந்தார்கள். இவர்களின் வருகைக்காக கோபால் கையேந்தி பவனுக்கு ஒரு நாள் விடுமுறை விட்டிருந்தனர்.

மெல்ல எழுந்து தனது அறைக்கு நடந்தாள் மல்லி. அவள் பின்னாலேயே இவனும் போனான்.

“குளிக்கனும் மாமா! உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு!”

“இருடி! சுட சுட மேலுக்கு ஊத்தனும்னு காந்திக்கா சொல்லிச்சு! புள்ளைங்கள ஸ்கூலுல இருந்து கூட்டி வர போயிருக்கு! வந்ததும் அக்காவே குளிக்க வைக்கும்”

“இல்ல மாமா, நீ குளிக்க வை! வேற யாரும் என்னை அப்படிப் பார்க்கறதுல எனக்கு இஷ்டமில்ல! கூச்சமா இருக்கும் மாமா”

மனைவியின் வார்த்தையில் புன்னகை வந்தது இவனுக்கு.

“சரிடி! சுடுதண்ணி வச்சிட்டு வரேன் இரு! அப்படியே பையனையும் சேர்த்து குளிப்பாட்டிரலாம்.”

முதலில் மகனைக் குளிக்க வைக்க ஆரம்பித்தனர் இளம் ஜோடி இருவரும். அவனோ தண்ணீர் மேல் விழுந்ததும் தொண்டையைத் திறந்து கத்தினான்.

“என்னடி இப்படி அழறான்! குளிக்கலனா போது வுடு!” என இவன் பதட்டப்பட, வெளியே கதவோரம் நின்றிருந்த கோபால்,

“அப்டியே ஒன்ன மாதிரியே இருக்கான்டா மவனே! டேய் சங்கரு குளிடான்னா, ஆடு மாடெல்லாம் குளிக்குதா நைனான்னு வம்பு பண்ணுவ! அப்படியே கபால்னு புட்சிக்கின்னு வந்து எருமை மாட்ட குளுப்பாட்டற மாதிரி குளுப்பாட்டி வுடுவேன்” என மலரும் நினைவுகளில் ஆழ்ந்தார் அவர்.

மனைவியின் முன்னாலேயே தன் மானம் கப்பல் ஏறியதில் முகத்தை அஷ்டக் கோணலாக்கினான் ஜெய்சங்கர். மல்லிக்கோ சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“அப்பாலே போ நைனா! வயசுப் பையன் குளிக்கறத எட்டிப் பார்த்திட்டு நிக்கற” என எரிச்சல்பட்டான் இவன்.

“இவன் வயசுப் பையனா? நல்லா சொல்றடா டீடேயிலு!” என்றவாறே முன்னறைக்குப் போய் விட்டார் அவர்.

சின்னவனைக் கதறக் கதற குளிக்க வைத்து, துவட்டி கோபாலிடம் கொடுத்தாள் மல்லி.

“அப்பா, பவுடர் போட்டு சட்டைப் போட்டு விடுங்க! நான் குளிச்சிட்டு வந்துடறேன்!”

அழும் குழந்தையை வாங்கிக் கொண்டவர், தனக்குத் தெரிந்த வகையில் சமாதானப்படுத்தினார்.

“முடிச்சவிக்கிப் பெத்த மவனே அழுகாதடா!

மொள்ளமாரி பெத்த மவனே அழுகாதடா!

அல்லக்கை பெத்த மவனே அழுகாதடா

ஆஃபாயில் பெத்த மவனே அழுகாதடா

ஜோ ஜோ ஜோ ஜோ!” என தாலாட்டியபடியே அவர் பவுடர் போட, குளியலறையில் இருந்து,

“தோடா! நைனா, சைக்கிள் கேப்ல என் தலைய ஏன் இப்டிக்கா உருட்டற! நீ பாடறியா இல்ல என்னை திட்டறியா?” எனக் குரல் கொடுத்தான் ஜெய்சங்கர்.  

மல்லியும் குளித்து விட்டு வர, வீட்டிற்குள் நுழைந்தார் காந்திமதி.

“நான் வார வரைக்கும் பொறுக்கக் கூடாதா புள்ள?” எனக் கடிந்து கொண்டவர், அவளை அமர்த்தி வைத்து முடிக்குச் சாம்பிராணி புகை போட்டார்.

கோபால் பேரனுக்குப் போட்டிருந்த சட்டையைக் கழட்டி விட்டு, அப்படியே குட்டி பரோட்டாவையும் சூப்பர்மேன் போலச் சாம்பிராணி புகை மேலே பறக்க வைத்தார். புகை எரிச்சலில் வீச் வீச்சென முகம் சிவக்கக் கத்தினான் அவன்.   

“ஸ்பீக்கர முழுங்கிட்ட மாதிரி சவுண்ட பாரேன்!” எனச் சிரித்தவர்,

“ஏ புள்ள! பத்திய சாப்பாடு ஆக்கிட்டு வந்துருக்கேன் பாரு! நீ மொதல்ல சாப்புடு! அப்புறம் இவனுக்குப் பால் குடுத்துப் படுக்க வைக்கலாம்! நீயும் அவன் தூங்கறப்பவே கொஞ்சம் தலைய சாய்ச்சுக்க! இதுங்கலாம் நைட்டுலதான் முழிச்சிக்கிட்டு நைட் டூட்டி பாக்கும்ங்க!’ என்றார்.

