அத்தியாயம் 2
ஜிகர்தண்டா என்றால் இதயத்திற்கு குளிர்ச்சி தரும் பானம் எனப் பொருள்படுமாம். மதுரையில் மட்டுமில்லாமல் சென்னையின் ரோட்டோரக் கடைகளிலும் இந்த பானம் மிகவும் பிரபலம். மலேசியா, சிங்கப்பூரில் கூட இந்த பானம் சில உணவுக் கடைகளில் கிடைக்கிறது
நடுத்தர மக்கள் பலர் வசிக்கும் அந்த குடியிருப்புப் பகுதியை நெருங்கும் போதே மனம் சோர்ந்து போனது பவளமல்லிக்கு. வேலை முடிந்து வீட்டுக்குப் போவது என்றால் ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு உற்சாகமாக இருக்கும். ஆனால் இவளுக்கோ வீட்டுக்குப் போவது என்னவோ சிறைச்சாலைக்குப் போவது போலவே தோன்றும். பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தவளை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் அந்த வீட்டின் இளைய வாரிசு.
“அக்கா, பரோட்டா?” என கேட்டவளைப் பார்த்து முறுவலித்தாள் இவள்.
“வாங்கிட்டு வந்திருக்கேன்! தட்டுல போட்டுத் தரேன் வா” எனச் சொல்லியபடியே சின்னவளுடன் கிச்சனுக்குள் நுழைந்தாள் பவளமல்லி.
பவளமல்லியைப் பார்த்ததும் மூத்தது இரண்டும் மூக்கைப் பொத்திக் கொண்டு அறையின் உள்ளே ஓடியதைப் பார்த்து இவளுக்கு கோபம் பொங்கியது. பொங்கும் பாலை தண்ணீர் தெளித்து அடக்குவது போலப் பொங்கிய கோபத்தைத் தண்ணீர் அருந்தி அடக்கினாள் இவள்.
“அக்கா போய் குளிச்சிட்டு வந்து பரோட்டா போட்டுக் குடுக்கறேன் பிரதி” எனச் சொல்லி, ஏழு வயது பிரதியைச் சாப்பாட்டு மேசை மேல் அமர்த்திவிட்டு ஓடிப் போய் அவசர அவசரமாகக் குளித்து விட்டு வந்தாள்.
ஏற்கனவே அவன் பிய்த்து கொடுத்திருந்த பரோட்டாவைத் தட்டில் வைத்து சால்னா ஊற்றி தங்கைக்குக் கொடுத்தாள். இன்னும் இரண்டு தட்டுகளிலும் அதே போல எடுத்து வைக்க, மற்ற இருவரும் நைசாக வந்து மேசையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்கள். பால் கொதிக்க வைத்து டீ ஆற்றி மூவருக்கும் கொடுத்தவள் தனக்கும் சின்ன டம்ளரில் கொஞ்சம் ஊற்றிக் குடித்தாள். மீதத்தை ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்தவள், இரவு சமையலுக்கு வேண்டிய ஆயத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
“ஏ மல்லி!”
நிமிர்ந்து தனது அம்மாவைப் பார்த்தாள் அவள். அல்லது முதலாளி அம்மாவெனச் சொல்ல வேண்டுமோ! அப்பொழுதுதான் பகல் தூக்கம் தூங்கி எழுந்து முகத்தைக் கழுவித் துடைத்தபடி வந்தார் கனகா. துடைத்து வைத்த குத்து விளக்கைப் போல அழகாய், அம்சமாய் இருந்த கனகாவை ஏறிட்டுப் பார்த்தாள் மல்லி. தோற்றத்தில் குத்து விளக்காய் இருந்தாலும், அவர் ஒரு குத்தும் விளக்கு என அறிந்து வைத்திருந்தவள் அவரிடம் அடங்கியேப் போய் விடுவாள்.
