விழுந்து கிடந்த மரம் பச்சை சுவராய் நடுவில் வேரோடு குடை சாய்ந்து கிடக்க , சட்டென்று தனித்தீவொன்றுக்கு சென்றுவிட்ட உணர்வுதான் வர்ணிக்கு. அவள் அதையே பார்த்தபடி அப்படியே நிற்க, அவளுக்குப் பின்னே சாஹித்யன் உரிய அரசாங்க அலுவலகத்துக்கு அழைத்து மரம் விழுந்ததை பற்றிய விபரத்தை சொல்வதையும், பதிலுக்கு அவர்களும் உள்ளே யாரெல்லாம் இருக்கிறார்கள், அவசர உதவி யாருக்கேனும் தேவையா என்று கேட்டுக்கொண்டும் இருந்தார்கள். இன்னொரு பக்கம் பார்வதி பதறியபடி தங்கை வீட்டில் இருக்கும் மகன் வினோத்துக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
அதை பார்த்தவளுக்கு ராக்கியின் நினைவு அப்போது தான் வர ஓடிப்போய் முன்பக்கம் பிளேட்டுக்கு கீழே பார்க் செய்த படி
அதிகரித்துக்கொண்டே வந்த வெள்ளத்துக்குள் பாட்டரபிளை ஸ்ட்ரோக் செய்ய முயன்று கொண்டிருந்த ஸ்கூட்டியை மாலுக்குள் இழுத்து வந்து விட்டாள்.
இன்னும் பாரு ஆன்ட்டி பேசி முடிக்கவில்லை.. “தங்கம் ஒண்ணுமே இல்லம்மா. அம்மா காலைல இந்த மரத்தை எடுத்ததும் வந்துடுவேன். நீ சித்திகூட சாப்பிட்டுட்டு, வருண், தருண் கூட விளையாடிட்டே இரு. காலைல மரத்தை எடுக்க வந்துருவாங்களாம், நான் உன்கிட்ட ஓடி வந்துருவேன்” என்று மகனுக்கு சமாதானம் செய்துவிட்டு போனை வைத்தவரின் கண்களில் கண்ணீர் துளிர்த்திருப்பதைப் பார்க்க வர்ணிக்கு பாவமாய் இருந்தது.
தன் கண்ணை துடைத்துக்கொண்டு அவர் “சாஹித்யா, அம்மாவுக்கு மருந்தெல்லாம் கொடுக்கணுமே… என்ன பண்ணப்போற?” லக்கி ஆன்ட்டியை பற்றி கரிசனமாய் விசாரிக்க
அவனும் “இங்கே பாதி, அங்கே பாதின்னுதான் வச்சிருப்பேன். இருக்கு” என்று மெலிதாய் சொல்ல, மெல்லிய சுயபச்சாத்தாபம் வர்ணியை தாக்கவில்லை என்றால் அது பொய் தான்.
ஆனால் அடுத்த கணம் நித்யா அக்காவிடமிருந்து வந்த போன் அவளது மனநிலையை மொத்தமாய் மாற்றிவிட்டது.
“அறிவிருக்கா வர்ணி? எங்கே இருக்கே, என்ன செய்றேன்னு ஒரு போன் போட்டு சொல்ல மாட்டியா? வேலைக்கு போனவளை காணோம்… வெள்ளம் வரப்போகுதுன்னெல்லாம் சொல்றாங்க… பொறுப்பு இருக்காடி உனக்கு?” என்று அடைமழையாய் திட்டி தீர்த்துவிட்டு, “இப்போ எங்க இருக்க? உன் ஸ்கூட்டியை தூக்கி கடாசு… நாங்க வந்து கூட்டிட்டு போறோம்” என்று அவர் பொங்க, அவளுக்கு சிரிப்பு வந்தது..
