இருவருக்கும் இடையில் இருந்த மௌனம் ஒரு இனிய அவஸ்தையைக் கொடுக்க, “மழை விடாதா? மின்னல் நான்ஸ்டாப்பா வந்துகிட்டே இருக்கு,” என்று எதையோ சொல்லிவைத்தாள் வர்ணி.
“சாப்பிடும்போது நியூஸ்ல சொன்னதை நீ கேட்கலையோ?” அவன் குரலில் சின்னக்கேலி இருக்க, “போடா, எனக்குத் தேவைதான். நான் தூங்குறேன்,” என்று தலையைத் தலையணையில் அழுத்திக்கொண்டவள் தூங்க முயன்றாள்.
தூக்கம் எப்படி வரும்? ஒரு மீட்டர் தூரத்தில் இருவரும் தனியாக உட்கார்ந்திருக்கும் போது வராத அவஸ்தை, ஏன் ஒரு மீட்டர் தூரத்தில் படுத்திருக்கும் போது வருகிறது? இந்த முதுகெலும்பு நிமிர்ந்து இருப்பதற்கும் சாய்ந்து இருப்பதற்கும் இத்தனை வேறுபாடா? போன்ற தத்துவார்த்தமான கேள்விகளெல்லாம் அவளைச் சுற்றிவர, “போங்கடா,” என்று விட்டவள் இப்போது குப்புறக் கவிழ்ந்து, தலையை நிமிர்த்தி ஓரக்கண்ணால் எதிர்ப்பக்கம் பார்க்க, கண்ணை மூடி ஒருக்களித்து சாய்ந்திருந்தவனின் முகத்தில் இருந்த சிரிப்பை மின்னல் காட்டிக் கொடுத்துவிட்டது.
நித்யானந்தா!
“எனக்குத் தூக்கம் வரலை.” என்றாள் கடுப்பாய்
“நீதான் தூங்கப்போறேன்னு போன…” அவன் குரலில் மெலிதான சிரிப்பு
ப்ச்… திரும்பிப் படுத்துவிட்டாள்.
சில நிமிடம் கழித்து, ” நீங்க ஏன் ஜிம்மை ஆரம்பிச்சீங்க? நவீன் போனவாரம் நீங்கதான் அவனோட மேற்படிப்புக்குப் பணம் கட்டினதா சொன்னான். நான் மேலே படிக்காம கடை ஆரம்பிச்சதுக்குக் காரணம் இருக்கு. எங்களுக்கு அடிப்படை இல்லை… உங்களுக்கு அப்படி இல்லையே… நீங்கள் ஏன் ஜிம்மை ஆரம்பிச்சீங்க, அவ்வளவு பிடிக்குமா என்ன?” என்று மெல்ல கேட்டாள் வர்ணி.
“இப்போ எதுக்கு அது?” என்று கேட்டாலும் அவனது குரலில் கோபமில்லை.
“சொல்லுங்களேன்…” என்று அவள் மேலும் ஊக்க
“எனக்கு இருபத்தி ரெண்டு வயசா இருக்கும் போது அப்பா இறந்துபோயிட்டார். அம்மாவோட நடவடிக்கைகளில் இருந்த வித்தியாசத்தை அவர் போனதுக்கு அப்புறம்தான் நான் கண்டுபிடிக்கவே செஞ்சேன். பிறகு அதுக்கான மருந்துகள், வைத்தியசாலை விஜயங்கள், அம்மாவோட நிலையை மனரீதியா ஏத்துக்கிறது, அவங்களை சமாளிக்கிறது, இப்போ அவங்க மொத்தமா மறந்துட்டாங்க. முன்னாடி அவங்களுக்கு நினைவு இருந்தும் இல்லாத நிலை….. அவங்களே எனக்கு எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குது’ ன்னு அழுவாங்க. ரொம்ப கஷ்டமான காலம் அது. பணவரவும் வேணும், அதோட அம்மாவையும் பார்த்துக்க முடியணும்… ஜிம் வேலை எனக்கு எல்லாத்துக்கும் செட்டாச்சு. அவ்வளவு தான்”
கேட்கவே மனதை பிசைந்தது அவளுக்கு. தனியாய் இருபத்திரண்டு வயதில் இருந்து பொறுப்புக்களோடு ஓடியிருக்கிறான். அவன் இறுகாமல் இருந்தால் தான் அதிசயம். அவர்களுடைய இளகலுக்கு முன்னான சாஹித்யனின் நடவடிக்கைகளில் இப்போது புது அர்த்தம் தொனிக்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவனுக்கும் அவளது நிலைமை புரிந்திருக்க வேண்டும். வேறேதும் கேள்வி இருக்கா? இல்லை அவ்வளவு தானா? என்று லேசான சிரிப்போடு கேட்டான்.
