“டேய்! கார் சாவி குடுத்திட்டுப் போடா.” என்று ராஜீவ் சொன்னதும் சுமோத் அதை தூக்கிப் போட, ராஜீவ் அதை லாவகமாகப் பிடித்தான்.
சுமோத் அகன்றதும் ராஜீவை பார்வையிட்டவள் அவனும் தானும் ஒரே நிறத்தில் உடை அணிந்து இருப்பதை பார்த்து சந்தோஷமடைந்தாள். வரும் போது பதட்டத்தில் இருந்ததால் நிவேதா அதை சரியாகக் கவனிக்கவில்லை.
அவன் நீல ஜீன்ஸும், வெள்ளை நிற அரைக் கைச் சட்டையும் அணிந்திருந்தான். நிவேதா அதே நிற ஜீன்ஸும், வெள்ளை டாப்ஸும் அணிந்திருந்தாள்.
டோமினோஸ் பீட்சாவை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் அவள் வந்து அமர்ந்ததும் அவளுக்கும் வேண்டுமா என்று கேட்பதற்கு வாயெடுக்கும் முன்,
“ராஜீவ்! நீங்க போய் உங்களுக்கு வேற வாங்கிக்கோங்க. காலையில சாப்பிடலை. செம பசி.” என்று சொன்னவள் அவனுடையதை தன் பக்கம் இழுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
‘உனக்கு புதுசா வேற வாங்கித் தரேன்’ என்று சொல்ல நினைக்கும் முன் அவனுடையதை அவள் சாப்பிட ஆரம்பித்ததும், ‘வேற எதுவும் வேண்டுமா?’ என்று மட்டும் கேட்டு அதை வாங்குவதற்கு சென்றான்.
இவர்களை விட்டு சுமோத் அகன்ற இரண்டாவது நிமிடத்திலேயே தன் அண்ணனை சுமித்ரா அழைத்தாள்.
“டேய் அண்ணா! பக்கத்திலே நிவி இருக்காளா?”
“அச்சச்சோ! இப்ப தானே அங்கே இருந்து வந்தேன். ஏன் ஏதாச்சும் சொல்லணுமா?”
“அதை அவ செல்லுக்கு கூப்பிட்டு சொல்ல மாட்டேனா? உன் கவிதை பத்தி விசாரிக்கலாம்னு தான் கூப்பிட்டேன். என்ன விஷயம்? எதுக்கு நிவியிடம் பொய் சொன்னே?”
“ஹேய் சுமி! எப்படி அது பொய்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சே?”
“நீயெல்லாம் அம்மான்னு எழுதச் சொன்னால் ஆமான்னு எழுதுற கேசு. இதுல கவிதை வேறயா…” என்று அவள் கேலி செய்தாள்.
“அதை நம்ம ராஜீவ் எழுதி நிவிக்குன்னு குடுக்கச் சொன்னான். நான் தான் காலையில வந்து குடுத்துட்டுப் போனேன். ஆனால் நம்ம வாட்ச்மேன் நான் நிவின்னு சொன்னதை பவின்னு மாத்திட்டான் பாவி.”
“இன்டிரஸ்டிங். டாக்டர் சார் எப்போல இருந்து தொழிலை மாத்தினார்?”
“பீச்சிலே நம்ம நிவேதாவை பார்த்ததில் இருந்து தான்.”
“இங்கேயும் அதே கதை தான் நடக்குது. நிவி ஊருக்கு கூட போகாமால் ராஜீவ் புராணம் பாடிக்கிட்டு இருக்காள்.”
“நல்ல ஜோடி இல்ல சுமி?”
“கண்டிப்பா. அதனால தானே நானும் அவ லவ்வுக்கு பச்சைக் கொடி காட்டிக்கிட்டு இருக்கேன். சரி வச்சுடுறேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
ராஜீவும் நிவேதாவும் சாப்பிட்டு முடித்து எழுந்து நடக்க ஆரம்பிக்கும் போது எதிரே வந்தவர்கள், “ஹேய்! ஒரே கலர் டிரஸ் போட்டு அசத்தலா இருக்காங்க இல்ல! நல்ல ஜோடி.” என்று இவர்களை பார்த்து விமர்சிக்கவும்,
ராஜீவ் குனிந்து தங்கள் இருவரது உடையையும் ஆராய்ந்தான். பின் மெதுவாக புன்னகைத்துக் கொண்டான்.
‘அட ஆண்டவா! இப்போ தான் இதையே கவனிக்கிறாரா? நிவி! நீ இவரை நம்பினால் உனக்கு நேரா அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும். நீ தான் அதிரடியா களத்திலே இறங்கணும்’ என்று அவளது மனசாட்சி குரல் கொடுத்தது.
