LV–Epi 8(1)

அன்றிலிருந்து நான்கு நாட்களுக்குத் தொடர் மழை என்று காலையில் வானிலை அறிக்கை சொன்னது சரிதான் போலும்; காலை எட்டு மணியே விடியாதது போல மூடிக்கிடந்தது. காரை விட்டுவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு பரமேஸ்வரி மாலின் முன்பக்கமாக வந்து கொண்டிருந்தான் சாஹி.

ஆட்கள் நடமாட்டம் காலை ஒன்பது மணிக்கு மேல் தான் வரும் என்பதால் இப்போது யாருமே கண்ணில் படவில்லை.

“பார்த்து வாங்கம்மா” என்று முணுமுணுத்தவன் பக்கப்புற நடைபாதையில் ஏற, “பிசினஸ் பண்ணணும்” என்றபடி வந்து இணைந்து கொண்டார் அவனுடைய அம்மா.

“அது சரி, மானேஜர் போஸ்டை விட்டு இப்போ பிசினசுக்கு போயிட்டீங்களா?” என்று அவன் கேட்க,

“இல்லேப்பா… பொண்ணுங்களுக்கு அவங்களுக்கே அவங்களுக்குன்னு கையில இருக்கணும்ல. நானும் பிசினஸ் பண்ண போறேன், கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாது.”

அம்மா இளைமைக்காலத்துக்குப் போய்விட்டது புரிய லேசாய் புன்னகைத்தவன், “அப்படி என்ன பிசினஸ் பண்ண போறீங்க?” என்று கேட்டான்.

கொஞ்சம் யோசித்தவருக்கு அப்படியே அந்த நினைவுகள் அறுபட்டுவிட்டன; மௌனமாகிவிட, இதற்குப் பழகிப்போய்விட்ட சாஹி புன்னகை மாறாமல் தொடர்ந்து நடந்தான்.

“அவ எங்கே?” திடுமென அம்மா கேட்க,

“யாரம்மா?” என்றான் சாஹி குழப்பமாய்.

“உன் பொண்டாட்டி.”

அதிர்ச்சியில் காலை சுவரோடு இடித்துக்கொண்டபடி, “எனக்கு கல்யாணம் ஆகலைம்மா” என்றான் நெற்றியைச் சுருக்கியபடி. எங்கிருந்துதான் இதெல்லாம் யோசிக்கிறாங்களோ தெரியல…

“ஆமாம்ல, ஆகலைல்ல… பண்ணிக்கோ, வயசு போயிடும்.”

அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. “சரி, சரி… பண்ணிக்கிறேன், நீங்க வாங்க” என்று அவரை அழைத்துக்கொண்டு படிகளில் ஏற, “அவ வேலைக்கு போகட்டும்” என்றார் அவர்.

“போகட்டும்” இவனும் தன் போக்கிலேயே ஆமோதித்தான்.

“சில பேர் கெட்டவங்க…” அம்மாவின் முகம் சின்னக் கடுமையை பூசிக்கொண்டது.

“யார்மா?”

“அந்த நீள மூக்குக்காரன். பொண்டாட்டியை அடிமையா நினைக்கிறான். நீ நினைக்கக் கூடாது.”

“நினைக்கலைம்மா…” எதையோ சொல்லி வைத்தான் சாஹி. டாக்டர் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்; அவர் போக்கிலேயே போனாலும் அவரிடம் சாதாரணமாய் பேசும்படி…

“ஸ்கூலுக்கு போகலையா?”

அழுவதா சிரிப்பதா என்றே தெரியாமல் அவரின் கையைப் பற்றியவன், “அம்மா, உன் பையனுக்கு இருபத்தெட்டு வயசு. ஸ்கூலெல்லாம் பத்து வருஷம் முன்னாடியே முடிஞ்சு போச்சு” என்று சிரிக்க, அவரும் புன்னகைக்க, இருவருமாய் வந்தவர்கள் பேக்கரி வண்டிக்காரன் காச் மூச் என்று கத்தும் சத்தத்தில் சாஹியின் நெற்றி சுருங்க எட்டிப்பார்த்தான்.

“ஏம்மா, ரெண்டு வாரமா கணக்கு சரிபார்த்து கொடுக்கலை. தர்றேன், தர்றேன்னு தினமும் சொல்ற…அவ்வளவு சோம்பல் பட்டவ எதுக்கு கடை நடத்துற? வீட்ல போய் உக்காந்துக்க.”

வர்ணி இதழ் கடித்துக்கொண்டு தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள்; இன்னும் மாலில் யாரும் வந்திருக்கவில்லை.

கொஞ்ச நாளாகவே இவள் சரியில்லை… அவனும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான். அம்மாவை பத்திரமாய் பார்த்துக்கொள்கிறாளே என்ற அக்கறையில் என்னவென்று கேட்கப்போய் மூக்குடைந்ததுதான் மிச்சம்!

