‘பெத்துக்க எல்லாத் தகுதியும் எனக்கிருந்தும் இப்படி ஒரு அனாதை பிள்ளையைக் கொண்டு வந்து நடு வீட்டுல உக்காத்தி வச்சிருக்காங்களே’ என வெந்து தகித்தாள் கனகா.
இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாய் பிள்ளை இருப்பாள் என இரு வீட்டுப் பெரியவர்களும் செய்த ஒரு செயல் சின்னவளின் வாழ்க்கையைச் சிதைத்துப் போட்டது.
வீட்டுப் பிள்ளையாய் கொண்டு வரப்பட்டவள் வேலைக்காரியின் அரவணைப்பில்தான் வளர்ந்தாள். இவளுக்கு ஆறு வயதான போது, இரவில் குடித்து விட்டுப் படுத்த கதிரேசன் காலையில் எழவில்லை. குடியோடு போதைப் பழக்கமும் இருந்தது என போலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. போதை மருந்து ஓவர்டோஸ் ஆனதால் இறப்பு என டாக்டர் சர்டிபிகேட் வந்தது. கேசை விசாரித்த இன்ஸ்பெக்டரையே மறு மாதம் மணந்து கொண்டாள் கனகா. மணந்த ஏழு மாதத்தில், குறைப்பிரசவத்தில் எந்தக் குறையும் இல்லாமல் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் அவள்.
அதன் பிறகு வேலைக்காரியின் அரவணைப்பில் வளர்ந்த பவளமல்லி வேலைக்காரியாகவே ஆகிப் போனாள். சொந்தக் குழந்தை வந்த பிறகு ஏற்கனவே வெறுப்புடன் பார்க்கப்பட்ட பவளமல்லி இப்பொழுது முழு அந்நியமாகிப் போனாள். அறியாத வயதில் பெற்றவர்களின் பாசத்தை அனுபவித்திருந்திருப்பாள். ஆனால் விவரம் தெரிந்ததில் இருந்து வேலைக்காரியின் அன்பு மட்டும்தான் பவளமல்லி அறிந்து கொண்டது. அவளும் இரவில் தன் வீட்டுக்குப் போய் விட்டால், தனிமைதான் மல்லியின் தோழி. ப்ளஸ் டூ வரைக்கும் கவர்மெண்ட் பள்ளியில் படித்தவளுக்கு படிப்பும் சுமாராகத்தான் வந்தது. வேலைக்காரிக்குத் துணையாய் வீட்டு வேலை, சமையல் என ஆரம்பித்து வேலைக்காரியாகவே மாறிப்போனாள். கனகாவின் மூன்றுப் பிள்ளைகளைப் பார்க்கும் ஆயா வேலையும் சேர்ந்து கொள்ள எங்கிருந்தது அவளுக்குப் படிக்க நேரம்!
சம்பளத்து மேல் கிம்பளம் வாங்கியும் மூன்று குழந்தைகளோடு மல்லியும் கொசுறாய் இருக்க, குடும்பத்தைச் சமாளிக்க திண்டாடித்தான் போனான் கனகாவின் இரண்டாவது கணவன் இன்ஸ்பெக்டர் கந்தமாறன். கந்தமாறனைப் பொருத்த வரை, பவளமல்லி தேவையில்லாமல் அவன் தலையில் சுமத்தப்பட்ட சுமை. வீட்டில் அனைத்து வேலையையும் அவள் பார்க்க, வேலைக்காரிக்குக் கொடுக்க வேண்டிய பணம் மிச்சமாகிறது என்பதால்தான் அவளை சகித்துக் கொள்கிறான். ஊர் வாய்க்குப் பயந்து ப்ளஸ் டூ வரை படிக்க வைத்தவர்கள், அதோடு நிறுத்தி இவளை வேலைக்கு அனுப்பினார்கள்.
