அத்தியாயம் 13
காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா
காதல் இல்லாமலே சாவா!!! (பாடல் வரி)
அவளின் வார்த்தைகள் தந்த இன்ப அதிர்ச்சியில் இமைக்க மறந்து அமர்ந்திருந்தான் இன்பன்.
“பிறந்ததுல இருந்து இப்போ வரை, என் வாழ்க்கையை மத்தவங்கதான் வாழ்ந்துட்டு இருக்காங்க! பின்னொரு காலத்துல வாழ்க்கைச் சக்கரம் துருப்பிடிச்சு மெதுவா நகரும் சமயத்துல, ரீவைண்ட் பண்ணிப் பார்த்தா, நான் வாழ்ந்த வாழ்க்கையா இல்லாம யாரோ வாழ்ந்த வாழ்க்கையாத்தான் இருக்கப் போகுது என் லைஃப். காலம் கடந்துப் போகறதுக்குள்ள என் வாழ்க்கையை நானே கையிலெடுத்துக்க ஆசைப்படறேன்! என் மனசுலப் பூத்திருக்கற இந்தக் காதல சொல்லாமலே மறைச்சு வச்சு, சாகும் நேரத்துல, அடடா சொல்லிருந்துருக்கலாமேன்னு நான் ஏங்கி இழுத்துக்கிட்டு சாகக் கூடாதுல்ல! அதான் சொல்லிட்டேன். என்னடா இவ, கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம ப்ரோபோஸ் பண்ணிட்டாளேன்னு நீ கேவலமா நெனைச்சாலும் சரி! கல்யாணமாகி, டைவர்ஸாகி, குழந்தை ஒன்னு வச்சிருக்க இவளுக்கு எவ்ளோ திண்ணக்கம் இருந்தா ஒத்தக் கல்யாணம் கூட பண்ணிருக்காத எனக்கு ப்ரோபோஸ் பண்ணுவான்னு கீழ்த்தரமா நெனைச்சாலும் சரி! எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு இன்பூ! ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு!”
இவன் வாய் திறந்து எதுவோ சொல்ல வர,
“ப்ளிஸ்! ப்ளிஸ் இன்பூ! என்னைப் பேச விடு! எனக்கே தைரியம் வரது ஏதோ ஒரு சமயம்தான். ப்ளிஸ் இன்பூ!” எனக் குரல் கம்மக் கெஞ்சினாள் பூர்ணா.
பேசு என்பது போல இவன் தலையாட்ட, பெரிய மூச்சொன்றை இழுத்து விட்டவள் மீண்டும் ஆரம்பித்தாள். தனது வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் அவனுக்குப் புரட்டிக் காட்டினாள். திருமணத்துக்கு முன் அனுபவித்த மனக் கஸ்டங்கள், திருமணத்துக்குப் பிறகு அனுபவித்த மனதோடு சேர்ந்த உடற் கஸ்டங்கள் என எதையும் மறைக்கவில்லை. மகனின் இறப்பு, அதன் பின்னாலான தனது மாற்றங்கள் என எல்லாம் சொன்னாள். அவள் கண்களில் கண்ணீர் அருவியாய் இறங்க, மேல் பாக்கேட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து நீட்டினான் இன்பன்.
“போன தடவைக் குடுத்த கைக்குட்டையையே நான் இன்னும் திருப்பிக் குடுக்கல!” என முயன்று வரவழைத்தப் புன்னகையுடன் சொல்லியபடியே வாங்கிக் கொண்டாள்.
