அத்தியாயம் 8
இந்தியர்களின் ஐஸ்க்ரீம் என அழைக்கப்படும் குல்பி, முகலாய ஆட்சியின் போதே உணவுப் பொருளாக இருந்தது எனச் சரித்திரம் சொல்கிறது. ரோஜா, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு, மாங்காய், பிஸ்தா இப்படிப் பல வகை ருசிகளில் கிடைக்கிறது இந்த குல்பி. சென்னை ரோட்டோரக் கடை வியாபாரத்தில் குல்பியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அன்று மாலை வெயிலும் அல்லாத மழையும் அல்லாத ஒரு ஏகாந்த பொழுதாக இருந்தது. வியாபாரத்துக்கு அவரசமாகக் கிளம்பிக் கொண்டிருந்த ஆண்கள் இருவரின் முன்னே வந்து நின்றாள் பவளமல்லி.
“என்ன கண்ணு?” எனப் பாசமாகக் கேட்டார் கோபால்.
“அப்பா! இன்னிக்கு நானும் வியாபாரத்துக்கு வரவா?”
“அதெல்லாம் முடியாது! நீ சொகுசா வூட்டுலயே இரு! அங்கிட்டு வந்து இன்னா பண்ண போற நீ! அடுப்பு சூடெல்லாம் தாங்காது உன் ஒடம்பு” எனப் பட்டெனக் கூறினான் ஜெய்சங்கர்.
இத்தனை நாட்களில் ஓரளவு அவனைக் கண்டு வைத்திருந்தாள் பவளமல்லி. ஓரளவுதான்! ‘பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும்’ என பாடி வைத்தவர்கள், ஆண் மனது என்ன கோலமென்று சொல்லி வைக்கவில்லையே! இரவில் மல்லி என் கள்ளி, பவளா என் அமலா, தேவா என் ஜீவாவென காதுக்குள் முணுமுணுப்பாய் கொஞ்சுபவன், பகலில் உர்ரெனத்தான் இருப்பான். உள்ளுக்குள் பாச ஊற்றே இருந்தாலும், அதை அதட்டலாகத்தான் காட்ட வரும் சங்கருக்கு.
முதல் நாள் சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்து முடித்த நொடி,
“உன் மேல நான் கொல காண்டுல இருந்தேன்டி! என்ன பண்ணியோ என்ன மாயம் பண்ணியோ, என்னைக் கன்னன் கழிய வச்சிட்ட!” என்றான்.
“கன்னன் கழிஞ்சிட்டீங்களா?” அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் குழப்பமாகக் கேட்டாள்.
“ஆமாடி! பொண்ணுக்குன்னா கன்னி கழிஞ்சிருச்சுன்னு சொல்வாய்ங்க! பையனுக்குனா கன்னன் கழிஞ்சிருச்சுன்னுதானே சொல்லனும்?”
அவன் சொல்லிய விதத்தில் அப்படி ஒரு சிரிப்பு மல்லிக்கு. அவனை இன்னும் இறுக்கிக் கொண்டவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். வாழ்நாளில் சிரித்திராத சிரிப்பையெல்லாம் அன்றுதான் சிரித்தாள் பவளமல்லி.
“இப்ப இன்னா ஜோக்கு சொல்லிட்டேன்னு இந்த சிரி சிரிக்கற?” எனக் கேட்டவனின் வாயில் அழுத்தமாக முத்தமிட்டாள் மல்லி.
“விட்றி!” என வாய் சொன்னாலும் கைகள் அவளை வாகாக அணைத்துக் கொண்டன.
புதிதாய் கற்றுக் கொண்ட வித்தையை மறுபடியும் பரீட்சித்துப் பார்க்க இவன் முயல,
“போதும் மாமா! மாவு பிசையனும்” என தடுத்தாள் இவள்.
“பெசைஞ்டிட்டுத்தான்டி இருக்கேன்” என்றவன் வாயை இறுகப் பொத்தியவள்,
“எந்திரிங்க மாமா” என எழுப்பிவிட்டாள்.
