‘இந்த வர்ணி என்ன உனக்கு ஜீபூம்பாவா? வேலை சொல்லிட்டே இருக்கான்’ என்று பொருமினாலும் வேகமாய் அவள் டார்லிங் காபேயில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு வர, கழற்ற முடியாத முடிச்சை வெட்டி கயிற்றை அவன் தன் மேல் சுற்றிக்கொண்டு நடக்க, அவனை தொடர்ந்தவளை திரும்பி பார்த்தவன், “அந்த கத்தியை வச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டுப் போக, இந்த இருட்டுக்குள்ள நம்ம பக்கம் திரும்பின போல கூட தெரியல, எப்படி பார்த்தான் என்று யோசித்தாலும், கொஞ்சம் தூரத்துல இருந்தே கடைக்குள் கத்தியை எறிந்துவிட்டு ஓட்டமாய் ஓடி அவனோடு சேர்ந்து கொண்டாள் வர்ணி.
மொத்தமாய் இருட்டாகி மால் இப்போது அவளை மிரட்ட ஆரம்பித்திருந்தது. எங்கே போனாலும் என்னையும் கூட்டிட்டுப் போடா மனநிலையில் தான் அவள் அப்போது இருந்தாள்.
கயிற்றை அவன் ஒரு எல்லையில் கட்ட தாராளமாய் நீளம் இருந்தது.
“நீங்க பேசாம குதிச்சீங்கன்னா அங்கிருந்தே இந்த மாடியை தொட்டுரலாம்… இதெல்லாம் வேஸ்ட்டா?”
அவன் ஒரு முறை நிமிர்ந்து பார்க்க, பம்மிவிட்டாள் அவள்.
அவனோடு வருவதாக சொன்ன சிவாவை, “கை காலெல்லாம் காயமா இருக்கு… திரும்பவும் தண்ணி படவேணாம், அங்கேயே இருங்க” என்றதிலேயே அவர் அடங்கிவிட்டார்.
என்ன இவரையே சொல் பேச்சு கேட்க வைக்கிறான்? ‘இவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது’ என்ற சந்தேகம் இப்போது வர்ணிக்குள்ள பலமானாலும், இவர் லக்கி ஆண்ட்டியை திட்டினாரே… தெரிஞ்சவங்கன்னா அப்படி பேசுவார்களா யாராவது? குழப்பமாய் இருந்தது. ஆனால் அதற்கு மேல் அவளுக்கு யோசிக்க நேரமிருக்க வில்லை..
கயிற்றில் கீழே போன சாஹித்யனின் தொடையளவு தண்ணீர் நின்றதை இவர்கள் பயத்தோடு பார்த்திருக்க, தண்ணீரை கடந்து அவன் ஜெனரேட்டர் அறையை நோக்கி போய்விட்டான்.
இந்தப்பக்கம் சிவாவின் காயங்களுக்கு சற்றுத்தள்ளி முதலுதவி செய்கிறேன் என்று பாரு ஆன்ட்டி ஓரமாய் அமர வைத்திருக்க, “வர்ணி” என்ற சாஹித்யனின் குரல் கீழிருந்து வர, அடித்துப்பிடித்துக்கொண்டு மாடியின் எல்லைக்கு ஓடினாள் அவள்.
இப்போது தெப்பலாய் நைந்து தலையெல்லாம் நீர் சொட்ட கீழே வந்து நின்றவன் அவளை அண்ணாந்து பார்த்து “போன்ல சார்ஜ் இருக்கா?” என்று கேட்டான்.
“இருக்கு “
“அப்போ கயித்துல இறங்கு”
“நானா?” அவள் எச்சில் விழுங்கினாள்.
“தண்ணீருக்குள் இறங்க வேண்டியதில்லை… அதோ அந்த கல்லில் கால் வைக்கும் வரை வந்தாயானால் உன் டார்ச் வெளிச்சம் எனக்கு தெரியும்.”