‘இவருக்கு நம்மை பிடிச்சிருக்கு. நேற்று அந்தப் பொண்ணு கூடச் சாப்பிடக் கூட மறுத்தவர் ரெண்டு நாளா நம்ம கூடச் சேர்ந்து சுத்துவதிலேயே அது தெளிவாத் தெரியுது. இப்ப கூட எங்களை நல்ல ஜோடின்னு சொன்னதுக்கு சிரிக்கத் தானே செஞ்சார். ஒரு வேளை என்னோட வசதியை பார்த்து தயங்குறாரோ என்னவோ!’ என நினைத்துக் கொண்டாள்.
அவர்கள் அங்கிருந்து வெளியேறி கீழ் தளம் வந்து நடக்க ஆரம்பித்த போது நிவேதா தன் கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தியை குனிந்து பார்த்துக் கொண்டே ஓரமாக வந்தாள். ராஜீவிற்கு கைப்பேசியில் அழைப்பு வரவே அவன் அதில் பேசிக் கொண்டே நிவேதாவிற்கு பின்னால் நடக்க ஆரம்பித்தான்.
அப்பொழுது எதிரே வந்த இரு இளைஞர்கள் நிவேதாவையே பார்வையிட்ட வண்ணம் வந்தனர். அவளை தெரியாமல் இடிப்பது போல் இடிக்கத் திட்டமிடுவது அவர்கள் உள்ளடங்கி நடப்பதிலேயே புரிந்து போக ராஜீவ் நொடியில் அவளை உள்புறம் இழுத்து தள்ளியவன் நிவேதாவிற்கும் அந்த இளைஞர்களுக்கும் நடுவில் வந்தான்.
அவர்கள் ராஜீவின் தோளில் இடித்துவிட்டு அவனின் தீப் பார்வைக்கு பயந்து போய் அந்த இடம் விட்டு ஓடினர்.
தன் பார்வையின் உஷ்ணத்தை கொஞ்சமும் குறைக்காமல் அவன் நிவேதாவை பார்க்க, “சாரி ராஜீவ். நான் கவனிக்கலை.” என்று மெதுவான குரலில் இழுத்தாள்.
“கவனத்தை பாதையிலே வை. அதுவும் பொது இடத்தில் ரெட்டிப்பு கவனம் இருக்கணும்.” என்று கோபத்துடன் சொன்னதும்,
“இனிமேல் நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கேன்.” என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தினாள்.
அவளுக்கு அவனுடைய உரிமை கலந்த கோபம் பிடிக்கவே செய்தது. அது அவளுக்கு புது தெம்பை தந்து தனது காதலை இன்று எப்படியும் சொல்லிவிடுவது என்று முடிவெடுக்க வைத்தது.
அவர்கள் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ராஜீவுடன் படித்த ஒரு பெண் எதிர்ப்பட்டாள்.
அவள் ராஜீவைப் பார்த்து, “ஹேய் ராஜீவ்! வாட் அ பிளஸன்ட் சர்ப்பரைஸ்!” என்று சொன்னதும்,
ராஜீவ் அவளிடம் ஒரு ஹாய் சொல்லிவிட்டு நிவேதாவை கைகாட்டி, “என் பிரண்டு நிவேதா.” என்று சொன்னவன்,
அந்தப் பெண்ணைக் கைகாட்டி நிவேதாவிடம், “என் காலேஜ்மேட். என் கூட M.B.B.S படிச்ச பிரண்டு. பேரு உஷா.” என்றான்.
அறிமுகம் முடிந்தவுடன் ராஜீவும் உஷாவும் பேச ஆரம்பித்தார்கள். முதலில் தங்களின் குடும்ப நலனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தவர்களின் பேச்சு நேரம் செல்லச் செல்ல மருத்துவத்தின் பக்கம் திரும்பியது.
கேட்டுக் கொண்டிருந்த நிவேதாவிற்கு ஒன்றும் புரியாததால் அவர்களின் உரையாடல் ரொம்பவே சலிப்பு தட்டியது. எப்போதுடா பேசி முடிப்பார்கள் என்றானது. ஐந்து நிமிடங்கள் கால் மாற்றிக் கால் நின்று பார்த்தவளின் பொறுமை பறந்தது.
தனது இடது கையை ராஜீவின் வலது கைக்குள் விட்டுக் கோர்த்துக் கொண்டவள், “ராஜ்!” என்று அழைத்தாள்.