அவருக்கு மரம் விழுந்த விபரம் சொல்ல இன்னும் ப்ரெஷர் ஏறி கத்தியவரை அடக்கி, அவளோடு கூடவே பார்வதி ஆன்ட்டி, சாஹி, லக்கி ஆன்ட்டி எல்லாம் இருப்பதாக சொல்லவும் நிம்மதியானவர், “பிறகு சாஹி தம்பி கூட இருக்கறதால நிம்மதியா இருக்கு. நீ அவன் கூட எந்த வம்புக்கு போகாம பாத்துக்கோ… சும்மா அவரை சீண்டுறது, வம்பு பண்றது எதுவும் வேணாம்… எல்லாரும் எல்லா நேரமும் ஒரே போல இருக்க மாட்டாங்க, புரிஞ்சதா?” என்று சொல்லிவிட்டு அவர் போனை வைக்க,
“என்னடா, நான் தான் வேண்டுமென்றே அவனோடு வம்புக்கு போகிறேன் என்று முடிவாய் சொல்லிட்டாங்க அக்கா” என்று வர்ணி விழிக்க, பூஜாவிடமிருந்து அடுத்த கால் வந்தது.
அவளும் விசாரித்து, நிலவரம் கேட்டு அதிர்ந்து பிறகு , சாஹித்யன் பெயரை கேட்டு நிம்மதியாகி சொல்லி வைத்தவள் போல, “சாஹித்யன் அண்ணா கூட இருக்காங்கன்னு சொல்லவும் தான் நிம்மதியா இருக்கு. அந்தண்ணா கூட எந்த பிரச்சனைக்கும் போகாம பத்ரமா இரு!” என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ண, வர்ணி நொந்தே போய்விட்டாள்.
“நீ பெரிய இவனா?” என்று அவனை முறைக்கத் திரும்பினால், அவனோ இப்போது மால் சம்பந்தமாய் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தவன், இவளது பார்வையை கண்டதும் என்ன என்பது போல ஒரு பார்வை பார்க்க, “ஐயோ நானில்லை” என்று லக்கி ஆண்ட்டியின் அருகில் ஓடிப்போய் நின்றுகொண்டாள் வர்ணி. இதோ ஒரு இனம் தெரியாத பரபரப்பு அவளுக்குள் ஊற, உதட்டில் ஏனோ சின்னதொரு சிரிப்பு இழையோடியது.
பார்வதி மீண்டும் கண்ணீரைத் துடைத்துக்கொள்ள, “ஆன்ட்டி, வினோத் இருந்துடுவான். ஒரு நைட் தானே..நீங்க கவலைப்படாதிங்க” என்று சொன்னவளை சோகமாய் ஏறெடுத்து பார்த்தவர், “இன்னிக்கு நான் பாதுகாப்பா இருக்கேன். நாளைக்கு நிஜமாவே எனக்கு ஆபத்து வந்தா என் புள்ளை என்ன ஆவான்?” என்று விம்ம, பாவமாகிப்போனது வர்ணிக்கு.
“அப்படி என்ன கோபம்னு கேட்கிறேன்? ஒரு வாரம் ஆச்சு ஊருக்கு போய்… நான் இருக்கேனா, செத்துட்டேனான்னு கூட தேடவே இல்லை…” அவரின் சோக அம்பு இப்போது திசை மாறி கணவரிடம் போக, இதற்கு இவள் என்ன பதில் சொன்னாலும் பிரச்சனையாகுமே… லேசாய் அவரது கையை வர்ணி வருடித்தர, அவரின் விம்மல்கள் இன்னும் பெரிதாயினவே தவிர குறைந்தது போலில்லை.
பாவம், சிவாவோடு கோபமாய் எத்தனையோ தடவைகள் சண்டை போட்டு வெளிநடப்பு செய்த தருணங்களில் கூட அவர் கண்ணீர் விட்டு அழுது அவள் பார்த்ததே இல்லை. எல்லாவற்றையும் முன்னின்று நடத்துபவர் நொந்து அழுததை அவளால் பார்க்க முடியவில்லை.
