KKP Epi 6(1)

அத்தியாயம் 6

ஆவிக்கு மிகவும் பிடித்த ஒரு உணவென்றால் அது இட்லிதான்!!! சென்னையில் நிறைய ரோட்டோர இட்லிக் கடைகளை காணலாம். கடையில்லாமல் வீதியோரத்தில் இட்லி பானையை வைத்துக் கொண்டு குடும்ப கஸ்டத்தைப் போக்க இட்லி அவித்து விற்கும் பெண்மணிகளையும் பார்க்கலாம். பண்டைய காலத்தில் இட்லியை இட்டரிக என அழைத்தார்கள். செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, குஷ்பு இட்லி எனப் பல பரிமாணங்களில் கிடைக்கின்றது இட்லி.

இரவே மறுநாளுக்கு வேண்டிய பரோட்டாவிற்கான மாவைப் பிசைந்து உருண்டைகளாக்கி வைத்து விட்டு, காலையில்தான் சால்னாவுக்கான ஆயத்தம் செய்வார்கள் ஜெய்சங்கரும் கோபாலும். கடைத் தெருவுக்குப் போய் வருவதாகச் சொல்லி கோபால் வெளியே போயிருக்க, சால்னா செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த சங்கரையே ஓரக் கண்ணால் பார்த்திருந்தாள் பவளமல்லி.

இவள் சங்கரின் வீட்டில் அடைக்கலமாகி அன்றோடு இரண்டு நாட்களாகி இருந்தன. வந்த நாள் இரவு இவள் பட்டான உதட்டை வைத்து அவன் கன்னத்தை அழுத்தமாய் பதம் பார்த்திருக்க, அவனோ கண்மண் தெரியாத ஆத்திரத்தில் பரதமே ஆடியிருந்தான். பெண் முத்தமிட்டால் ஆண் உச்சி குளிர்ந்து போவான் என எந்த மடையன் சொன்னது? பெண்ணிவள் முத்தத்தில் ஜெய்சங்கர் பேய்சங்கர் ஆகியிருந்தான்.

மல்லியின் மல்லி போன்ற உதட்டை(உதடென்றால் ரோஜாதானா? அந்த உதடுகள் மல்லிக்குச் சொந்தமாதலால், அதை மல்லி உதடென்றே கொள்ள வேண்டும்!) இரு விரல் கொண்டு அழுத்திப் பிடித்தவன்,

“இனிமேங் காட்டி பஜாரி மாதிரி என் மேல வந்து உழுந்து உரசன, தர்ம அடி குடுத்துருவேன் பாத்துக்கோ! போடி அந்தாண்ட! கிஸ்சடிக்கறாளாம் கிஸ்சு!” என அடிக்குரலில் உறுமியவன் பட்டென எழுந்து கொண்டான்.

கோபமாக லுங்கியை மடித்துக் கட்டியவன், கதவோரம் சொருகி வைத்திருந்த பீடியை எடுத்து வாயில் வைத்தபடியே வீட்டின் வெளியே போய் விட்டான்.  

அவனது குரலிலும் இறுகிப் போன உடல் மொழியிலும் பவளமல்லி ரொம்பவே பயந்து போனாள். அந்த மு(கு)த்த சம்பவத்தில் இருந்து இன்று வரை இவளை முறைத்தபடியே சுற்றிக் கொண்டிருந்தான் பரோட்டா மாஸ்டர். இவளும் கோபால் எதாவது கேட்டால் மட்டும்தான் வாயைத் திறப்பாள். மற்றபடி அவள் வந்த அன்று அமர்ந்திருந்த இடத்தை இவளுக்கேப் பட்டாப் போட்டுக் கொடுத்து விட்டதைப் போல, அங்கேயே தான் சாய்ந்து அமைதியாக அமர்ந்திருப்பாள்.

எதிர்த்த வீட்டில் இருந்து, கீழ் வீட்டிலிருந்து, மேல் வீட்டிலிருந்து எனப் பலர் சங்கரின் வீட்டுக்கு வந்து காட்சிப் பொருளை போல இவளைப் பார்த்து விட்டுப் போனார்கள்.

“தே! இங்க இன்னா படமா ஓட்டறாங்க!” என கோபாலும் சங்கரும் கடிந்து கொண்டும் கூட இந்த மியூசியம் பீசை(மல்லி) பார்க்க வருபவர்களின் எண்ணிக்கைக் குறையவில்லை.

