IMM Epi 10(1)

அத்தியாயம் 10

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்!!!(பாடல் வரி)

“டெனண்ட் என்ன சொன்னாங்க இன்பூ? என்ன பிரச்சனையாம்?” எனக் கேட்டபடி தலைக் கவசத்தை மாட்டினாள் இவள்.

“பைப்பிங் பிரச்சனை இருக்காம்! சிங்க்ல, பாத்ரூம்ல எல்லாம் தண்ணி ஒழுகுதாம். குடுத்த வாரண்டி பீரியட்குள்ள இதெல்லாம் தெரியவும், ஓனர் ரிப்பேர் பண்ணி குடுக்கனும்னு சொல்றாங்க! ஓனரோ, நாங்க வீட்டக் குடுத்தப்ப நல்லாதான் எல்லாம் குடுத்தோம்னு சொல்றாங்க! அக்ரிமெண்ட்ல ஓனர்தான் ரிலாயபிள்னு இருந்தது. ஆனாலும் நியாயம்னு ஒன்னு இருக்குல்ல. டெனண்ட் சைடும் ஃபால்ட் இருக்கு! ரெண்டு பேரும் பாதி பாதி செலவுன்னு முடிச்சுக் குடுத்துட்டு வந்தேன்”

“ரொம்ப தேங்க்ஸ் இன்பூ! நான்தான் ஹேண்டில் பண்ணிருக்கனும். அதுக்குள்ள சேம் டைம்ல இன்னொரு எமெர்ஜென்சி அப்பாயிண்ட்மேண்ட் வந்துடுச்சு.”

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ வேஸ்ட் பண்ணற! நாம வோர்க்கிங் பார்ட்னர்தானே! பார்ட்னர்னா ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கறது தானே நியதி!”

“எல்லா பார்ட்னரும் ஒத்தாசையா இருக்கறது இல்ல! உபத்திரம் குடுக்கற கேஸூம் இருக்கு!” எனப் பெருமூச்சுடன் சொன்னவளின் முகம் பொலிவிழந்துப் போனது.

தனது வாழ்க்கைப் பார்ட்னரைப் பற்றித்தான் சொல்கிறாள் எனப் புரிந்துக் கொண்டவன்

“சரி, சாப்பிட்டியா சம்பூ?” எனப் பேச்சை மாற்றினான்.

“இனிதான்!”

“போற வழியில எங்கயாச்சும் ஹோட்டல்ல சேர்ந்து சாப்பிடலாமா?”

“ஓகே டன்! நீ உன் பைக்ல முன்ன போ, நான் ஸ்கூட்டில பின்னாடி வரேன்”

இன்பன் தனது அப்பாயிண்ட்மெண்டை முடித்துக் கொண்டு, இவள் கஸ்டமரைப் பார்க்கும் இடத்துக்கு வந்திருந்தான். அதனால்தான் இருவரும் வேறு வேறு வாகனத்தில் வந்திருந்தார்கள்.

முன்னே கிளம்பியவன், ரியர் மிரரின் வழி பூர்ணா வருகிறாளா எனக் கவனித்துக் கொண்டான். ‘லெப்டுல சிக்னல் போட்டு, ரைட்டுல திரும்புவோம்டா’ எனும் கூட்டத்தைச் சேர்ந்தவன், பூர்ணாவுக்காக கரேக்டாக சிக்னல் போட்டு, மெதுவாகவே பைக்கை செலுத்தினான்.

நல்ல உயர்த்தரமான ஹோட்டல் ஒன்றில் பைக்கை நிறுத்தினான் இன்பவாணன். பின்னாடியே வந்த பூர்ணாவும் ஸ்கூட்டியை நிறுத்தினாள்.

“இங்கயா சாப்பிட போறோம்!!! விலை, கழுத்துல கத்தி வைக்கற ரேஞ்சுக்கு இருக்குமே! வேற இடம் பார்ப்போமா?” எனக் கேட்டாள்.

“சம்பூ!!” எனத் தயங்கினான் இவன்.

“என்ன?”

“இன்னிக்கு எனக்கு பேர்த்டே!”

“வாவ்! சூப்பர்! வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் இன்பூ” என இவள் குனிந்து வணக்கம் வைக்க, கடுப்பாகிப் போனான் இன்பன்.

“என்னா!!! லந்தா!!! வெளுத்துருவேன் பார்த்துக்கோ! என்னமோ குடு குடு கிழவன் மாதிரி ட்ரீட் பண்ணற என்னை!” என இவன் காய,

“ஹாஹா!! சும்மா, சும்மா!” என்றவள் அவனது கைப்பற்றிக் குலுக்கி வாழ்த்தைச் சொன்னாள்.

“சோ, இன்னிக்கு என் ட்ரீட்டு!”

சற்று தயங்கியவள், அவன் முகத்தில் தெரிந்த கெஞ்சலைப் பார்த்து சரியென ஒப்புக் கொண்டாள். இருவரும் உள்ளே போய் அமர்ந்தார்கள். தன் மனதில் பாய் போட்டு படுத்திருக்கும் பாவைக்கு, பார்த்துப் பார்த்து பந்தி பரிமாறினான் இன்பன். கசப்பைத் தவிர எல்லா ருசியிலும் உணவு வர வைத்து கொண்டாடி விட்டான்.

மூச்சு முட்ட உண்டு விட்டு நடக்க முடியாமல் நடந்து, வாகனத் தரிப்பிடத்துக்கு வந்தார்கள் இருவரும்.

