அவள் கடந்து போகும் வரை, கையை இறுக்கிப் பிடித்த போது பரிசாய் அவள் கொடுத்திருந்த நகக்கீறலை பார்த்தபடி அமர்ந்திருப்பான் ஜெய்சங்கர். அவள் பஸ் நிறுத்தம் போன பிறகே பெருமூச்சுடன் எழுந்து வியாபாரத்தைக் கவனிப்பான்.
வெயில் தாள ஆரம்பித்திருந்த மாலை வேளை அது. பைக்கை புரசைவாக்கத்தில் இருந்த அந்த சைவ ஹோட்டலின் முன்னே நிறுத்திப் பூட்டினான் கந்தமாறன். உள்ளே நுழைந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாய் இருந்த டேபிளில் அமர்ந்தவனை நெருங்கி வந்தான் கடை சிப்பந்தி.
“என்ன சாப்படறீங்க சார்?”
“உங்க முதலாளிய பார்க்கனும். ஈ த்ரீ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்னு சொல்லு! அவருக்குத் தெரியும். அப்படியே ஒரு காபி சொல்லிட்டுப் போப்பா”
காபி வரவும் மேசையில் கையால் மெல்லிய தாளம் போட்டுக் கொண்டே அதை அருந்த ஆரம்பித்தான் கந்தமாறன்.
“என்ன காத்து இந்தப் பக்கம் வீசுது?” எனக் கேட்டபடியே வந்து அமர்ந்தான் அந்த ஹோட்டலின் முதலாளி.
“போன் போட்டா எடுக்கமாட்டியாய்யா?” என எரிச்சல் குரலில் கேட்டான் இன்ஸ்பெக்டர்.
“எதுக்கு எடுக்கனும்?”
“என்னய்யா இப்படி சொல்லற? நம்ம டீலிங் மறந்துப் போச்சா?”
“இது சரி வராது இன்சு! விட்டுரு”
“யோ யோ! என்னய்யா இப்படி காலை வாரி விடற! வட்டிக்காரன்லாம் கழுத்த நெறிக்கறான்யா! உன்னை நம்பித்தான் தவணை சொல்லிருக்கேன்!” எனப் படபடத்தான் கந்தமாறன்.
அலட்டிக் கொள்ளாமல், தனக்குக் கொண்டு வரப்பட்ட காபியை மிடறு மிடறாக ரசித்துக் குடித்தான் அந்த முதலாளி. பின் நிமிர்ந்து பார்த்தவன் கடுமையான குரலில்,
“இது சுத்தமான வியாபாரம் இன்சு. பேச்சு சுத்தம் இல்லாதவன்கிட்ட நாங்க எந்த டீலிங்கும் வச்சிக்கறது இல்ல. எங்க ஆளுங்க மாட்டுனா எப்.ஐ.ஆர் போடாம கேச திசை திருப்ப உதவியா இருக்கியேன்னுதான் நீயா என் கிட்ட வந்தப்போ, மத்தவங்களுக்கு குடுக்கறத விட அமவுண்ட் கொஞ்சம் கூட்டி குடுக்க ஒத்துக்கிட்டேன். ஆனா…”
“ஆனா என்னய்யா?”
“அந்தப் பொண்ணு எவனோ ஒருத்தன் கையை பப்ளிக்ல இறுக்கிப் புடிச்சிக்கிட்டு நிக்கிது. நாலு பேரு பார்க்கறப்பவே இப்படி இருக்காங்களே, பார்க்கதப்போ எப்படிலாம் இருப்பாங்க?”
“அப்படிப்பட்ட பொண்ணுல்லய்யா அவ!”
“ரெண்டு கண்ணால பார்த்த நான் என்ன கேணையனா இன்சு?”
பதட்டமாக இருந்தது கந்தமாறனுக்கு. இந்த டீலிங்கில் வரும் பணத்தை வைத்துத்தான் கந்துவட்டிக்காரனுக்கு செட்டில் செய்ய வேண்டும். இவன் பேசுவதைப் பார்த்தால் பணத்தைக் கொடுக்க மாட்டானோ எனத் தவிப்பாக இருந்தது.
எல்லாம் ஆன்லைன் சூதாட்டத்தால் வந்த வினை. முதலில் விளையாடிய போது பணம் கொட்டவும், பேராசை பீடித்துக் கொண்டது இவனுக்கு. கொஞ்சக் கொஞ்சமாய் பணத்தை இழக்கும் போதெல்லாம் அடுத்ததில் அள்ளி விடலாம் என மேலும் மேலும் கடன் வாங்கி, இப்பொழுது கடன் கழுத்தை நெறிக்கிறது. போலீஸாக இருந்து கொண்டு இந்த மாதிரி சட்டத்துக்குப் புறம்பான சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரிந்தால் வேலை போய் விடக்கூடிய வாய்ப்பு வேறு இருந்தது. அங்கங்கே லஞ்சம் வாங்கி ஓரளவுக்குக் கடனின் அசலைக் கட்டி இருந்தான் கந்தமாறன். கடைசியாக இன்னும் ஐந்து லட்சம் வட்டிக்குத் தேவைப்பட்டது. அதற்குத்தான் இந்தக் கடை முதலாளியோடு ஒப்பந்தம் போட்டிருந்தான்.