அதன் பிறகு இன்னொரு குளியல். மறுபடியும் மாவு பிசையும் படலம். சற்றுத் தள்ளி அமர்ந்து அவன் வேலை செய்வதையே பார்த்திருந்தாள் மல்லி. மாவு பிசையும் போது ரிதமாய் அசைந்த அவனது புஜங்களையும் வலுவான கரங்களையும் எப்பொழுதும் போல ஆசையாக பார்த்திருந்தாள் இவள். எல்லோருக்கும் முகத்தைப் பார்த்துக் காதல் வருமென்றால், இவளுக்கு அவன் கைகளைப் பார்த்தல்லவா காதல் வந்திருந்தது.
ஆம், காதல்தான்! மற்ற ஆண்களைப் போல ஆரம்பத்தில் இவனையும் கடந்துதான் போனாள் பவளமல்லி. கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு ரோமியோ போல இவளை சைட்டடித்தவனின் மேல் எரிச்சலாகத்தான் வந்தது. இவளை மடக்கவென கூடுதல் பரோட்டா வைத்தவனின் மீது ஆத்திரமாய் வந்தது. மற்றவர்கள் காசு கொடுத்து மடக்கப் பார்த்தால், மாஸ்டர் பரோட்டா கொடுத்து மடக்கப் பார்க்கிறானா எனக் கோபம் கிளர்ந்தது. ஆனால் அதன் பிறகு, அவளுக்காக அந்த இரண்டு புறம்போக்குகளை வெளுத்து எடுத்தவன் மீது ஒரு மரியாதை வந்திருந்தது. பசி என்றவளுக்கு உணவிட்டவன் மீது அன்பு வந்திருந்தது. தனது பாதுகாப்புக்காக அறிவில்லையா என ஆத்திரமாகத் திட்டியவனின் மீது பாசம் வந்திருந்தது. இது எல்லாவற்றையும் விட ஓங்கி ஓங்கி அடித்த அந்தக் கரங்களின் மீது தனி ஈர்ப்பு வந்திருந்தது. அன்றிரவு உறங்கும் முன் செய்யும் கற்பனையில், இன்ஸை அவன் அடி வெளுப்பது போல நினைத்துப் பார்த்து அவ்வளவு சந்தோஷமாக தூங்கினாள் பெண்.
மறுநாளில் இருந்து அவன் முகம் பார்த்து மெலிதாக சிரிக்க ஆரம்பித்தாள் மல்லி. ஆரம்பத்தில் சிரித்தவன், அவள் கிளினெரென தெரிந்ததில் இருந்து, அவளுக்குப் பரோட்டா சுட்டுக் கொடுப்பதைக் கூடச் செய்யாமல், அறுவறுப்பில் ஒதுங்கவும் அவள் மனம் பெரிதாய் அடி வாங்கியது. அன்றிரவு கண்ணீரில் தலையணை நனைந்து போனது. யாரும் தமக்கு வேண்டாமென அறிவு நினைத்தாலும், வெட்கம் கெட்ட மனது தனக்காக மெனக்கெட்டவன் திரும்பிப் பார்க்க மாட்டானாவென ஏங்கி அழுதது.
‘விடு விடு! பரோட்டாவுக்கு குடுத்து வச்சது அவ்ளோதான்!’ என தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டவளுக்கு இடியாய் வந்து இறங்கியது கந்தமாறனின் செயல்.
எங்கே செல்வது என அறிவு வேகமாய் யோசிக்க, சங்கரின் கரமே இவள் நினைவில் வந்து நின்றது. அடிக்கும் அந்தக் கரம் தன்னைக் கண்டிப்பாய் அரவணைக்கும் எனத் தோன்றியது. எப்படியாவது அவனிடம் அடைக்கலமாகி விட்டால், மற்றதை அவன் பார்த்துக் கொள்வான் எனத் தோன்றவும்தான் கோபாலுக்கு போன் செய்தாள். இப்பொழுதெல்லாம் தன்னை வெறுக்கிறானே அவன் என மனம் லேசாக சஞ்சலப்பட்டாலும், ஆரம்பத்தில் அவனுக்கு ஏதோ தன்னிடம் பிடிக்கப் போய்தானே வழிய ஆரம்பித்தான். அதை மீண்டும் ஊதிப் பெரிதாக்கிப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டுதான் இவனிடம் வந்திருந்தாள்.
“என்ன ரோசனை?”