உடனேயே மீண்டு விட்டவள் “லக்கி ஆன்ட்டி பத்தி சொல்லுங்க.. அவங்க முன்னாடி எப்படி இருப்பாங்க? ஜாலியான ரொம்ப தன்னம்பிக்கையான மனுஷியா? என்ன பண்ணிட்டிருந்தாங்க? ரொம்ப நாளா இதை நான் கற்பனை பண்ணியிருக்கேன். சொல்லுங்களேன், அவங்க நிஜத்துல எப்படி இருப்பாங்க? அம்மா கிட்ட அடியெல்லாம் வாங்கியிருக்கீங்களா?” என்று கேட்க
ஒரு கணம் மௌனமாயிருந்தவன், “நிஜ அம்மாவுக்கு சமையலறையைத் தவிர எதுவும் தெரியாது வர்ணி. வாய் திறந்து அவங்க பேசினாலே அது அதிசயம். வீட்டை விட்டு வெளியே போறதெல்லாம் உலக அதிசயமா எப்போவாச்சும் தான் நடக்கும்,” என்றான்.
அவள் அதிர்ந்துவிட்டாள். “ஏன்? ஏன் அப்படி?”
“அப்பா,” என்றான் அவன் விழிகளை எங்கோ நிலைக்கவிட்டு.
“அவர் ஒரு பக்கா ஆணாதிக்கவாதி. சிவா சாருக்கெல்லாம் அவர்தான் குரு. நான் அம்மாவுடன் நெருங்கிப் பேசினால் கூட அது பெண்மைத்தனம் என்று என்னை கண்டிப்பார். பழைய அம்மா என்றாலே எனக்கு மனதில் வருவது சமையலறையும் உணவும், அப்பா இல்லாத தருணங்களில் அரிதாய் பேசும் அவர் குரலும், அவ்வப்போது கிடைக்கும் தலைவருடல்களும் தான்… அம்மா இப்போ வாழ்ந்து கொண்டிருப்பது அவரது அடிமனதில் நடக்காமல் போன ஆசைகளின் ஞாபகத் துண்டுகளாய் இருக்கலாம்.”
வர்ணிக்கு விழிகளில் நீர் நிரம்பிவிட்டது. அவள் இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. ஒரு பட்டாம்பூச்சியாய் சிரித்துக்கொண்டே தங்களின் கண்முன்னே சுற்றுவது ஒரு காயம் கண்ட ஆன்மாவின் நிறைவேறாத ஆசைகளின் மீந்துபோன விம்பம் என்று நினைக்கும்போது அவளுக்குத் தாங்கவே முடியவில்லை.
“அவங்களை நீங்க எப்போதுமே பாரமா நினைக்கக் கூடாது! நினைவே இல்லாம கோமாவில் இருந்தால் கூட அம்மா இருக்காங்க என்பதே ஒரு வரம் சாஹி” என்று அவள் சொல்ல
லேசாய் சிரித்தவன், “என்னைப்பொறுத்தவரை இந்த வியாதிதான் அவங்களுக்கு உயிர் வர வச்சிருக்கு. அது என்னிக்கும் எனக்கு பாரம் ஆகாது.” என்றான்.
அவள் மௌனமாகிவிட்டாள். மனம் முழுக்க அழுத்தமாகி விட்டிருந்தது. ஓடிப்போய் அவனை அணைத்துக்கொள்ள வேண்டும், ‘உன் பாரத்தில் பங்கு போட்டுக்கொள்வேன்’ என்று கத்திச் சொல்ல வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இருவரும் மௌனமாகவே இருக்க சற்று நேரம் ஷட்டரின் வழியாய் மின்னல்கள் தெறித்து தெறித்துப்போக இடிகளும் ஒரு லயத்துக்கு வந்து விட்டிருந்தன.