“நைட்டுக்கு இட்லி அவிச்சு ரெண்டு வகை சட்னி செஞ்சிடு. அப்படியே இவங்க அப்பாவுக்கு காரசாரமா கறி குழம்பு வச்சிடு. இப்போ எனக்கு டீ குடு, தொண்டைக் காஞ்சுப் போச்சு” எனச் சொல்லியபடியே நாற்காலியில் அமர்ந்த கனகா பிள்ளைகள் பரோட்டா சாப்பிடுவதைப் பார்த்து,
“கண்ட கண்ட கடைல வாங்கனதுலாம் என் பிள்ளைங்களுக்குத் தராதேன்னு எத்தனை தடவை சொல்லறது?” எனக் கத்திக் கொண்டே மூத்தவள் தட்டில் இருந்து கொஞ்சமாய் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.
வாங்கி வந்தாலும் கத்துவார், வாங்கி தராவிட்டாலும் கத்துவார்.
“என் புள்ளைங்க கேட்டதக் கூட வாங்கிக் குடுக்காம, காச சேர்த்து வச்சி எவன் கூட ஓடிப் போக ப்ளானு?” எனக் கேட்டு இன்னும் சில பல கெட்ட வார்த்தைகளை எடுத்துக் கட்டிக் கோர்த்து இவள் கழுத்தில் மாலையாய் தொங்க விட்டு விடுவார் கனகா.
என் பிள்ளைகள், இவங்க அப்பா எனும் வார்த்தைகள் எப்பொழுதும் போல நெஞ்சைக் கீறிக் கிழிக்க அமைதியாய் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் பவளமல்லி. அவள் சமைக்கட்டும், அடுப்படியில் ஓர் ஓரமாய் நின்று பெண்ணவளைக் கொஞ்சம் ஆராயலாம் வாருங்கள்.
பவளமல்லி, பெயருக்கு ஏற்றது போல வெளேரென இல்லாவிட்டாலும் மாநிறத்தில் அழகாகவே இருந்தாள். சராசரி பெண்களை விட உயரம் கொஞ்சம் குறைவு. கிள்ளி எடுக்க சதை இல்லாத அளவு ஒல்லி உடல்வாகு. கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் நடுவே ஒரு முட்டையை வைக்கும் அளவுக்கு குழி இருக்கும் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி இவள். காற்று கொஞ்சம் வேகமாய் அடித்தால் விமான டிக்கேட் எடுக்காமலே பறந்து பயணம் செய்யக் கூடிய அத்தனை தகுதியும் இவளுக்கு உண்டு.
மூன்று வயதில் ஒரு கோர விபத்தில் தாய் தந்தையைப் பறி கொடுத்திருந்தாள் பவளமல்லி. மூவரும் பயணப்பட்ட மோட்டார் வாகனம் லாரி ஒன்றால் அடித்து வீசப்பட்டதில் சம்பவ இடத்திலே இவள் பெற்றோர் உயிரிழந்திருந்தனர். கடைசி நேரத்தில் கூட மகளைக் காக்க வேண்டி அவளை அணைத்துப் பிடித்து தன்னில் சுருட்டி வைத்துப் பாதுகாத்த அன்னையால் கால் எலும்பு முறிவோடு தப்பினாள் குட்டி மல்லி.
இவர்களுக்குச் சொந்தமான சொத்துக்கு அடித்துக் கொண்ட சொந்தபந்தங்கள், அடிப்பட்டுக் கிடந்த குழந்தையின் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டனர். சற்று குணமானதும் மருத்துவமனை நிர்வாகத்தால் ஒரு அனாதை ஆசிரமத்துக்கு அனுப்பப்பட்டாள் பவளமல்லி. அங்கேயும் ஒரு வருடம்தான் இருந்திருப்பாள். நான்கு வயது பூர்த்தியாகும் போது ஒரு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டாள் இவள்.
இவளைத் தத்தெடுத்த கனகா, கதிரேசன் ஜோடிக்குத் திருமணமாகி ஐந்து வருடங்களாகப் பிள்ளைப் பேறு இல்லை. பிரச்சனை கதிரேசனுக்கு மட்டும்தான் எனத் தெரிந்ததும் பூகம்பம், எரிமலை எல்லாம் வெடித்தது அவர்கள் வாழ்வில். பார்க்காத மருத்துவமில்லை, ஏறாத கோயில் குளமில்லை. எதுவும் கை கொடுக்கவில்லை அவர்களுக்கு.