ராஜீவ் அவளது செயலிலும், அழைப்பிலும் அதிசயத்துப் போனான்.
‘அடிப்பாவி! என்ன தைரியம்!’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவன் நிவேதாவிடம் இருந்து பார்வையை திருப்பி உஷாவை பார்க்க…
அவளோ, “ஹேய்! ராஜ்னு ஷார்ட்டா கூப்பிடுறாங்க! நான் பார்த்து நீ எந்தப் பொண்ணு கையையும் இப்படிப் பிடிக்க விட்டதில்லையே! ஒரே கலர் டிரஸ். ஏதாச்சும் உங்களுக்குள்ளே லவ்வா?” என்று ஆர்வமாகக் கேட்க,
‘போச்சுடா! இப்போ உஷாவுக்கு நான் என்ன பதிலை சொல்வது?’ என்பது போல் ராஜீவ் விழித்துக் கொண்டிருந்தான்.
நிவேதாவோ சற்றும் தயங்காமல், “யூ ஆர் டூ ஸ்மார்ட். கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டீங்களே!” என்றாள்.
‘இவள் என்னை காலி பண்ணாமல் போக மாட்டாள் போலவே!’ என்று ராஜீவ் எண்ணிக் கொண்டிருக்க…
உஷா ராஜீவ் புறம் கை நீட்டிக் கொண்டே, “கங்கிராட்ஸ்.” என்றாள்.
நிவேதா அவனது வலது கையை விடுவித்தால் தானே அவன் உஷாவின் கையை பற்றிக் குலுக்க முடியும்.
நிவேதா அவனது கையை விடுவிக்காமல் தனது வலது கையை நீட்டி உஷாவின் கைப்பற்றி குலுக்கி, “தாங்க் யூ!” என்று சொல்லி அந்த வாழ்த்தை ஏற்றுக் கொண்டாள்.
தனது வலது கையையும் அவனது கைகளுக்குள் கோர்த்துக் கொண்டாள்.
உஷா ஒரு புன்னகையுடனே ராஜீவை பார்த்து, “என்ன ராஜீவ் இனிமேல் கையிலே க்ளவுஸோடு தான் பேஷண்ட்டை பார்ப்பியா?” என்று கேட்டுக் கொண்டே, “சரி நான் நந்தியா இருக்க விரும்பலை. என்ஜாய் பண்ணுங்க. பை.” என்று சொல்லிவிட்டு அகன்றாள்.
அவள் அந்தப்புறம் சென்றதும் ஊப் என்று சொல்லி வாய் வழியே மூச்சை வெளியேற்றியவள் நிவேதா!
“ஹலோ மேடம்! அப்படி நான் செய்யணும். நீ பாட்டுக்கு என்னன்னவோ அள்ளி விடுறே?” என்று ராஜீவ் கேட்டதும்,
“உண்மைய தானே சொன்னேன்.” என்றாள்.
ராஜீவ் அதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல், “அவ தான் போயிட்டாளே. இப்பவாச்சும் கையை விடு!” என்றான்.
அவள் கையை விலக்காமல் அவனை இழுத்துக் கொண்டு நடக்கவும், “நிவி!” என்று ராஜீவ் அழைத்தான்.
நடந்து கொண்டிருந்தவள் சட்டென்று நின்று ராஜீவின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.
அவள் மீதான அவனின் காதலை அவன் கண்களில் கண்டவள், “அதான் நிவின்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் ஏன் நான் கையை விலக்கிக்கணும்?” என்று அலட்டிக்காமல் கேட்டாள்.
அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே, “நிவி! இது பப்ளிக் ப்ளேஸ்.” என்றான்.
“ஜஸ்ட் கையை தானே ராஜ் பிடிச்சேன். நான் என்னமோ கிஸ் அடிச்ச மாதிரி ஃபீல் பண்ணுறீங்க.”
“அம்மா தாயே! நீ செஞ்சாலும் செய்வே. பட் ப்ளீஸ். சொன்னால் கேளு.” என்றதும் தனது இரு கைகளால் அவனது முழங்கையை பற்றி இருந்தவள் தனது ஒரு கையை விலக்கி மற்றொரு கையை இறக்கி அவனது உள்ளங்கையை பற்றினாள்.
‘இது உங்களுக்கு பரவாயில்லையா?’ என்று கேட்க நினைப்பதற்குள் ராஜீவ் அவளது கையை அழுத்திக் கொடுத்தான். அந்த அழுத்தம் அவளது செயலுக்கான அங்கீகரிப்பாய் இருந்தது.
“ராஜ்! எங்கேயாச்சும் போகலாமா?”
“எங்கே போகணும்?”
