அத்தியாயம் 7
பிரியாணி எனும் சொல் பிரியன் எனும் பெர்ஸியன் மொழியில் இருந்து மருவி வந்தது என அறியப்படுகிறது. இணையத்தில் பிரியணியைப் பற்றிய தேடுதல் ஒரு மாதத்திற்கு மட்டும் 4.56 லட்சமாக இருக்கிறது என கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. ஆம்பூர், ஹைதராபாதி, மலபார், திண்டுக்கல் பிரியாணி எனச் சென்னையின் மூலை முடுக்குகளில் உள்ள ரோட்டோரக் கடைகளில் கிடைக்காத வகைகள் இல்லை.
“மா…மா!!!”
வியாபாரத்துக்காகச் சமைத்துக் கொண்டிருந்தவன் அவளது அழைப்பில் நிமிர்ந்து பார்த்தான்.
தொளதொள சுடிதாரில் துப்பட்டாவின் நுனியைத் திருகியபடியே நின்றிருந்தாள் பவளமல்லி.
“இன்னா?”
“வந்து…”
செய்யும் வேலையை நிறுத்தி விட்டு அவளை நன்றாகப் பார்த்தான் ஜெய்சங்கர். நெற்றியில் பொடிப் பொடியாக வேர்த்திருக்க, கண்கள் இவனைப் பார்க்காமல் அங்கும் இங்கும் அலைபாய, மேனி மெலிதாக நடுங்கியபடி இருந்தது.
“சாகடிச்சுடுவேன்டி! என்னைப் பார்த்தா இன்னா பேய் மாதிரி இருக்கா? இன்னாத்துக்கு இந்த நடுங்கு நடுங்கற?”
அவன் சத்தத்தில் தூக்கிப் போட்டது இவளுக்கு.
“டேய் மவனே! இன்னாத்துக்குடா புள்ளய பேஜார் பண்ணுற?” எனக் குரல் கொடுத்தார் வரவேற்பறையில் கால் நீட்டிப் படுத்திருந்த கோபால்.
“கோவாலு! இது புருஷன் பொஞ்சாதி மேட்டரு! நீ கம்முனு கிட” என அவரையும் சத்தம் போட்டான் இவன்.
“சர்தான்!” என வாயை மூடிக் கொண்டார் அவர்.
“சொல்லு! இன்னா வோணும்?”
“கா…காசு!”
“இன்னாத்துக்கு துட்டு?”
“உடுப்பு வாங்கனும்” உள்ளுக்குள் உதறினாலும் மெல்லிய குரலில் சொல்ல வந்ததைச் சொன்னாள் இவள்.
“தோ பாரு மல்லி! ஒனக்கு தாலி கட்டன அன்னிக்கே, இனி நீ என் பொறுப்புன்னு போட்டுக்க துணிமணி எடுத்துக் குடுத்துட்டேன்! இனிமே பொங்கலு, தீவாளின்னு பண்டிக வரச் சொல்லத்தான் எடுத்துக் குடுப்பேன்! புரிஞ்சதா?” எனக் கறாராக இவன் சொல்ல, முணுக்கென கண்ணில் கண்ணீர் வழிந்து விட்டது இவளுக்கு.
அவனிடம் தன் இயலாமையைக் காட்ட பிடிக்காமல், சட்டென நகர்ந்து அறைக்குள் நுழைந்து கொண்டாள். பொங்கி வந்த கண்ணீரை கன்னம் சிவக்கும் அளவுக்கு அழுத்தித் துடைத்தாள். அதுவோ நிற்கமாட்டேன் என வழிந்து தொலைத்தது.