“நீங்களெல்லாம் கடை நடத்தலைன்னு யார் அழுதா?”

வர்ணி அதற்கும் எதிர்வினை ஆற்றாது நிற்க, சாஹிக்கு பொறுமை போய்விட்டது.

“ஏய், இங்கென்ன சத்தம்?” என்று கேட்டான் அதட்டலாய்.

வர்ணி அவன்கண்டு சட்டென்று எங்கோ பார்க்க, அந்த வண்டிக்காரன், “சார், இந்தப் பொண்ணு இரண்டு வாரமா அக்கவுண்ட்ஸை பார்த்துக் கொடுக்க மாட்டேங்குது” என்று பம்ம,

“அதுக்கு? இப்படித்தான் சத்தம் போடுவியா? கணக்கு வரலைன்னா வரும் வரை சப்ளை பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு போ… தேவையில்லாத பேச்சு எதுக்கு வருது?”

“அது கோபத்துல…”

“கோபத்துல யாரை வேணா பேசிடுவியா? எங்கே அடுத்த கடைக்காரன் கிட்ட போய் பேசு பார்க்கலாம்?  சின்னவங்கன்னா நாலா மடியிற எலும்பு கூட நிமிர்ந்து நிக்குதுல்ல?” அவனது விழிகள் உக்கிரமாய் அந்த வண்டிக்காரன் மீது படிய

“அவனை விடாதே சாஹி!” என்று உற்சாகப்படுத்தினார் அம்மா.

 வர்ணி இப்போது லேசான சிரிப்புடன் அம்மாவை வந்து தன்னோடு  இழுத்துக்கொள்ள, அந்த வண்டிக்காரன் ” கொஞ்சம் விட்டால் சாஹியை  ஏற்றிவிட்டே தன்னை அடிக்க வைத்து விடுவார்கள்” என்று நினைத்தானோ என்னமோ, அவன் விழிகள் விரிய, அவசரமாய், “மன்னிச்சுக்கம்மா” என்று முணுமுணுத்துவிட்டு வண்டியை கிளப்பிக்கொண்டு பறந்துவிட்டான்.

“ஆண்ட்டியை நான் இப்படியே கூட்டிட்டு போறேன். மெடிசின்ஸ் ஏதும் காலைல எடுத்துக்கணும்னா கொடுங்க…” இவனது கண்ணை மட்டும் விட்டுவிட்டு எங்கோ பார்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தவளை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தவன், பிறகு தோள்பையில் இருந்த மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தான்.

“எட்டே முக்காலுக்கு கொடுத்தால் போதும்.”

அவள் தலையசைத்தாள்.

ஏன் இப்படி இருக்கா? என்று அவன் விழிகள் அவள் மேல் படிய

“மானேஜர்! குட்மார்னிங்! உங்களுக்கே ஒரு ஸ்பெஷல் ஃபிளேவர் வெயிட் பண்ணுது. டேஸ்ட் பண்ணி சொல்லுங்க” என்று குமாரின் குரல் எல்லாரையும் மொத்தமாய் கலைத்து விட்டது.,

“பப்லூ” என்றபடி அம்மா ஓடிச்செல்லவும்,

“ஐஸ்கிரீமா?” என்று அவன் கலவரமாய் பார்க்க,

“அது நிஜ ஐஸ்கிரீம் இல்லை… வெறும் பழம் தான். அதுவும் கொஞ்சம் தான் கொடுப்பான். எங்களுக்கும் மூளை இருக்கு தெரியுமா?” என்று வழக்கமான வர்ணி திரும்ப வந்து விட்டாள்

“இதுங்க கூட நின்னு பேசினா இப்படித்தான்” என்று கடுப்படித்துக்கொண்டு ஜிம்முக்கு போய்விட்டான் சாஹி. ஆனாலும் மனதுக்குள், பிசினஸ் செய்பவளுக்கு அக்கவுன்ட்ஸை சரியாய் பார்த்து முடிக்க முடியாமல் அப்படியென்ன தலைபோகும் வேலை? கேட்டால் இடக்கு மடக்காய் ஏதாவது சொல்வாள். உனக்கேன் இந்த தேவையில்லாத ஆணி? உன் வேலையை பாரு… இப்போல்லாம் ரொம்பத்தான் பொதுநல வாதி, அதுவும் அந்த காப்பிக்கடை நலவாதியாகிட்டே வர்ற… நல்லதுக்கில்லை மகனே! என்று மனம் எடுத்துரைக்க, அவன் உதட்டைக் கடித்துக்கொண்டு வேலையில் மூழ்கிவிட்டான்.

அன்றைக்கு பெரிதாய் மாலில் கூட்டம் இல்லை; மழை வரப்போவதாலேயோ என்னமோ, வழக்கத்தை விட சூழல் அமைதியாய் இருந்தது.