லக்கி ஆன்ட்டியும் அதையே நினைத்திருக்க வேண்டும் “மழை விட்டுடும், வீட்டுக்கு போலாம். சாஹிட்ட சொல்றேன், மரத்தை எடுத்து போட்டுடலாம் . நீ அழாத.” தைரியம் சொல்ல
“எதே…” என்று அதிர்ந்தவள் “ ஆனாலும் உங்க பையனை பத்தி உங்களுக்கு ரொம்பத்தான் நினைப்பு, மேனேஜர். அவரு பெரிய ஹல்க்கா? எப்படி, எப்படி இந்த மரத்தை எடுத்து போட்டுருவாரா?”
என்று கேட்டபடி லக்கி ஆன்ட்டியின் கன்னத்தை கிள்ளியவள், அதற்குள் அருகே வந்திருந்த சாஹித்யனை கண்டு பம்மி, மெல்ல மெல்ல பார்வதி ஆன்ட்டியின் பக்கமாய் நழுவிவிட்டாள்.
மரம் வயர்களை இழுத்துக்கொண்டு விழுந்ததில் உள்ளே மின்சாரம் மொத்தமாய் தடைப்பட்டுப் போயிருக்க, ஐந்தே மணிதான் ஆனால் மழையும் இருளும் மிரட்டியது.
“நான் லான்ட் லார்ட் கிட்ட ஜெனரேட்டர் அறை சாவி எங்கே இருக்குன்னு கேட்டுட்டு வர்றேன்” என்று சாஹித்யன் எல்லாருக்கும் பொதுவாய் சொல்லிவிட்டு அகல, அப்போது தான்… வெளியே மீண்டும் படபடவென்று சத்தம் கேட்டது. மறுபடியும் என்ன ஆனது என்று பயந்து வெளியே ஓடினால், மழை இன்னும் ஆவேசமாய் சுழற்றி அடித்துக்கொண்டிருக்க, விழுந்து கிடந்த மரத்தில் கொஞ்சம் பெரிதான கிளையை ஒடித்துக்கொண்டு மரக்கிளைகளில் உருண்டு வந்து தரையில் விழுந்து நீருக்குள் அழுந்தியது ஒரு உருவம்!
“யாரு, யாரு?” என்று இவர்கள் பதற, நீரை கண்களில் இருந்து துடைக்க முற்பட்டபடி ஆங்காங்கே கீரல்களோடு எழுந்து நின்றது சாட்சாத் பார்வதி அங்கிளின் கணவர் சிவபெருமானேதான்!
“என்னங்க” என்றபடி பார்வதி அவரை நோக்கி ஓடிப்போனவர், சரியாக மழை படும் எல்லை வரை போய் வாசலிலேயே கண்கலங்க நின்று விட, அடிக்கும் மழைக்குள் மனைவியையே பார்த்தபடி அவர் நெருங்கி வந்த கோலம் ஒரு திரைப்படத்தின் காட்சியை போலவே தென்பட, வாயெல்லாம் பல்லாய் நாடியில் கைகளை தாங்கிக்கொண்டு குதூகலித்து நின்று கொண்டிருந்தாள் வர்ணி.
வந்தவரோ அவளது கற்பனைகளுக்கு எதிர்மாறாய், “அறிவு இல்லை உனக்கு? மழைக்கு முன்னாடி வீட்டுக்கு வர்றதுக்கு என்ன?” என்று பார்வதியை திட்ட ஆரம்பித்து விட, அவளுக்கு கொலைவெறி ஆகிப்போனது.