இவள் சாவி வாங்கிய எதிர்த்த வீட்டுப் பெண்மணி காந்திமதிதான் அவ்வப்பொழுது வந்து இவளிடம் அனுசரணையாக நான்கு வார்த்தைப் பேசிப் போவார். அவரோடு அவரது ஐந்து பிள்ளைகளும் வால் பிடித்த மாதிரி வந்து விடுவார்கள். வரும் பொழுது எல்லாம் இவளுக்கென வீட்டில் சமைத்ததைக் கொண்டு வந்து கொடுப்பார் அவர். தயக்கத்துடன் இவள் வேண்டாமெனச் சொன்னால்,

“தோ பாரு புள்ள! ரெண்டு ஆம்பளையும் பரோட்டா, சால்னா, ஆம்லேட்டு, ஹோட்டலு பிரியாணின்னு துன்னுப்பாங்க! அதையே நீயும் எத்தினி நாளுக்கு துன்னுவ? நீ இங்க தேறிக்கற வரைக்கும் என் கையால சாப்புடு!” என வற்புறுத்துவார்.

ரத்த சம்பந்தம் இருந்தால் மட்டுமே பாசம் என்பது சாத்தியம் எனச் சிறு வயது முதலே கண் கூடாகக் கண்டிருந்த மல்லி, காந்திமதியின் பாசத்தில் நெக்குருகித்தான் போனாள். உணவை வாங்கிக் கொண்டால் இவன் என்ன சொல்லுவானோ என மல்லி ஓரக்கண்ணால் ஜெய்சங்கரைப் பார்த்து வைப்பாள்.

“நீ வச்சிட்டுப் போக்கா! அவ அப்பாலே சாப்டுப்பா!” என மறைமுகமாகச் சாப்பிடச் சொல்வானே தவிர, வாயைத் திறந்து சாப்பிடு எனச் சொல்வதை தவிர்த்தான் சங்கர்.

காந்திமதி வீட்டுக்குப் போனதும், அவசரமாக உணவை அள்ளி வாயில் திணித்துக் கொள்வாள் இவள். இல்லாவிட்டால் அதற்கு வேறு கையை நீட்டி விடுவானோ எனும் பயம் மனதைக் கவ்விப் பிடிக்கும். அவன் உதட்டைப் பிடித்த பிடியே அவ்வளவு வலித்தது அவளுக்கு! இந்த லட்சணத்தில் அடித்து வேறு வைத்தால் உயிர் பிழைப்போமோ என மேனி நடுங்கித்தான் போனது மல்லிக்கு.

கந்தமாறன் அடிக்கடி கை நீட்டும்படி இவள் வைத்துக் கொள்வது இல்லையென்றாலும், சில நேரங்களில் கனகாவின் மேல் உள்ள கடுப்பையெல்லாம் இவள் கன்னத்தில்தான் இறக்கி வைப்பான் அவன். அவ்வளவு பெரிய யானையையே பட்டினி போட்டு, அடைத்து வைத்து, அடித்துத் துன்புறுத்தி, அதன் உடல் உறுதியை இழக்க வைத்து சின்ன சங்கிலியில் கட்டிப் போட்டு வீட்டுப் பூனை போல மாற்றத் தெரிந்தவன் மனிதன். மெல்லிய மேனி கொண்ட பவளமல்லி இந்த துன்புறுத்தலுக்குப் பயந்து போனதில் வியப்பொன்றுமில்லையே! வெளியிடங்களில் தைரியமானப் பெண்ணாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவள் ஒரச்சங்கிலியால் பிணைக்கப்பட்ட யானைதான்.

வாய்ச் சொல்லில் வீரரடி என பாரதி சொன்னது போல இவள் வீரமெல்லாம் வாய் வார்த்தைகளில் மட்டுமே! அப்படிப்பட்டவள் துணிந்து ஜெய்சங்கரை முத்தமிட்டிருந்தாள் என்றால் எவ்வளவு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள் மல்லி எனப் புரிந்து கொள்ளலாம். அதற்கு சங்கரின் எதிர்வினையால் இப்பொழுது அவள் மனதில் அவன் இன்ஸ் நம்பர் இரண்டாகப் பதிவாகிப் போயிருந்தான்.  