வாங்கித் தந்தான்தான். ஏழு செட் சுடிதார், துண்டு, பேஸ்ட், பிரஷ், சவர்க்காரம் என தனக்குத் தெரிந்த அளவுக்கு வாங்கித் தந்திருந்தான் ஜெய்சங்கர். இவளையும் அழைத்து சென்றிருந்தால், அவளது அளவுக்கு இவளே எடுத்திருப்பாள். துணிமணியோடு உள்ளாடைகளையும் வாங்கி இருப்பாள். இவனாக எடுத்து வந்தது எல்லாம் பெரிய சைசில் இருக்க, எல்லாம் தொளதொள எனத் தொங்கியது. அதைக் கூட சேப்டி பின் போட்டு ஒருவாறாக அணிந்து கொண்டாள். அதையே இரவில் நைட்டியாகவும் பயன்படுத்திக் கொண்டாள். ஆனால் உள்ளாடைகள்? இப்படி சில ஐட்டங்களைப் பெண்கள் உள்ளே அணிவார்கள் என அவனுக்குத் தெரிந்திருக்கவில்லையோ! அம்மா, அக்கா, தங்கையோடு வளர்ந்திருந்தால் ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். இவன்தான் மொட்டைப் பயலாக வளர்ந்திருந்தானே!
ஓடி வந்த போது போட்டிருந்ததையே இரவில் துவைத்துக் காற்றாடி காற்றில் காய வைத்து எத்தனை நாள் தான் அணிய முடியும். இன்னும் சில நாட்களில் மாதவிடாய் வேறு வந்துவிடும். அப்பொழுது என்ன செய்வது என ஒரே கவலைப் பெண்ணுக்கு.
இதற்காகவெல்லாம் ஆண்களைச் சார்ந்திருப்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என நன்றாகப் புரிந்ததுப் போனது மல்லிக்கு. அந்த வீட்டில் கனகா திட்டித் தீர்த்தாலும், மலிவு விலையில் இதெல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவார். இப்பொழுதோ, கணவன் எனும் ஆணிடம் அதுவும் அவளளவில் அந்நிய ஆணிடம் உள்ளாடைக்குப் பணம் கொடு எனக் கேட்கவே நா எழுவில்லை.
இவள் சட்டென உள்ளே வந்து விட்டாலும், கண்ணில் கண்ணீர் வடிந்ததைக் கவனித்து விட்டவனுக்கு மனது கேட்கவில்லை. அறையின் உள்ளே வந்து நின்றவன், கண்களும், கன்னமும், மூக்கும் சிவக்க நின்றிருந்த பெண்ணையே சற்று நேரம் பார்த்திருந்தான். பெருமூச்சுடன் அவளை நெருங்கியவன், லுங்கியின் இடுப்பில் மடித்துக் கட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து எண்ணி, ஆயிரம் ரூபாயை அவள் கைப்பிடித்து வைத்தான். பணத்தை வாங்காதே என ரோசம் கொண்ட மனது சொன்னது. வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாத அறிவோ காரியம்தான் பெரிது என மல்லிக்குப் பாடமெடுத்தது. பணத்தைப் பெற்றுக் கொண்டவள் மெல்ல நிமிர்ந்து,
“தேங்க்ஸ்!” எனச் சொன்னாள்.
“டாங்க்சு கெடக்குது! அடுத்த தபா இப்படி கண்ணைக் கசக்கிட்டு நிக்கக் கூடாது என் முன்ன! துட்டு ஒன்னும் மரத்துல காய்க்கல! உன் புருஷன் வேர்வையில காய்க்குது! பாத்துத்தான் செலவு செய்யனும்! வெளங்குதா?” எனக் கேட்க ஆமென மண்டையை ஆட்டி வைத்தாள்.
“மாமா”
ஆயிரம் ரூபாய் சுளையாய் போனதை நினைத்துக் கவலையில் இருந்தவனுக்கு அவளின் மாமா எனும் அழைப்பு புண்ணுக்கு புனுகு தடவியதைப் போல சுகமாக இருந்தது.
“ஹ்ம்ம்ம்”
“நீங்க வியாபாரத்துக்குப் போற நேரம், அக்கா கூட போய்ட்டு வந்திடவா துணி வாங்க?”
“பாத்து பத்ரமா போய்ட்டு வா” என்றவன் விட்ட வேலையைத் தொடரப் போனான்.
“ஏன்டா மவனே!”
“இன்னா நைனா?”
