கணவனிடம் பணத்துக்குக்ப் கையேந்திதான் ஆக வேண்டுமா? அதற்கு பதில் அவன் கையேந்தி பவனில் தானும் ஒரு அடுப்பை வைத்தால் என்னவென யோசனை வந்திருந்தது இவளுக்கு. தான் பார்க்கும் வியாபாரத்தில் வரும் பணத்தைத் தனக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கல்லா டப்பாவைப் பார்த்ததில் இருந்து மூளை கணக்குப் போட ஆரம்பித்து விட்டிருந்தது. நேரிடையாக நானும் வியாபாரம் செய்கிறேன் எனக் கேட்டால், அடுப்பில் வேக உனக்கென்ன தலையெழுத்தா என மறுப்பான் எனப் புரிந்துதான் இப்படி பிட்டைப் போட்டாள் மல்லி. ஆனால் அது சண்டையில் வந்து முடிந்திருந்தது.
“மாமா!”
“ஹ்ம்ம்”
“எனக்கு உன்னோட ஆயிரம் ரூபா வேணா”
“இன்னும் இன்னா கோபம் மல்லி! நான் சொன்னதெல்லாம் ராங்குதான். என்னை மன்னிச்சு சமாதானம் ஆய்க்கோடி!”
“அதுக்கு பதிலா உன் கடைல ஒரு ஓரத்துல வடை சட்டி வைக்க எனக்கு இடம் குடுப்பியா?”
“எதே!!!!!!!”
“ஆமா மாமா! தாயும் பிள்ளையுமா இருந்தாலும் கூட, வாயும் வயிறும் வேறதான்! எனக்கு ஒன்னு வேணும்னு அடிக்கடி வந்து உன் கிட்ட நிக்கப் பிடிக்கல மாமா. அந்த வீட்டுலத்தான் ஒவ்வொன்னுக்கு அவங்க கைய எதிர்ப்பாத்து நின்னேன்! காலம் முச்சூடும் இப்படியே அடுத்தவங்கள எதிர்ப்பாத்து நிக்கறது எனக்கு கஷ்டமா இருக்கு.”
“அதெல்லாம் முடியாது மல்லி! அடுப்பு வேலை ஜுஜூபின்னு நெனச்சியா! காஞ்சி கருவாடா போய்டுவடி”
“இந்தப் பூனைக்கு ஏத்தக் கருவாடா இருந்துட்டுப் போறேன்! முடியாதுன்னு மட்டும் சொல்லாதே மாமா! மெதுவடை, மசால்வடைன்னு ரெண்டு ஐட்டம் மட்டும் போட்டு பார்க்கறேன். அதுவும் நாலுல இருந்து ஆறு மணி வரைக்கும்தான். சரின்னு சொல்லு மாமா”
“நீ கேட்ட மாதிரியே மாசத்துக்கு ரெண்டாயிரம் குடுக்கறேன்டி! வூட்டுலயே இரு”
“முடியாது மாமா”
“மல்லி!!!”
கோபமாய் இவன் அரட்ட, அவன் பிடியில் இருந்து பட்டென எழுந்து கொண்டாள் பவளமல்லி. விரிந்து கிடந்த கூந்தலை அள்ளி முடித்தவள், தனது பாயைச் சுருட்ட ஆரம்பித்தாள்.
“இன்னாடி பண்ணற?”
“இனிமே மல்லி மல்லின்னு பின்னாலே வராத நீ! நான் போய் ஹால்லயே ஒரு மூலையில படுத்துக்கறேன்”
“அடியே ராங்கி! உன் மேல கைப் போடாம தூக்கம் வராதுடி எனக்கு”
“அப்போ முழிச்சிட்டேப் படுத்துக் கிடங்க”
“கொய்ந்தைப் புள்ளன்னு பாத்தா, என்க்கே விபூதி அடிக்கப் பார்க்கறல்ல நீ! போடி போ! பன்னீர் செல்வத்தப் பாம்பு கொத்துனா, அவன் வாயில நொறை வருமே தவுர பன்னீர் வராதுடி!”
“யாரு பன்னீர் செல்வம்? ஏன் அவன பாம்பு கொத்தனும்?”
“அதெல்லாம் பழமொழிடி! அனுபவிக்கனுமே தவுர ஆராயக்கூடாது. நீ வள்ளுவர் தாத்தா என்னமோ சொன்னருன்னு சொன்னியே, புர்லனாலும் நான் அனுபவிக்கல!”
அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“நல்லா கேட்டுக்குங்க! இன்னிக்கு மட்டும்தான் இந்த வெளி நடப்புன்னு நெனைச்சுக்காதீங்க மிஸ்டர் நாட் நாட் செவென்! என் கோரிக்கைக்கு ஒத்துக்காத வரைக்கும் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’னு பாடிக்கிட்டுப் பக்கம் வந்துடாதீங்க! இனிமே ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே!’தான் உங்களுக்கான பாட்டு! வர்ட்டா!” எனச் சொல்லி கதவருகே போனவளைப் பாய்ந்து பிடித்திருந்தான் ஜெய்சங்கர்.
