சண்டை என வந்தால் சட்டைக் கிழிவது சகஜம்தானே! இங்கே பரோட்டாவுக்கும் சட்டைக் கிழிந்து அங்கங்கே ரத்தமும் எட்டிப் பார்த்தது. அடி கொடுத்த மாஸ்டருக்கே ரத்தக் காயம் என்றால் அடி வாங்கிய இன்ஸுவின் நிலை!! ரத்த ஆறே ஓடியது கந்தமாறனின் உடலில்.
இவர்கள் இருவரின் அடிதடி சத்தத்தில் பல வீடுகளில் இருந்து ஆட்கள் திமுதிமுவென வந்து விட்டார்கள்.
“நம்ம சங்கருதான் ஜெய்ப்பான்கறேன்! பத்து ரூவா பெட்டு!” என பெட்டிங் வேறு ஆரம்பித்தது.
வீட்டின் உள்ளே இவளோ உறைந்து போய் நின்றாள்.
“எங்க வீட்டுப் பொண்ண கடத்திக் கொண்டு வந்து தாலி வேற கட்டிருக்க! எவ்ளோ திமிருடா உனக்கு?”
“தோடா! என் மாமானாரு(மாமா வேலை செய்யும் மாமனார்) நீ தெனம் குரும்பாடு வெட்டி ஆக்கிப் போட்டதுல, திமிரு கூடித்தான் போச்சு! இப்போ அதுக்கு இன்னாங்கற நீ?”
கந்தமாறனின் இரு கையையும் மடக்கிப் பிடித்து அவன் காதோரம்,
“எனக்கு வர ஆத்திரத்துக்கு வளத்தப் புள்ளயையே கூட்டிக் குடுத்த *******(மகா மோசமான கெட்ட வார்த்தை ஒன்று இங்கே வருகிறது) உன்னையெல்லாம் கொன்னு கூவத்துல வீசனும்னு மனசு துடிக்குதுடா பேமானி! ஆனா செய்யமாட்டேன்! எனக்கு என் பொண்டாட்டி கூட நூறு வருஷம் வாழனும். உன் உசுர எடுத்துட்டு கம்பி எண்ண நான் ஒன்னும் கேணையன் இல்ல. இனிமே என் மல்லி இருக்கற பக்கமே உன்னைப் பார்க்கக் கூடாது! அப்படி வந்த, உடம்புல ஒரு பீசு கூட வெளிய கண்டுப்புடிக்க முடியாத அளவுக்கு தடயமில்லாம கொத்திக் காக்காய்க்குப் போட்டுருவேன்.” என்றவன் ஓங்கி வயிற்றிலேயே முழு பலம் கொண்டு ஒரு குத்து விட, அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டான் கந்தமாறன்.
கண்கள் இரண்டும் மேலே சொருகிக் கொள்ள, அமர்ந்த வாக்கிலேயே பின்னால் சரிந்தான் அவன்.
“சார்பட்டா பரம்பரை என்னடா குத்துனான்! எங்க பரோட்டா பரம்பரைக் குத்துனான் பாத்தியா கும்மாங்குத்து! சங்கருடா, ஜெய்சங்கரு! எடு பத்து ரூபாவ!” என ஒரே ஆர்ப்பாட்டம் சண்டையை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மத்தியில்.
மயங்கிப் பொய் விழுந்து கிடந்தவனை, எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தபடி நின்றாள் பவளமல்லி. மனக்கண்ணில் ஒவ்வொரு தடவையும் அடிவாங்கிச் சுருண்டுப் போய் கிடக்கும் குட்டி மல்லியும், பெரிய மல்லியும் வந்து வந்து போக, உதட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் புன்னகை விரிந்தது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, உதட்டில் வடிந்த ரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக் கொண்டிருந்த தன் கணவனைக் கண்கள் மின்னப் பார்த்தவளுக்கு உள்ளமெங்கும் பரவசம் பூத்துக் குலுங்கியது.
தன் வீட்டின் முன்னே கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்தபடியே உள்ளே வந்த கோபால் அதிர்ந்து போனார்.
