IMM Epi 11(1)

அத்தியாயம் 11

காதல் வைபோகமே

காணும் நன்னாளிலே

வானில் ஊர்கோலமா!!!

“சாப்டியா சம்பூ?”

“எப்போ பாரு நொய் நொய்னு அதே கேள்விதானா? ஒன்னு சாப்டியா இல்ல டீ குடிச்சியானு கேக்குற! அதும் இல்லைனா சர்வா எப்படி இருக்கான்னு கேக்கற! நீ கேக்கற எல்லாத்துக்கும் நான் பதில் சொல்லனுமா? அதுக்குத்தான் என்னைப் பெத்து விட்டுருக்காங்களா?” எனச் சிடுசிடுவென விழுந்தவளை கூர்ந்துப் பார்த்தான் இன்பன்.

“என்ன? என் மூஞ்சுல பாலும் தேனும் வழியுதா?” என அதற்கும் காய்ந்தாள் பூர்ணா.

வலது கரத்தை சரண்டர் என்பது போலத் தூக்கியவன், தம்மடித்து விட்டு வருவது போல சைகை காட்டி விட்டு வெளியேறிவிட்டான். பதினைந்து நிமிடங்கள் கழித்து, அலுவலகத்துக்குள் நுழைந்தவன், அமைதியாக பூர்ணாவின் அருகில் அமர்ந்துக் கொண்டான். அவள் லொட்டு லொட்டென கீ போர்டைத் தட்டிக் கொண்டிருக்க,

“என்ன பிரச்சனை சம்பூ?” என மென்மையாக வினவினான் இன்பன்.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள்,

“என்னை நெனைச்சா எனக்கே பிடிக்கல இன்பூ! ரொம்ப பொறாமைக்காரி ஆகிட்டேன் போல! என்னமோ இந்த ஃபீல் வரப்போ என்னை நானே வெறுக்கறேன்” என்றாள்.

“யார் மேல பொறாமை?”

“என் தம்பி பொண்டாட்டி மேல”

“ஏன்?”

“எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லத்தானே காத்திருக்கேன்!” என நக்கலாக மொழிந்தவள், மீண்டும் வேலையில் கவனமானாள்.

“என்னை தெரப்பிஸ்ட் மாதிரி நெனைச்சிக்கிட்டு மனசுல உள்ளத வெளிய சொல்லு, ஃபீல் ப்ஃரீயாகும்! பிலிவ் மீ” எனச் சன்னச் சிரிப்புடன் சொன்னான் இன்பன்.

அவனை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள், பின் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.

“லன்ச் டைம்தானே! வெளிய போய் பேசுவோமா? இப்பவே சொல்லிட்டேன்! நீ குடுக்கற தெரப்பிக்குலாம் நான் காசு குடுக்க மாட்டேன். லன்ச் வேணும்னா வாங்கித் தரேன்”

“ஒகே, டீல்” என ஒத்துக் கொண்டான்.

அன்றைய ல்ன்ச் அவன் குறைவாக சாப்பிட,

“என்ன இன்பூ! இவ காசு கட்டறாளே, சோ ரொம்ப செலவு வைக்க வேணாம்னு நெனைக்கறியா? எப்பவும் ஃபுல் கட்டு கட்டுவ! இப்போ பிச்சி பிச்சி சாப்புடற! ஒழுங்கா நல்லா ஆர்டர் பண்ணி சாப்பிடு! நான் கணக்குப் பார்த்து செலவு செய்யற ஆளுதான். அதுக்குன்னு சாப்பிட வான்னு கூப்பிட்டு வந்து அரை வயிறு கால் வயிறுன்னு அனுப்ப மாட்டேன்” என படபடத்தாள் பூர்ணா.

“அப்போ அன்னைக்கு மாலுல எனக்கு ஒன்னுமே வாங்கிக் குடுக்காம சாப்பிட்ட நீ?” என இன்று இவன் கோபித்துக் கொள்ள,

“அப்போ நீதானே சாப்பிடக் கூப்பிட்ட! அதான் வாங்கிக் குடுக்கல! இப்போ நான் சாப்பிடக் கூப்பிட்டேன்! அதான் வாங்கிக் குடுக்கறேன்”

“நல்லா வருவ சம்பூ நீ” எனச் சிரித்தவன் வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டான். அதன் பிறகே அவளும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

நிஜமாலுமே அவளுக்கு செலவு வேண்டாமே எனத்தான் குறைத்து சாப்பிட்டான் இன்பன். அதையும் கண்டுப்பிடித்து ஒரு வாங்கு வாங்கியவளை இன்னும் இன்னும் பிடித்தது இவனுக்கு.