திடும்மென “நீ உன் அப்பா அம்மாவை மிஸ் பண்றியா?” என்று ஆழ்ந்து ஒலித்த அவன் குரலில் சட்டென்று அதிர்ந்துவிட்டாள் வர்ணி. இந்தக் கேள்வியை கேட்பதற்கு அவளுக்கு அருகே இதுவரை யாருமே நெருங்கியது கிடையாது. ஆனால் சாஹித்யன் கேட்டது அவளை கோபப்படுத்தவில்லை, தவிக்க செய்யவில்லை. ஒரு கதகதப்பான போர்வை அவளை மேலும் சுற்றியது போலத்தான் இருந்தது.
“தெரியாதவர்களை எப்படி மிஸ் பண்ண முடியும்?” என்று மின்னலையே பார்த்தபடி சொன்னாலும் அவள் மேலேயே படிந்திருந்த அவனது ஆழமான பார்வையைப் கவனித்தவள், “ஒவ்வொரு கஷ்டம் வரும்போதும், அவங்க என் கூட இருந்திருந்தா எனக்கு இந்தக் கஷ்டமெல்லாம் வந்திருக்காதுன்னு தோணும். இல்லைன்னு சொல்ல மாட்டேன், நானும் மனுஷிதானே…” என்று தோள்களைக் குலுக்கினாள்.
“நாளைக்கே அவங்க உன்னைப் பார்க்க வந்தால் என்ன செய்வ வர்ணி?”
“நோ, நோ, நோ. என்னை விடும்போது அவங்களுக்கு என்ன சூழ்நிலையோ, விட்டுட்டுப் போவோம்னு முடிவு பண்ணிட்டாங்க. அவங்க மேல எனக்கு கோபம் இல்லை. ஆனால் போனது போனது தான். இனிமேல் அந்த முடிவை மாத்துறது செட்டாகாது. ஒண்ணு கூடவே இருக்கணும்… இல்லையா? விலகிடணும். இரண்டுமில்லா நிலைக்கெல்லாம் நான் தயாரில்லை”
“அப்போ ஏன் இன்னிக்கு வரை அப்செட்டா இருந்த வர்ணி? பூஜா போனதாலயா?” என்னை விட அவன் தான் நிறைய கேள்விகள் கேட்கிறான். எல்லாவற்றையும் கவனிடத்துக்கொண்டே தான் இருப்பான் போலும் என்ற நினைவில் லேசாய் சிரித்தவள்,
“என்னதான் தனியா வளர்ந்தேன் என்றாலும் ஃப்ரென்ட்ஸ் கூடவேதானே இருந்தாங்க. வெளியே வந்தும் கூட பூஜாவும் நானும் ஒண்ணாவே தான் இருந்தோம். அவள் போனதும் வாழ்க்கையில முதல் தடவை வாழ்க்கையைத் தனியா சந்திச்சதுல கொஞ்சம் குழப்பங்கள்… சறுக்கல்கள்… எக்ஸட்ரா எக்ஸட்ரா…” அவள் சிரிக்க அது அவனையும் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும்
“ஆர் யூ ஓகே நவ்?” என்று மெலிதான புன்னகையோடு கேட்டான்.
“இருநூறு வீதம்…” அவளது ஆயிரம் வாட்ஸ் புன்னகையைப் பார்த்தவனும் சிரிப்போடு தலையைப் பாயில் சாய்த்துக்கொண்டான்.
சற்று நேரம் மௌனம் இருவரையும் இதமாய் சுற்றிக்கொண்டிருந்தது.
“சாஹி”
“ஹ்ம்ம்”
“உங்க வாழ்க்கையில ஒரு பெரிய கனவுன்னா அது என்னவா இருக்கும்? அது நிறைவேறணும்னு இல்லை. கனவாவே கூட இருக்கலாம். உங்க இதயம் ஆசைப்படுவது இந்த உலகத்துல ஒண்ணுன்னா அது என்னவா இருக்கும்?”
“எனக்கான ஒரு குடும்பம்” என்றது தயக்கமே இல்லாத அவனுடைய ஆழ்ந்த குரல்.
இங்கிருந்து தெரியாத வானத்தின் திசையையே இருளில் பார்த்துக்கொண்டிருந்தவளின் மனமும், ‘எனக்கும் தான்,’ என்று ரகசியமாய் சொல்லிக்கொள்ள, மின்னல் இருவர் முகத்திலும் இப்போது மெலிதாய் தெறித்துப்போனது.