மதியம் வேலையை முடித்து அம்மாவை சாப்பிட வைக்க டார்லிங் காபேக்குப் போனவன், கவுண்டரில் இருப்பவள் கண்கள் இப்போது அவனையே தொடர்வதை அறியாதவன் போல அந்தப்பக்கம் திரும்பாமல் தன்னுடைய வழக்கமான மூலைக்கு போய் சேர்ந்துவிட்டான்.

“சாஹி… நாலு மணிக்குப் பிறகு மழை பயங்கரமா வரும்னு சொல்லிட்டிருக்காங்க… அம்மாவை இன்னிக்கு சீக்கிரமே கூட்டிட்டு போயிடு… அப்புறம் மழை பெருசாகி நனைஞ்சு பிரச்சனை ஆகிடாம” என்று சதாசிவம் சார் சொல்லிக்கொண்டு போக, அவனும் அந்த எண்ணத்தில் தான் இருந்ததால் தலையசைத்தவன், அவர் சிரித்துக்கொண்டு மறைவதை பார்த்துக்கொண்டிருக்க, டொக் சத்தம் அவனை நிமிர்ந்து பார்க்கச் சொன்னது.

வரணிதான். ஒரு டிபன் கேரியரை அவனுக்கு முன்னே நீட்டிக்கொண்டிருந்தாள்.

‘என்ன இது? உடனடியாய் மறுத்து விடு. இதெல்லாம் அவனுடைய அமைதியான வாழ்க்கையை திசை மாற்றும்’ என்று மூளை அபாய எச்சரிக்கை செய்ய, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அவள் முகத்தில் பதில் தேடுவது போல நிமிர்ந்து பார்த்தான்.

அவள் முகத்திலும் லேசான சிவப்பு.

“வெறும் மூணு சைட் டிஷ் தான் கொண்டு வந்தேன். தனியா எனக்கு மட்டும் சமைக்க முடியல… ஆன்ட்டிக்கும் சேர்த்து செஞ்சேன்.”

“இதெல்லாம் வேணாம், எடுத்துட்டு போ” என்று கோபமாய் சொல்ல வந்தவன், அவளது எதையோ எதிர்பார்த்த அலைபாயும் விழிகளைக் கண்டதும் அப்படியே வாய்க்குள் விழுங்கிக்கொண்டு, “நன்றி” என்று மட்டும் முணுமுணுக்க, அவளும் மின்னலாய் அவ்விடம் விட்டு அகன்றுவிட்டாள்.

உருளைக்கிழங்கு குழம்பு, ஒரு காய்கறி, கூடவே பொரித்த சிக்கன் துண்டுகள் நான்கு இருந்தன. அதற்குள் இயல்பாய் அதை எடுத்து பரிமாறிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்திருந்தார் அம்மா.

அவருக்கு மட்டும் கொண்டு வந்தாளாம். அவனும் எடுத்துக்கொண்டால் இரவுக்கும் வரும். இந்தப்பெண்ணுக்கு ஏன் இந்த வேலை? இதை ஏற்பதா மறுப்பதா என்று அவன் உள்ளம் தடுமாற…

“நான் சொன்னேன்ல, எங்கம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க… இதை கொஞ்சம் சாப்பிட்டு பாரு, சூப்பரா இருக்கு” என்று அம்மா சிலாகித்துப்பட்டியபடி அவனது தட்டிலும் கொஞ்சத்தைப் பரிமாற்ற, சாஹியின் கைகள் அப்படியே உறைந்து போயின.

அவனுக்குத் தெரியும்; அம்மாவுக்கு இப்போது அவருடைய பெற்றோரோடு வாழ்ந்த ஞாபகங்கள் தான் பெரிதும் இருப்பதால் அவர் அதை பற்றி துண்டு துண்டாய் பேசிக்கொண்டிருப்பார். ஆனாலும் வர்ணியை தன்னுடைய அம்மாவின் நினைவுகளோடு பிணைத்ததை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவனை சுற்றி என்ன நடக்கிறது என்று புரிய முன்னரே ஒரு உணர்வுச்சுழல் தன்னை எங்கோ  சுழற்றி செல்வது போலிருந்தது அவனுக்கு.

மெல்ல திரும்பி டார்லிங் காபேயின் கவுன்டரைப் பார்த்தான்; கணினித்திரையைப் பார்த்தபடி அவர்களின் முன்னிருந்த அதே டிபன் கேரியரைப் பிரித்து வைத்துக்கொண்டு, சாப்பாட்டில் கவனமில்லாமல் ஸ்பூனில் அனிச்சையாக உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டிருந்தாள் வர்ணி. மனதின் ஆயிரம் எச்சரிக்கையையும் மீறி சாஹியின் கண்கள் அவள் மேல் வெகுநேரம் படிந்திருந்தன.

தொடரும்..

Scroll to Top