அத்தியாயம் 4
நிவேதா வீட்டிற்கு வந்ததுமே தோழிகள் அவளை சூழ்ந்து கொண்டனர். பதட்டமாய் இருப்பதாக பாவனை செய்தனர்.
“என்னாச்சு நிவி?”
“அந்த லெட்டரை ராஜீவ் எழுதலை.” என்று குதூகலத்துடன் சொன்ன நிவேதாவை அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக் கொண்டே,
“அப்படின்னா வேற யார் எழுதினாங்களாம்?” என்றனர்.
“அது யாருக்கு தெரியும்? ராஜீவ் எழுதலைன்னு தான் விஷயம் தெரிஞ்சிடுச்சே!”
“அப்படின்னா நீ அதை தெரிஞ்சுக்கத் தான் போனியா?” என்ற தோழியின் கேள்வியில் நிவேதாவின் மூளை விழித்துக் கொண்டது.
“இல்லை. ராஜீவ் அதை கண்டுபிடிச்சுத் தரேன்னு சொல்லியிருக்கார்.” என்று வாய்க்கு வந்த பொய்யை சொன்னவள் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
“அம்மணி ஒரேடியா கவுந்துட்டாங்களோ சுமி?”
“பார்த்தால் அப்படித் தான் தெரியுது.” என்று சிரித்துக் கொண்டே சுமித்ரா சொன்னதும்,
“நாம தப்பான வேலை ஒண்ணும் செய்யலையே?” என்று ஒரு வித பயத்துடன் பவித்ரா கேட்டாள்.
தோழியை ஒரு இளைஞனுடன் இணைக்கும் வேலையை செய்கிறோமோ என்ற அவளுக்கு லேசான உறுத்தல் வந்தது.
“கண்டிப்பா கிடையாது பவி. நாம ஒண்ணும் ராஜீவை காதலின்னு அவகிட்டே சொல்லலையே. அவளா தானே விருப்பப்படுறாள். உனக்கு அவ பிடிவாதம் தெரியாதா? அவ ஒரு முடிவு எடுத்துட்டாள்னா அதை எப்பாடுபட்டாவது நடத்திக் காட்டுவாள். எங்க ராஜீவ் அண்ணாவும் சரி, அவர் பேமிலியும் சரி, ரொம்ப நல்லவங்க. அண்ணாவோட அம்மாவும், அப்பாவும் ரொம்ப சாது. இவளை நல்லா கவனிச்சுக்குவாங்க. மொத்தத்தில் தே ஆர் மேட் ஃபார் இச் அதர். அதனால கவலைப்படாதே!” என்று சொல்லி பவித்ராவிற்கு நம்பிக்கை ஊட்டினாள்.
மறுநாள் காலை பவித்ரா நிஜக் கவலையுடன் அமர்ந்திருந்தாள்.
“என்னாச்சு இப்படி காலங்கார்த்தாலே சோக டியூன் வாசிக்கிறே?” என்று நிவேதா விசாரித்ததும் ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள். அதில் ஒரு கவிதை எழுதப்பட்டிருந்தது.
உன்னைக் கண்ட நொடி
அடியோடு வீழ்ந்தேன்.
வீழ்ந்தவன் எழுந்தேன்!
உனது கண்களில்
காதலைக் கண்டதும்
புரிந்து கொண்டேன்!
நான் உன்னை
அடியோடு வீழ்த்தியதை.
எழுந்து வா!
நாம் இருவரும்
காதலெனும் காவியம் படைப்போம்.
“இது இன்னைக்கு காலையிலே வந்திருக்கு நிவேதா.” என்று அழுதுவிடும் குரலில் பவித்ரா சொன்னதும் நிவேதாவிற்கு ‘இது என்னடா இன்னொரு புதுக் குழப்பம்’ என்றிருந்தது.
“இதுக்கெல்லாமா பயந்து போய் அழுவாங்க. கவலைப்படாதே பவித்ரா.”
“நிவி! எங்க வீட்டைப் பத்தி உனக்கு தான் தெரியுமே! நானெல்லாம் நடுத்தர வர்க்கம். இது மாதிரி எல்லாம் நடந்துச்சுன்னு தெரிஞ்சாலே எங்க அப்பா என்னை வெட்டிப் போடுவார். எனக்கும் காதலுக்கும் காத தூரம். என்னை எங்கப்பா வெளியில விடவே மாட்டார். கூப்பிட்டுப் போறது நீங்க என்றதால் தான் சென்னைக்கு போகவே சம்மதிச்சார். அந்தஸ்து பார்க்காமல் எங்கூட நட்பா இருக்கீங்கன்னு உங்க ரெண்டு பேர் மேலேயும் அவருக்கு பாசமும் உண்டு. மரியாதையும் உண்டு. வந்த இடத்திலே இப்படி ஒண்ணு வந்தா எனக்கு சங்கடமா இருக்காதா?”
“நான் என்னன்னு விசாரிக்கிறேன் பவி.” என்று சொன்னவள் குளித்து முடித்து சாப்பிடாமல் கூட ராஜீவை பார்க்கக் கிளம்பினாள்.