“எவ்ளோ வந்தது பில்?” என இவள் கேட்க,

“ஒருத்தன் ட்ரீட் குடுத்தானா, தின்னமா, பேசாம போனமான்னு இருக்கனும்! தேவை இல்லாத கேள்விலாம் கேட்கக் கூடாது! அது ட்ரீட் வச்சவனுக்கு அவமானம்!” என சிலிர்த்துக் கொண்டான் இன்பன்.

“சரி விடு! இன்னொன்னு கேப்பேன்! மறைக்காம பதில் சொல்லனும்!” எனக் கேட்டவள் அவன் கண்களை ஊடுறுவிப் பார்த்தாள்.

இவனுக்கோ அந்தப் பார்வையில் அல்லு விட்டது.

“எ…என்ன?” எனத் திக்கினான் இன்பன்.

“உனக்கு”

“எனக்கு?”

“இன்னிக்கு”

“இன்னிக்கு?”

“வயசு எத்தனை?” என கேட்டாள் பூர்ணா.

“ப்பூ!!! இதைத்தான் கேக்க வந்தியா?”

“பேர்த்டேனா அதைத்தானே கேப்பாங்க”

“எனக்கு முப்பது ஆரம்பிக்குது”

“அச்சோ!!! அங்கிளா நீ!!!” என இவள் கலாய்க்க,

“நான் அங்கிள்னா, புள்ள குட்டி வச்சிருக்கற நீ ஆண்ட்டிடி” என இவன் திருப்பிக் கொடுக்க,

“யாரப் பார்த்து ஆண்ட்டின்னு சொன்ன!” என இவள் எகிற,

“யாரப் பார்த்து அங்கிள்னு சொன்ன!” என இவன் திமிர அங்கேயே மாட்டிக் கொண்டது இருவருக்கும்.

“பேசாதே என் கிட்ட” எனக் கோபித்துக் கொண்டவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சரக்கென கிளம்பி விட்டாள்.

“நீயெல்லாம் காதல் பண்ணி கிழிச்சிட்டாலும்!!! அன்பா, காதலா, சாந்தமா பேசத் தெரியுதா!! எப்போ பாரு மல்லுக்கு நின்னா அவளுக்கு எப்படிடா உன்னைப் பிடிக்கும்! மொரட்டுத் தடிமாடு!” எனத் தன்னையேத் திட்டிக் கொண்டவன், அவள் பின்னால் தனது ஹார்லே டேவிட்சனை செலுத்தினான்.

நேராக அலுவலகத்துப் போகாமல், பஜ்ஜி கடை ஒன்றில் ஸ்கூட்டியை நிறுத்தினாள் பூர்ணா. இவனும் நிறுத்தி விட்டு அருகே போக, இவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அவள். ப்ளேபாயாக இருந்திருந்தால், கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தியிருப்பான். இவன்தான் ‘பார்லே ஜீ(Parle G)’பாயாகாவே இருந்து தொலைத்தானே!

பணம் கொடுக்கும் நேரம், இவன் ரூபாயை நீட்ட, முறைத்துப் பார்த்தாள் பூர்ணா. நீண்டக் கை தானாகவே மடங்கிக் கொண்டது. பணத்தைச் செலுத்தியவள், அலுவலகத்துக்குப் பயணப்பட்டாள்.

தனது சீட்டுக்குப் போனதும், பேப்பர் ப்ளேட்டில் பஜ்ஜி, வடை, சமோசா என வரிசையாய் அடுக்கி வைத்தாள் பூர்ணா. பின் எழுந்து நின்று, கைத் தட்டி வேலைப் பார்க்கும் மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள்.

“மக்களே! இன்னைக்கு நம்ம ஆபிசுக்கு புதுசா வேலைக்கு வந்திருக்கும் மிஸ்டர் இன்பனின் பேர்த்டே! வாங்க வந்து பஜ்ஜி சொஜ்ஜிலாம் எடுத்துக்கோங்க” என அழைத்தாள்.

எல்லோரும் அவளது மேசையை சுற்றிக் குழுமி விட்டனர். இன்பனுக்கு வாழ்த்துக்களை சொல்லி அங்கேயே நின்று சாப்பிட ஆரம்பித்தார்கள். வேலைப் பார்ப்பவர்களில் ஒரு சீனியர் மட்டும்,

“தம்பிக்கு இன்னிக்கு..” என என்னவோ சொல்ல வர, கண் காட்டி அவரை நிறுத்தி விட்டான் இன்பன்.

அலுவலகமே ஒரே சத்தமாக இருக்க, காபினில் இருந்து வெளியே வந்தார் மேகலை.

“என்ன சத்தம் இங்க?” என அவர் கேட்க,

“மேடம்! நம்ம இன்பா சாருக்கு இன்னிக்கு பேர்த்டே! அதான் சின்னதா பார்ட்டி” எனச் சொன்னாள் பூர்ணா.

“பேர்த்டேவா? அவருக்கு அடுத்த மாசம்தானே பிறந்தநாள்” எனச் சொல்லியபடியே பூர்ணாவின் மேசைக்கு வந்தவர், அசடு வழிந்தபடி நின்ற இன்பனைப் பார்த்தப்படியே பஜ்ஜி ஒன்றை எடுத்துக் கொண்டார்.

“எதே! அடுத்த மாசம்தான் பொறந்தநாளா? அப்போ ஏன் இன்னிக்குன்னு சொன்ன நீ இன்பூ?” எனக் கோபத்தில் கேட்டவள், இவர்கள் இருவர் மட்டும் இருக்கும் போது பயன்படுத்தும் இன்பூவை மேகலை முன் சொல்லி இருந்தாள்.

Scroll to Top