“நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா! புழு வச்சி புளுத்துப் போய்தான் செத்துப் போவ! தவிச்ச வாய்க்கு தண்ணி ஊத்த நாதியத்துதான்டா செத்து போவ! கண்ணே மணியேன்னு நீலிக் கண்ணீர் வடிக்கறயாடா பரதேசி நாயே! என் புள்ளயே ஒரு நாளாச்சும் தூக்கிக் கொஞ்சிருப்பியா நீ? ஓடி வந்து காலைக் கட்டிக்கற அந்தக் குட்டிப் பையன, சீ போ அங்கிட்டுன்னு துரத்தன நாய், இன்னிக்கு கண்ணீராடா வடிக்கற! கொல்றேன்டா உன்னை! இந்தான்னு நான் பெத்த பிள்ளைக்கு ஒத்த பிஸ்கேட்டு வாங்கித் தராத நாய், மகனே மகனேன்னு கூட்டத்துக்காக நடிக்கறயா! பொறந்ததுல இருந்து, என் கண்ணன நான்தானே மாருலயும், தோளுலயும் தூக்கி வளத்தேன்! எந்த உரிமைல வந்து மகனே, மகனேன்னு அழறே. பக்கத்துல படுத்துப் புள்ளைய குடுத்துட்டா மட்டும் நீ அப்பனாயிடுவியாடா? பாவி! படுபாவி! பொண்டாட்டிக்கும் புள்ளைக்கும் சம்பாரிச்சுக் குடுக்கப் துப்பில்லாத நாய்க்கு, எதுக்குடா பொம்பள ஷோக்கு??? செத்துட்டான்டா! நான் பொத்திப் பொத்து வளத்த என் கண்ணன் செத்துடான்! உன்னாலதான்டா செத்தான்! என் புள்ள உன்னாலதான்டா செத்தான்! என்னைக்குமே உன்னை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்டா! இனி உனக்கும் எனக்கும் எந்த மயிறும் இல்லடா! இந்தா நீ கட்டன தாலி! ஊரெல்லாம் மேயறியே, அவள்ல ஒருத்திக்கு கட்டு!” என ஆக்ரோஷமாகக் கத்தியவள் தாலியைக் கழட்டி அவன் முகத்தில் விசிறியடித்தாள்.
கை ஊன்றி தன் பெரிய உடம்பைத் தூக்கிக் கொண்டு எழுந்தவள் மீண்டும் அவனை நெருங்கி அவன் முடியைக் கொத்தாகப் பற்றினாள்.
“என் பையன் செத்தது போல, நீயும் செத்துப் போடா! பொண்டாட்டி குடுக்கற சுகம் வேணும், அதுல வரப் புள்ள வேணாம்னு நெனைக்கற நீ ஏன்டா உசுரோட இருக்க! செத்துப் போடா! அப்பா, அப்பான்னு ஆசையா உன் பின்னாடி ஓடி வருவானே, அவன ஊதாசினப்படுத்தன நீ, உசுரோடவே இருக்கக் கூடாதுடா! செத்துப் போ! செத்துப் போ!” என கொந்தளித்தவளை, ஆண்கள் நான்கு பேரால்தான் பிடித்து நிறுத்த முடிந்தது.
இவள் வேலைக்குப் போகும் நேரம், குழந்தையை இவளது அம்மாவின் வீட்டில் விட்டு விட்டுப் போவாள். மகளின் மேல் பாசம் இருக்கிறதோ இல்லையே, பேரனை அன்பாய்த்தான் பார்த்துக் கொள்வார் இவள் அம்மா வீரம்மா. பாட்டி வீட்டிலிருந்து திரும்பி வரும் போது, கண்ணன் எதாவது திண்பண்டம் கேட்டால், தெருமுனையில் இருக்கும் கடைக்கு அழைத்துப் போவாள். அன்றைக்கும் அப்படித்தான் அழைத்துப் போயிருந்தாள். ஒரு கையில் இவனைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் பணத்தை எடுத்துக் கொடுத்து கொண்டிருந்த வேளையில்தான்,
“அப்பா! அப்பா!” எனச் சாலையில் போய் கொண்டிருந்த வேறு ஒரு மனிதரின் பின்புறத்தைப் பார்த்து சத்தமிட்டவன், இவளது கையை உதறி விட்டு ஓட ஆரம்பித்தான்.
ஸ்தம்பித்துப் போன இவள்,
“கண்ணா டேய்!” எனப் பின்னாடியே ஓட, வேகமாக வந்த ஒரு பைக்கினால் அடித்து வீசப்பட்டான் குழந்தை.
கதறியபடி அவன் வீசப்பட்ட இடம் நோக்கி இவள் ஓட, அங்கிருந்த மக்களும் இவளுக்கு உதவ ஓடி வந்தார்கள். ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த சின்ன உருவத்தைப் பார்த்து, ஓவெனக் கதறி விட்டாள் பெண். அதன்பிறகு மற்றவர்களின் உதவியுடன் ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஜீ.எச்சுக்கு போனாள். அவர்களும் எவ்வளவோ முயன்றும் தலையில் பலமாய் அடிப்பட்டிருந்த குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.
கண்களில் கண்ணீர் வழிய,
“நீயெல்லாம் ஒரு மனுஷ பிறவின்னு, உன்னை நம்பி பதினெட்டு வயசுலயே என்னைக் கட்டிக் குடுத்தாரே என் குடிக்கார அப்பா, அவர முதல்ல அடி வெளுக்கனும்டா! ராத்திரி நீ பண்ற டார்ச்சர் தாங்கலன்னு அழுதப்பலாம், புருஷன்னா அப்படி இப்படித்தான் இருப்பான்! அவன் போக்குலயே போய் முந்தானைல முடிஞ்சிக்கன்னு அட்வைஸ் பண்ணாளே எங்கம்மா, அவளயும் வெளுக்கனும்! ஆம்பளைனா பெரிய கொம்பாடா! நீ உத்தமன் மாதிரியும், தப்பெல்லாம் என் மேலத்தான்ற மாதிரியும் பேசற இங்குள்ள ஒவ்வொரு பொம்பள வாயையும் ஒடைக்கனும்! இன்னிக்குப் பொறுப்பு வந்திடும், நாளைக்குப் பொறுப்பு வந்திடும்னு நீ கூப்டப்பல்லாம் சுணங்காம உன் கூடப் படுத்துப் புள்ளயையும் பெத்துக்கிட்டேனே, என்னையும் சாகடிக்கனும்டா! சாகடிக்கனும்!” என மடிந்து அமர்ந்து அழுதவளைத் தாங்கிக் கொண்டான் மருது.
“யக்கா! அழாதக்கா!”
தம்பியைக் கட்டிக் கொண்டவள், இன்னும் இன்னும் தேம்பினாள்.
“எனக்கு கண்ணா வேணும்டா மருது! அவன் இல்லாம நான் எப்படிடா உசுரோட இருப்பேன்! நானும் செத்துப் போறேன்டா” எனக் கதறினாள்.
அவள் உயிரோடு இருக்கத்தான் வேண்டுமென விதி சதி செய்திருந்ததை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.
