காலேஜூ லீவூதானாம்! வேலை இருந்தா குடுண்ணான்னு கேட்டான். நான் ஒரு நாலு மணி போல வரேன்! ரெண்டவுரு வடை கடைய நான் போடறேன்! அப்பால நைட்டுக்கு காந்திக்கா புருஷன் வந்துடுவாரு! இவிங்களுக்கு எல்லாம் சம்பளம் குடுக்கறதுல கொஞ்சம் பணம் வெளியப் போனாலும், கடை மூடிக் கிடக்கறத வுட இது எவ்வளவோ மேலு! நீ இன்னா நைனா சொல்லுற?”
“கடைய பத்தி நீ கவலைய வுடு, நான் பாத்துக்கறேன்! நீ பொண்டாட்டி புள்ளய பாருடா மவனே!”
அன்றிரவு மகனின் பசி சிணுங்கலில் கூட கண்ணைத் திறக்க முடியவில்லை பவளமல்லியால். அப்படி ஒரு அலுப்பு. உடலெல்லாம் ஓய்ந்து போனது போல வலி. தன் வலியை வெளியே காட்டினால் வீட்டில் இருக்கும் இரு ஆண்மகன்களும் ஆடிப் போய் விடுவார்கள் எனதான் சிரித்த முகமாகவே வளைய வந்தாள் இவள். பிள்ளைப் பெற்று வருவது என்பது மறு ஜென்மம் எடுத்து வருவதாயிற்றே! மெல்லிய மேனி பாவையின் மொத்த சத்தையும் உறிஞ்சி எடுத்திருந்தான் சின்னவன். இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து கொஞ்சம் உடலைத் தேற்றிக் கொண்டு போகும்படி டாக்டர் சொல்லியிருக்க, பிடிவாதமாய் கிளம்பி வந்திருந்தாள் வீட்டுக்கு. இரண்டு நாட்கள் தனியார் மருத்துவமனையில் தாய் சேய் இருவரும் தங்கி வருவதென்றால் எவ்வளவு செலவாகுமோ எனத்தான் இவள் எண்ணமெல்லாம் இருந்தது.
மெல்லக் கண்ணைத் திறந்து பார்க்க, அங்கே மகனைக் கையில் ஏந்தியபடி,
“அம்மா பாவமா தூங்கறாடா ராஜாக்குட்டி! அழுந்து எழுப்பி வுட்றாதடா மவனே!” எனக் கெஞ்சிக் கொண்டிருந்தான் சங்கர்.
அவன் மகனோ பசியில் தகப்பனின் நெஞ்சில் வாயை வைத்திருந்தான்.
“அடேய், அடேய்! அங்கிட்டு ஒன்னும் வராதுடா டேய்!” எனக் கூச்சத்தில் இவன் நெளிய, மல்லிக்கோ சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
அவளது சிரிப்பு சத்தத்தில், மனைவியை ஏறிட்டுப் பார்த்தான் சங்கர்.
“ஏன்டி, குஜாலா சிரிக்கறியா நீ! பாவம் நம்ம பொண்டாட்டி, தூங்கட்டும்னு இவன்ட்ட நான் மாட்டிட்டு முழிக்கறேன்!” என புன்னகைத்தவாறே மகனை மனைவியின் மடியில் கிடத்தினான்.
அவனுக்குப் பாலூட்டியவாறே, கணவனைப் பார்த்துப் புன்னகைத்தவள் மெல்லிய குரலில் ஹம் செய்தாள்.
“என்ன பாட்டுடி தேவா?”
“உன்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே” என மெல்லிய குரலில் மகனின் கன்னத்தைத் தடவியவாறே கண்ணில் நீர் கோர்க்க கணவனைப் பார்த்துப் பாடினாள் மல்லி. அந்த இக்கட்டில் இவன் தஞ்சமளிக்காதிருந்தால் அவளின் கதியென்ன!
