“வெயிட் ஏ மினிட்!” சாஹியை முந்திக்கொண்டு ஐஸ்கிரீம் கடையைத் தாண்டிக்கொண்டு மாலின் அடுத்த எல்லையை நோக்கித் தலைதெறிக்க ஓடலானாள் வர்ணி .
“எங்கே போற?” என்று கத்திக்கொண்டே பின்னால் அவனும் வர,
எல்லையில் இருந்த அரைச்சுவரில் நின்று எட்டிப்பார்த்தவளுக்கு இப்போது சிரிப்பு முட்டிக்கொண்டு வர, வாய்விட்டுச் சிரித்தாள்.
அவளுக்குப் பின்னே ஓடிவந்திருந்தவன் அவனும் எட்டிப்பார்த்து, “அம்மா” என்று களைத்துப்போன குரலில் சொல்லி, இடமும் வலமும் தலையசைத்தவன் ஆசுவாசமாகச் சுவரில் அப்படியே சாய்ந்துவிட்டான்.
கேஎஸ் தளம் பார்க்கிங் என்பதால் மாலின் இந்தப்புற எல்லைக்கும் அருகில் இருந்த ஸ்டாருக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும்… அந்த இடைவெளிக்கு மறுபக்கம் ஸ்டாருக்கு மேலே பிளேட் போடப்பட்ட தண்ணீர் தொட்டி கூரையோடு இருக்கும்… காலையில் அவரது புது மழைப்பாட்டுத் தோழியோடு காரிடர் முழுக்க பாடிக்கொண்டே நடந்து கொண்டிருந்தவர்கள், இந்த அரைச்சுவரில் நின்றுதான் ‘வான் மேகங்களே வாழ்த்துக்கள் கோருங்கள்’ என்று பாடிக்கொண்டிருந்தார்கள்.
அதற்கு காபேயிலிருந்து யாரோ இசைப்பாட்டுப் பாடியதால் தான் வர்ணி அவர்களைக் கவனித்தாள்.
நன்றாக நீட்டிக்கொண்டிருந்த கூரையின் சௌகர்யத்தில் தண்ணீர்த்தொட்டியின் விளிம்பில் கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு விச்ராந்தியாய் அமர்ந்து லக்கி ஆன்ட்டி மழையைப் பார்த்துக்கொண்டிருக்க, இவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“உங்கம்மாவுக்குத் தில்லை பார்த்தீங்களா? அவங்க கூடப் பார்க்கும்போது நீங்க வேஸ்ட் தல… எவ்ளோ தைரியமா பிளேட்டிங்கை ஏறி, சுவர்ல ஏறி, பக்கத்துப் பிளேட்டிங் போய் ஜாலியாக உக்காந்திருக்காங்க!” என்று சிரித்தவள் அவன் முறைக்கவும், நமுட்டு சிரிப்போடு ஒரே தாவில் அந்த அரைச்சுவரில் கால் வைத்து, சுவரில் இரண்டு கால் வைத்து பாலன்ஸ் செய்ய, மழையின் ஈரம் மொத்தமாய் நனைத்து வைத்திருக்க, சரேல் என்று கால் வழுக்கி இரண்டு பில்டப்பிங்குக்கு இடையில் நழுவ ஆரம்பித்தாள்.
பயமும் பதட்டமும் கவ்விக்கொள்ள அவள் அலற வாய் திறக்க, முழங்கால் வரைதான் கீழே போயிருக்கும், அதற்குள் ஒரு வலிய கரம் அவளைத் தோளோடு சுற்றி கிடுக்கிப்பிடி போட்டுச் சுழற்றி, அந்த இடைவெளியில் இருந்து வெளியே எடுத்து கீழே வைத்துவிட்டு, “அறிவு இருக்கா உனக்கு, கீழே விழுந்தா என்ன ஆகிறது?” என்று கடிந்துகொண்டது.