“இங்க பாரு இன்சு! சீல் உடைக்காத பாட்டிலுக்குத்தான் கொட்டி குடுப்பானுங்க! உன் வீட்டுப் பொண்ணு அந்தப் பையன் கூட ஒட்டி ஒரசி, பட்டுப் படர்ந்து இருந்தத பார்த்தாலே தெரியுது ப்ரெஸ்சு பீசு இல்லைன்னு. வேணும்னா ஒன்னு பண்ணலாம். உன் சொந்த மவள அனுப்பி விடறியா? இந்த வியாபாரத்துல வயசு குறையக் குறைய, அமவுண்டு கூடும்யா!”
“யோ நாதாரி!” எனக் கத்திய கந்தமாறன் பட்டென எழுந்து ஹோட்டல் முதலாளியின் கழுத்தைப் பிடித்து விட்டான். தடதடவென இரண்டு மூன்று சிப்பந்திகள் ஓடி வந்து கந்தமாறனைப் பிடித்துக் கொண்டார்கள்.
“விடுங்கடா! என்ன இருந்தாலும் சர்க்காரு ஆபிசர்! அதுக்கு உண்டான மரியாதைய குடுக்க வேணா! நீ உக்காரு இன்சு! சொந்த ரத்தம்னதும், அப்படியே துடிச்சிடுச்சா!” என கிண்டலாக சிரித்தான் ஹோட்டல் முதலாளி.
ஆத்திரமாக வந்தாலும், இப்பொழுது கோபம் கொண்டு காரியத்தைக் கெடுத்து விடக் கூடாது என மீண்டும் அமைதியாக அமர்ந்து கொண்டான் கந்தமாறன்.
“எங்க வீட்டுப் பொண்ணு கன்னிதான்னு டாக்டர் சர்டிபிகேட் வாங்கித் தரேன்யா!”
“உன் டாக்டர நான் நம்ப மாட்டேன். உங்களுக்கெல்லாம் பொய் சர்டிபிகேட் குடுக்க சொல்லியா தரனும்! நான் சொல்ற டாக்டர் கிட்ட போ! இந்த சலுகைக் கூட அமைச்சருக்கு உன் வீட்டுப் பொண்ண புடிச்சுப் போச்சுன்றதுனாலத்தான். இல்லைனா என் கழுத்த புடிச்ச உன் கிட்ட இன்னும் உக்காந்துப் பேசிட்டு இருப்பனா! முகம் ரொம்ப லட்சணமா இருக்குன்னு படத்தப் பார்த்தே ஜொள்ளு விட்ட மனுஷன், எப்போ கச்சேரின்னு கேட்டுட்டே இருக்காரு. ரிசல்ட்டு ஓகேன்னா இன்னிக்கே அவள அமைச்சர் வீட்டுக்கு அனுப்பிடலாம். மொத்த பணமும் அமைச்சர் வீட்டுக்கு பொண்ணு போய் இறங்கனதும் உன் கைக்கு கேஷா வந்துடும். ரிசால்ட்டு சொதப்பனாலும் பாதகமில்ல, குடுக்க வேண்டிய அமவுண்டுல பின்னாடி ரெண்டு சைபர வெட்டிட்டு, அவள மத்த கிராக்கியோட கிராக்கியா சேர்த்துக்கறேன்.”
“டீல்ல பேசனப்படி உள்ளூருல அவள வச்சிக்க வேணாம். வெளி மாநிலத்துக்கு அனுப்பிடு! இங்க எவனாச்சும் பார்த்துத் தொலைச்சிட்டா மானம் போயிடும். சொந்தக்காரங்க கிட்ட வெளியூருக்கு வேலைக்குப் போயிருக்கான்னு சொல்லி அப்படியே சமாளிச்சிடறேன்”
“சரி, சரி! இந்தா கார்ட்டு. இன்னிக்கே போய் இந்த டாக்டர் கிட்ட செக் பண்ணிடு! நம்ம பசங்களயும் பின்னால அனுப்பி விடறேன்! எல்லாம் சரியா வந்தா, அமைச்சரோட பீச் ஹவுசுக்கு அவனுங்க கூட்டிட்டுப் போயிடுவானுங்க” எனச் சொல்லி எழுந்து கொண்டான் கதர் வேட்டி சட்டையில் பாந்தமாகப் பக்தி மணம் கமழ இருந்த அந்த சைவ ஹோட்டலின் முதலாளி.
