“இந்த ஆணவம் உன் பின்னாடி இருக்கற அந்த ஆம்பள நாய் குடுத்ததா? எவ்ளோ திமிரு இருந்தா, உன் ஆபிஸ் டெஸ்க் போனுக்கு கால் போட்ட என்னைப் பார்த்து, உன்னையும் இந்த குட்டிப் பிசாசையும் விட்டுத் தள்ளி நிக்கலனா கிழிச்சுத் தோரணம் கட்டிருவேன்னு சொல்லுவான்! உனக்கு காவல் தெய்வமாமே அவன்! என்னடி லவ்வா? பார்க்கறேன்டி! எவன் உன்னையும் என்னையும் பிரிக்கறான்னு பார்க்கறேன்!”
‘இன்பூவா பேசனது!! அவனத் தவிர என் போனை யாரும் அட்டேண்ட் பண்ண மாட்டாங்களே! ஐயோ, கடவுளே! இவன் என்னலாம் உளறி வச்சானோ இன்பூ கிட்ட! நான் என்னைப் பத்தி முழுசா எதையும் சொல்லாம இருந்தும், எனக்காகப் பேசிருக்கானே! எனக்கு காவல் தெய்வம்னு சொன்னானா?’ என எண்ணியவளுக்கு நெஞ்சில் இருந்த பாரம் பனிப் போல விலகுவது போலிருந்தது.
ஒவ்வொரு நாளும் இன்பனின் கனிவில், நக்கலில், நையாண்டியில், அன்பில், அக்கறையில், கவனிப்பில், நகைச்சுவையில் கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்க்கப் பட்டுக் கொண்டிருக்கும் தன் மனதை அடக்கி வைப்பதற்கே பாடாய்ப்பட்டு களைத்துப் போய் விடுகிறாள் பூர்ணா. நண்பனாய் அவளுக்கு அறிமுகமானவன் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மனதைக் கொள்ளையடித்திருக்க, அதை மறைக்கப் படாது பாடுபட்டுப் போகிறாள். தன்னை மீறி அவனிடம் உரிமை எடுத்துக் கொள்வதில் இருந்து, பயப்படாமல் அவனிடம் கோபம் கொண்டு திட்டுவது, தான் தோற்றத்தைப் பற்றி சொன்னவனிடம் அழகு நீ எனச் சொன்னது எனப் பல முறை அவளை அறியாமலே தனது மனதை திறந்துக் காட்டி இருக்கிறாள் பூர்ணா. மனதின் உள்ளே ஆர்ப்பரிக்கும் நேசம், எங்கே கரையுடைத்து அவன் முன் அவமானப்பட்டு நிற்க நேரிடுமோ என இவள் அஞ்சாத நேரமில்லை. தோழியாய் நினைத்துதான் தனக்கு காவல் இருப்பேன் என கூறி இருப்பான் எனப் புரிந்தாலும், தனக்கென ஒருத்தன் பாதுக்காப்பாய் இருக்கிறான் எனும் எண்ணமே அப்படி ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்தது.
“இப்ப என்ன? நான் உன் பொண்டாட்டியா இருந்தப்பவே பல பேர் கூட போனவன்தானே நீ! உன்னை வேணாம்னு டைவர்ஸ் பண்ணிட்டேன்தானே! அதுக்குப் பிறகு நான் எவன லவ் பண்ணா என்ன, கல்யாணம் பண்ணா என்ன, இல்ல வச்சிக்கிட்டாலும்தான் உனக்கென்ன? ஆம்பள நீ எது செஞ்சாலும் நியாயம். ஆனா எனக்கு மட்டும் தடைகள் ஆயிரமா?” எனச் சூடாகக் கேட்டாள் இவள்.
“அக்கா” என அழைத்தபடியே வந்த மருது, அழகிரியை அங்கே பார்த்ததும் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டான்.
“நீ எங்கடா இங்க வந்த? உன்னைக் கொன்னுப் போடறதுக்குள்ள ஓடிப் போய்டு!” எனும் மருதுவின் சத்ததில் பயந்து போய் கத்தி அழுக ஆரம்பித்தான் சர்வா.
“உங்கம்மாதான்டா என் பொண்ணுக்கு வாழ்க்கைக் குடுன்னு என் கால பிடிக்காத குறையா கெஞ்சுனாங்க!” என அழகிரி அலட்சியமாக சொல்ல மருது அவனை அடிக்கப் பாய்ந்தான்.
அதற்குள் சொந்தமெல்லாம் அங்கே கூடி, என்ன இருந்தாலும் மாமன்தானே, விசேஷத்தில் என்ன சண்டை, நல்ல நேரம் போகிறது என ஆளாளுக்குப் பேசி இருவரையும் விலக்கி விட்டார்கள். எல்லோர் கண்ணும் பூர்ணாவையே குற்றவாளியாகப் பார்க்க, நேர் கொண்டப் பார்வையோடு மகனைச் சமாதானப்படுத்திக் கொண்டே உள்ளே சென்று விட்டாள் அவள்.