‘இத்தனை சர்க்கஸ் செய்து காயங்களை வாங்கி மழைக்குள் இவர் வந்தது மீண்டும் திட்டுவதற்கு தானா? பேசாம இந்தாளை பாரு ஆன்ட்டி, டிவோர்ஸ் பண்ணிடலாம்’ என்று அவள் மனதுக்குள் பொருமிக்கொண்டிருக்க,
மாலின் முன் வாசல் இரும்பு கேட்டை இழுத்து மூடி , “மரத்துல இருந்து பாம்பு எதுவும் உள்ளே வந்தாலும் வரும்” என்று சொன்னவன், பிறகு “ஈரத்துல ரொம்ப நேரம் நிக்க வேணாம். ட்ரெஸ் மாத்துங்க முதல்ல… ஏதாவது கடைல வச்சிருக்கீங்களா?” என்று சாஹித்யன் முறைத்துக்கொண்டே கேட்க, இருவரும் சட்டென்று தரைக்கு இறங்கினார்கள்.
“ஒரு வேஷ்டி செட் கடைல இருக்கும்” என்று கொண்டே அவர் அகல, பார்வதி ஆன்ட்டி அவரை தொடர, “இவன் ஏன் சம்பந்தமில்லாம அவரை முறைக்கிறான்?” என்று யோசித்துக்கொண்டே அனிச்சையாய் சாஹித்யனையும் லக்கியையும் தொடர்ந்தாள் வர்ணி.
“பார்க்கிங் மூலையில் இருக்கும் ஸ்டோர் பக்கம் தான் ஜெனரேட்டர் இருக்கு. நான் போய் அதை ஆன் பண்ண வைக்க முடியுமான்னு பார்த்துட்டு வர்றேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் ஜிம்மை தாண்டி பின் வாசலுக்கு செல்லும் படிகள் வழி இறங்க, லக்கியை ஒரு பார்வை பார்த்தபடி மேலே நின்று கொண்டே கீழே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
இரும்புக்கதவை அவன் லேசாய் திறந்ததுதான் காரணம், குபுகுபுவென்று தண்ணீர் உள்ளே வர, “சாத்துங்க, சாத்துங்க” என்று கத்தினாள் இவள். அவசரமாய் கதவை சாத்தி அடைத்து போட்டுவிட்டு மேலே ஏறி வர, “இப்போ எப்படி ஜெனரேட்டர் ஆன் பண்றது?” என்று பதட்டமாய் கேட்டாள் வர்ணி.
“கொஞ்சம் முன்ன சர்க்கஸ் பண்ணினியே, அந்த வழியா தூக்கி போடுறேன்… ஆன் பண்ணிட்டு வரியா?”
இமை கொட்டி விழித்தாள் வர்ணி… இவனா? இவனா என்னை நக்கல் பண்ணிட்டுப் போறான்? அவனது முகத்தை திரும்பி பார்த்தால், அவன் எதுவுமே நடவாதவன் போல இப்போது வேஷ்டி டீஷர்ட்டுக்கு மாறி தலையை துவட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்த சிவாவிடம், “பின் கதவை திறந்தா தண்ணி உள்ளே வருது… அந்த பக்க இடைவெளியில் கயிறை போட்டு இறங்கித்தான் ஜெனரேட்டரை ஆன் பண்ணனும்” என்று சொல்ல, இப்போது இருவரும் முன்னே நடக்க ஆரம்பித்திருக்க, பார் ஆண்ட்டி எங்கிருந்தோ அதற்குள் மெழுகுவர்த்திகளை ஆங்காங்கே தட்டு வைக்க ஆரம்பித்திருந்தார். அவளுக்குத்தான் நம் காதில் கேட்டது பிரமையோ என்ற பெருங்குழப்பம்!
“கயிறு இருக்கா?” அவர்கள் யோசிக்க…
“கும்ஸ் கடையில கடையை சுத்தி எல்லை மாதிரி போட்டு வச்சிருப்பான். அது நல்ல திக்கான கயிறுதான். நீளமாவும் இருக்கும்.” என்று வர்ணி சொல்ல
சாஹித்யன் சட்டென்று திரும்பி குமார் கடையை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்திருந்தவன், அவள் சொன்ன கயிறை பார்த்துவிட்டு, “ஓடிப்போய் கத்தி எடுத்துட்டு வா” என்று விட்டு கயிற்றின் ஒரு முனையை அவிழ்க்க ஆரம்பித்தான்.