அழாதே என்பது போல தலையாட்டியவன்,
“போடி பைத்தியக்காரி! உன் கிட்டத்தான்டி இந்த பரோட்டாவோட நெஞ்சம் தஞ்மாகியிருக்கு! உனக்கு நான் ஆதரவு குடுத்தேன்னு சொல்லறத விட எனக்கு நீ வாழ்க்கை குடுத்தேன்னு வேணும்னா சொல்லலாம்” என்றவன், அந்த பாடலின் மீதி வரியைப் பாடிக் காட்டினான்.
“பாறை ஒன்றின் மேலே
ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே!”
அவனின் பாட்டுச் சத்தத்தில் பால் குடித்து முடித்திருந்த குட்டி, சுகமாய் தூங்கிப் போனான். அவனுக்கு பேம்பர்ஸ் மாற்றி தனதருகே படுக்க வைத்தவள், கணவனின் புஜத்தில் தலை சாய்த்து நிம்மதியாய் தூங்கிப் போனாள். கையருகே இருந்த தன் இரு சொர்க்கத்தையும் அணைத்தபடி இவனும் உறக்கத்தைத் தழுவினான்.
அடுத்து வந்த ஒரு வாரமும் நிற்க நேரமில்லாமல் வேலைப் பார்த்தான் ஜெய்சங்கர். பிள்ளையைச் சுமந்த போது கூட, மனைவியின் நடையில் ஒரு துள்ளலைக் கண்டிருந்தவனுக்கு, தற்போது அவள் மெல்ல எட்டெடுத்து நடக்கும் நடையே சொன்னது அவளின் களைப்பின் அளவுகோலை. அதோடு தண்ணீரில் அதிகம் நிற்கக் கூடாது என காந்திமதியும் சொல்லி இருக்க, மனைவியைக் குளிக்கும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் ஓய்வாக இருக்க வைத்தான் இவன். மகனை இவள் பார்த்துக் கொள்ள, மகனையும் இவளையும் சேர்த்து இவன் பார்த்துக் கொண்டான். கடைக்கான சமையல், மனைவி மகனைக் குளிக்க வைப்பது, எல்லோருடைய துணியையும் துவைத்துப் போடுவது, நான்கில் இருந்து ஆறு வரை காந்திமதியை மனைவிக்குத் துணை வைத்து விட்டு வடை போடுவது என நேரம் பறந்தது. அந்த ஒரு வாரத்திலேயே ஓய்ந்து போயிருந்தவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது மல்லிக்கு.
சரியான நேரத்துக்குச் சத்தான உணவு, மகன் அனுமதித்த அளவுக்கு உறக்கம், கணவன் கட்டாயப்படுத்திக் கொடுத்த ஓய்வு என ஓரளவுக்குத் தேறிக் கொண்டாள் பவளமல்லி. விட்டிருந்த மாவு வியாபாரத்தை மீண்டும் ஆரம்பித்தாள். வேண்டாமெனத் தடுத்த கணவனிடம்,
“இப்போ நான் நல்லா தேறிட்டேன் மாமா. ரொம்ப உடம்ப அலட்டிக்கற வேலைலாம் செய்யல! எனக்கும் தெரியும் மாமா, நான் ஆரோக்கியமா இருந்தாத்தான் என்னை சுத்தி இருக்கற இந்த மூனு ஆம்பளைங்களையும் கருத்தாப் பார்த்துக்க முடியும்னு! மிசின்ல போட்டா அதுப்பாட்டுக்கு அரைச்சிடுது! இதுல என்ன கஸ்டம் எனக்கு!” எனச் சமாதானப்படுத்தி இருந்தாள்.
அரசாங்கத்திலோ தனியாரிலோ வேலைப் பார்த்தால், இரண்டில் இருந்து ஆறு மாதங்கள் பிரசவ விடுமுறை கொடுப்பார்களாம்! இவர்களைப் போன்ற மக்களெல்லாம் அதை எதிர்பார்க்க முடியுமா! கையில காசு வாயில தோசை என இவர்களுக்குத்தான் சொல்லி வைத்திருக்கிறார்களோ என்னவோ! உழைத்துச் சம்பாதித்தால்தானே வீட்டில் அடுப்பெரியும்.