“நாங்களும் அல்வா துன்னுவோம்டா”
“துன்னு! இப்போ யாரு வேணான்னா. ஆனா என்னாண்ட காசு கேட்டுறாதே!”
கடை போடாத தினத்தில் கோபாலாவது அவர்கள் வீட்டில் ஓட்டுக்காகக் கிடைத்த குட்டித் தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பார். சங்கர் ரொம்பவே குறைவு அதெல்லாம் பார்ப்பது. கடை அடைக்கும் அந்த ஒற்றை நாளில்தான் சரக்கெடுப்பது, காய்கறி வாங்குவது என வெளி வேலைகள் செய்வான். அதற்குப் பிறகு கவிழ்ந்தடித்துப் படுத்து விடுவான். ஆறு நாட்களுக்கு உழைக்கும் உழைப்புக்கு அந்த ஒற்றை நாளில்தான் எனெர்ஜி ஏற்றிக் கொள்வான். அப்படிப்பட்டவனிடம் தவமாய் தவமிருந்து படத்தில் மருமகளுக்கு மட்டும் அல்ல, அம்மாவுக்கும் அல்வா பிடிக்கும் எனும் வசனத்தைச் சொன்னால் அவனும் என்னவென்றுதான் புரிந்துக் கொள்வான்.
“தேவா புள்ளைக்கு மட்டும் உடுப்பு வாங்க துட்டு குடுக்கற! எனக்கும் லுங்கி கிழிஞ்சுப் போச்சு! துட்டு குடு!”
“லுங்கி கிழிஞ்சா தெச்சுப் போட்டுக்க நைனா! புதுசு புதுசா உடுத்தி சோக்கு காட்டறத்துக்கு எந்த லதா உனக்காக காத்திட்டு இருக்கு?”
தனக்கு மட்டும் பணம் கொடுத்தது கோபாலுக்குப் பிடிக்கவில்லையோ எனச் சங்கடமாகிப் போனது மல்லிக்கு.
“அப்பா! மாமா குடுத்த காசுல பாதி நீங்க வச்சுக்குங்க” என நீட்டியவளைச் சிரிப்புடன் பார்த்தார் அவர்.
“கண்ணு! என் மவன பேஜார் பண்ணிப் பார்க்கறதுல ஒரு குஜாலும்மா! வயசு போன காலத்துல எனக்கு எதுக்கு புது உடுப்பு! நீ நல்லதா வாங்கி உடுத்திக்க தாயீ”
அவரது சிரிப்பில்தான் இவளுக்கு ஆசுவாசமாகியது.
அழுது பணம் வாங்கியவள், தனக்கே தனக்காய் வேண்டும் என நினைக்காமல் தன் தகப்பனுக்கு அதில் பாதியைத் தாரை வார்க்க முனைந்ததை பார்த்த சங்கருக்கு மெலிதாய் புன்னகைப் பூத்தது.
திருமணமாகி ஐந்து நாட்கள் ஓடியிருந்தாலும், இருவரும் இன்னும் தனித் தனியாகத்தான் படுத்தார்கள். வரவேற்பறையில் கோபாலுடன் இவன் பாய் விரித்துப் படுத்து கொள்ள, அவளோ உள்ளறையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டாள்.
“என்னடா மவனே? இப்படித் தனித் தனியா இருந்தா, எப்படா பேரன் வந்து என் வாயில பன்னீர தெளிக்கிறது?” என அங்கலாய்த்தார் கோபால்.
“பாவம் நைனா தேவா! வளத்த அப்பன் இப்படியானது, ஓடியாந்தது, வேற வழி இல்லாம என்னைக் கட்டிக்கிட்டதுன்னு பல அதிர்ச்சி அவளுக்கு. கொஞ்ச நாளு நம்மக் கூடலாம் நல்லா பழகிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம் மத்த மேட்டர” என அவர் வாயை அடைத்திருந்தான்.