“அந்த வயசுல அவன் மேல காதல் இருந்ததான்னு தெரில! ஆனா நிச்சயமா ஒரு ஈர்ப்பு இருந்தது. அட, அழகா இருக்கானேன்னு ஒரு பிரமிப்பு இருந்தது! அம்மாவோட சுடு சொற்களில் இருந்து விடுதலையாத்தான் அந்தக் கல்யாணத்தப் பார்த்தேன். இனி எனக்குன்னு ஒரு குடும்பம், இவன் என்னோட புருஷன், என் அன்பெல்லாம் இவனுக்குத்தான்னு மூட்டையாக் கட்டிக் கொண்டுப் போனேன்! ஆரம்பத்துல இவனுக்கு நம்ம மேல எவ்ளோ பாசம், எவ்ளோ காதல்னு பூரிச்சுப் போய்ட்டேன். ஆனா பாசம் காதல்லாம் என் மேல இல்ல, என்புதோல் போர்த்த இந்த உடல் மேல்னு சீக்கிரமே புரிஞ்சுக்கிட்டேன். நான் அளவா பேசனாலே உடம்பு வலிச்சிடும்! அன்பா பேசினேன்னு வை, உடம்புப் புண்ணாகிடும்! கொஞ்சம் கொஞ்சமா மனசால விலகி வந்துட்டேன். புருஷனத் திருத்தி தன் வழிக்குக் கொண்டு வரத் தெரியாத மக்குன்னு எங்கம்மா இன்னும் கூடத் திட்டுவாங்க! குடிகாரனக் கூடத் திருத்திடலாம். ஆனா ஒரு காமுகனத் திருத்தவே முடியாது! சில சமயம் என்ன நெனைப்பேன் தெரியுமா? நல்ல வேளைடா எனக்குப் பொம்பளப் புள்ள பொறக்கலன்னு! பெத்தப் புள்ளயக் கூட விட்டு வைக்க மாட்டான் இவன்னு தோணும்!” என்றவளுக்கு தொண்டையடைத்தது.
“உன்னை ஏன் பிடிச்சதுன்னு எனக்கே தெரியல இன்பூ! ஒருத்தர வெறுக்கத்தான் காரணம் வேணும்! பிடிக்கறதுக்குலாம் காரணம் தேவையில்லையே! இவ்வளவு பாடுபட்டு ஒரு கல்யாணத்துல இருந்து மீண்டு வந்தும் கூட, இன்னும் எனக்கு உணர்வுகளும் உணர்ச்சியும் செத்துப் போகலேன்னு நெனைக்கறப்போ பயந்து வருது இன்பூ! பூனைக் கூட ஒரு தடவை சூடுப்பட்டா மறு தடவை பயந்துக்கும். அந்த பூனைக்கு உள்ள அறிவு கூட எனக்கில்லையோன்னுலாம் யோசிக்கறேன். இன்னொரு பக்கம் சந்தோசமா இருக்கு. எனக்கு இன்னும் இருபத்து அஞ்சு வயசு கூட ஆகல! இந்த வயசுக்குறிய ஆசாபாசங்கள், துள்ளல் துடிப்பு, எல்லாத்தையும் அவன் குழித் தொண்டிப் புதைச்சிட்டானோன்னு நெனைச்சிருக்கேன். அப்படி இல்லை, அதெல்லாம் உள்ளப் புதைஞ்சிக் கிடக்கு! உனக்கானவன் வரும் போது அதெல்லாம் பொங்கி மேல வரும்ங்கறத கொஞ்ச நாளா உணர்ந்துகிட்டு வரேன் இன்பூ”
மெல்ல அருகில் நகர்ந்து அவன் வலக் கரத்தைத் தன் இரு கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள் பூர்ணா. கண்ணில் காதலுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான் இன்பன். அது புரியவில்லை இவளுக்கு.
“எப்படியும் நீ என்னை ரிஜேக்ட்தான் பண்ணுவன்னு தெரியும்! நட்புன்னு சொல்லிட்டு வேற நோக்கத்துல பழகிட்டு இருக்கேன்னு நெனைச்சுப்ப! கடை வச்சிருக்கான், மேகலைக்கு சொந்தக்காரனா இருக்கான், இவனப் புடிச்சிட்டா வாழ்க்கையில செட்டிலாயிடலாம்னு ப்ளான் போட்டுருக்கான்னு கூட தோணலாம் உனக்கு. எப்படி வேணா நெனைச்சிக்கோ இன்பூ! என் மனசுல தோணுன காதல சொல்லிட்டப் பிறகு, பெரிய பாரத்த இறக்கி வச்சது போல அப்பாடான்னு இருக்கு! கண்டிப்பா என் காதல ஏத்துக்கன்னு கெஞ்ச மாட்டேன். ஆனா ப்ளிஸ் இன்பூ, ப்ளிஸ்!!! என்னை ரிஜேக்ட் பண்ணா கூட மென்மையா, கனிவா பண்ணிடு! கேவலமா எதாச்சும் சொல்லிடாதே! மனசளவுள செத்துப் போய்டுவேன் நான்! நீ நோன்னு சொல்லிட்டா, சத்தியமா உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்! என்னைப் பார்க்க உனக்குப் பிடிக்கலனா, வேறு வேலை தேடிட்டாச்சும் போய்டறேன்! கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கவா இன்பூ?”