எம். என். சியில் இவள் கம்ப்யூட்டர் தட்டுகிறாள் என நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தைத் தலையில் தட்டித் தூக்கித் தூரப் போடுங்கள். பவளமல்லி, அங்கே சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் ஆட்களுக்கு சூப்பர்வைசர் வேலை பார்க்கிறாள். வேலைக்கு யாராவது மட்டம் போட்டால் கூட்டல், பெருக்கல் வேலையை இவளே பார்க்க நேரிடும். டாய்லட் கழுவுவது அதோடு டீ லேடி வேலைப் பார்ப்பது என எல்லா வேலையையும் செய்வாள் இவள். கிளினர் எனக் கிண்டலடிக்கத்தான் கனகாவின் மூத்த வாரிசு இருவரும் இவளைப் பார்த்தாலே மூக்கைப் பொத்துவது. மூன்றாவதுக்கு இன்னும் விவரம் தெரியாததால், மல்லியை அக்கா அக்காவென சுற்றி வருகிறாள்.
மல்லிக்குக் கீழே ஆறு பேர் வேலை செய்கிறார்கள். இந்த மாதிரி வேலைகளை எடுத்து நடத்தும் ஏஜென்சி ஓனர் கந்தமாறனுக்குத் தெரிந்தவர். பேரங்காடி ஒன்றில் அதே ஏஜென்சிக்காக வேலைப் பார்த்தவள், இந்த எம்.என்.சிக்கு வேலை மாறி வந்து இரு மாதங்களே ஆகியிருந்தன. வேலைப் பார்ப்பது இவளாய் இருந்தாலும், சம்பளம் அப்படியே கந்தமாறனுக்குப் போய்விடும். செலவுக்கு மட்டும் அதில் இருந்து கொஞ்சமாய் கொடுப்பாள் கனகா.
அவள் வயது பெண்களைப் போல அழகழகான ஃபேன்சி தோடு, விதவிதமாய் சுடிதார், குதிகால் வைத்தது, வைக்காதது என ரகரகமாய் செறுப்பு என வாங்கி அணிந்து மகிழ மனம் துடியாய் துடிக்கும். சம்பளத்தையே கண்ணில் பார்க்காதவள், எங்கிருந்து இதையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வாள்! ஆயிரத்தெட்டு ஏக்கங்கள், ஆதகங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் அந்த குட்டி மனதில் புதைத்து வைத்திருக்கிறாள் பவளமல்லி. ஆனாலும் எதையும் வாய் விட்டுக் கேட்கமாட்டாள். சின்ன வயதில் தங்கைக்குப் போட்டிருப்பதைப் போலவே சட்டை வேண்டும் எனக் கேட்டு அடம் பிடித்து போலிஸ் அடி என்றால் என்ன என அனுபவித்திருக்கிறாள்.
மூன்று நாள் காய்ச்சலில் விழுந்து எழுந்தவள், அதற்கு மேல் எதற்கும் அடம் பிடித்ததே இல்லை. வாயை மூடிக் கொண்டு சொன்ன வேலையை செய்யும் வரை கந்தமாறனும் இவளை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டான்.
இந்த வீட்டில் இப்படி வேலைக்காரியாகவே இருந்து ஜீவனை விட்டுவிடுவோமா எனப் பயம் வர, வீட்டை விட்டு ஓடிப் போய்விடலாமா என்றுக் கூட பல முறை யோசித்திருக்கிறாள் பவளமல்லி. கந்தமாறன் கனகாவிடம் பகிர்ந்து கொள்ளும் கற்பழிப்பு, கொலை, விபச்சார கேஸ் விவரங்கள் காதில் விழும் போது, அப்படிப்பட்ட யோசனையே பைத்தியக்காரத்தனம் எனக் கைவிட்டு விடுவாள். முதுகொடிய வேலைப் பார்த்தாலும் இந்த வீட்டில் கிடைக்கும் பாதுகாப்பு வெளியே கிடைக்காது என நன்றாகப் புரிந்தது அவளுக்கு. அதோடு ஓடிப் போய், பிடிபட்டுக் கொண்டால் அதற்கு மேல் வாழ்க்கையே நரகமாகி அல்லவா போய் விடும். கந்தமாறனின் இடி போன்ற அடியை நினைக்கும் போது உடம்பே நடுங்கிப் போகும் பெண்ணுக்கு.