சின்னவன் நினைத்து நினைத்து சிணுங்க, அவனை சமாளித்துக் கொண்டே மற்ற வேலைகளைப் பார்த்தாள் பூர்ணா. மருதுவின் கோபத்தில், மீண்டும் வருவதாக பூர்ணாவின் அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டான் அழகிரி. அதன் பிறகு நல்லபடி வளைக்காப்பு நடந்து முடிந்தது.
மாலை வரை இப்படியே சிணுங்கிக் கொண்டிருந்த மகனை, சமாதானப்படுத்த கடற்கரைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தாள் பூர்ணா. கடற்கரையைப் பார்த்தால் அம்மாவுக்கும் மகனுக்கும் எப்பொழுதுமே குதூகலம்தான். கணவனைப் பிரிந்து வந்து தனக்கென அவள் அனுபவிக்கும் சின்ன சின்ன ஆசைகளில் கடல் காற்றை அனுபவிப்பதும் ஒன்று. பட்டுச் சேலையை மாற்றி சுடிதார் அணிந்துக் கொண்டு, ஃபங்ஷனுக்காக வைத்திருந்த பூ, வளையல், குங்குமம் சகிதம் கிளம்பி விட்டாள். அவள் அம்மா, மீண்டும் ஆரம்பிக்க இவள் கண்டுக் கொள்ளவேயில்லை. ராஜம் இரவு மருதுவுடன் வீட்டுக்கு வருவதாக சொல்லி விட, மகனுடன் ஆட்டோ எடுத்து மரினா பீச்சுக்குப் போய் இறங்கினாள் பூர்ணா.
தண்ணீரில் சற்று நேரம் மகனின் காலை நனைக்க விட, அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்.
“பீச்! சர்வா ஹேப்பி” என ஆர்ப்பரித்தான்.
அவனது பாய்ச்சலையும், துள்ளலையும் கட்டுப்படுத்த முடியவில்லை இவளால். காலையில் இருந்து வேலைப் பார்த்தது, மாஜி கணவனிடம் மல்லுக் கட்டியது என உடலும் மனமும் சோர்ந்துப் போயிருந்தது. ஆனாலும் மகனுக்காக வந்திருந்தாள்.
சற்று நேரம் அவன் விளையாடியதும், தூக்கிக் கொண்டவள் மணலில் அமர்ந்தாள். இவன் மண்ணை நோண்டி விளையாட, அவன் செய்கைகளைப் பார்த்தபடி ஏதேதோ யோசனையில் இருந்தாள் பூர்ணா.
போன் மணியடிக்க, கையில் எடுத்துப் பார்த்தவளுக்கு மெல்லியப் புன்னகை. அவளது யோசனையின் நாயகனே அழைப்பெடுத்திருந்தான்.
“சொல்லு இன்பூ”
வேலையைப் பற்றி சில விஷயங்களைக் கேட்டவன்,
“ஃபங்ஷன் முடிஞ்சதா? என்ன ஒரே இரைச்சலா இருக்கு?” எனக் கேட்டான்.
“மரினா வந்துருக்கோம்”
“குடும்பமாவா?”
“நானும் சர்வாவும் மட்டும்”
“ஓஹோ! நான் பக்கத்துலத்தான் வேலையா இருக்கேன்! உங்க ரெண்டுப் பேருக்கும் தொல்லையா இல்லைனா வந்து ஜாய்ன் பண்ணிக்கவா! சர்வாவப் பார்த்து ரொம்ப நாளாகுது” எனக் கேட்டான்.
சில சமயங்களில் அம்மாவும் மகனும் ஷாப்பிங், முடி திருத்தும் நிலையம் இப்படி எங்காவது போகும் போது, பேச்சு வாக்கில் இவள் அதைப் பற்றி சொல்லி இருந்தால், இன்பனும் வந்து சேர்ந்துக் கொள்வான்.
“தொல்லைதான்!” என இவள் சொல்ல,
“அதை தொல்லைக்கே தொல்லைக் குடுக்கற நீ சொல்லக் கூடாது!” என்றவன், அருகே வந்ததும் அழைக்கிறேன் என அழைப்பை நிறுத்தி இருந்தான்.
இருபது நிமிடங்களில் வந்து சேர்ந்தான் இன்பன். அவனைக் கண்டதும் மணலில் விளையாடிக் கொண்டிருந்த சர்வா தூக்க சொல்லிக் கேட்டான். இவனும் குட்டியை வாரி எடுத்துக் கொண்டான்.
