LV Epi 13(2)

“வீட்டுக்குள்ள போய் கொடுத்தா கூடிருமா? நான் ரெடிதான். நீதான் வெட்கப்பட்டு அப்புறம் நாளைக்கு கடைக்கு லீவ் போட்டுடுவ.”

“ஏய், நான் என்ன சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க?” என்று படபடத்தவளை பார்த்து  அவன் வாய்விட்டு சிரிக்க, “இந்த ட்ரஸ் ரொம்ப நல்லாருக்கு” என்றபடி உடையை தொட்டு பார்த்துக்கொண்டே வந்த  அம்மாவை கண்டதும் சாஹியின் விழிகள் விரிந்தன.

பாட்டிக் துணியில் நீளமாய் சட்டை போல முன்புறம் பட்டன்களும் பெல்ட்டும் வைத்து ஒரு உடையை அணிந்து கொண்டு வந்திருந்தார் அம்மா.

பட்டென்று ஒரே நிமிடத்தில் மாட்டிக்கொண்டு விடலாம்!

அவன் விழிகள் விரிய அவரையே பார்த்துக்கொண்டே இருக்க, அவன் மறுக்கப்போகிறான் என்று நினைத்தாளோ என்னமோ “வெளியே தான் போட்டுக்க வேண்டாம். வீட்டுக்காவது இதை போட்டுக்கட்டும் விடுங்க. அழகா இருக்காங்கல்ல  பொம்மை மாதிரி?” என்று மெலிதாய் கெஞ்சும் குரலில் கேட்க

அம்மாவையே இன்னும் விழி எடுக்காமல் பார்த்திருந்தவன் “இதே போல இன்னும் கொஞ்சம் தச்சு வாங்கி தர்றியா?” என்று மெல்ல கேட்டான்.

உடனே கண்களில் சந்தோசம் வெளிச்சம் போட்டுக்கொள்ள “அதெல்லாம் அஞ்சு செட் தான் தைக்க சொல்லியிருந்தேன். சும்மா உங்ககிட்ட பர்மிஷன் கேட்கற போல சீனை போட்டா உடனே நம்பிடறதா?” என்று அவள் குறும்பாய் கண்சிமிட்ட, அவனுக்கும் சிரிப்பு வந்தது.

“என்கிட்டே சொல்லிருக்கலாம்ல. பணம் கொடுத்திருப்பேன். அஞ்சு ட்ரெஸ்ஸுக்கு நிறைய பணம் செலவாயிருக்குமே…” என்று அவன் வருத்தமாய் கேட்க

“ஆங்.. அதெல்லாம் வாங்கிப்பேன். சும்மா யாராவது கொடுப்பார்களா?” என்று அவள் சிரிக்க, இவளோடு முடியாது என்பது போல தலையசைத்துக்கொண்டே “நன்றி” என்று முணுமுணுத்தவன், “கதவை பூட்டினாலும்  உள்ளேயும்  ஒரு பார் வச்சு பூட்டு. ஒரு தட்டு தட்டினா கதவு கழன்று விழுந்திரும் போல.” என்று அந்த கதவை இழுத்து பார்த்தான்.

“இந்த கதவு கழன்று விழுதா? திருடன் உங்களை மாதிரி ஜிம்பாயா இருந்தா தான் சாத்தியம்” என்றாள் அவள் பதிலுக்கு குறும்பாய்.

மீண்டும் எதிர்வீட்டு கதவு திறந்து தலையை நீட்டிய நித்யா அசடுவழிய  உள்ளே மறைய, சாஹிக்கு ‘ஹையோ’ என்றிருந்தது.

“நான் கிளம்பறேன். ரொம்ப தாங்க்ஸ். குட்நைட்” என்று அம்மாவை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு அவன் அகல, “நாளைக்கு லன்ச் செய்யாதீங்க, கொண்டு வர்றேன்” என்று குரல் கொடுத்தாள் அவள் பின்னிருந்து.

“இதுக்கு மேல லன்ச் பண்ணிட்டு இருக்காத. நான் சமாளிப்பேன்.”