அன்றைய வேலைகளை முடித்து, கொஞ்சமாய் வயிற்றுக்கும் போட்டுக் கொண்டு தனது இடத்தில் போய் முடங்கிக் கொண்டாள் மல்லி. ஆரம்பத்தில் இவளுக்கு என ஓர் அறை இருந்தது. மற்ற பிள்ளைகள் வர, வரப் பழைய சாமான் போட்டு வைக்கும் அறை இந்தப் பாவப்பட்ட பழைய பிள்ளைக்கு வழங்கப்பட்டது. சின்னதாய் ஒரு காற்றாடி, மெலிதான மெத்தை, துணிகளை மடித்து வைத்துக் கொள்ள ஒரு பெட்டி, முகம் பார்க்கக் குட்டிக் கண்ணாடி என இதுதான் அவளது அரண்மனை.
ஓயாத உடல் உழைப்பால் உடம்பு அடித்துப் போட்டது போல வலித்தாலும் உடனே தூங்கி விடவில்லை இவள். எப்பொழுதும் போலக் கண்களை மூடிக் கொண்டு சுகமான கற்பனைகளில் ஆழ்ந்து போனாள் பவளமல்லி. சின்ன வயதில் ஆரம்பித்த பழக்கம் இது. நிஜத்தில் கிட்டாததை பட்டென மறக்காமல், கற்பனையிலாவது கிடைப்பது போல சந்தோசப்பட்டுக் கொள்வது அவளுக்கு மிகப் பிடித்த விஷயம். கனவுக்கும் கற்பனைக்கும் எல்லை உண்டா என்ன!
அப்பொழுதெல்லாம் கனகாவும், கந்தமாறனும் தன்னைப் பாசமாகப் பார்ப்பது போல, தன்னோடு ஓடிப் பிடித்து விளையாடுவது போல, உணவை ஊட்டி விடுவது போலக் கற்பனை செய்து மகிழ்ந்து போவாள். கொஞ்சம் வயது ஏற, நன்றாக படிப்பது போல, மிஸ் தன்னைப் பாராட்டுவது போல, சக மாணவர்கள் தன்னைக் கண்டு பொறாமைப் படுவது போலக் கற்பனை செய்வாள். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், நல்ல வேலைக் கிடைப்பது போல, அலுவலகத்தில் அமர்ந்து மற்றவர்களோடு பேசி சிரித்து வேலை செய்வது போல கற்பனை விரியும் மல்லிக்கு. இந்தக் கற்பனைகள் மட்டுமே அவளை உயிர்ப்போடு வைத்திருந்தன.
வேலைக்குப் போனதில் இருந்து, கல்யாண கனவு காண ஆரம்பித்திருந்தாள் பவளமல்லி. சராசரி பெண்களைப் போல அழகான கணவன், அன்பான துணைவன் அமைந்தாலே பேரின்பமே எனப் பாட்டை மாற்றிப் பாடி கனவு காணவில்லை அவள். பிறகென்ன கனவு? முத்தக் கனவா அல்லது அதோடு இணைந்த யுத்தக் கனவா? அதுவும் இல்லை.
அவள் கற்பனையில், அவள் கணவன் வித விதமாய் உடை வாங்கித் தந்தான், ஹோட்டலுக்கு அழைத்துப் போய் வயிறு முட்ட உணவு வாங்கிக் கொடுத்தான், படங்களில் மட்டுமே பார்த்திருந்த ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சுற்றுப் பயணம் அழைத்துப் போனான். இவள் கண் பார்த்த பொருளை அடுத்த நொடி இவள் காலடியில் கொண்டு வந்து போட்டான். வேலைக்காரியாய் வாழ்பவளை தன் வீட்டின் மகாராணியாய் முடி சூட்டினான். இந்த மாதிரி கற்பனைகளில் சுகம் காணுபவள், சில நேரங்களில் தூங்கவே மணி பின்னிரவு ஒன்றாகி விடும்.
அன்றும் கற்பனையில் ஆழ்ந்தவள்,
“அவன கண்டா வர சொல்லுங்க!!!!” என மெல்லிய குரலில் பாடிக் கொண்டாள்.
பின் வெட்க சிரிப்புடன்,
“எங்கடா இருக்க நீ?” என கேட்டபடியே தூங்கிப் போனாள் பவளமல்லி.