“அங்கிள்! வாட்டர்” என கடல் நீரைக் அவன் கைக்காட்ட,
“கூட்டிப் போகவா சம்பூ?” எனக் கேட்டான் இவன்.
அவனையேப் பார்த்திருந்தவள், சரியெனத் தலையாட்டினாள். அமர்ந்தபடியே ஆண்கள் இருவரும் அலைகளில் விளையாடுவதை பார்த்தபடி இருந்தாள் பூர்ணா. சர்வாவைத் தோளில் தூக்கி இருந்தவன், அலையோடு ஓடிப் பிடித்து விளையாடி குட்டியை சிரிக்க வைத்தான். இருவரின் சிரிப்பு சத்தமும் சங்கீதமாய் இவள் காதை நிறைத்தது. இவனைப் போன்ற ஒருவன் ஏன் தனக்குக் கணவனாய் வாய்க்கவில்லை என மனம் ஊமையாய் அழுதது. இவனைப் போல ஒருவன் வேண்டாம்! இவனே வேண்டுமென அடம் பிடித்து வேறு தொலைத்தது.
கவனமாய் சர்வாவைத் தண்ணீரில் நனைய வைத்து விளையாட்டுக் காட்டி, மணலில் நடக்கப் பழக்கி, தூக்கிப் பிடித்து ஏரோப்ளேன் போல பறக்க வைத்து என எதேதோ செய்தான் இன்பன். பாட்டி வீட்டில் சிணுங்கிக் கொண்டே இருந்த சர்வாவுக்கு இப்பொழுது முகமெல்லாம் பல். விளையாடி ஓய்ந்து இருவரும் இவள் வருகே வந்து அமர்ந்தனர்.
“அம்மா, பசிக்கி!” என சர்வா வயிற்றைத் தொட்டுக் காட்ட, பட்டென எழுந்துக் கொண்டான் இன்பன். அவனைப் பார்த்து,
“என்ன?” எனக் கேட்டாள் இவள்.
“பசிக்குதாமே! எதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வரேன்”
“உட்காரு இன்பூ! அவனுக்கு இட்லி கொண்டு வந்துருக்கேன்” எனவும்தான் மீண்டும் அமர்ந்தான் இன்பன்.
சர்வா இன்பனின் மடியில் அமர்ந்துக் கொள்ள, சற்று நெருங்கி அமர்ந்து ஸ்பூனால் மகனுக்கு இட்லியை ஊட்ட ஆரம்பித்தாள் பூர்ணா. சமத்தாய் அவன் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டான். சின்ன வயதில் தாய் உணவு ஊட்டிய ஞாபகங்கள் இவன் நெஞ்சில் வந்து மோதியது. தன்னை அறியாமலே இவனது வாயும் அவள் கரண்டியுடன் கிட்டே வர, ஆவெனத் திறந்துக் கொண்டது. அதைப் பார்த்து இவளுக்குப் புன்னகை முகிழ்த்து. அவனே எதிர்ப்பார்க்காத விதமாக, இவனுக்கும் பூர்ணா இட்லியை வாயில் வைத்து விட்டிருந்தாள். மெல்ல ரசித்து, ருசித்து விழுங்கியவன்,
“தேங்க்ஸ் சம்பூ! அம்மாவுக்கு அப்புறம் இப்போத்தான் இன்னொரு ஆள் ஊட்டி விட்டு சாப்பிடறேன்” என உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான்.
இன்னொரு வாய் மகனுக்குக் கொடுத்து விட்டு அவனுக்கும் கொடுக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டான். அதற்கு மேல்,
“போதும்பா! சர்வாவுக்குக் குடு!” எனச் சொல்லி விட்டான்.
சர்வா சாப்பிட்டு முடிக்க, அவனுக்கு வாயைத் துடைத்து விட்டு நீரைப் புகட்டினாள் பூர்ணா. உண்ட மயக்கத்தில் கடல் காற்றுக்கு அவன் தூக்கத்திற்கு சொக்க, தனது மடியில் படுக்க வைத்துக் கொண்டான் இன்பன்.
வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த இனிப்புக்களையும், பலகாரங்களையும் சில்வர் டப்பாவில் இருந்து எடுத்து இன்பனுக்குக் கொடுத்தாள் பூர்ணா. இருவரும் அமைதியாக சாப்பிட்டார்கள். சுக்கு காபி விற்றுக் கொண்டுப் போன சிறுவனிடம் சுக்கு காபி வாங்கிக் குடித்தார்கள்.
அவ்வளவு நேரம் மௌனமாய் இருந்த பூர்ணா,
“இன்பூ! எனக்கு உன்னை ரொம்பப் புடிக்கும் தெரியுமா!” எனக் கேட்டாள்.
“எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்குமே!”
“ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ இன்பூ!”