கிரைண்டர் ஓசையோ, சமைக்கும் சத்தமோ, வித விதமாக வரும் சமையல் வாசனையோ எதையும் கண்டு கொள்ளாமல் சின்னவர் அவர் பாட்டுக்குச் சாப்பிடுவது, தூங்குவது எனத் தனது வேலையை நன்றாகப் பார்த்தார். வயிற்றில் இருந்தே கேட்ட ஒலி பழகி விட்டதோ என்னவோ!
ஒரு மாதத்தில் தொட்டிலில் போட்டு, அக்கம் பக்கம் உள்ளவர்களைக் கூப்பிட்டுப் பெயர் வைத்தனர் குட்டி பரோட்டாவுக்கு.
“இன்னா பேருடா வைக்கப் போறீங்க?” என கோபால் கேட்டதுக்கு,
“சக்கரைப்பாண்டின்னு பேரு வச்சாலும், நாலு நாள் குளிக்காம பொறங்கைய நக்குனா உப்பு டேஸ்ட்டு வருமே தவுர சக்கரை டேஸ்ட்டு வராது நைனா!” என எடுத்து விட்டான் மகன்காரன்.
“பேரனுக்கு இன்னா பேருன்னு தானே கேட்டேன்! இதுக்கு போயி ஒம் புருஷன் என்னிய காண்டாக்குறான்மா கண்ணு!” என கோபித்து கொண்டு வெளியே போய் விட்டார் அவர்.
மனைவி முறைத்தாலும் தான் சொன்ன ஜோக்கை நினைத்து கெக்கேபெக்கேவென இவனே சிரித்துக் கொண்டான்.
சின்னவனைத் தொட்டிலில் போட்ட தினம், மகன் காதருகே குனிந்து பெற்றவர்கள் இருவரும்,
“ஜெய் கோபால கிருஷ்ணன்” என மூன்று முறை சொல்ல, கோபாலுக்குக் கண்ணீரே வந்து விட்டது.
தேம்பித் தேம்பி அழுதவரை இரண்டு பேரும் இரண்டு பக்கமாகக் கட்டிக் கொண்டனர்.
“நீதான் நைனா எனக்கு தெய்வம்! ஒன் பேர என் மவனுக்கு வைக்காம வேற யார் பேர வைப்பேன்!”
“திக்குத் தெரியாம நின்ன எனக்கு, வழி காட்டனது நீங்கத்தான்பா! உங்க பேர பையனுக்கு வைக்கறதுல எங்களுக்குத்தான் பெருமை”
கண் கலங்கி நின்ற மூவரையும் பார்த்து,
“இன்னா சங்கரு! இன்னிக்காச்சும் வெறும் குஸ்காவ காட்டி ஏமாத்தாம பிரியாணி போடுவன்னு வந்தா, சோக சீன் ஓட்டிக்கினு இருக்க!” என வந்திருந்தவர்கள் உசுப்ப, மூவரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விருந்து பரிமாறினார்கள்.
இந்த விருந்துக்காவது சிக்கன் பிரியாணி போட்டிருப்பான் என நீங்கள் நினைத்தால், அது பெரிய தவறு மக்களே! கோழியின் குழந்தையான முட்டையை வைத்து முட்டை பிரியாணியோடு விருந்து சிறப்பாக முடிந்தது.
“கண்ணாலத்துக்கு குஸ்கா, புள்ள பொறந்ததுக்கு முட்டை பிரியாணி! இந்த சங்கரு பேரன் பொறந்தாத்தான் நம்ம கண்ணுல லெக் பீஸ காட்டுவான் போலிருக்கு!” என முனகியபடியே போனார்கள் வந்திருந்தவர்கள்.
‘யாரு கிட்ட! சங்கர்டா, சிக்கன சிகாமணி சங்கர்டா!!!!’
கிருஷ்ணனுக்கு இரண்டு மாதங்கள் ஆனதும், அவனையும் தூக்கிக் கொண்டு வியாபாரத்துக்கு வருவேன் என ஒற்றைக் காலில் நின்றாள் மல்லி. மறுபடியும் ஆரம்பித்தது ஒரு போர்! இவர்கள் நடுவில் சிக்கி சின்னாபின்னமானார் ஒருவர்.
யாரவர்?
அப்பாவி கோபால்தான் அவர்!!!!!