வாயில் இருந்து வார்த்தை வராமல் போக, ஆமென தலையை மட்டும் ஆட்டினான்.
“ஐ லவ் யூ இன்பூ!” என்றவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.
பற்றி இருந்த அவன் கையை தூக்கித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டவள்,
“தேங்க்ஸ் இன்பூ! நம் வாழ்க்கையை நமக்காக நாமத்தான் வாழனும்னு எனக்குக் கத்துத் தந்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்றவள் அவன் கையை விட்டு விட்டு எழுந்து நின்றுக் கொண்டாள்.
“எத சொல்றதா இருந்தாலும் நாளைக்கு சொல்லு இன்பூ! இன்னிக்கு ஒரு நாள் இந்தக் காதல் ஃபீல அனுபவிக்க விடு!” என்றவள், குனிந்து தன் மகனைத் தூக்கிக் கொண்டாள்.
“வரேன் இன்பூ!” என்றவள் மணலில் கால் புதைய புதைய மெல்ல நடந்துப் போக ஆரம்பித்தாள்.
மீண்டுமொரு முறை தன் கண்ணை விட்டு மறையும் தன் உயிரை கண்களில் காதலுடன் பார்த்திருந்தான் இன்பன்.
“ஒரு நாள் வேணுமா? போடி! அதெல்லாம் குடுக்க முடியாது! வீட்டுக்கு போகற தூரம் மட்டும் ஃபீல் பண்ணிட்டே போ! பின்னாடியே வந்து லவ் சொல்லி உன்னைத் திக்குமுக்காட வைக்கறேன்” என முணுமுணுத்தவன் எழுந்துக் கொண்டான்.
மகனுடன் இவள் ஆட்டோ ஏறுவதைப் பார்த்த பின்பே, தனது பைக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குப் போனான் இன்பன். இன்பமான மனநிலையுடன், அவளது இருப்பிடத்திற்கு பைக்கை செலுத்தினான் இவன்.
ஆட்டோவில் இருந்து தூங்கிக் கொண்டிருந்த மகனைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள் சம்பூர்ணா. அவர்கள் அபார்ட்மெண்டில் செக்கியூரிட்டி வைத்திருந்தார்கள். பாதுகாப்பைக் கருதிதான் இங்கே வீட்டை வாங்கினாள் இவள். அங்கே அமர்ந்திருந்த பாதுகாவலரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு அபார்ட்மேண்ட் வளாகத்துள் நுழைய முயன்ற இவளைத் தடுத்து நிறுத்தியது ஓர் உருவம்.
கோபத்துடன்,
“ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன்ல என்னை ஸ்டால்க்கிங் பண்ண மாட்டேன்னு எழுதிக் குடுத்திருக்கறது மறந்துப் போச்சா? மறுபடியும் ஸ்டேஷனுக்குப் போகனுமா?” என சீறினாள் இவள்.
“உங்கம்மா வீட்டுல பேச வந்தா உன் தம்பி நந்தியா நிக்கறான்! இங்க வந்தா செக்கியூரிட்டி விட மாட்டறான்! ஆபிஸ்க்கு ஒரு தடவை வந்தேன்! நீ வெளியில போய்ட்டேன்னு சொன்ன அந்தப் பொம்பள, எந்த விஷயம்னாலும் இனி ஆபிஸ் பக்கம் வரக் கூடாதுன்னு மிரட்டி அனுப்புது! பப்ளிக்ல பேசலாம்னா போலிஸ் கேஸாகிடுமோன்னு கடுப்பு வரது! அப்போ எங்கதாண்டி உன் கிட்ட பேசறது?”