உணவு உண்டு இவள் பணம் செலுத்தியதும், கப் ஐஸ் இரண்டு வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த குட்டி பார்க்கில் போய் அமர்ந்தார்கள் இருவரும். வெயில் நேரமாதலால் மரங்கள் நிழல் கொடுத்தாலும் காற்று சூடாகத்தான் வீசியது. ஏதும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக பனிக் கூழை ருசித்தனர் இருவரும்.

“இப்போ தெரப்பிய ஆரம்பிக்கலாமா மிஸ் சம்பூர்ணா?”

என்ன முழு பெயரை சொல்லி அழைக்கிறான் என இவள் பார்க்க, ரகசியம் பேசும் குரலில்,

“நான்தான் உனக்கு தெரப்பி குடுக்கப் போற டாக்டர்! நீ பேஷண்ட்! சோ மிஸ் சம்பூர்ணானுதான் கூப்பிடுவேன். நீ டாக்டர்னு மரியாதையா கூப்பிடனும் என்னை” என்றான்.

“ஓஹோ! சரி, சரி!” என ரகசியக் குரலில் பதில் சொன்னவளுக்குப் புன்னகை எட்டிப் பார்த்தது.

“சொல்லுங்க மிஸ் சம்பூர்ணா! என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க?”

“டாக்டர்!” என அழைத்துவிட்டு, வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் இவள்.

அவள் சிரிப்பைக் கண்டு முறைத்தான் இவன்.

“பீ சீரியஸ்!”

“பார்த்தியா!!! டாக்டர் வேஷம் போட்டதும் சீரியஸ், கேஷுவல்னுலாம் பேசற! உன்னை கம்பவுன்டர்னா கூட நம்ப மாட்டாங்க தெரியுமா! எப்படி இன்பூ டாக்டர்னு கூப்பிட!!!” எனச் சொன்னவளுக்கு இன்னும் சிரிப்பு வந்தது.

“இப்படி சிரிச்சா, நான் போறேன்!” என அவன் எழுந்துக் கொள்ள, கையைப் பற்றி மீண்டும் அமர வைத்தாள் இவள்.

“சரி! ஆரம்பிக்கலாம்” என இவள் சொல்ல, மீண்டும் கேட்ட கேள்வியையே கேட்டான் இன்பவாணன்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள்,

“எனக்கு ஒரு தம்பி இருக்கான் டாக்டர்! பேரு மருது! அவனுக்கு கல்யாணம் ஆகி, அவன் வைப் கன்சீவா இருக்கா!” எனப் பேச ஆரம்பித்தாள்.

“ஹ்ம்ம்! மேல சொல்லுங்க மிஸ் பூர்ணா!”

தலையைக் குனிந்துக் கொண்டவள்,

“எனக்கு அவனோட பொண்டாட்டிய பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கு டாக்டர்! இது நாத்தனார் மேல சாதாரணமா வர பொறாமை இல்லை. ஏன்னா அவள எனக்கு அவ்ளோ பிடிக்கும்!” எனச் சொல்லித் தொண்டையைச் செறுமினாள்.

“கல்யாணம் செஞ்சி இப்போ கன்சிவானது வரை, என் தம்பி அவள அப்படியே உள்ளங்கையில வச்சித் தாங்கறான். அவளுக்கு சமைச்சி வச்சிட்டு வேலைக்குப் போகறதுல இருந்து, அடிக்கடி போன் பண்ணி எப்படி இருக்கான்னு விசாரிக்கறது வரை, ஈவ்னிங் அவ கூட சேர்ந்து வால்க் போறதுல இருந்து, நைட் வீங்கி இருக்கற காலுக்கு சுடுதண்ணி ஒத்தடம் குடுக்கற வரை, ஒவ்வொரு செக்கப்புக்கும் கூட போறதுல இருந்து, மருந்து மாத்திரை பார்த்து கரேக்டா குடுக்கற வரை, சின்னதா அவ முகம் சுளிச்சாலும் என்ன என்னன்னு பதறிப் போறதுல இருந்து, பக்குவமா அவள பார்த்துக்கறது வரை உயிரா இருக்கான்! இதெல்லாம் பார்த்து ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் ரொம்ப டவுனா ஃபீல் ஆகறேன்! லேசா பொறாமை எட்டிப் பார்க்குது! அது ரொம்ப தப்புடின்னு என்னை நானே திட்டிக்கறேன்! ஆனாலும் என் மனசு சொன்னப் பேச்சு கேக்க மாட்டிக்குது டாக்டர்! என் கண்ணு பட்டு அவளுக்கு என்னவாச்சும் ஆகிடுமோன்னு பயமா வேற இருக்கு! இருக்கற பிரச்சனை போதாதுன்னு இது வேறயான்னு ஆத்திரமா வருது. சரியா தூங்கக் கூட முடியலை. இவ்ளோ கேவலமான பிறவியா நீன்னு என் மனசாட்சி காறித் துப்புது” எனக் கடகடவென சொல்லி முடித்தவளுக்கு வார்த்தை சிக்கியது.