கூடவே வேனில் வந்தவர்களை வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருக்கச் சொல்லி விட்டு, தான் மட்டும் வீட்டுக்குள் நுழைந்தான் கந்தமாறன். முன்னே வந்த கனகாவிடம்,
“மல்லி வீட்டுக்கு வந்துட்டாளா?” எனக் கேட்டான்.
“வந்துட்டாங்க! சமையல் பண்ணிட்டு இருக்கா! காபி கொண்டு வரச் சொல்லவா?”
“இல்ல வேணா! இன்னிக்கு காலையில உன் கிட்ட சொன்னேன்ல, அவளுக்கு வெளியூர்ல வேலைப் பார்த்து வச்சிருக்கேன்னு! அந்த வேலை விஷயமா இப்பவே கிளம்பி வர சொல்லிட்டாங்க! அவள போய் குளிச்சி கிளிச்சி கெளம்ப சொல்லு”
“ஏங்க, அந்த வேலைக்குப் போயேத்தான் ஆகனுமா? இங்க இருந்தாலாச்சும் வீட்டு வேலைக்குக் கூட மாட ஒத்தாசையா இருப்பா!”
“ஏன்டி நீ வேற டார்ச்சர் பண்ணிக்கிட்டு! அங்க போய் வேலை செஞ்சா சுளையா சம்பளம் வரும்டி. நம்ம புள்ளய நல்ல காலேஜ்ல சேர்த்துப் படிக்க வைக்கலாம்! காலையிலதான் படிச்சு படிச்சு சொன்னேன். இப்போ வந்து ஏங்க, எதுக்குங்கன்னு நிக்கற! போ போ, அவள கிளம்ப சொல்லு. நானும் குளிச்சிட்டு வரேன்”
ஆத்திரமாகப் படபடவென பேசிவிட்டு ரூமுக்குள் போன தன் கணவனை அமைதியாகப் பார்த்திருந்தாள் கனகா. ஐந்து நிமிடம் கழித்த ரூமினுள் போனவள், அவனது போனை எடுத்துக் கடவுச் சொல் தட்டி ஆராய்ந்தாள். அவன் கேடி என்றால் இவள் ஜில்லா கேடியாயிற்றே! பின் பெருமூச்சுடன் பவளமல்லியைத் தேடிப் போனாள் கனகா.
கையில் ஒரு குட்டி பேக்குடன் கந்தமாறனுடன் புறப்பட்டாள் பவளமல்லி. கடைசி தங்கையை ஒரு முறை அணைத்து விடுவித்தவள், தாயின் முகத்தை சில நொடி ஆழ்ந்து பார்த்து விட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.
பைக்கில் கந்தமாறனின் பின்னால் அமைதியாக ஏறி அமர்ந்தாள் பவளமல்லி. பைக் காற்றைக் கிழித்துக் கொண்டு பயணித்தது. அவள் கண்களில் வழிந்த கண்ணீர் காற்றின் வேகத்தில் வேகமாய் காய்ந்து போனது. அந்த தனியார் கிளினிக்கின் முன்னே பைக்கை நிறுத்திய கந்தமாறன்,
“வா! அவங்க என்ன டெஸ்ட் செஞ்சாலும் வாய மூடிட்டு இருக்கனும். புரிஞ்சதா? எதாவது அழும்பு பண்ணீனா இங்கயே அடி வாங்கி செத்துடுவ!” என மெல்லிய குரலில் மிரட்டினான்.
கை தன்னிச்சையாக கன்னத்துக்குப் போக, சரியென மெல்லத் தலையாட்டினாள் பவளமல்லி. பைக் பின்னால் ஹோட்டல் முதலாளியின் வேன் வேறு வந்து நின்றது. தூக்குக் கயிற்றுக்குப் போவது போலக் கால்கள் கனக்க, மெல்ல அந்த கிளினிக் உள்ளே அடி எடுத்து வைத்தாள் பாவை.
ஜெய்சங்கரோ கடையடைத்து விட்டு தன் தகப்பனுடன் வீட்டை அடையும் போது நள்ளிரவு மணி பன்னிரண்டு ஆகியிருந்தது. சோகமாக,
“கண்ணிரண்டில் நான்தான்
காதல் எனும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன்
அத்தனையும் ஓட்டை!” எனப் பாடியபடியே வீட்டுக் கதவைத் திறந்தவனின் கண்கள் ஓரிடத்தில் நிலைக்குத்தி நிற்க, வாய்
“தங்கமே ஞான தங்கமே!” என முணுமுணுத்தது.