“மழை… சறுக்கி…” என்று வார்த்தைகளைத் தந்தியடித்தவளுக்கு, அவனது கரம் இன்னும் தன் மேல் இரும்பாய் இறுக்கி இருப்பதை உணர முகம் செவ்வானமாய் சிவந்து போனது.
அவனோ அந்த எண்ணமே இல்லாமல் குனிந்து பார்த்தபடி முணுமுணுவென்று அவளைத் திட்டிக்கொண்டிருந்தான்.
‘அடேய் ரோபோ, கையை எடுத்துட்டுத் திட்டுடா!’
அவள் மெல்ல நெளிய ஆரம்பிக்க, அப்போதுதான் தன் கரத்தைக் கவனித்தவன், பட்டென்று கையை எடுத்து விலக்கிக்கொண்டு, நடந்தது தனக்குத் தெரியவே தெரியாதது போல, “எப்போ பார் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திட்டே இருக்கணும்? மூளைன்னு ஒன்னை எதுக்கு வளர்த்து வச்சிருக்க?” என்று முறுமுறுத்தாலும், கன்னங்களில் ஏறிய லேசான சிவப்பும், அவளது கண்ணைப் பார்க்காமல் பார்வை அரைச்சுவரை முறைப்பதைக் கண்டதும், அவனுக்கும் புரிந்துவிட்டது என்று இவளுக்கு வெட்கமாகிப் போனது.
‘தலைவன் அவ்வழியோ, தொண்டனும் அவ்வழி… உனக்கும் எதுவும் தெரியாது… அப்படியே நடிச்சிடு கைப்புள்ள!’ என்று அவளுக்கு சொல்லிக்கொண்டவள்
“தல, உங்க கையை கொடுங்க, இந்த தடவை விழாம போய் வெற்றியோடு வர்றேன்” என்று அவள் ஸ்கர்ட்டை மடித்துக்கட்ட, “ஒண்ணும் தேவையில்லை” என்றவன் கையை அரைச்சுவரில் வைத்து அப்படியே கால்களைச் சுழற்றி மறுபக்கம் போட்டு அடுத்த பில்டிங்கில் நிமிர்ந்து நிற்க, இமை கொட்டி விழித்தாள் வர்ணி .
“ஸ்பைடர் மேனா நீ?”
அடுத்த நிமிஷம் அம்மாவை ஏதோ நக்கல் பண்ணிச் சிரித்துக்கொண்டு பதட்டப்படுத்தாமல் அப்படியே அலேக்காகத் தூக்கி இந்தப் பக்கம் வைக்க, அவருக்கு ஒரே சிரிப்பு…
இவளைக் கண்டதும் இன்னும் உற்சாகமாகி, “டார்லிங், மழை செமையா இருக்குல்ல… அம்மா இப்போல்லாம் மழைக் குளிக்க விட மாட்டேங்கிறாங்க!” என்று முறைப்பாடு செய்தார்.
‘நல்லவேளை’ என்று நினைத்தவளின் உதடுகளின் சிரிப்பு வெளிவரத் துடிக்க, அடக்கியபடியே சாஹியை ஓரக்கண்ணால் பார்க்க, அவனும் அனிச்சையாக அதே சிரிப்போடு அவளைப் பார்த்துவிட்டவன், பிறகுதான் புரிந்து கொண்டு உர்ரென்று ஆகி, பான்ட்டில் படாத கறையைத் துடைக்க, “எங்களுக்கும் ஸ்கர்ட் இருக்கு, எங்களுக்கும் துடைக்கத் தெரியும்” என்று ஸ்கர்ட்டைத் துடைக்க ஆரம்பித்தாள் வர்ணி .
“எங்கேப்பா இருந்தாங்க…?” என்றபடி இப்போது பார்வதி ஆன்ட்டியும் ஓடிவந்துவிட,
“அந்தப் பிளேட்டிங் தண்ணீர் தொட்டிக்குப் போய்ட்டாங்க ஆன்ட்டி” என்று அவருக்கு ரகசியமாகச் சொன்னாள் வர்ணி .