“கில்லி மாதிரி ப்ளானு போட்டு நல்லா கவுக்கறீங்கடி ஆம்பளைங்கள! சரிடி, ஒனக்கு ஒரு அடுப்பு வச்சுத்தரேன், என் பொண்டாட்டி. நீ குடுக்கற சொகத்துக்காக ஆமாம் சொல்ட்டேன்னு மட்டும் நெனைச்சுக்காதே! ஒழைக்கனும்னு நெனைக்கறப் பாத்தியா, அதுக்கா வேண்டி ஒத்துக்குறேன்! ஆனாலும் என்னண்ட ஒரு ப்ராமிஸ் பண்ணிக்குடு”
“என்னன்னு?”
“செஞ்சுப் பார்த்துட்டு மிடிலனா, வேலையை வுட்டுறனும். நான் போடற மொதலு காந்தி கணக்குல போனாலும் பர்வால்ல! டீலா?”
“டீலோ டீல் மாமா” என முகம் மலர புன்னகைத்தவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் ஜெய்சங்கர்.
அவள் வேலையைத் தொடங்குவதற்கான மூலப் பொருட்கள், பண்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் வாங்கிப் போட்டான் சங்கர். மல்லி சொன்னது போலவே நான்கில் இருந்து ஆறு வரைதான் சுடச் சுட வடை சுட்டாள். ஆரம்பத்தில் மெதுவாக போன இவளது வியாபாரம், அடுத்த வாரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தேநீர் இடைவெளியின் போது, இவள் வடைக்காகவே வர ஆரம்பித்தார்கள் எம்.என்.சியில் வேலைப் பார்ப்பவர்கள்.
இவளை அறிந்திருந்த சிலர்,
“ஓய் பாப்பம்மா!” எனக் கலாட்டா செய்ய,
“எச்சுஸ்மீ தம்பிங்களா! இனி அவங்க பாப்பம்மா இல்ல, என் வீட்டம்மா!” எனக் கொத்து பரோட்டா கரண்டியை ஆட்டி ஆட்டி இவன் சொல்ல, அத்தோடு அந்த கிண்டல் பேச்சு ஒரு முடிவுக்கு வந்தது.
இவளோ யாரையும் கண்டு கொள்ளாமல், தனது வேலையை மட்டும் பார்த்தாள். ஆறு மணிக்கு மேல், மற்ற இருவருக்கும் உதவியாய் இருந்தாள். அவளுக்கென ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை பின்னால் கொண்டு வந்து வைத்திருந்தனர் ஆண்கள் இருவரும். அவள் கொஞ்சம் களைப்பாய் தெரிந்தால்,
“ஏ மல்லி! கொஞ்சம் உக்காரு” என இவனும்,
“கண்ணு! கொஞ்சம் ரெஸ்ட்டு எடும்மா” என கோபாலும் மாற்றி மாற்றிக் கவனித்துக் கொள்வார்கள்.
“மல்லி!”
“என்ன மாமா?”
வடை வேலையை முடித்துவிட்டு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள், நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.
“நமக்கு மேரேஜூ பண்ணி வச்ச இன்சு போன் போட்டாருடி”
“என்னவாம்?”
“உங்க அம்மா புருஷன் கந்தமாறன் கதை கந்தலாய்டுச்சாம்”
“என்னாச்சி?” என யாருக்கோ வந்த விருந்து போல அக்கறையில்லாமல் கேட்டாள் இவள்.
“கந்து வட்டிக்குப் பணம் வாங்கனா சும்மா வுடுவானுங்களா! இன்ஸா இருந்தாலும் எதாச்சும் பார்த்து செஞ்சிருப்பானுங்க! அதான் வேலையும் போச்சே! நேத்து வீடு பூந்து பைக்கு, நகை, பணம்னு அள்ளிட்டு, இன்ஸையும் பிரிச்சு மேஞ்சிட்டானுங்களாம்.”
“பிள்ளைங்களுக்கு ஒன்னும் இல்லைல?”
பெரியவர்கள் மேல் மட்டும்தானே வெறுப்பு இவளுக்கு.
“அந்தம்மா புள்ளைங்க கூட வெளியே போயிருந்த டைம்மு போல! இன்ஸ்க்கும் வூட்டுக்கும் மட்டும்தான் சேதாரமாம்”
“வினை வெதச்சா வினைதான் அறுப்பான். நீ வேலையைப் பாரு கண்ணு! அப்பான்னு நான் இர்க்கேன்! புருஷன்னு இவன் இருக்கான்! கண்டவங்க பத்தி இன்னாத்துக்குப் பேச்சு!” என அவர்கள் பேச்சை முடித்து வைத்தார் கோபால்.
அதன் பிறகு சின்ன சின்ன சண்டைகள் சமாதானங்கள் எனச் சீராகப் போனது இருவரின் வாழ்க்கை. சீராகப் போனால் சிலிர்த்துக் கொள்ளுமே விதி! அந்த விதியின் சதியால் பரோட்டாவும் மெது வடையும் பலமாய் மோதிக் கொண்டன. இவர்கள் நடுவில் அப்பாவி கோபால் அப்பளமாய் நொறுங்கிப் போனார். அப்பா என்பவளைச் சமாதானப்படுத்துவாரா? நைனா என்பவனைச் சமாளிப்பாரா? கோபால், கோபால்!!!!!! இப்படி சிக்கிட்டீங்களே கோபால்!!!!!