அழுகை முட்டிக் கொண்டு வரப் பார்க்க, அருகில் இன்பன் இருப்பதால் கஸ்டப்பட்டு அடக்கப் போராடினாள் பூர்ணா. அவள் முன்னே ஒரு கைக்குட்டை நீட்டப்பட்டது. நீர் நிறைந்த விழிகளால் அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், புன்னகைக்க முயன்றாள். அந்த நிலையிலும் புன்னகைக்க முயன்றவளைப் பார்த்தவனுக்கு அப்படியே அவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்லிட மனது துடித்தது. சிரமப்பட்டு அந்த உந்துதலை அடக்கிக் கொண்டான் இன்பன். கைக்குட்டையை வாங்கிக் கண்ணைத் துடைத்துக் கொண்டவள், அதை பத்திரப்படுத்திக் கொண்டாள்.

“துவைச்சுத் தரேன்” எனச் சொன்னவளின் குரல் கம்மியிருந்தது.

சரியெனத் தலையாட்டியவன், அமைதியாகவே அருகில் அமர்ந்திருந்தான். பின் மெல்லியக் குரலில்,

“இப்போ டாக்டரா பேசறத விட இன்பூவா பேசனா பெட்டரா இருக்கும்னு நெனைக்கறேன். சின்ன வயசுல என் கூட படிச்சப் பையனைப் போட்டு அடிச்சிட்டேன்னு, அப்பாவ ஸ்கூலுக்கு வர வச்சாங்க! அவர் எனக்காக மன்னிப்பு கேட்டுட்டு, என்னை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாரு. ஏன்யா அவன அடிச்சன்னு ரொம்ப சாந்தமா கேட்டாரு! அவன் வெள்ளையா இருக்கான்பா! எல்லா பொம்பள புள்ளைங்களும் அவன் கிட்டதான் வெளையாடுதுங்க! என் கிட்ட யாரும் வர மாட்டறாங்க! அதான் அடிச்சேன்னு சொன்னேன். அப்போ அவர் சொன்னாரு, பொறாமைன்றது நல்ல விஷயம்தான். இப்போ ஒருத்தன் நல்லா படிச்சா, அவனப் பார்த்து பொறாமைப்பட்டு நீயும் நல்லா படிச்சீனா அங்க பொறாமை நல்ல பொறாமையா நிக்குது. அதே அவன் நல்லா படிக்கறான்னு பொறாமைப் பட்டு அவன படிக்க விடாம எதாச்சும் கோக்கு மாக்கு பண்ணி, அவனையும் கெடுத்து நீயும் கெட்டுப் போனா அங்க பொறாமை கெட்ட பொறாமையா ஆய்டுது. என்னைக்கும் பொறாமைன்றது உன்ன முன்னேத்தறதாதான் இருக்கனும்! பின்னடைய வைக்கக் கூடாது சாமின்னு சொன்னாரு! அழகு மாதிரி சில விஷயங்கள் கடவுள் கொடுத்தது. மத்தவங்க கிட்ட அது இருக்கேன்னு பொறாமைப்பட்டு மனச உளப்பிக்கறதுல எந்த புண்ணியமும் இல்ல! அதனால எதெல்லாம் நம்ம கண்ட்ரோல்ல இல்லையோ, அத அப்படியே விட்டுடனும்! அதுக்காக அழுது புலம்பி இருக்கற நிம்மதிய கெடுத்துக்கக் கூடாதுப்பா! கருப்பா இருந்தாலும், நீ என் ராஜாடா! அப்பா கண்ணுக்கு நீ மட்டும்தான் ராஜா அழகுன்னு சொல்லி அணைச்சுப் புடுச்சு முத்தம் கொடுத்தாரு! அது மாதிரி உன் தம்பி பொண்டாட்டிக்குக் கிடைச்சதுலாம் உனக்குக் கிடைக்காம போயிருக்கலாம். சிலருக்கு இந்த மாதிரி அழகான வாழ்க்கையை விதிச்சிருப்பான் ஆண்டவன். சிலருக்கு நொந்து நூடுல்ஸ் ஆகற மாதிரி வாழ்க்கையைப் படைச்சிருப்பான். அதனால எது உன் கண்ட்ரோல்ல இல்லையோ அத நெனைச்சி மனசப் போட்டு உளப்பிக்காதே! நிம்மதி இல்லாமப் போயிரும்!” எனச் சொன்னவனுக்கு தந்தையை நினைத்துக் குரல் கம்மியது.

Scroll to Top