“நல்ல காலம்… கால் வழுக்கி விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்று அவர் கடவுளுக்கு நன்றி சொல்ல, வர்ணி க்கும் அதுதான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
“விடு, விடு… அதுதான் பத்திரமா வந்துட்டாங்கல்ல…”
“வேலை முடிஞ்சதா உங்களுக்கு? நான் உங்க ரெண்டு பேரையும் டிராப் பண்ணிட்டுப் போறேன்” என்று சாஹி சொல்ல,
பார்வதி தலையசைத்துக்கொண்டே லக்கியோடு ஏதோ பேசிட்டுக் முன்னே போக,
“உங்களுக்கு என் வீடு போகும் வழியில் இல்லையே…? நான் ராக்கிலே வந்துடுவேன்” என்று மெல்ல சொல்லிப் பார்த்தாள் வர்ணி
“அது முதல்ல ஸ்டார்ட் ஆகுதான்னு பாரு, அப்புறம் போறதை பத்தி யோசிக்கலாம்” என்று முறைத்தவன், “சொன்னா சொன்ன பேச்சு கேட்டா என்ன குறைஞ்சிடும்?” என்று முணுமுணுத்துக்கொண்டே நடக்க,
“ஆங்… கேட்டதுமே ஓகே சொல்வாங்களா யாரும்? முதல்ல இல்லை, வேணாம்னுதான் சொல்லுவாங்க… இது கூடத் தெரியலை, வந்துட்டாங்க!” என்று அவனைப் போலவே முணுமுணுத்துக்கொண்டே அவனை முந்தி நடந்தவளின் இதழ்களில் கள்ளச்சிரிப்பு. ‘இவளோட!’ என்பது போல தலையசைத்துக்கொண்டவனின் இதழ்களிலும் இப்போது மெலிதாய் தொற்றிக்கொண்டது.
“நீங்க வாசலிலேயே இருங்க… நான் காரை எடுத்துட்டு வந்துர்றேன்” என்று சாஹி சொல்லிக்கொண்டு திரும்ப, அவள் பெண்கள் இருவரோடு இணைந்து கொள்ள, கால் எடுத்து வைத்ததுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
படார் என்ற ஒரு பெரும் சத்தம். அதைத் தொடர்ந்து படபடவெனச் சத்தங்கள் தொடர்ந்து கேட்க, எல்லாரையும் முந்திக்கொண்டு சாஹி வாசலுக்கு ஓட, அவன் பின்னாலேயே அரண்டு போய் தொடர்ந்தார்கள் மூவரும்.
யாருமே வெளியே தெரிந்த காட்சியை எதிர்பார்க்கவில்லை.
சுற்றிலும் வெள்ளக்காடாய் இருக்க, வாசலில் ஏறத்தாழ ஐநூறு வருஷ பழமையான மரம் அப்படியே வேரோடு பிடுங்கப்பட்டு பரிதாபமாய் வாசலை மூடிக்கொண்டு விழுந்து கிடந்தது. பிரமாண்ட மரத்தின் கிளைகளே மொத்தமாய் மறைத்திருக்க, அவர்களுக்கு வெளி உலகமே எதுவும் தெரியவில்லை. மழையின் வேகம் கூடிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது. மாலின் முன்புறப் பக்கத்துக்கும் கொஞ்சம் சேதம் ஆகியிருந்தது.
வாசலை மறைத்துக்கொண்டிருந்த பிரமாண்டமான மரத்தையும், மாலைச் சுற்றி கிடந்த உயரமான மதிலையும், எதையும் பார்க்கவே விடாமல் அடித்துப் பெய்து கொண்டிருந்த மழையையும் பார்த்தவளுக்கு, இந்த மரத்தை இங்கிருந்து அகற்றும் வரை மாலில் இருந்து வெளியே போவது சாத்தியமே இல்லை என்று தெள்ளத்தெளிவாகப் புரிந்தது.
