அத்தியாயம் 4
பஜ்ஜி இல்லாத கையேந்தி பவனா! உருளைக்கிழங்கு பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி இப்படி விதவிதமான பஜ்ஜிகள் சென்னை ரோட்டோரக் கடைகளில் விற்கப்படுகின்றன. அதற்குரிய சட்னியோடு மழை நேரங்களில் பஜ்ஜி சாப்பிடுவது என்பது ஒரு சுகானுபவம்.
முகத்தை ஏழு முழம் தூக்கி வைத்திருந்தான் ஜெய்சங்கர். அது ஏன் எனத் தெரிந்தும் எதையும் கண்டுக் கொள்ளவில்லை கோபால்.
“போலிஸ்னா என்ன பெரிய பருப்பா? எந்தப் பருப்பையும் அசால்ட்டா வேக வைச்சு சாம்பர் வச்சிடுவான் இந்த சங்கரு. அது தெரிஞ்சும் எதுக்கு நைனா இந்த மாதிரிலாம் பண்ணுற நீ! செம்ம காண்டாகுது எனக்கு” எனச் சில நாட்களாக திட்டுவது போல அன்றும் திட்டித் தீர்த்தான் தன் தகப்பனை.
“பருப்பா இருந்தா பரவாயில்லடா மவனே! அவனுங்க நெருப்பு! சுட்டா பொசுங்கிடுவோம்டா! எனக்கு உறவுன்னு இருக்கறதே நீ ஒருத்தன் தான். உனக்கு எதுனாலும் ஆகிப்போச்சுனா இந்த கோபாலு பாடில உசுர் தங்காதுடா! அதனால இந்த தேவா பொண்ண நீ பாக்கவும் வேணா, பழகவும் வேணா! இத்தோட சைட்டு, டாவு எல்லாத்தையும் மூட்ட கட்டி வை!” எனச் சொல்லி முடிக்கும் போதே அவரது போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்தது.
நம்பரைப் பார்த்ததும் இன்னும் கோபம் எகிறியது இவனுக்கு.
“போன் அடிச்சிட்டா உன் தத்துப் பொண்ணு! நீயே எல்லாம் பார்த்துக்கோ! நான் ஆரோதானே! இந்தப் பாவப்பட்ட சங்கரு அந்தாண்ட போய் குந்திக்கறேன்” எனக் கடுப்பாகச் சொன்னவன், கோபமாக கஸ்டமர் அமரும் நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டான்.
“இவன் ஒருத்தன். ஆனா ஊன்னா பால்வாடி கொழந்தையாட்டம் மூஞ்சைத் திருப்பிக்குவான். இன்னாத்துக்கு நைனா பேசாறான்னு திங்க்கு பண்ண மாட்டான்” என முணுமுணுத்தபடியே, கஸ்டமரை கவனித்துக் கொண்டே பவலமல்லிக்கும் மூன்று பரோட்டாவைப் பார்சல் செய்தார்.
கோபாலுக்கு மிஸ்ட் கால் கொடுத்தது பவளமல்லிதான். அன்றைய பேயறை சம்பவம் நடந்ததில் இருந்து பரோட்டா வாங்க வரும் போது பரோட்டா மாஸ்டரை கொஞ்சமாய் நிமிர்ந்து பார்த்து, உதடுப் பிரித்து மெலிதாய் முறுவலிக்க ஆரம்பித்திருந்தாள் அவள். அதற்கே இந்த மாஸ்டர் வானுக்கும் பூமிக்கும் ராக்கேட் இல்லாமலே ரவுண்டு வர ஆரம்பித்திருந்தான்.
“அடேய்! ஜொள்ளு வழிஞ்சு சால்னால ஊத்திடப் போகுது! ஓவரா இளிக்காம வேலையைப் பாருடா மவனே” என கோபால் கண்டிக்கும் அளவுக்கு இவனது நடவடிக்கைகள் இருந்தன.
மகன் இப்படி வழிகிறானே, ஆனால் அவன் பேசினால் மட்டும் இந்தப் பெண் ஒற்றை வார்த்தை உதிர்க்காமல் வாயைக் கப்பென மூடிக் கொள்கிறாளே எனும் ஆதங்கத்தில் கோபாலே கொஞ்சமாய் அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். பெரியவர் எனும் மரியாதையில் இவளும் அவர் கேட்ட கேள்விக்கு மதித்து பதில் சொல்வாள். அப்படித்தான் அவள் பெயரில் இருந்து சூப்பர்வைசர் வேலைப் பார்ப்பது வரை கறந்திருந்தார் கோபால்.
பவளமல்லி கம்ப்யூட்டர் தட்டவில்லை, கக்கூசை கூட்டுகிறாள் என அறிந்ததில் இருந்து ஜெய்சங்கரை கையில் பிடிக்க முடியவில்லை.
“நைனா! நான் வெங்காயம் அவ வெளக்கமாறு. நான் பாமாயிலு அவ பினாயிலு. நான் ஆஃபாயிலு அவ ஹார்பிக்கு! அப்போ இது லவ் தானே கோபால்?”