“அதெல்லாம் ஆன்ட்டியும் நானும் அப்போவே பண்ணிட்டோம்.”

வேறேதும் சொல்ல முடியாமல் “சரி” என்று தலையசைத்தவன், தன் அம்மாவை அழைத்துக்கொண்டு இறங்க, காரில் ஏறும் வரை அவளின் பார்வை அவர்கள் மீதே படிந்திருந்தது. இதமாய் அவனை சுற்றி படர்ந்திருந்த அந்த உணர்விலேயே அவனுக்குப் புரிந்தது.

மறுநாள் எப்போதும் போல அவன் டார்லிங் காபேக்கு உணவுக்குப் போக, லன்ச் கேரியரோடு வந்து அருகில் அமர்ந்தாள் வர்ணி.

“லேட் பண்ணிட்டேனா? கஷ்டமர் அதிகம் வர்றாங்க, சமாளிக்க முடியலை. பிரபலமான ஷாப்பா இருக்கறது ரொம்ப கஷ்டம். அது உங்களுக்கு புரியாது”எடுத்த எடுப்பிலேயே அவனை சீண்டியவளை மேலும் கீழும் பார்த்தவன்

“அது சரி. ஆமா, அப்புறம் எதுக்கு காபி விக்கலைன்னு ஈவினிங் டோர் டெலிவரி பண்றியாம்?” என்று சிரித்தான் அவன்.

“ஹலோ, நான் ப.மு.க. வுக்கு டோர் டெலிவரி கொடுக்கறது ஒரு வியாபார தந்திரம். காபி விக்கலைன்னு ஒன்னும் பண்ணலை. கொடுக்கறதுக்கு காசு வாங்கிக்கிறேன்ல…”

பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே அவள் செய்திருந்த நாணை எடுத்து சன்னா மசாலாவில் தோய்த்து சாப்பிட ஆரம்பித்தான் சாஹித்யன்.

நிஜமாகவே நல்ல உணவகத்தில் சாப்பிடும் சுவையில் இருந்தது அந்த உணவு. “பேசாம காபிக்கடையை விட்டுட்டு ரெஸ்டாரண்ட் ஆரம்பி, நல்லா போகும்.” என்று அவன் சொல்ல

“தேங்க் யூ. ஆண்ட்டிதான் எனக்கு குரு. இல்ல ஆண்ட்டி?” என்று அம்மாவை கூட சேர்த்துக்கொண்டாள் அவள். அவளை அதற்காகவாவது  பாராட்டி விட்டால் கண்ணை பார்க்க முடியாமல் திணறி ஏதேனும் கிறுக்குத்தனம் செய்வது வழக்கம் தானே..

“ஹ்ம்ம்.. சொன்னா டக்குனு பிடிச்சுக்கிறா கற்பூர புத்தி” என்று அம்மா அவர் போக்கில் சொல்லிவிட்டு சந்தோஷமாய் சாப்பிட ஆரம்பித்திருக்க, சாஹிக்கு சிரிப்பு வந்து விட்டது.

‘இதேதடா கற்பூரத்துக்கு வந்த சோதனை!’

“இப்போல்லாம் நீங்க என்னை கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க. நான் ஆரம்பிச்சேன், அப்புறம் என்னை குத்தம் சொல்லக்கூடாது என்று மிரட்டலாய் சொன்னவள்  அப்பா, இப்போதுதான் வயிறு ஹாப்பியா ஆகுது. உங்களால  என் பயோலாஜிக்கல் க்ளாக்கே மாறிடுச்சு தெரியுமா?”என்றபடி ரசித்து இன்னொரு துண்டை வாயிலிட்டு கொள்ள

அவனுக்கு அப்போதுதான் புரையேறிவிட்டது. அப்போதுதான் அவளுக்கும் புரிந்திருக்க வேண்டும்; முகம் சிவந்து, “நான்… நான்… எனக்கு பதினொன்று  நாற்பத்தைந்துக்கு பசிக்கிறதைத்தான்  சொன்னேன்” என்றாள்.