உணவை தட்டிலிட்டு மனைவியிடம் நீட்டினான் ஜெய்சங்கர். காந்திமதியோ தான் கோர்த்துக் கொண்டு வந்திருந்த வசம்பை குட்டியின் கையில் கட்டி விட்டார். அதோடு வேஷ்டி துணியில் மடித்து வைத்திருந்த அறுபதாம் பச்சையையும் கட்டி விட்டார்.

“இது இன்னாத்துக்கு காந்தியக்கா?”

“இந்த இலையைக் கட்டுனா காத்து கருப்பு அண்டாதுன்னு எங்காத்தா சொல்லிருக்குடா சங்கரு!”

மகனின் பிஞ்சிக் கையைத் தூக்கி முகர்ந்து பார்க்க, அவ்வளவு வாசனையாக இருந்தது அந்த இலை.

“தோ பாரு மல்லி! மத்த வேலைலாம் நீங்களே செஞ்சிக்கறீங்க! ஆனா உன் சாப்பாட்ட மட்டும் நான் செஞ்சிக் குடுக்கறேன்டி. இந்த மாதிரி டைமுல ஒடம்ப தேத்துற மாதிரி, பாலு சுரக்கற மாதிரி சத்தானதா சாப்புடனும் புள்ள!”

“சரிக்கா!” என ஒத்துக் கொண்டாள் இவள்.

“இன்னா இன்னா சாமான் வேணும் இவ சாப்பாட்டுக்குன்னு சொல்லிருக்கா, நான் வாங்கி தந்துடறேன்” என்றனிடம் தேவையானவற்றை அவர் சொல்லிக் கொண்டிருக்க, சின்னவனோ தாத்தனின் கையில் குளித்த களைப்பில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

தனது உணவை முடித்துக் கொண்ட மல்லி, கோபாலிடம் இருந்து சின்னவனை வாங்கிக் கொண்டு தனதறைக்குப் போனாள். எப்படிப் பால் கொடுப்பது, எப்படி குழந்தையைப் பிடிப்பது, பால் குடித்ததும் எப்படி ஏப்பம் வர வைப்பது என எல்லாம் மருத்துவமனையில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். தலையணையை எடுத்து முதுகுக்கு அணைக் கொடுத்தவள் பாயில் அமர்ந்து கொண்டாள். இவர்களுக்காகப் புதிதாக ஸ்டேன்ட் ஃபேன் ஒன்று அங்கே முளைத்திருந்தது. புன்னகையுடன் மகனுக்குப் பாலூட்ட ஆரம்பித்தாள் மல்லி. தூக்க கலக்கத்தில் இருந்தவன், ஆரம்பத்தில் குடிக்க மாட்டேன் என முரண்டுப் பிடித்தான். கொஞ்சிக் கெஞ்சிக் கன்னத்தைச் சுரண்டி என இவள் என்ன செய்தும் வேலைக்காகவில்லை.

உள்ளே நுழைந்த சங்கர் சிரிப்புடன் அம்மா மகனின் அலப்பறைகளைப் பார்த்திருந்தான். பின் கீழே மண்டி இட்டு அமர்ந்தவன்,

“நைனா செல்லக்குட்டில்ல! ங்கா குடிங்க!” எனும் குரலில் கண்களை லேசாக மலர்த்திய குட்டி பரோட்டா, பின் பால் அருந்த ஆரம்பித்தான்.

“யோ பரோட்டா! இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்! பத்து மாசம் சுமந்து, கஷ்டப்பட்டு பெத்தது நானு! என் கிட்ட அடம், உன் கிட்ட மட்டும் அடங்கிப் போறான்!” என இவள் கடுப்பாய் சொல்ல,

“அடம் புடிக்கவும், அன்பு காட்டவும், அரவணைச்சுப் போகவும் அம்மான்னு ஒருத்தி இருக்கான்ற சந்தோசத்துல அப்படி செய்யறான்டி! நமக்கெல்லாம் எங்கடி அந்த குடுப்பிணை இருந்துச்சு!” என லேசாய் கண் கலங்கிய கணவனை இன்னொரு கரத்தால் இழுத்து அணைத்துக் கொண்டாள் மல்லி.

“உனக்கு நான் அம்மா! எனக்கு நீ அம்மா! பழசெல்லாம் மறந்துட்டு இனி புதுசா வாழ்வோம் மாமா”

மனைவியும் மகனும் தூங்கும் வரை அவர்களுடனே இருந்தான் சங்கர். அதன் பிறகு வெளியே வந்தவன், “நைனா! ஓன் வீக்கு நான் இவ கூடத்தான் இருக்கனும்! அதுக்குன்னு கடையையும் அடைச்சிப் போட மிடியாது. அடுப்பெரிஞ்சாதான் நம்ம பொழப்பு ஓடும்! எப்போதும் போல மாவு பெசைஞ்சு, பிரியாணி சமைக்கறதெல்லாம் செஞ்சுடறேன்! பகல் வேபாரத்த நீ பாத்துக்கோ! ஒதவிக்கு கீழ் வீட்டுப் பையன் கிட்ட சொல்லி வைக்கறேன்!

Scroll to Top