நிவேதாவிற்கு தான் நேற்றே சரியாக விசாரிக்காமல் போனது தான் தப்போ என்ற குற்ற உணர்ச்சி மனதை அரிக்க ஆரம்பித்தது.
ராஜீவ் வேளச்சேரியில் இருக்கும் ஃபீனிக்ஸ் மாலில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கே சென்றாள். அங்கே உள்ள ஃபுட் கோர்ட்டில் அமர்ந்து ராஜீவும், சுமோத்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேராக அவர்களிடம் சென்றவள், “பவித்ரா அழுதுக்கிட்டே இருக்காள் தெரியுமா?” என்று எடுத்த எடுப்பிலேயே ஆரம்பித்தாள்.
“ஏன் உங்களுக்குள்ளே அப்படி என்ன சண்டை?” என்று சுமோத் புரியாமல் கேட்க,
“நாங்க எப்போ சண்டை போட்டோம்? இப்படி ஒரு கவிதை அவளுக்கு காலையிலே வந்துச்சு. வாசலில் வாட்ச் மேனிடம் யாரோ கொண்டு வந்து குடுத்துட்டுப் போயிருக்காங்க.” என்று அந்தக் கவிதையை எடுத்து நீட்ட ராஜீவ் சுமோத்தை முறைத்தான்.
அதை கைகளில் வாங்கிய சுமோத் நண்பனின் முறைப்பிலே அரண்டவனாய், “ஹேய்! இது நான் எழுதின கவிதை ஆச்சே! இது எப்படி உங்க கையிலே கிடைச்சது?” என்று சொன்னவுடன்,
“அப்பாடா! இதை நீங்க தான் எழுதுனீங்களா? நான் இதை அவளுக்கு உடனே போன் பண்ணி சொல்லிட்டு வரேன்.” என்று சொன்னவள் அந்த ஃபுட் கோர்ட்டில் உள்ள பால்கனி பக்கம் நகர்ந்தாள்.
“ஹேய் சுமி! அந்தக் கவிதையை எழுதினது நம்ம சுமோத் அண்ணாவாம். இது எப்படி நம்ம கைக்கு கிடைச்சதுன்னு கேட்கிறார்? பவித்ராவை அழாமல் இருக்கச் சொல்லு.” என்று உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டே வந்தவள்,
“அச்சோ! நான் நேத்து வந்த லெட்டரை மறந்தே போனேனே! அதை யார் எழுதினதுன்னு கண்டுபிடிக்கணுமே!” என்று படபடப்புடனும், பதட்டத்துடனும் சொல்லவும்,
சுமித்ரா மெதுவான குரலில், “நிவி! நாங்க தான் உன்னை ஏப்ரல் ஃபூல் பண்ண அந்த லெட்டரை பொய்யா தயாரிச்சோம்.” என்றாள்.
“என்னது ஃபூல் பண்ணீங்களா? உன்னை…” என்று பல்லைக் கடித்தவள், “பவித்ராவிற்கு பிரச்சனை இல்லைங்கிறதால நான் இப்போ சந்தோஷமா இருக்கேன். அதனால பிழைச்சுப் போ. ஆனால் எதுக்கு இப்படி ஒரு விஷயம் செஞ்சே சுமி?” என்றதும்,
“ராஜீவ்.” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு சுமி அழைப்பை துண்டித்தாள்.
‘ஆகா! நாம சொல்லலைன்னாலும் கண்டுபிடிச்சுட்டாளே கள்ளி!’ என்று தோழியை மனதிற்குள் கொஞ்சிக் கொண்டே நடந்தாள்.
இங்கு சுமோத்தும் ராஜீவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எப்படிடா சுமோத் காலையில இருந்து சொதப்பல் மேல சொதப்பலா செய்யுறே?”
“விடுறா மச்சான். எப்படியோ சமாளிச்சுட்டேன்ல. அதை மட்டும் பாரு. டேய் ராஜீவ்! நீ எப்படா அவளிடம் பிரபோஸ் பண்ணப் போறே?”
“எந்த மடையனாவது காட்டிலே வச்சு பிரபோஸ் பண்ணுவானாடா?”
“ஏன்டா! உனக்கு இந்த மாலை பார்த்தால் காடு மாதிரியா இருக்கு?”
“ஓ! இது மாலா? இப்போ கரடி எல்லாம் மாலுக்குள்ளே வர ஆரம்பிச்சிடுச்சா?”
“அப்படின்னா என்னைக் கரடின்னு சுத்தி வளைச்சு சொல்லுறியா?”
“இல்லை.” என்று ராஜீவ் மறுத்ததும்,
“அது தானே பார்த்தேன்.” என்று சுமோத் பெருமைப்பட,
“சுத்தி வளைச்செல்லாம் சொல்லலை. நான் நேரடியாவே தான் உன்னை கரடின்னு சொல்லுறேன். வந்த வேலை முடிஞ்சிடுச்சு தானே! மரியாதையா இடத்தை காலி பண்ணு.”
“எல்லாம் என் நேரம்டா.” என்று சொல்லி எழுவதற்கும் நிவேதா அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
சுமோத் இருவரையும் பொதுவாக பார்த்து, “வரேன்.” என்று சொல்லி விடைபெற்றான்.