“நான் வரவா?” என்று சிவா கேட்க
“இல்லை அங்கிள், நான் கீழே இறங்கலை…கீழே நீட்டிட்டு இருக்கற சுவர் வரை தான் போறேன் ” என்றபடி இந்தப்பக்கம் திரும்பியவள், “எனக்கு கீழேயே வந்து நில்லுங்க…” என்று கேட்டாள்.. கயிற்றில் கீழே இறங்கும் போது சறுக்கி விட்டால்?
“ப்ச்… நீ கீழே விழ மாட்ட, நான் பிடிச்சுக்கிறேன், கீழே இறங்கு.” அவனது உதட்டில் சிரிப்பு இருந்ததோ? அதை பார்க்க அவளுக்கு பயம் இடம் தரவில்லை.
எல்லா கடவுள்களையும் கூப்பிட்டபடி கயிற்றில் இறங்கிவிட்டவள் சுருள் அவன் காட்டிய கல்லில் கால் வைக்க, அது சற்றே பெரிய கல் தான், அவள் அதில் உட்காரவே செய்யலாம். நின்றபடி எப்படி உட்கார்வது, கொஞ்சம் அசைந்தாலும் விழுந்து விடுவோமோ என்று அவள் யோசித்து குழண்டுகொண்டு இருக்க, தண்ணீரில் நின்றபடியே அவளின் இரு கைகளையும் பிடித்து பட்டென்று வெளியே எடுத்து அந்த கல்லில் அமரவைத்துவிட்டவன், “இப்போ டார்ச் அடி” என்று விட்டுப் போய்விட்டதே விட்டான்.
வர்ணிக்கோ நிஜம் படபடக்கலானது.
“டார்ச்சை தண்ணீருக்குள் அடிச்சு மீன் பிடிக்க போறியா… வெளிச்சத்தை எனக்கு அடி.”
‘சரியான ஹாட் வாட்டர்…’
அவன் கதவை திறந்து உள்ளே போக, ஒரே இடத்துக்கு டார்ச் அடித்து போர் அடிக்க, அவன் தலையை சுற்றி ஒளிவட்டம் செய்து விளையாட ஆரம்பித்தவள், மீண்டும் அவன் திரும்பி பார்த்த பார்வையில் கையை அட்டென்ஷனில் வைத்துக்கொண்டாள். முடியலைடா சாமி இவன் கூட… ரொம்ப பொறுப்பு சாமியா இருக்கானே!
“உங்க கார் என்ன பண்ணுது?”
“இப்போதைக்கு பிரச்சனையில்லை,,ராத்திரிக்கு தண்ணீர் மட்டம் கூடினால் தான் பிரச்சனை. ஆனாலும் ஒன்றும் செய்யமுடியாது..மாலுக்குள் கொண்டு போயா நிறுத்த முடியும்?”
உதட்டை கடித்தவளுக்கு சிரிப்பு. ராக்கியை உள்ளே கொண்டு வந்து பத்திரப்படுத்தியதை பார்த்திருக்கிறான்.
அவனது சில பல முயற்சிகளுக்கு பிறகு ஜெனரேட்டர் இயக்கத்துக்கு வர, மாலின் மின்விளக்குகள் மீண்டும் ஒளிர ஆரம்பித்தன. கீழ்த்தள விளக்குகளை நிறுத்திவிட்டு அவன் வந்தவன் கையை அவள் புறம் நீட்ட, புரிந்து கொண்டு கையை பற்றிக்கொண்டு அந்த சுவரின் விளிம்பில் கால்வைத்து எழுந்து நின்றவள் ஏனோ அவனது முகத்தையே பார்த்திருந்தாள். அவனும் தண்ணீருக்குள் நின்றபடி அவளது பார்வையை விழிகளால் தாங்கி நின்றவன், பிறகு விழிகளால் கயிற்றை சுட்ட, முகம் சிவந்து போய் கயிற்றில் உருவத்தையே உணராமல் மேலேறி வந்துவிட்டவளுக்கு இன்னும் படபடவென்றிருந்தது.
‘ஹல்க்கு பொல்லாதவன்டோய் .. எல்லாமே இவனுக்கு தெரியுது… தெரியாதவன் மாதிரியே சுத்திட்டிருக்கான். இவன் கிட்ட ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போலையே!’
