KKP Epi 5(1)

அத்தியாயம் 5

சமோசா இந்திய உணவு என எண்ணிக் கொண்டிருக்கிறோம். சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் சம்போசா எனும் இந்த சமோசா ஈரான் நாட்டில்தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது என அறிந்து கொள்ளலாம். சென்னையில் பல ரோட்டோரக் கடைகளில் சைவ மற்றும் அசைவ சமோசாக்கள் கிடைக்கின்றன.

வீட்டுக்குள் நுழைந்து பாடியபடியே விளக்கைப் போட்ட ஜெய்சங்கர் அதிர்ந்து போய் நின்றான். அவர்கள் குட்டி வீட்டின் வரவேற்பறையில் சுவரில் சாய்ந்து சிலையென அமர்ந்திருந்தாள் பவளமல்லி.

வாய் மென்மையாய்,

“தங்கமே ஞான தங்கமே!” என முணுமுணுக்க தலையை ஒரு தடவை பலமாக உலுக்கினான் இவன்.

அந்த உலுக்கலில் அவள் பிம்பம் மாயமாய் மறைந்து போகாமல் அப்படியே இருக்க, மெல்ல அடியெடுத்து அவளை நெருங்கினான் ஜெய்சங்கர்.

இதெல்லாம் நிஜம் போல் தோன்றும் கனவோ என எண்ணி கீழே குனிந்து மென்மையாய்,

“தேவா!” என அழைத்தபடியே அவளது கன்னத்தை ஒற்றை விரலால் தொட்டான் இவன்.

தன் விரல் மென்மையான அவள் கன்னத்தில் புதைந்து வெளி வரவும்தான் பவளமல்லி நிஜமாகவே தன் வீட்டின் உள்ளே அமர்ந்திருக்கிறாள் என உணர்ந்து கொண்டான் ஜெய்சங்கர்.

அப்படியே சரிந்து அவள் முன்பு அமர்ந்தவன்,

“நீ..எங்க..எப்படி..இங்க” என வார்த்தை வராமல் தடுமாறினான்.

“அதெல்லாம் அப்பால கேக்கலாம், மொதல்ல நீ அந்தாண்ட தள்ளிப் போடா மவனே! பக்கத்துல போய் மூஞ்ச மூஞ்ச காட்டுனா பயந்துக்கப் போகுது புள்ள” என்றபடியே உள்ளே நுழைந்த கோபால் அவளைப் பார்த்து,

“வாம்மா!” என வரவேற்றார்.

அவரை நிமிர்ந்து பார்த்தவள், கலங்கிய கண்களோடு முறுவலிக்க முற்பட்டாள்.

“நைனா! தேவா நைனா தேவா!”

“தேவாதான்! நான் இன்னா தோசை தாவான்னா சொன்னேன்!”

அவர் சொல்லிய விதத்தில் மெல்லிய புன்னகைப் பூத்தது இவளின் உதட்டில்.

முறைத்த மகனைப் பார்த்து,

“சங்கரு டேய்! தட்டு எடுத்துட்டு வாடா இந்தப் புள்ளைக்கு! அப்படியே சூடா டீ வச்சி எடுத்துட்டு வா!” என்றவர், அவள் முன்னே தரையில் அமர்ந்து வாங்கி வந்திருந்த இட்லி பார்சலைப் பிரிக்க ஆரம்பித்தார்.

“ரெண்டு இட்லி எக்ஸ்ட்ரா வாங்கிக் குடுடான்னு கேட்டதுக்கு, என்னமோ சொத்துல பாதி கரைஞ்சிட்ட மாதிரி ஓவர் சீன் போட்டாம்மா இவன்”

“நைனா, இந்த டகில்பாச்சா வேலைத்தானே வேணாங்கறது! வீட்டுக்கு விருந்தாளி வராங்கன்னு சொல்லிருந்தா எக்ஸ்ட்ரா நாலு கூட வாங்கிக் குடுத்திருப்பேன். ராத்திரி நேரம் நீ நெறைய துன்னுட்டு வவுத்து வலில துடிக்க கூடாதுன்னு ஒரு அக்கறையில சொன்னத இப்படி மாத்தி சொல்லற பாத்தியா!!!” என்றவாரே தட்டைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, டீ போடப் போனான் ஜெய்சங்கர்.

“அதே பரோட்டாவே துன்னு துன்னு நாக்கு செத்துடும்மா! அதான் சில நைட்டுக்கு இப்படி இட்லி, இடியாப்பம்னு பார்சல் வாங்கிக்கினு வருவோம்” எனப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே உணவைத் தட்டில் இட்டுக் கொடுத்தார்.

வேண்டாமென இவள் தலையாட்ட,

“சாப்புடும்மா! வய்த்துல கனமா எதுனாச்சும் உழுந்தாத்தான், எதையும் சமாளிச்சிடலாம்னு மனசுக்கு தெம்பு வரும்” என வற்புறுத்தினார்.

“கை கழுவனும்பா” என மெல்லிய குரலில் சொன்னாள் இவள்.

“பின்னாடி போ, சங்கரு காட்டுவான்”

சின்ன வீடு அது. இரண்டாவது மாடியில் இவர்களது ஜாகை. மெல்ல எழுந்து, நொண்டி நொண்டி பின்னால் நடந்து போனாள் பவளமல்லி. ஆண்கள் இல்லம் எனச் சொல்லாமல் சொல்வது போல அழுக்கும் பிசுப்புமாக இருந்தது வீடு. பரோட்டாவுக்கு வீட்டில் வைத்துத்தான் மாவு பிசைவார்கள் போல. இன்னும் மிசின் வைத்து மாவு பிசையும் அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை இருவரும். தன் கையே தனக்குதவி எனத்தான் வியாபாரம் ஓடுகிறது.