தன்னால் மனைவிக்கு ஒரு குழந்தையைக் கொடுக்க முடியவில்லையே எனும் தாழ்வு மனப்பான்மையில் கொஞ்சமாகக் குடிக்க வேறு ஆரம்பித்திருந்தான் கதிரேசன். அப்பாவாக முடியாதவனுக்கு ஆண்மை இருந்து என்ன பயன் எனத் தோன்றி விட, தாம்பத்திய உறவு எனும் சொல்லே அடியோடு கசந்ததுப் போனது அவனுக்கு. சம்சாரத்தை நெருங்கப் பயந்தவன், சரக்கை இறுக பற்றிக் கொண்டான்.
கனகாவுக்கோ கணவனின் இயலாமையால் தன்னை எல்லோரும் மலடி என்கிறார்களே எனும் கோபம் உள்ளிருந்து வாட்டி வதைத்தது. நம் சமூகத்தில் பெண்ணுக்குத்தான் பிரச்சனை எனப் பட்டென உடைத்துச் சொல்லி விடுமளவுக்கு, ஆணின் பிரச்சனையை கடைப் பரப்புவது இல்லையே! தாய்மையைக் கொடுக்காத கணவன், தன் தாபத்தையும் கண்டு கொள்ளாததில் உள்ளுக்குள் மரித்துப் போனாள் கனகா.
இந்தப் பிரச்சனையால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. எங்கே இவள் தனக்குத் துரோகம் செய்து விடுவாளோவென இவன் வார்த்தையால் அவளை வதைக்க, என்னைக் கேள்வி கேட்டு என் நடமாட்டத்தைக் குறுக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது என இவள் குதிக்க வாழ்க்கையே நரகமாகிப் போனது இருவருக்கும்.
“பிள்ளை இல்லன்னு இவன வெட்டி விட்டுட்டு இன்னொருத்தன கட்டனா, அவனுக்கு மட்டும் புள்ள இருக்கும்னு என்ன நிச்சயம்? இந்த மாதிரி அத்து விடறதுலாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது. புருஷன் செத்து மறுகல்யாணம் பண்ணி வச்சா ஏத்துக்கற சமூகம், விவாகரத்துன்னா யாரு மேல குத்தமோன்னு கண்ணுல வெளக்கெண்ணெய விட்டுட்டு பார்க்கும்டி! உனக்கும் கீழ ரெண்டு தங்கச்சிங்க இருக்காளுங்க! அத யோசிச்சாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிப்போ கனகா! ஆத்தா அப்பன் இல்லாம எத்தனையோ புள்ளைங்க அனாதையா கிடக்குது. அதுல ஒன்ன எடுத்து வளத்தா புண்ணியத்துக்குப் புண்ணியமா போகும், உங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு இணக்கம் வரும்” என, அழுது புலம்பிய மகளுக்கு அறிவுரை தந்தார் கனகாவின் அம்மா.
பெரிய மகள் ஏடாகூடமாய் விவாகரத்து எனப் போனால், தனது இளைய மகள்களின் வாழ்க்கை என்னாகுமோ எனும் பயம் அவருக்கு.
இரு வீட்டாரும் நெருக்கடி தர, வேண்டா வெறுப்பாகத் தத்தெடுக்கப்பட்டவள்தான் பவளமல்லி. வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டவளை அன்பாய் அரவணைக்கவோ, ஆசையாய் கொஞ்சி மகிழவோ யாருமில்லை. அவளைப் பார்க்கப் பார்க்க கணவன் மனைவி இருவருமே இரு வேறு மனநிலையால் பாதிக்கப்பட்டார்கள். இப்படி ஒரு குழந்தையைக் கொடுக்க முடியவில்லை என்றுதானே என்னை இவள் கேவலமாக நடத்துகிறாள் என வெம்பிப் போய் குடிகாரனாக இருந்த கதிரேசன் மொடாக் குடிகாரனாக மாறினான்.