அமைதியாக அமர்ந்திருந்தவளின் கை காலெல்லாம் துருதுருத்தது அந்த வீட்டைக் கூட்டிப் பெருக்கி, அழுக்கு பிசுப்பு எல்லாம் போகத் துடைத்துப் பளபளப்பாக்க வேண்டுமென. ஆனால் உரிமையாய் எதையும் செய்ய முடியாமல் மனதில் ஒரு தடை. எப்பொழுதும் போல தன் மேலேயேப் பாவமாகிப் போய் விட, மனம் கனத்துக் கிடந்தது. ஒரு பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்க, இங்கே இவர்களுக்குக் காலில் கட்டிய கல்லாய் பாரமாகிக் கிடக்கிறோமோ என மனம் தவியாய் தவித்தது.

அந்த நேரம்தான் தடதடவென பூட்ஸ் சத்தம் நாராசமாய் இவள் காதில் வந்து விழுந்தது.

உடல் அப்படியே தூக்கிப் போட,

“மாமா!” எனக் கத்தியபடியே எழுந்து ஜெய்சங்கரிடம் ஓடுவதற்குள் கொத்தாய் அவளது தலைமுடியைப் பிடித்திருந்தான் இன்ஸ்பெக்டர் கந்தமாறன்.

“யாருக்கிட்டடி உன் தில்லாலங்கடி வேலையக் காட்டற? ஓடுகாலி சிறுக்கி!” எனக் கத்தியவன் ஓங்கி அவளை அறைவதற்குள் தொப்பென கீழே விழுந்து கிடந்தான்.

“யோ இன்ஸூ!! யாரு மேல கைய வைக்கற? என் பொண்டாட்டிய்யா அவ! கண்டவன் மூச்சுக் காத்து அவ மேல பட்டாலே கொத்து பரோட்டா மாதிரி கொத்திடுவேன் கொத்தி! நீ அவ மேல கையையே வைக்கறீயா? அம்மாம் பெரிய தவுலத்தா நீ?” எனக் கேட்டபடியே கீழே கிடந்தவனுக்கு குனிந்து இன்னொரு பேயறை வைத்தான் ஜெய்சங்கர்.

பொண்டாட்டி எனும் சொல்லில் கந்தமாறன் மல்லியின் கழுத்தைப் பார்க்க,

“இன்னா லுக்கு?” என கேட்டப்படியே மல்லியை நெருங்கி அவள் நெஞ்சுக்குள் உறவாடிக் கிடந்த, சின்னதாய் தங்கத் தாலி கோர்த்து இவன் கட்டி இருந்த மஞ்சள் கயிற்றை வெளியே எடுத்துப் போட்டான் ஜெய்சங்கர்.

“ஊர்ல நீ மட்டும்தான் போலிஸா? எங்களுக்கும் போலிஸ தெரியும்டா டேய்! திருவான்மியூர் ஸ்டேஷன்ல நான் கைநாட்டு வைக்க, இவ கையெழுத்துப் போட புருஷன் பொஞ்சாதியாத்தான் வெளிய வந்தோம். அப்படியே கோயிலுல வச்சி தோ, இந்த ரெண்டுக் கையாலத்தான்..” என இரண்டு கரங்களையும் காட்டி, அதைக் கொண்டே இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தவன்,   

“தாலியையும் கட்டி இவளுக்கு புருஷனாவும், டொண்டிஃபோர்(டுவெண்டி ஃபோர்) ஹவர் காவக்காரனாவும் மாறி இர்க்கேன். இன்னா தைரியம் இர்ந்தா என் வூட்டாண்டயே வந்து என் ஆளயே இஸ்த்துக்குன்னு போவ ட்ரை பண்ணுவ!” என கேட்டப்படியே சரமாரியாக வெளுத்து விட்டான்.

ஆரம்பத்தில் அதிர்ச்சியில் இருந்த கந்தமாறனும் கொஞ்ச நேரத்தில் தேறிக் கொண்டான். எழுந்து நின்று சங்கரின் அடிகளைத் தடுக்க ஆரம்பித்தவன்,

“போலீஸ் மேலயே கைய வைக்கறியாடா நாயே! உன்னை லாக்கப்புல போட்டு முட்டிக்கு முட்டித் தட்டி, அதோட சேர்த்து குடும்பக் கட்டுப்பாடு பண்ணி விடல என் பேரு கந்தமாறன் இல்லடா!” என அவனும் ஆக்ரோஷமாகத் தாக்கினான்.

“ஆஹான்! அப்படின்னா நொந்த மாறன்னு மாத்தி வச்சிக்கடா என் சிப்சு!”

Scroll to Top