“அடேய் மவனே! உசுரு இருக்கா, இல்ல உருவிட்டியா?” என கேட்டபடியே கந்தமாறனின் அருகே போய் ஆராய்ந்தார்.
“எல்லாம் உசுரோடத்தான் இருக்கான். என் முன்னாலயே என் தேவா முடியப் புடிச்சு அடிக்க வரான் நைனா! மாமுல் வாங்கற இந்த மாமா பயலுக்கே இவ்ளோ தில்லு இருந்தா, உழைச்சி சாப்பிடற எனக்கு எவ்ளோ இருக்கும்.”
“அதானே!” என வெளியே நின்றிருந்தவர்கள் கோரஸ் கொடுக்க,
“சண்டையைத் தடுக்காம வேடிக்கைப் பார்த்துட்டு அதானே நோதானேன்னு! எடத்தைக் காலி பண்ணுங்கடா கஸ்மாலங்களா!” என கோபால் சத்தம் போட, கூட்டம் கலைந்தது.
தனது போனை எடுத்த ஜெய்சங்கர், தங்களது போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அழைத்து விவரத்தைச் சொன்னான்.
“ஒன்னுத்துக்கும் பயப்படாத நீ! தப்பெல்லாம் அவன் மேல இருக்கு. உங்க மூனு பேருக்கும் பாதுகாப்பு வேணும்னு நீ எழுதிக் குடுத்த கம்ப்ளேய்ண்ட அவன் காதுல போட்டு வைக்கறேன். அதுக்கும் மேல உன்னை நெருங்கமாட்டான். அப்படி நெருங்குனா விட்டுடுவோமா நாங்க! நேத்து ஸ்டேஷன்ல உங்கிட்ட நான் சொன்ன மாதிரியே வேலையை விட்டு தூக்கிட்டாங்க இவன. இப்போ பல்லு புடுங்கனா பாம்புடா அவன்! கந்தமாறன் மேல இல்லாத கேசு இல்ல! காசு வாங்கிட்டு ஏரியால நடக்கற ப்ராத்தல கண்டுக்காம இருந்தது, கஞ்சா கடத்தலுக்கு உடந்தையா இருந்தது, நெறைய கேச எப்.ஐ. ஆர் போடாம காசு வாங்கிட்டு களைச்சி விட்டதுன்னு அடுக்கிட்டேப் போகலாம். வாங்கன துட்ட கீழ வேலைப் பார்க்கறவங்களுக்குக் கொஞ்சம் குடுத்துருந்தாலாச்சும் தப்பிச்சிருப்பான். அடிச்சத முழுக்க அவனே ஆட்டைய போட்டா, மத்தவனுங்க சும்மாவா இருப்பானுங்க! நேரம் பார்த்து போட்டுக் குடுத்துட்டானுங்க! மேலிடம் பெரிய ஆப்பா வச்சிடுச்சு கந்தமாறனுக்கு. அது மட்டும் இல்லாம இவன் கந்து வட்டிக்கு கடன் வாங்கன பய பூராம் இவனை வலை வீசித் தேடிட்டு இருக்கானுங்க! எங்கயும் தப்பிக்க முடியாது அவன். இங்கிருந்து ஏட்ட அனுப்பிவிடறேன்! முன்னால் இன்ஸ ஆட்டோல போட்டு வீட்டப் பார்க்க அனுப்பி வைச்சிடுவாரு. நீ புது மாப்பிள்ளையா கவலை இல்லாம ஜம்முன்னு இருடா!”
“சரிங்க சார்”
“சங்கரு!”
“சொல்லுங்க சாரே”
“மீதி அமவுண்ட சீக்கிரமாக் குடுக்கப் பாரு என்ன! நமக்கு தெரிஞ்சப் பையன்னுதான் பாதி காசு வாங்கிட்டு கேச எடுத்துட்டு கல்யாணத்தையும் ஒரே நாளுல பண்ணி வச்சேன்! சார மறந்துடாதே”
“ரெண்டு மாசத்துல பணத்தப் புரட்டிருவேன் சார்! கண்டிப்பா குடுத்துடுவேன்” என வெளியே போய் மெல்லிய குரலில் பேசி முடித்தான் ஜெய்சங்கர்.