அதோடு அவனுக்கு உள்ளுக்குள் அவள் மீது கோபம். எப்படி தன்னைப் பார்த்து வைப்பாட்டியாய் வைத்துக் கொள் என அவள் சொல்லலாம் எனும் ஆதங்கம். இத்தனை நாள் மரியாதையாய் தள்ளி நின்று சைட்டடித்தானே தவிர, தன் மூச்சுக் காற்று அவள் மேல் மோதியிருக்குமா எனும் ஆத்திரம். பின் ஏன் தன்னைப் பற்றி இவ்வளவு தப்பாக நினைத்தாள் எனும் எரிச்சல். இருந்த கோபத்தில் அவளை நெருங்கினால் எங்கே மல்லி மலரை கசக்கிப் பிழிந்து எறிந்து விடுவோமோ எனப் பயந்தான்.
அதனால்தான் நெஞ்சு முட்ட அவளை கட்டி அணைத்து காதல் செய்ய ஆசையிருந்தும் தள்ளியே நின்றான். அவள் பார்க்காத நேரத்தில் அவளைப் பார்வையால் கொள்ளையடித்தான். கல்யாணமாகியும் தள்ளி நின்று சைட்டடித்த ஒரே கணவன் இவன்தான் எனச் சொல்லிவிட ஆசைதான். ஆனால் முக்கால்வாசி நாவல் ஹீரோக்கள் இந்த கேட்டகரியில் வருவதால், வேண்டுமானால் அவர்களில் இவனும் ஒருவன் எனச் சொல்லிக் கொள்ளலாம்.
ஆண்கள் இருவரும் வியாபாரத்துக்குக் கிளம்பி இருக்க, இவள் அவசர அவசரமாய் அவர்கள் சமைத்து நாறடித்து விட்டுப் போயிருந்த இடத்தைக் கழுவி மொழுகி விட்டாள். கந்தமாறன் வந்து கூந்தலைப் பிடித்த தினம் முதன் முதலாக மாமா என ஜெய்சங்கரை அழைத்திருந்த மல்லி, அன்றிலிருந்தே அந்த மாமனையும் அவன் வீட்டையும் தனது உரிமையாய் நினைக்கத் தொடங்கி இருந்தாள். அவன் தொட்டுத் தாலி கட்டிய போது மனதினுள் வந்திராத உரிமை, என் பொண்டாட்டிட்டா என நெஞ்சை நிமிர்த்தி அவன் சொல்லி சொல்லி அடித்த நொடி வந்திருந்தது. ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என மனம் ஆலோலம் பாடியது. பிறகென்ன, அவள் கையில் அந்தக் குட்டி மாளிகைப் பளபளத்தது.
வேலையை முடித்துக் குளித்து வந்தவள், வேகமாய் தயாராகினாள். வெளியே போகிறோம் எனும் எண்ணமே உல்லாசத்தைக் கொடுத்தது பாவைக்கு. வீடு, பள்ளி, வீடு, வேலை என இருந்தவளுக்குக் கடைத் தெருவுக்குப் போவது என்னவோ கலிபோர்னியா போவது போல உற்சாகத்தைத் தந்தது.
“மல்லி!” எனக் காந்திமதியின் சத்தத்தில்,
“வந்துட்டேன்கா” எனப் பதில் கொடுத்தபடியே வெளியே வந்தாள்.
“வாப்புள்ள! சீக்கிரம் போய்ட்டு வந்துடலாம்! நாம போய்ட்டு வரதுக்குள்ள இதுங்க வீட்டை ரெண்டுப் பண்ணிடும்ங்க”
இரண்டு வயதான கடைசி மகனை மட்டும் கையில் தூக்கிக் கொண்டு, மற்றவர்களைப் பெரிய மகளின் பொறுப்பில் விட்டு விட்டுக் கிளம்பினார்கள் பெண்கள் இருவரும். பேருந்து எடுத்து, தி. நகரை அடைவதற்குள் வேர்த்து விறுவிறுத்துப் போனது.
குட்டியோ புது சித்தியுடன்தான் இருப்பேன் என அடம் பிடித்தான். கொழு கொழுவென இருந்தவனை இவளால் ரொம்ப நேரம் தூக்க முடியவில்லை, மூச்சு வாங்கியது. மகனை வாங்கிக் கொண்ட காந்திமதி,