அண்டா, குண்டா என அந்தக் குட்டி சமையல் அறையே நிறைந்து போய் கிடந்தது. அதோடு மாவும் எண்ணெய்யும் அங்கங்கே கொட்டிக் கிடந்தது. இருவரின் பேச்சு சத்தத்தையும் கேட்டிருந்த சங்கர், தண்ணீரோடு ரெடியாக இருந்தான்.

“என்ன நொண்டற? என்னாச்சு?”

ஒன்றும் இல்லையெனத் தலையசைத்தவள், சிங்க் பக்கம் வந்தாள்.

“இன்னிக்கு தண்ணி வரல! இந்த தண்ணில கைய கழுவிக்க! அப்படியே முகம் கழுவறதனாலும் கழுவிக்க! அடிக்கடி இங்கெல்லாம் பைப்புல தண்ணி வராது! அதனால தண்ணி லாரி வரப்போ புடிச்சு வச்சிக்குவோம்! கொஞ்சம் துட்டு உள்ளவங்க தண்ணி கேனும் வாங்கி வச்சிப்பாங்க! நானும் வாங்கி வைச்சிப்பேன்! வியாபாரத்துக்குச் சுத்தமான தண்ணி வேணும்ல” எனப் பேச்சுக் கொடுத்தபடியே அவள் கையையும் முகத்தையும் கழுவுவதை ரசனையோடு பார்த்திருந்தான்.

மனமோ,

“என்ன விலை அழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்” என பாடியது.

ரசனை ஒரு புறம் இருந்தாலும், அவன் எண்ணமெல்லாம் இவள் எங்கே இங்கே என்பதிலேயே சுற்றிச் சுழன்றது. தகப்பனுக்கு இவள் வருவது தெரிந்திருக்கிறது எனப் புரிந்ததில் இருந்து என்னவோ பெரிதாய் நடந்திருக்கிறது என தெரிந்து போனது இவனுக்கு. இவர்கள் வாயாலே எல்லாம் வரட்டும் என அமைதி காத்தான் ஜெய்சங்கர்.

அவள் முகம் கழுவித் துப்பட்டாவில் துடைத்தபடி, முன்னறைக்கு நடக்க முயல, பட்டெனக் கையைப் பிடித்து இழுத்து அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்த்தினான் இவன்.

“எ..என்ன?”

“காலுல ரத்தமா இருக்குத் தெரியலையா? ஏன் நொண்டறேனு கேட்டேன் தானே? வாயில என்ன பூந்தி லட்டா வச்சிருக்க? அடிப்பட்டுருக்குன்னு சொல்லத் தெரியாது?” எனக் கடிந்தவன் மஞ்சள் டப்பாவைத் தேடி எடுத்தான்.

அவன் சத்தத்தில் பின்னால் வந்தார் கோபால்.

ரூமின் உள்ளே போய் குட்டித் துண்டு ஒன்றை எடுத்து வந்தவன், தண்ணீரில் அதை நனைத்து, அவள் முன்னே மண்டியிட்டான்.

“இல்லல்ல! நானே பார்த்துக்கறேன்!” என இவள் பதற,

“துண்ட குடுத்துட்டு முன்னாடி வா சங்கரு!” என அழைத்தார் கோபால்.

எழுந்து கொண்டவன், கோபமாகத் துண்டை அவள் மடியில் போட்டு விட்டு டீயை எடுத்துக் கொண்டு முன்னறைக்குப் போனான்.

“அவன் அப்படித்தான்! சும்மாவே கோபம் பொசுக்குன்னு வரும்! பொட்டப் புள்ளைக்குக் கூச்ச நாச்சம் இருக்கும்னு புரியாதப் பய! நீ காயத்துக்கு மஞ்சப் பூசிட்டு வா கண்ணு” எனச் சொல்லி நகர்ந்தார் கோபால்.

கால் பாதங்களில் அங்கங்கே கற்கள் குத்திக் கிழித்திருந்தன. அதோடு வலது கால் பெருவிரலில் பெரிதாய் காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. கையிலும் சிராய்த்திருந்தது. இவ்வளவு நேரம் பயத்திலும் பதற்றத்திலும் வலி தெரியாமல் இருந்தது மல்லிக்கு. இப்பொழுது இரு ஆண் மக்கள் தன்னைப் பாதுகாப்பாய் உணர வைக்க, வலியும் களைப்பும் தன்னால் முன்னே வந்து நின்றது. கீழே குனிந்து ஈரத் துண்டால் காலைத் துடைத்தவள்,

“ஹிஸ்!!!” என முனகினாள்.

அந்த சத்தத்துகே சட்டென பக்கத்தில் வந்து நின்றிருந்தான் ஜெய்சங்கர்.

“ரொம்ப நோவுதா? எங்க கிட்ட மருந்து மாத்திரை ஒன்னுமில்லையே! ஓன் நிமிட் வெய்ட் பண்ணு! எதிர்த்த வீட்டு அக்காட்ட எதாச்சும் இருக்கான்னு கேட்டுட்டு வரேன்” என நகர்ந்தவனின் கையைப் பற்றினாள் பவளமல்லி.

Scroll to Top