“இன்னும் சொல்லேன், நீ முட்டாளு அவ முட்டக்கண்ணி, நீ மடசாம்பிராணி அவ மங்காத்தா ராணி, நீ பேமானி அவ தேவகன்னின்னு”
“தோடா, கலாய்ச்சிட்டாராம்!” என்றவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
பின் சீரியசான குரலில்,
“நைனா, தேவா படிச்சப் புள்ள. நாமளாம் அவளுக்கு தகுதியே இல்லைன்னு நெனைச்சித்தான் இத்தனை நாளா தள்ளி நின்னே ரசிச்சேன். ஆனாலும் மனசாட்சி உறுத்தித் தொலையும். உன் தகுதிக்குத் தேவா கேக்குதான்னு காரித் துப்பும். அவள நெனைச்சி நான் ஏங்கித் தவிக்காத நாளே இல்ல நைனா! என்னவோ அவள பார்த்த நாளுல இருந்து அவ்வளவு புடிக்கிது. பூமிக்கே வலிக்குமோன்னு அவ நடந்து வர நளினம், ‘பரோட்டா மூனு’ன்னு கேக்கற அந்தக் குரலு, அலட்டல் இல்லாத அழகு, ஓசியில பரோட்டா வாங்கிக்காத தன்மானம் எல்லாம் ரொம்ப ரொம்ப புடிக்குது நைனா! எவனோ ஒருத்தன் அவ சடையைத் தொட்டதே என்னால தாங்கிக்க முடியல. கொலை வெறியே வந்திடுச்சு. அன்னைக்குத்தான் அவ மேல எவ்ளோ லவ்சுன்னு எனக்கே வெளங்குச்சு! இப்போத்தான் நாம ஒரே ரேஞ்சுன்னு தெரியுதே! இனி என்ன தடை! எனக்கு அவ வேணும் நைனா. வேற பொண்ணு பார்க்கறத விட்டுட்டு இவளையே எனக்குப் பொண்ணு கேளு” என்றான் ஜெய்சங்கர்.
தன்னைப் போலப் பட்டமரமாக நின்று விடாமல், மகன் வாழ்வு கப்பும் கிளையுமாகச் செழித்து ஓங்க வேண்டும் எனும் ஆசையில் அவளது குடும்பத்தை பற்றி மறுநாள் பரோட்டா வாங்க வந்தவளிடம் விசாரித்தவருக்கு பெரும் அதிர்ச்சியாகிப் போனது. விலாவாரியாக எல்லாவற்றையும் சொல்லாவிட்டாலும், தான் ஒரு வளர்ப்பு மகள், வளர்த்தவர் போலீஸ் அதிகாரி எனக் கேள்விப்பட்டதில் இருந்து கல்யாணப் பேச்சே கூடாது என மகனைக் கிட்டத்தட்ட மிரட்டியிருந்தார் கோபால்.
“வளப்பு புள்ளயா இருந்தாலும், போலிஸ் வீட்டுப் புள்ள! நல்ல எடத்துல கட்டி வைக்கத்தான் நெனைப்பாங்கடா சங்கரு. நாம பொண்ணு கேக்கப் போனா, ரோட்டுக் கடைக்காரனுக்கு என் பொண்ணு கேக்குதான்னு முட்டிக்கு முட்டி தட்டிடுவானுங்க! வேணாம்டா இந்தக் காதலு கன்றாவிலாம். நைனா சீக்கிரமா உனக்கு வேற பொண்ணப் பார்த்து கட்டி வைக்கறேன். என் பேச்சுக்கு மருவாதி குடுக்கறவனா இருந்தா, அவ கிட்ட இருந்து தள்ளி நில்லு” எனக் கறாராய் சொல்லி விட்டார்.
தகப்பன் பாசமும் தத்தை மேல் வைத்த நேசமும் போட்டிப் போட்டதில் பாசம் ஜெய்க்க, அன்றிலிருந்து ஜெய்சங்கர் அவளை ஓரக்கண்னால் சைட்டடிப்பதைக் கூட விட்டுவிட்டான்.
கடைக்கு வந்து அவள் நிற்கும் அந்த பத்து நிமிடமும் மகனின் மனநிலை எப்படி இருக்கும் எனப் புரிந்திருந்தவர், நைசாக மல்லியிடம் அலைப்பேசி எண்ணைக் கேட்டார். அதைக் கொடுக்க ரொம்பவே தயங்கினாள் பவளமல்லி.
“அப்பா மாதிரி நெனைச்சிக் குடும்மா! இங்க வந்து தடிப்பசங்க மத்தியில நீ காத்துட்டு நிக்கறது எனக்கே சங்கடமா இருக்கு. வேலை முடிஞ்சதும் ஒரு மிஸ்ட்டு காலு குடு, நான் சுட சுட பரோட்டா போட்டு வச்சிடறேன்! நீ வந்து வாங்கிட்டு அப்படியே கெளம்பிடு! அதுக்குத்தான் கேக்கறேன் கண்ணு” என்றவரின் கனிவான பேச்சில் தனது நம்பரைக் கொடுத்தாள் மல்லி.
பேசி அவளது சம்மதம் வாங்கிய நாளில் இருந்து அவளது மிஸ்ட் கால் பார்த்து கோபால் பார்சல் ரெடி செய்து வைத்து விடுவார். மல்லி வந்து பணம் செலுத்தி விட்டு உடனே கிளம்பி விடுவாள். அவள் வரும் நேரம் தலையைக் குனிந்து அமர்ந்திருக்கும் பரோட்டா மாஸ்டரை ஓரக்க்கண்ணால் பார்த்து விட்டுத்தான் போவாள் பவளமல்லி.
மனதுக்குள்,
‘என்னாச்சி பரோட்டாவுக்கு! எப்போதும் பல்லு முப்பத்திரெண்டும் தெரியற அளவுக்கு சிரிப்பான். இப்போலாம் நம்மள நிமிர்ந்து கூட பார்க்கறது இல்ல! ஓஹோ! கக்குஸ்க்காரின்னு தெரிஞ்சதும் சாருக்கும் என்னைப் பார்த்து எளக்காரமா போயிடுச்சிப் போல! போடா போடா தீஞ்சுப் போன பரோட்டா!’ எனத் திட்டிக் கொண்டே கடந்து போவாள் பவளமல்லி.