அந்த இன்ஸ்பெக்டர், பினாமி பெயரில் வைத்திருக்கும் கடையில் தான் வியாபாரத்துக்கு சரக்கெடுப்பான் ஜெய்சங்கர். அப்படி வந்த பழக்கம்தான் அவர்களுக்குள். பழக்கம் இருந்தாலும் பணம் இல்லாவிட்டால் எதுவும் சட்டென நடக்காதே! தனது கல்யாணத்தையும் லஞ்சம் கொடுத்துத்தான் சுமுகமாக முடித்திருந்தான் சங்கர். அவருக்கு மீதிப் பணத்தைக் கொடுக்க, இன்னும் நாயாய் பாடு பட வேண்டியது அவனது தலைவிதி.
சட்டம், ஒழுங்குமுறை, நியாயம், தர்மம் எனப் பலர் இருந்தாலும் இன்னும் சிலர் இப்படித்தான் காசுக்கு விலை போகும் காவாலிகளாக இருந்தனர். பெருமூச்சுடன் உள்ளே வந்தவனின் பார்வை பவளமல்லியின் மேல் மோதி நின்றது.
‘பொண்டாட்டி அடி நீதானே
என் ஸ்வீட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி
தேவையில்லை வைப்பாட்டி’ என மனம் சந்தோஷ கூச்சலிட்டது.
ஆனாலும் முகத்தைக் கடுகடுவெனத்தான் வைத்திருந்தான். அவளின் வைப்பாட்டி எனும் சொல் மனதை ரணமாய் கீறிக் கிழித்திருந்தது.
‘சட்டைக் கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்
பரோட்டா பிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்!!!!’ என அவன் மனம் ஊமையாய் அழுதது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
ஏட்டு வந்து கந்தமாறனை அள்ளிப் போட்டு கொண்டு போக, மகனின் காயத்துக்கு மருந்திட்டார் கோபால்.
“விடு நைனா! இதெல்லாம் ஒரு வலியா! உடம்புல அடிக்கறத விட நெஞ்சுல அடிக்கறதுதான் வலிக்குது! நீ கெளம்பு, வேபாரத்துக்கு டைம்மாச்சு! வீட்டப் பூட்டிக்கிட்டு உன் மருமகள பத்திரமா இருக்க சொல்லு! காந்திமதி அக்காட்டயும் இவள ஒரு எட்டு வந்துப் பார்த்துக்க சொல்லு நைனா! நான் போய் சாமானெல்லாம் எடுத்து வைக்கறேன்!” எனக் கிளம்பினான்.
“உன் மருமகளாமே! அப்போ உனக்கு பொண்டாட்டி இல்லையா? நேத்து கல்யாணம் முடிச்சு, இந்த ப்ளாக்குக்கே வெறும் குஸ்கா மட்டும் குடுத்துக் கொண்டாடன கெஞ்சப் பிசுநாரியோட பேச்சப் பாரு!” என முனகியபடியே அவன் சொல்லியதை செய்யப் போனார் கோபால்.
அவர்கள் கிளம்பியதும் இவளைப் பார்த்து போக வந்த காந்திமதியிடம்,
“யக்கா! புருஷன மயக்கி முந்தானையில முடிஞ்சிக்க என்ன செய்யனும்? ஒரே நைட்டுல ‘மல்லி மல்லி இது ஜாதி மல்லி’ன்னு என் பின்னாலயே சுத்தனும் இந்தாளு! அதுக்கு வழி சொல்லுக்கா!” எனக் கேட்டாள் பவளமல்லி.
அவள் தீவிரத்தைக் கண்டு வாயடைத்து போனார் காந்திமதி. சிங்கம் ஒன்று புறப்பட்டதே!!!!!!!!தாங்குவானா பரோட்டா?????