“சும்மா ஊரை சுத்துவோம். நான் இன்னைக்கு நைட் பண்டியன் எக்ஸ்பிரஸில் கிளம்பணும். அதுவரைக்கும் தான் நமக்கு டைம். அப்புறமா நான் என் வேலையில பிசியாகிடுவேன். நீங்களும் உங்க ஹாஸ்பிட்டல் வேலையில பிசியாகிடுவீங்க. அதனால இந்த நாள் நமக்கே நமக்கு தான்.”
“சரி போகலாம். நீ உன் காரிலே தானே வந்தே? அதை என்ன செய்வது?”
“அது ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் போன் செஞ்சு திருப்பி அனுப்பிடுறேன்.” என்று சொன்னவள், அவள் வந்த கார் டிரைவரை கைப்பேசியில் கூப்பிட்டு திரும்பி போகும்படி சொன்னாள்.
அவர்கள் கார் பார்க்கிங் இடத்திற்கு வந்து கருப்பு நிற ஹூண்டாய் வெர்னாவில் ஏறுவதை பார்த்த அந்த டிரைவர் கர்ம சிரத்தையாய் ரவீந்திரனுக்கு அழைத்து விஷயம் தெரிவித்தான்.
“சார்! ஒரு விஷயம். நான் நேத்தே சொல்லியிருக்கணும். அப்போ அது பெருசாத் தெரியலை. ஆனா இன்னைக்கு…” என்று தயங்கி இழுத்தான்.
“என்னப்பா சொல்லணும்? சும்மா தைரியமாச் சொல்லு.” என்று ரவீந்திரன் ஊக்கவும்,
“மேடம் நம்ம காரை வேண்டாம்னு சொல்லிட்டு இன்னொருத்தருடன் கிளம்பிப் போறாங்க சார்.”
“ஆள் எப்படி இருக்கான்?”
“நல்லா அழகாத் தான் இருக்கார். நான் வெள்ளிக் கிழமை மேடத்தை பீச்சிலே ஏத்தின போதும் மேடம் அவர் கூடத் தான் பேசிக்கிட்டு இருந்தாங்க. நேத்து மதியமும் அவரை பார்க்கப் போனாங்க. இன்னைக்கும் அவர் கூடவே கிளம்பி போயிட்டு என்னை திரும்பி போகச் சொல்லுறாங்க.”
“சரி நீ வச்சுடு. நான் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்த ரவீந்திரன் யோசனையில் ஆழ்ந்தார்.
ராஜீவும் நிவேதாவும் முட்டுக்காடு சென்றார்கள். மாயா ஜாலுக்கு சென்று படம் பார்த்தார்கள்.
நிவேதா ராஜீவிடம் அவனது படிப்பு மற்றும் வேலை சம்பந்தமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.
“உங்க கோர்ஸ் எப்போ முடியும்?”
“இந்த மாசத்தோட முடிஞ்சிடும். எக்ஸாம் மட்டும் தான் பாக்கி இருக்கு.”
“அதுக்கு ஸ்டடி ஹாலிடேஸ் விடுவாங்களா?”
“ஒரு பத்து நாள் போல விடுவாங்க.”
“உங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சவுடன் எங்கே போஸ்டிங் போடுவாங்க?”
“ஏற்கனவே கவுன்சிலிங் முடிஞ்சிடுச்சும்மா. எனக்கு இங்க சென்னையில தான் போஸ்டிங் போட்டு இருக்காங்க.”
“அப்படின்னா நாம சென்னைவாசி ஆகப் போறோமா?”
“ஆமா சென்னையிலே செட்டில் ஆக வேண்டியது தான். நிவி, உங்க அப்பா அம்மாவோட போட்டோ காட்டேன்.” என்று சொன்னதும்,
“ராஜ்! எனக்கு இந்த மொபைல் போனில் போட்டோ வச்சுக்கிற பழக்கம் சுத்தமா கிடையாது. அதனால என்னிடம் இப்போ எந்த போட்டோவும் இல்லை. நாம அடுத்த முறை மீட் பண்ணும் போது காட்டுறேன்.” என்று சொல்லிவிட்டாள்.
அன்றிரவு சுமித்ராவும், பவித்ராவும் நிவேதாவின் பெட்டியையும் எடுத்துக் கொண்டு நேராக எக்மோர் ரயில் நிலையம் வந்துவிட ராஜீவ் அவளை நேராக ரயில் நிலையத்திற்கே கூட்டிச் சென்றான். அவனிடமிருந்து விடைபெற்று தோழிகளுடன் போய் சேர்ந்து கொண்டாள்.