இரு கால் முட்டிகளையும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அதில் தலை வைத்து அவனைப் பார்த்திருந்தவள்,
“என் மேல ஏன் கொல காண்டு மாமா?” என மெல்லிய குரலில் கேட்டாள்.
தூர ஓடி இருந்த கோபம் மீண்டும் மூக்கின் மேல் அமர்ந்து கொண்டது இவனுக்கு. பரோட்டா மாவை உருண்டைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தவன், உருண்டைகளைப் பொத்பொத்தென தூக்கிப் போடுவதில் ஆத்திரத்தைக் காட்டினான்.
“ஏன்னு மேடத்துக்குத் தெரியாதோ?”
“இல்ல, தெரியல! சொல்லுங்க மாமா”
“உன்னைப் பொண்டாட்டியா வச்சுக் குடும்பம் நடத்த எனக்குத் துப்பில்லன்னு நெனைச்சுத்தானே அப்படி ஒரு வார்த்தை கேட்ட? இருக்கற வரைக்கும் இவனுக்கு வைப்பாட்டியா இருந்துட்டு, பெரச்சனை முடிஞ்சதும் விட்டுட்டுப் எஸ்ஸாகிடலாம்னுதானே நெனைச்ச? இந்த சங்கர விட்டு எங்கயும் போ மிடியாதபடி கட்டுனேன்ல தாலி. அது ஒனக்கு வேலிடி! யார்கிட்ட!” என மிதப்பாய் சொன்னவனை முறைத்தாள் இவள்.
“இன்னா, இன்னா லுக்கு?”
“என்னைப் பார்த்து என்னமோ தீண்ட தகாதவளப் போலத் தள்ளி நின்ன மனுஷன் பேசற பேச்சா இது?” எனக் கேட்டவள், எழுந்து போய் அவன் கன்னத்தில் பட்டென ஓர் அறை வைத்து விட்டு குடுகுடுவென ஓடிப் போய் கதவருகே நின்று கொண்டாள்.
முதலில் அதிர்ந்தவன், அவள் தைரியத்தை பார்த்து அப்படி ஒரு சிரிப்பு சிரித்தான்.
“நீ பெரிய பிஸ்கோத்துன்னா அடிச்சிட்டு இங்கயே நிக்க வேண்டியதுதானேடி? எதுக்கு அம்மாம் தூரம் ஓடிப் போய் நிக்கிற?”
“நீ அடிக்க வந்தா, கதவு தொறந்து ஓடிடலாம்ல! அதான்!”
“அடச்சீ! பொண்டாட்டி மேல கைய வைக்க நான் இன்னா பொறம்போக்கு சொங்கியா? அதெல்லாம் அடிக்க மாட்டேன், கிட்ட வா”
“நெஜமா அடிக்கமாட்டியா?”
“வாடிங்கறேன்!”
மெல்ல எட்டெடுத்து வைத்து அவன் அருகே வந்து நின்றாள் மல்லி. பட்டென அவளை இழுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
“இந்த மாமன் கையால அடிக்க மாட்டேன்டி. வாயால அடிப்பேன்” என வசனம் வேறு பேச, இவளுக்கு முகமெல்லாம் புன்னகை.
“இந்த கோவாலுதான் உன்னைப் பார்க்க கூடாது, பேசக் கூடாது, பழகக் கூடாதுன்னு கன்டிஷனா சொல்லுட்டாருடி! நீ போலிஸ் வீட்டுப் பொண்ணாம்! நல்ல எடத்துல சீரோட கட்டிக் குடுப்பாங்களாம். அதனால நான் ஒதுங்கிடனும்னு ஒத்தக் காலுல நின்னாரு நைனா. நான் இன்னா பண்ணட்டும் சொல்லு? என் கூட இருந்தா, தோ இப்போ வாழுற மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்குப் பார்த்து வாழனும். எங்கயோ யார் கூடவோ ஜபர்தஸ்தா நீ வாழ்வன்னு நெனைச்சுத்தான் நான் ஒதுங்கிக்கினேன் தேவா! சத்தியமா உன்னையோ உன் வேலையையோ கேவலமா நான் நெனைக்கல! அப்படி நெனைக்க நான் இன்னா கலேக்டரு ஜோலியா பார்க்கறேன்!”