“நான் ஒண்ணுமே சொல்லலையே” அவன் சிரிப்போடு சொல்ல,

“கடைல யாரும் இல்லையா?” என்றபடி டார்லிங்ஸுக்குள் நுழைந்தார் ஒருவர். வர்ணி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பித்து ஓட நினைத்து சாப்பாட்டை மூட, பட்டென்று அவள் கரம் மேல் தன் கரத்தை வைத்தான் சாஹி.

அதற்குள் முன் வாயில் வழியாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்த சிவபெருமான், “ஓனருக்கு லன்ச் நேரம் இது. பன்னிரண்டு மணிக்கு வந்துருவாங்க. அஞ்சே நிமிஷம் தான் இருக்கு, வந்துருவாங்க. அதுல உக்காருங்க” என்று மெல்லிய சிரிப்போடு அந்த கஸ்டமருக்கு கைகாட்டி விட்டுப் போக, இப்போது சாஹிக்கும் லேசாய் முகம் சிவந்தது.

‘அஹீம்!’ மெல்ல அவள் கையை உருவ முற்படவும் தான் , சுய உணர்வுக்கு வந்து கையை விலக்கியவன் , “சாப்பிட்டுப் போ” என்றான் மெல்லிய குரலில்.

அவள் அவசரமாய் எல்லாவற்றையும் வாய்க்குள் அடைத்துவிட்டு ஓடிப்போக, வந்திருந்த புதிய கஸ்டமரை ஒரு ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான் சாஹி. இப்போல்லாம் மாலுக்குள் புதிய ஆட்கள் அடிக்கடி தென்படுகிறார்கள். இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமோ? சரியாக கண்டுகொள்ள முடியவில்லை. வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை இன்னும் முற்றாய் சரி செய்து முடிக்காத காரணத்தால், அதை சரி செய்யும் நோக்கில் அடிக்கடி புதியவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு அம்மா குமாரின் கடைக்குப் போய்விட, டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு காபேயின் வெளிப்புறமாய் இருந்த கைகழுவும் பகுதியில் கழுவி, பக்கப்புறமாய் உள்ளே வைத்தவன் வர்ணியை ஏறிட்டுப் பார்த்தான். இன்னும் அந்த ஆளுக்கு எதையோ எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தவளின் கண்களும் இவன் மேலேதான் இருந்தன. ஏனோ தப்பித்து ஓடியவளை வம்பிழுக்க தோன்ற

“இன்னிக்கு அமெரிக்கானோ வேணாம்” என்று காபேயில் இருந்த போர்டில் அமெரிக்கானோவை தொட்டு சைகையில் சொன்னவன், “அப்புறம்?” என்று அவளும் சைகையில் விழி விரிக்க, ஹாட் சாக்லேட் படத்தை தொட்டுக்காட்டி விட்டு லேசான சிரிப்போடு வெளியே வர, அந்த ஆள் இவர்களையே மாறிமாறி பார்ப்பது புரியவும், நேராக அவனையே ஊன்றிப் பார்க்க, மெல்ல  பார்வையை விலக்கிக்கொண்டு பம்மி விட்டான்,

சாஹி வெளியே வர

‘இது நானா இல்ல?

பழசெல்லாம் சொல்ல?

புது சந்தேகங்கள் உருவானது!’ என்று ஐஸ்கிரீம் கடையில் பாட்டு பிட்டாய் வர, குமாரையும் ஒரு முறைப்பு முறைத்து அதை நிறுத்த வைத்தவன்  அம்மாவை கூட்டிக்கொண்டு போய்விட்டான்.

ஹப்பா, ஒவ்வொரு நாளும் மதியத்தை கடக்கறதே எனக்கு பெரிய டாஸ்க்கா இருக்கு என்று அவனது மேல் மனம் சொன்னாலும், உதடுகளில் சின்ன சிரிப்பு அழகாய் பூத்திருந்தது.

Scroll to Top